Published:Updated:

கல்யாணக் கணக்கு - சிறுகதை

கல்யாணக் கணக்கு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணக் கணக்கு - சிறுகதை

- அசோக்ராஜ்

கல்யாணக் கணக்கு - சிறுகதை

- அசோக்ராஜ்

Published:Updated:
கல்யாணக் கணக்கு - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணக் கணக்கு - சிறுகதை

மேஜையில் போட்டோவை வைத்துவிட்டு கையில் வைத்திருந்த போனில் ஏதோ கார்ட்டூன் பார்த்துக்கொண்டே யாழினி ஓடுகிறாள். ஓடும்போதே ‘அக்கா... மாப்ள போட்டோவ பாப்பியாம்’ என்று சொல்லிக் கொண்டே ஓடுகிறாள். ஜன்னலோரம் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தவாறே கிருத்திகா அந்த போட்டோவின் விளிம்பைப் பார்க்கிறாள். மெதுவாக, மிக மெதுவாக எழுந்து அதை நோக்கிப் போகிறாள். உற்சாகம், மகிழ்ச்சி, குறுகுறுப்பு, ஆர்வம் என்று எந்த உணர்ச்சியும் அவள் முகத்தில் இல்லை. எத்தனை போட்டோவைத்தான் பார்ப்பது என்ற சலிப்பை கொஞ்சமே கொஞ்சமாக அவள் முகம் தேக்கி வைத்திருந்தது. மேஜையில் யாழினி பின்பக்கமாகத் திருப்பி வைத்திருந்த போட்டோவை எடுத்துப் பார்த்தாள். ஸ்டூடியோவில் எடுக்கப்பட்ட வழக்கமான மாப்பிள்ளை போட்டோவாக அது இல்லை. எங்கோ இரவு நேரத்தில் சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு அதன் பக்கவாட்டில் நின்றபடி, எந்த முன் தீர்மானமும் இன்றி எடுக்கப்பட்டிருந்தது. ஏற்கெனவே சிகப்பாக இருக்கிறவனை செல்போன் கேமராவின் ஃப்ளாஷ் ஒலி இன்னும் பளீரென்று காட்டியது. மெலிதான தாடி மீசையுடன், வட்டக் கழுத்து பனியன், ஜீன்ஸில், கால்களில் கறுப்பும் வெள்ளையும் கலந்த ஷூவோடு ஸ்டைலாக நின்றான். ஏதோ பேசிக் கொண்டிருந்தவனை அருகில் இருந்த நண்பன், ‘கொஞ்சம் இப்படிப் பார்’ என்று கேட்டு, அவன் திரும்பும் நொடி எடுத்திருப்பது போல் கிருத்திகாவுக்குத் தோன்றுகிறது. முன் நெற்றி சற்று முடியின்றி ஏறியிருக்கிறதே என்றும் யோசிக்கிறாள். உடனே ‘ஆனா அழகா இருக்கான்’ என்று மனசுக்குள் சொல்லிக்கொள்கிறாள். ஆனால் காளிதாசன் ‘இவ்ளோ பெரிய பணக்காரன், அமெரிக்கா பேங்க்ல வேலை பார்க்கிறான். ஒன்னுமே போடாம உன்னைக் கட்டிக்கறேன்னு சொல்றான்னா ஏதாவது வில்லங்கம் இருக்கும் கிருத்திகா... அப்படி ஒன்னும் அவன் நல்லாவும் இல்லை. தலை வேற வழுக்கை. இவன் வேணாம்’ என்று மறுக்கிறார்.

தோள் உலுக்கப்பட்டதும் பிரக்ஞை வந்தவளாகத் திரும்பினாள். ‘`ஸ்டாப்பிங் வந்துட்டு’’ என்று மோகனா சொன்னதும் விருட்டென்று எழுந்துகொண்டாள். கூட்ட நெரிசலில் புழுக்கமாகியிருந்தது மினி பஸ். உடம்போடு சேர்ந்து உள்ளங்கையும் வியர்த்திருந்தது. ஈரக்கையால் வழுக்கும் கம்பியைப் பிடித்து மனித நெருக்கத்தைப் பிளந்து விடுபட்டு, படிகளில் இருந்து இறங்கி, சற்று நேரம் சாலையின் இருபுறமும் பார்த்தாள். நால்ரோட்டின் நடுவில் நூறடி உயரத்தில் நிற்கும் ராட்சச மின்விளக்குகள் அந்த இடத்தை இருளிலிருந்து பிரித்துக் கொண்டிருக்க, இது போதாதென்று சாலையின் இருபுறமும் தேவைக்கு மீறிய ஒளியையும் ஒலியையும் பாய்ச்சிக்கொண்டு வாகனங்கள் விரைந்துகொண்டிருந்தன.

கல்யாணக் கணக்கு - சிறுகதை

எந்தத் திக்கில் வீடு இருக்கிறது என்று கண நேரக் குழப்பம் இருப்பது போல அவள் கண்கள் மருண்டன. பிளாட்பாரத்தில் செருப்பு தைக்கும் பெரியவர், வழக்கத்திற்கு மாறாக ஏழரை மணிக்கெல்லாம் படுத்துக் கிடந்தார். கோர்ட் ரோட்டில் நடக்க ஆரம்பித்தாள். பதினைந்து நிமிட நடை. அவள் வேலைக்குச் செல்வதே காலையிலும் மாலையிலும் கிடைக்கும் இந்த நடைப்பொழுதுக்குத்தானோ என்பதுபோல் மிகவும் மெதுவாக அளந்து நடப்பாள். இந்த ஊரில் அவளுக்குத் தெரிந்தவர்கள் என்று யாரும் இல்லை. சாலையில் கடக்கிற எவருமே இவளுக்கு யாரோதான். டீக்கடையிலோ, தெருமுக்கிலோ நண்பர்கள் குழுவாக நின்று கூடிப் பேசிச் சிரித்திருப்பதைப் பார்க்கும்போது இவளுக்கு ஆசையாக இருக்கும். அதிலும் அந்தக் கூட்டத்தில் ஒரு பெண்ணைப் பார்த்துவிட்டால், அவளை வீட்டில் தேட மாட்டார்களா, அவள் இந்த ஆண்களின் தோழியா, அல்லது அதில் யாரோ ஒருவனின் தங்கையா, காதலியா என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டே போவாள். அந்தச் சிந்தனையின் நீட்சி இறுதியில் அவளைப்போல தன்னை இருத்திப் பார்ப்பதில் வந்து நிற்கும். தானும் அதுபோல அங்கே அவர்களுடன் சிரித்துப் பேசுவது போல கற்பனை செய்துகொள்வாள். அப்படியாக அவள் தன் நட்புவட்டத்தைப் பெருக்கிக் கொண்டாலும் யாரும் எதுவும் சொல்லப்போவதில்லை. அவர்களுள் ஒருவனைக் காதலித்து, மணமுடித்து, அப்படியாவது அவளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்துவிடாதா என்று தான் விஜயாவும் நினைத்துக் கொண்டிருந்தாள். இவள் காதுபடவே ‘எவனையாவது லவ் பண்ணித் தொலைக்கவும் துப்பில்லை’ என்றுகூட விஜயா சொல்லியிருக்கிறாள்.

அவள் சொன்னதுபோல தனக்கு ஏன் யாரையும் காதலிக்கத் தெரியவில்லை என்றுகூட கிருத்திகா அசட்டுத்தனமாக யோசித்திருக்கிறாள். அது என்ன பிரத்யேகத் திறமையா? யாரிடமாவது கற்றுக்கொள்ளவா முடியும்? படிக்கிற காலத்திலிருந்து எந்தப் பையனையாவது சினேகத்துடன் பார்த்திருக்கிறேனா? அப்படி யாரையாவது நினைத்துத்தான் இருக்கிறேனா? தோழிகள் சிலர் காதலித்தார்கள். சிலர் காதல் கல்யாணம் செய்துகொண்டார்கள். சிலர் காதலனைப் பிரிந்து கல்யாணம் செய்து கொண்டார்கள். எப்படியோ அவர்களுக்கெல்லாம் ஒரே ஒரு ஆண் சகவாசமாவது நட்பு, காதல் என்று பெயர் பண்ணிக்கொள்ள இருந்திருக்கிறது. நான்தான் ஒருத்தனையும் அண்டவிடவில்லை, நீ ஒரு தத்தி கிருத்திகா!

வீட்டிற்கு வந்து செருப்பை உதறும் சத்தம் கேட்டதும் கூடத்தில் ஒலி குறைந்த டி.வி சீரியலில் லயித்திருந்த விஜயா திரும்பிப் பார்த்தாள். திரும்பவும் டி.வி-யைப் பார்க்க ஆரம்பித்தாள். அப்பா அதே கூடத்தின் ஒரு மூலையில் நைலான் கட்டிலில் படுத்திருந்தார். தூங்கினாலும் தூங்காவிட்டாலும் அவர் பல நேரம் படுத்துத்தான் இருப்பார். உள்ளே அறையில் ரஞ்சனியும் யாழினியும் படித்துக் கொண்டிருந்தார்கள். கிருத்திகாவின் வாழ்வில் எது மாறினாலும், அவள் வேலை முடித்துத் திரும்பும் இந்த நேரத்திற்கான வீட்டின் காட்சி மட்டும் மாறவே போவதில்லை என்று நினைத்துக்கொண்டாள். குளித்துவிட்டு வந்து தட்டை எடுத்து, தானே சோற்றைப் போட்டுக்கொண்டு அம்மா அருகில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தாள். டி.வி-யை வெறுமனே வெறித்தாள்.

இவள் கல்லூரியில் பி.எஸ்ஸி இயற்பியல் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது அழகிரி வீட்டிற்கே வந்து இவளுக்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது என்றுதான் பேச்சையே ஆரம்பித்தார். அன்று வரை கிருத்திகாவிற்குக் கல்யாண வயசு நெருங்கிக்கொண்டிருக்கிறது என்கிற உணர்வே விஜயாவுக்கோ, காளிதாசனுக்கோ இல்லை.

‘`நல்ல வரன். காளி, ஒரு புரோட்டா மாஸ்டரா இருந்துட்டு இவ்ளோ பெரிய சம்பந்தம்லாம் கிடைக்காது சொல்லிப்புட்டேன்... கரந்தை சீவல் கம்பெனி ஓனர் மவன், ஹோட்டல்ல வெச்சு உன்னையும் உன் பொண்ணையும் பார்த்திருக்கான்’’ அழகிரி இப்படிச் சொல்லிக்கொண்டிருந்த சமயம், விஜயா அவருக்கு டீ போட அடுக்களைக்குச் சென்றிருந்தாள். அங்கிருந்தே காதுகளைக் கூடத்துக்கு அனுப்பியிருந்தாள்.

கீழே பாயில் அமர்ந்திருந்த காளிதாசனை சற்று நகரச் சொல்லி, அதே பாயில் முட்டி இடிக்க உட்கார்ந்துகொண்டு மேலும் சொன்னார் அழகிரி.

‘`ஒனக்கு நான் பழக்கம்னு அவனுக்குத் தெரியும். அதான் கூட்டி வெச்சு விசாரிச்சான். மூணும் பொண்ணைப் பெத்துட்டு ஓடாத் தேயறான்னு...’’ இப்படிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காளிதாசன் இடைமறித்தார்.

‘`கையாலாகாதவன்னு நீட்டி மொழக்கினீயா... என் பொண்ணுவள எப்படிக் கரை சேக்கணும்னு எனக்குத் தெரியும். உன் சோலியப் பாரு’’ காளிதாசன் கடுகடுவென்றிருந்தார். மூன்று பெண்களைப் பெற்றதுகூட இல்லை. அதை நினைவூட்டும் விதமாக ஏதாவது பேச்சு அடிபட்டால்தான் காளிதாசனின் முகம் மிளகாய்ப்பழம் போலச் சிவந்துபோகும். அடுத்தது பையன்தான் என்று ஒவ்வொரு முயற்சியிலும் பத்து மாதங்கள் விஜயாவும் காளிதாசனும் கனவுடன் இருந்து, ரஞ்சனியும் யாழினியும் பிறந்தபோது சோர்ந்துபோனார்கள். யாழினி பிறந்தபோது காளிதாசனுக்கு நாற்பத்தெட்டு வயது. விஜயாவுக்கு நாற்பது. ஏற்கெனவே கெச்சலான விஜயாவுக்கு உடம்பு மேலும் விழுந்துபோனது. அதற்கு மேலான முயற்சிகளுக்கு அவள் தயாராக இல்லை.

‘தங்கச்சிக்கு யாழினின்னு பேர் வைக்கலாம்’ என்று சொல்லுமளவிற்கு கிருத்திகா வளர்ந்திருந்தாள். அப்போது அவள் பதினொன்றாம் வகுப்பு போய்க்கொண்டிருந்தாள்.

