கண்ணீரில் ரத்தம் குழைத்துப்
பூசப்பட்ட சுவர்களாய்
வழக்கு வளாகம்
“போலீஸ்
அடிச்சாங்களா?”
“சாட்சி இன்னும் வரல”
“டைவர்ஸ் கொடுக்க
ஆறுமாசம் ஆவும்”
“இதுக்குமேல
வாய்தா வேணாய்யா
சீக்கிரம் முடிச்சுடுங்க”
“விலங்க அவுறுங்கப்பா”
“அடுத்தவாரம்
தள்ளி வச்சிட்டாங்க”
“கஞ்சா வித்தியா?”
“கழுத்த வெட்டிட்டு
விபத்துன்னு சொல்லாதே”
“குறுக்கு விசாரணைக்கு
அனுமதிக்கணும்”
“ஒரு வருசம் உள்ளபோயிடுவ
ஜாக்கிரத”
“இன்னும் ரெண்டு நாள்ல
ஜாமீன் கெடச்சிடும்”

“மசமசன்னு நிக்காம
மூஞ்ச கழுவிட்டு
டீ குடிச்சிட்டு வா”
“சின்னஞ்சிறுசுங்க
லவ் பண்ணாதான் என்ன
பாவி மனுசன்
இப்படிப் பண்ணிட்டாரே”
முந்தானையால்
மூக்கு சிந்திக்கொண்டிருப்பவளைப்
பார்த்து
எலும்பும் தோலுமா இருக்கிற
ஏழு வயசுப் பொண்ணு கேட்டுச்சி
“தூக்கு தண்டனைன்னா
என்னம்மா?”
- நிறைவடைந்தது
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism