மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கனவு - 51 - சேலம் - வளமும் வாய்ப்பும்

காஸ்கரா டீ
பிரீமியம் ஸ்டோரி
News
காஸ்கரா டீ

தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் வளங்களையும் வாய்ப்புகளையும் உணர்த்தி, தமிழ் மக்களின் வாழ்வை உயர்த்த... நம் இளைஞர்களைத் தொழில்முனைவோராக மாற்ற வழிகாட்டும் தொடர்!

காஸ்கரா டீ (Cascara Tea)

‘அளவோடு காபி அருந்துவதே உடல்நலனுக்கு ஆரோக்கியமானது’ என்பது தெரிந்திருந்தாலும், அதைக் கடைப்பிடிப்பது என்பது பலருக்கும் சிரமமான காரியமாகவே இருக்கிறது. அவர்களெல்லாம் காபியின் சுவையோடு, ‘கஃபைன்’ குறைவாக இருக்கும் ‘காஸ்கரா டீ’க்கு மாறிக்கொள்ளலாம். காபி செர்ரியின் காயவைக்கப்பட்ட தோல்தான் காஸ்கரா. இது காபி செர்ரியிலிருந்து வந்திருந்தாலும், காபியின் சுவையை உணர முடியாது. ஆனால், ரோஸ் (Rose), ஹைபிஸ்கஸ் (Hibiscus), செர்ரி

(Cherry), ரெட் கரன்ட் (Red Current), மேங்கோ (Mango) போன்றவற்றின் சுவையை உணரும் வகையில் காஸ்கரா டீயைத் தயாரிக்க முடியும். இது வெவ்வேறு சுவையை விரும்பும் காபி பிரியர்களைக் கவர்ந்திழுக்கும் என்பதால், விற்பனையை அதிகரிக்க ஏதுவாக இருக்கும்.

கனவு - 51 - சேலம் - வளமும் வாய்ப்பும்

தமிழ்நாட்டில் காபி உற்பத்தியில் சேலம் மாவட்டம் 3-வது இடம் வகிக்கிறது. ஷெவராய்ஸ் (Shevaroys) எனும் இடத்தில் சுமார் 17,500 ஏக்கர் பரப்பளவில் காபி விளைவிக்கப்படுகிறது. இந்த வளத்தைப் பயன்படுத்திக்கொண்டு அங்கே ஒரு காஸ்கரா டீ தொழிற்சாலையை நிறுவ வேண்டும்.

ஒரு செடியிலிருந்து 5 கிலோ வீதம் ஆண்டுதோறும் ஏக்கர் ஒன்றுக்கு சுமார் 3.5 டன் அளவுக்கு காபி செர்ரி கிடைக்கிறது. ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 61,000 டன் அளவுக்கு காபி செர்ரி விளைச்சலாகிறது. இதிலிருந்து தோராயமாக 50 சதவிகித அளவுக்கு காபி செர்ரியை அதாவது, சுமார் 30,500 டன் அளவுக்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஒரு கிலோ காஸ்கராவின் விலையை 1,500 ரூபாய் என நிர்ணயம் செய்து ஏற்றுமதி செய்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 4,600 கோடி அளவுக்கு வருமானம் ஈட்ட முடியும். அதுமட்டுமின்றி, ஏறக்குறைய 1,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். இதனால் சேலம் மாவட்ட மக்களின் வாழ்வில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, அவர்களது வாழ்க்கைத்தரம் உயரும்!

ராகி ஜியோடெக்ஸ்டைல்ஸ் (Ragi GeoTextiles)

பிரதமரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் நார் ஜவுளியை (GeoTextiles) 5 சதவிகிதம் அளவுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று ஒன்றிய அரசு அனுமதி அளித்திருக்கிறது. இதற்காக, நார் உற்பத்தியாளர்கள் கூட்டுக் குழுமங்களை உருவாக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். மகாராஷ்டிரா, ஒடிசா, குஜராத், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்டமாக இது அமல்படுத்தப்படவிருப்பதால் நார் ஜவுளி உற்பத்தியின் தேவை அதிகரிக்கும். இதற்காக, தென்னை, நெல், கேழ்வரகு உள்ளிட்டவற்றிலிருந்து ஜியோடெக்ஸ்டைல்ஸை உருவாக்கலாம்.

கனவு - 51 - சேலம் - வளமும் வாய்ப்பும்

ராகி ஜியோடெக்ஸ்டைல்ஸைக்கொண்டு வலுவான சாலைகளை ஏற்படுத்த முடியும். அணைகள், நீர்த்தேக்கங்கள், தடுப்புச்சுவர்கள், வடிகால்கள், ஏரி, குளம், ஓடைகளின் பக்கச் சரிவுகளை உறுதிப்படுத்த முடியும். மண் அரிப்பைத் தடுக்கலாம். நிலத்தடி நீர் சுழற்சிக்கு இடையூறு இல்லாமல், தனித்தனி மண் அடுக்குகளைப் பிரிக்க ஜியோடெக்ஸ்டைல்ஸைப் பயன்படுத்தலாம். இப்படியாக, பல வகைகளில் ராகி ஜியோ டெக்ஸ்டைல்ஸ் (Ragi Fibre Geotextiles) பயனளிக்கிறது. இதற்காக, சேலம் மாவட்டத்தில் கேழ்வரகுத் தட்டைகளைக் கொள்முதல் செய்து. அதிலிருந்து ராகி ஜியோ டெக்ஸ்டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவ வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 18,000 ஏக்கர் அளவில் கேழ்வரகு சாகுபடி (ஒரு போகம்) நடக்கிறது. ஏக்கர் ஒன்றுக்கு 3 டன் வீதம் 54,000 டன் அளவுக்கு ஆண்டுதோறும் கிடைக்கும் கேழ்வரகுத் தட்டைகளைக் கொண்டு, சுமார் 4,700 டன் அளவுக்கு ராகி ஜியோ டெக்ஸ்டைல்ஸை உருவாக்க முடியும். ஒரு கிலோ ராகி ஜியோடெக்ஸ்டைல்ஸின் விலையை 500 ரூபாய் என வைத்து, விற்பனை செய்தால் ஆண்டுக்குச் சுமார் 240 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம். சேலத்தைச் சுற்றியுள்ள பிற மாவட்டங்களிலிருந்து கேழ்வரகுத் தட்டைகளைக் கொள்முதல் செய்யும்போது, ஆண்டுதோறும் தோராயமாக 500 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறுவதோடு, நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை சுமார் 1,000 பேருக்கு உருவாக்கலாம். இதனால், அந்த மாவட்ட மக்களின் பொருளாதாரம் மேம்பாடு அடைவதோடு, அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயரும்!