‘எதுக்குடி சாக்லெட்?’

‘தங்கச்சி பொறந்திருக்கா டீச்சர்?’

‘ஏன்டீ உங்கம்மா குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கலையா?’

கணித டியூசன் டீச்சர் இப்படிக் கேட்டிருக்கக் கூடாது. வகுப்பே குபுக்கென்று சிரித்தது. அந்த வயதில் எதுவும் அவளுக்கு விவரமாகத் தெரிந்திருக்கவில்லை. எல்லாமே மூட்டமான கற்பனைகளின் பின்னே கலங்கலான சங்கதிகளாக இருந்தன. குடும்பக் கட்டுப்பாடு என்றால் அதற்கு மேல் குழந்தை பிறக்காது என்றமட்டும் புரிந்து வைத்திருந்தாள். அதை எப்படிச் செய்துகொள்வது? அதை ஏன் என் அம்மா செய்துகொள்ளவில்லை?

டீயைக் கொடுத்துவிட்டு அழகிரி கொண்டு வந்திருந்த போட்டோவைப் பார்த்துவிட்டு தீர்மானமாக விஜயா சொன்னாள். ‘`பையன் கொஞ்சம் பெரிய வயசா தெரியறார்ணே.. பொண்ணு இப்பத்தான் காலேஜ் போறா.. முதல்ல படிப்பு முடியட்டும். இது பத்தி இப்ப எதுவும் பேச வேணாம்ணே...’’

‘`இப்பல்லாம் 35 வயசு ஒரு வயசா..? வயசைப் பார்க்கிற நீ வசதியப் பார்க்கல பாரு. காளிக்கு ஒரு ஓட்டலே வெச்சுக் கொடுத்துடுவான். உங்களுக்கென்ன மவனா இருக்கான். காலம் போன காலத்துல கஞ்சி ஊத்த?’’

இவ்வளவு பேச்சும் வீண் என்பதுபோல விஜயா தீர்க்கமாக ‘`மொதல்ல படிச்சு முடிக்கட்டும்ணே.’’

டீயை உறிஞ்சிக்கொண்டே விஜயாவையே முறைத்துக்கொண்டிருக்கும் அழகிரியின் அந்தச் சிவந்த கண்கள் என்ன சொல்ல விழைகின்றன என்று விஜயாவுக்குத் தீர்மானமில்லை, எனினும் ‘அனுபவிப்பீங்க’ என்ற சபித்தல் இருப்பதாகப் பட்டது அவளுக்கு.

அழகிரி வந்து போன ஆறாவது மாதம், காளிதாசனுக்கு விபத்து ஏற்பட்டது. ஞாயிறு தவறாமல் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு சைக்கிளில் சென்று வருபவர், ஒரு ஞாயிறன்று, லாரியடித்து வயலில் தூக்கி வீசப்பட்டார். தலையில் அடிபட்டிருந்தால் அன்றே போயிருக்க வேண்டியவர். அப்படிப் போயிருந்தால்கூட தேவலாம் என்றுதான் பின்னாள்களில் விஜயா நினைக்கலானாள். முதுகு உடைந்து ஆறு மாதம் தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜில் கிடந்தார். அத்தோடு காளிதாசன் உயிர் இருந்தும் ஒன்றிற்கும் பிரயோசனமில்லாத உபரியாக மாறிப்போனார். சேர்ந்தாற்போல பத்து நிமிடம்கூட நிற்க முடியாது. உடனே எங்காவது சாய்ந்தாக வேண்டும். குனிந்து பாத்ரூம் வாளியைக்கூட தூக்கச் சிரமப்பட்டார்.

காளிதாசன் படுத்த ஒரு வருடத்திற்குள் குடும்பம் கடனில் விழுந்தது.

கல்யாணக் கணக்கு - சிறுகதை

விஜயாவின் தங்கை சுகந்திதான் கும்பகோணம் சிட் கம்பெனியில் கிருத்திகாவுக்கு வேலை பார்த்துக் கொடுத்தாள். ஆரம்பத்தில் தஞ்சாவூரிலிருந்தே தினமும் சென்று வந்து கொண்டிருந்தவள், பிரயாண அலுப்பு, தலைவலி என்று அடிக்கடி லீவு போட்டாள். சோர்ந்து படுத்துக்கொண்டாள். மொத்தக் குடும்பமும் கிருத்திகாவின் சம்பாத்தியத்தை நம்பியே நகர ஆரம்பித்திருந்தது. குடும்பமாகக் கும்பகோணத்தில் குடியேறினார்கள்.

நாலாயிரம் சம்பளத்திற்குச் சேர்ந்தவள், இந்த ஏழு வருடங்களில் ஏழாயிரத்து ஐந்நூறு வந்திருக்கிறாள். ஸ்டிக்கர் பொட்டிலிருந்து, குடிக்கும் காபி, தின்னும் ரேஷன் சோறு, ஈரமடைந்து மாற்றும் நாப்கின் பேட் வரை எல்லாமே கிருத்திகாவின் வாழ்வில் கணக்குதான். அவள் மூளையில் இந்த எண்களைத் தவிர எதுவுமே இல்லை. அவ்வப்போது அவளுக்கு வரன் பார்ப்பதுபோன்ற பாவனை வீட்டில் தென்படும். தரகர் வருவார், போட்டோ தரப்படும், வரன்கள் ஜாதகம் வரும். மாப்பிள்ளை போட்டோ வரும். ஆனால் எப்படியோ தட்டிப்போகும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு வரைகூட கிருத்திகாவிடம் வாளிப்பு இருந்தது. மெலிந்த உடம்புக்காரியாக இருந்தாலும் லாவண்யங்களில் குறைவின்றி இருந்தாள். இடுப்பு வரை அடர்த்தியான முடி. கொஞ்சம் கொஞ்சமாக காலத்தின் கருணையற்ற ஸ்பரிசம் அவள் மேனியில் மேவியது. இப்போதெல்லாம் தன்னை கண்ணாடியில் பார்ப்பதற்கே அவள் விரும்பாதவளாக மாறியிருந்தாள்.

கும்பகோணம் தெட்சிணாமூர்த்தி பட்டாச்சார்யாவிடம் வினோதினிக்கு ஜாதகம் பார்க்க சுகந்தி வந்திருந்த போது, கிருத்திகாவின் ஜாதகத்தை திரும்பவும் பார்த்துவிட வற்புறுத்தினாள். பட்டாச்சார்யாவைப் பார்க்க விஜயாவும் போயிருந்தாள்.

இருவர் ஜாதகத்தைப் பார்த்தவர், தங்கை ஜாதகத்தைவிட அக்காள் ஜாதகம் திருமண கடாட்சமாக இருக்கிறது என்று வாக்கு சொன்னார். மேலும் வினோதினிக்குத் திருமண தோஷம் இருப்பதாகவும், கட்டத்தில் விவாகரத்து அம்சம் இருப்பதாகவும் பீதியைக் கிளப்பிவிட்டார். திரும்பி வரும் வழி நெடுக பட்டாச்சார்யாவை சபித்துக்கொண்டே, அழுதபடி வந்தாள் சுகந்தி. அப்போது விஜயாவின் கண்களில் தெரிந்தது என்ன, கேலியா? ‘அக்கா என்று ஒருத்தி வினோதினியை விட மூன்று வயது மூத்தவள் இருக்கும்போது தன் மகளுக்கு வரன் தேடப் பார்க்கிறாயே... என்னடி நியாயம்?’

ஆனால் வினோதினியை பட்டாச்சார்யாவின் கணக்குகள் கட்டிப்போடவில்லை. ஒரே மாதத்தில் சிங்கப்பூர் இன்ஜினீயர் மாப்பிள்ளை முடிந்து, இரண்டாவது மாதத்தில் கல்யாணம் முடிந்து, மூன்றாவது மாதத்தில் தம்பதி சமேதமாக அவர்கள் சிங்கப்பூரே சென்றுவிட்டார்கள்.

கல்யாணக் கணக்கு - சிறுகதை

தன் சித்தி மகளுக்கு இப்படியொரு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டதற்கு கிருத்திகா உளமார மகிழ்ந்துதான் போனாள். வழக்கம்போல கற்பனையில் அப்படி ஒரு இடத்தில் தன்னை அவள் இருத்திப் பார்க்கத் தவறவில்லை எனினும், வினோதினியிடம் பொறாமை கொள்ளவில்லை. ஆனால் விஜயாதான் வயிறு எரிந்தாள். ‘எப்படியும் பட்டாச்சார்யா வாக்கு பலிக்காமலா போகும்? ஒரே வருடத்தில் புருஷனை விட்டுவிட்டு ஓடி வரப் போகிறாள்.’

சுகந்திக்கு தன் அக்காள் மகள் கிருத்திகாவுக்கு முன்னமே தன் மகள் வினோதினிக்குத் திருமணம் முடிந்திருப்பதில் ஒரே நேரத்தில் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்தே வெளிப்பட்டது.

‘`நீ ஒன்னும் கவலைப்படாதே...வினோதினிக்கு மாதிரியே கிருத்திகாவுக்கும் நல்ல வரனைப் பார்த்து நானே முடிக்கறேன் அக்கா’’ என்றாள்.

மண்டபத்தில் வைத்து சுகந்தி இப்படிச் சொல்லியிருக்க வேண்டியதில்லை. அதனாலேயே விஜயாவுக்குக் கோபம் தலைக்கேறியது. வெடுக்கென்று நாலு பேர் பார்க்க ‘`நீ ஒன்னும் என் மவளுக்கு மாப்ளை பார்க்க வேணாம். ஊர்ல இல்லாத சம்பந்தம் முடிச்சுட்டா... பெருசா பேச வந்துட்டா’’ என்று பேசிவிட்டுச் சென்றாள்.

அன்றிலிருந்து சுகந்திக்கும் விஜயாவுக்கும் பேச்சு வார்த்தை அற்றுப்போனது.

கிருத்திகா வேலை பார்க்கும் சிட் கம்பெனியில் பத்து லட்ச ரூபாய் சீட் போட்டிருந்த சந்திரா மளிகைக் கடை முதலாளி குணசீலனுக்கு கிருத்திகாமீது ஒரு கண். இருவரும் `ஒரே ஆளுங்க’ என்பதை சீட் கம்பெனி மேனேஜர் மூலம் அறிந்துகொண்டவருக்குக் கூடுதல் சந்தோஷம். எம்.பி.ஏ முடித்துவிட்டு அமெரிக்காவில் தனியார் வங்கியில் வேலை பார்க்கும் தன் மகனுக்கு கிருத்திகாவை மணமுடிக்க ஆசைப்பட்டார்.

மேனேஜர் அறைக்கு அழைத்து எதிரில் குணசீலனை வைத்துக்கொண்டே கிருத்திகாவிடம் கேட்டார். முப்பதைத் தொட்டுவிட்ட தனக்கு இந்த நேரத்தில் இப்படி ஒரு வாழ்க்கை வரவிருக்கிறதா... நான் அப்படி ஒன்றும் அதிர்ஷ்டக்கட்டை கிடையாதே! யோசனை இப்படியாகச் சென்றாலும், உள்ளுக்குள் ஓர் ஓரத்தில் கனவுகள் துளிர்க்க, ‘`எதுவா இருந்தாலும் வீட்ல அப்பா அம்மா கிட்ட பேசுங்க சார்’’ என்று வெட்கத்துடன் கேபினை விட்டு வெளியேறினாள் கிருத்திகா.

ஒரு மாதம் முன்பு, ஞாயிறன்று கிருத்திகாவின் வீட்டிற்கே முன்னறிவிப்பின்றி வந்த குணசீலன், காளிதாசனிடம் தன் மகனின் போட்டோவைக் கொடுத்து விவரத்தைச் சொன்னார். காளிதாசன் அவரிடம் பம்மிப் பதுங்கி பவ்யமாகப் பேசினாலும், கிருத்திகாவிடம் அந்தச் சம்பந்தம் வேண்டாவே வேண்டாம் என்று மறுத்தார்.

‘`இதைவிட நல்ல இடத்தில சீக்காளி உன்னால கட்டிக் கொடுக்க முடியுமா?’’ என்று முதன் முதலாக மரியாதைக்குறைவாகப் பேசிய விஜயாவைத் திகைத்துப் பார்த்தார் காளிதாசன். ஆனால் பதில் பேசவில்லை.

‘`அம்மா, அதைத் திட்டாதே... யாழினியைக் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிற வரைக்கும் கூட அது என்னைக் கட்டிக் கொடுக்காது’’ கிருத்திகா இப்படிச் சொன்ன போது உள்ளே அறையிலிருந்து ரஞ்சனியும் யாழினியும் எட்டிப் பார்த்தார்கள். இப்போதும் காளிதாசன் பதில் ஏதும் பேசவில்லை.

உடன் வேலை பார்க்கும் மோகனா குமைந்து கொண்டே இருந்தாள். இப்படியும் ஒரு அப்பா இருப்பாரா என்று ஆச்சரியப்பட்டாள். ‘நீ எங்கேயாவது ஓடிரு’ என்று யோசனை சொன்னாள்.

கிருத்திகா சிரித்துக்கொண்டே ‘`பேசாம அந்த சந்திரா மளிகைக் கடைக்காரர் மகனை நீ கட்டிக்கறியா... நான் பேசவா?’’ என்று கேட்ட போது,

‘`அட ஏன்டீ நீ வேற... வெறுப்பேத்தறியா... ஒன்னத்தாண்டி அவருக்கும் பிடிச்சிருக்கு. அவர் பையனுக்கும் பிடிச்சிருக்கு’’ என்று மோகனா அங்கலாய்ப்பாகப் பேசினாள். அதே மோகனா இன்று அலுவலக மதிய உணவு வேளையில் ‘`குணசீலன் சார் பையனுக்கு வேற இடத்துல முடிஞ்சிடுச்சாம்’’ என்றபோது, கிருத்திகாவுக்கு பொடி எண்ணெயில் தோய்ந்த இட்லி தொண்டைக்குள் இறங்காமல் அப்படியே நின்றது. இந்த நேரத்தில் அவள் முகத்தில் என்ன உணர்ச்சியைக் காட்ட வேண்டும் என்ற குழப்பத்தில் குனிந்த தலை நிமிராமல் இட்லியை மென்றுகொண்டிருந்தாள். தொண்டையில் அடைத்த இட்லியை வயிற்றுக்குள் தள்ள பாட்டில் தண்ணீரை அப்படியே மல்லாத்தினாள். அது வெளியே சிந்தி கழுத்து வழியாக மாரை நனைத்தது.

சாப்பிட்டு முடித்து அடுக்களை சிங்க்கில் கிடந்த பாத்திரங்களைத் துலக்க ஆரம்பித்தாள் கிருத்திகா. அம்மா அடுக்களைக்கு வந்து ‘`நீ போய் படும்மா நான் வெளக்கிக்கறேன்’’ என்றாள்.

கிருத்திகா பதிலேதும் பேசவில்லை. கடந்த ஒரு மாதமாகவே வீட்டில் அவள் யாரிடமும் சரியாகப் பேசுவதில்லை. கொஞ்ச நேரம் அங்கேயே நின்றுகொண்டிருந்த விஜயா, ‘`சுகந்தி வீட்டுக்கார் போன் செஞ்சார்... வினோதினி முழுகாம இருக்காளாம். நாலு மாசமாம். ஏழாவது மாசம் வளைகாப்பு வைக்கிறாங்களாம். மாப்ளையும் வினோதினியும் அடுத்தமாசம் வர்றாங்களாம்.’’

பக்கவாட்டில் நின்ற அம்மாவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே பால் பாத்திரத்தின் அடிக்கறையைத் தேய்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. ‘`நல்லது’’ என்ற அவள் குரல் ஹீனமாக இருந்தது.

‘`அந்த மளிகைக் கடைக்காரர் மவனுக்கு வேற எங்கயாவது முடிஞ்சுச்சா?’’ விஜயா இப்படிக் கேட்டபோது பாத்திரம் துலக்குவதை நிறுத்தினாள் கிருத்திகா. அப்படியே குனிந்த தலையுடன் கண்கள் மூடி நின்றாள். பத்து விநாடிகள் விஜயாவும், அவள் அப்படி நிற்பதைப் பார்த்துக்கொண்டிருந்தாள். மூடியிருந்த கிருத்திகாவின் கண்களின் ஓரத்தில் நீர் வடிந்து கொண்டிருந்தது.

கன்னத்தில் வழிந்த நீரைப் பார்த்துவிட்டு தோளைத் தொட்ட விஜயாவை, சோப்பு நுரைக் கைகளுடன் அப்படியே கட்டியணைத்து சத்தமாக அழ ஆரம்பித்தாள் கிருத்திகா.