(இன்னும் காண்போம்)

*****

நீங்களும் சாதிக்கலாம்!

தன் பாட்டியின் சமையல் ரெசிபிகளை, தன்னுடைய தொழிலின் முதலீடாக மாற்றி, வெற்றி கண்டிருக்கிறார் சேலத்தைச் சேர்ந்த காயத்ரி. `ஸ்மார்டிகா ஹோம் எசென்ஷியல்ஸ்’ எனும் நிறுவனத்தை உருவாக்கி, அதிலிருந்து ‘மேங்கோஜிங்’ எனும் புதிய பிராண்டிலும் வெற்றிக்கொடி நாட்டிவருகிறார்.

அவரிடம் பேசினோம், “சேலம் மாவட்டம், இளம்பிள்ளை என்கிற கிராமத்தில்தான் பிறந்தேன். எங்களுடையது கூட்டுக்குடும்பம். கிராமத்தில் இருக்கும் வரைக்கும் நம்முடைய பாரம்பர்ய உணவுகளைச் சாப்பிட்டே வளர்ந்தேன். கணவருடன் வெளிநாட்டுக்குச் சென்றபோது, அங்கே நம்முடைய பாரம்பர்ய உணவுப் பொருள்கள் கிடைக்காமல் ரொம்பவே சிரமப்பட்டேன்.

கனவு - 51 - சேலம் - வளமும் வாய்ப்பும்

இந்தியாவுக்குத் திரும்பிய பிறகு, என்னுடைய மகளுக்குப் பற்களில் சத்துக்குறைபாடு இருப்பது தெரியவந்தது. நம்முடைய மரபான உணவு முறையைக் கைவிட்டதால் ஏற்பட்ட பிரச்னை அது என்று புரிந்தபோதுதான் ‘ஸ்மார்டிகா’வுக்கான ஐடியா உதித்தது. அதன் பிறகு, `ஸ்மார்டிகா ஹோம் எசென்ஷியல்ஸ்’ (Smartika Home Essentials) மூலம் என்னுடைய அம்மா, பாட்டி, மாமியார் ஆகியோரின் ரெசிபிகளையே புராடக்டுகளாக உருவாக்கினேன்.

முதலில், நமது பாரம்பர்ய உணவுகளை இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றதுபோல, குழந்தைகளும் விரும்பி உண்ணும் வகையில் கிரியேட்டிவ்வாக உருவாக்கினோம். கிரஞ்சி இட்லி பொடி, பிரண்டை ரைஸ் மிக்ஸ் பொடி, முடக்கத்தான் ரைஸ் மிக்ஸ் அனைத்தும் என் மாமியாரின் ரெசிபிகள். அதேபோல, என் அண்ணியின் ரெசிபிகளான கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை அரைத்துத் தயாரிக்கப்பட்ட முறுக்கு, பக்கோடா மற்றும் முளைகட்டிய பயறுடன் சேர்த்த 21 வகையான தானியங்கள் சேர்த்த ஹெல்த் மிக்ஸ் ஆகியவை வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுத்தந்தன. அதன் பிறகுதான் ‘மாங்கா வடை’யை என் பாட்டி அறிமுகப்படுத்தினார். இரண்டு வருடங்கள் வரைக்கும் கெட்டுப்போகாமல் இருக்கும் அதன் ருசி அலாதியானது. அந்த ருசி எங்களின் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற ஆர்வத்தில் உருவாக்கியதுதான் ‘மேங்கோஜிங்’ (Mangozing) என்கிற புதிய பிராண்ட்.

கனவு - 51 - சேலம் - வளமும் வாய்ப்பும்

சேலத்தின் அடையாளமே மாம்பழம்தான். அது இங்கே நிறைய கிடைக்கும் என்பதால், வெவ்வேறு ஃபிளேவர்களில் புராடக்டை உருவாக்கினோம். ஒன்றரை வருடமானாலும் எக்ஸ்பயரி ஆகாது. விலையும் குறைவு, சுவையும் அதிகம் என்பதால் சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் மூலம் ஏறக்குறைய 2,000 அவுட்லெட்டுகளுக்கு எங்கள் புராடக்டைக் கொண்டு சேர்த்தோம். பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கும் கொடுக்கிறோம். சர்வதேச அளவில் சிங்கப்பூர், துபாய், ஓமன், கத்தார் உள்ளிட்ட ஆறு நாடுகளில் விற்பனை செய்கிறோம்.

வருங்காலங்களில், விமான நிலையங்கள் முதல் அனைத்து விருந்தோம்பல் இடங்கள் வரை பரவலாக எங்கள் புராடக்டைக் கொண்டுசென்று, அனைவரும் விரும்பக்கூடிய பிராண்டாக மாற்ற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு” என்கிறார் உற்சாகமாக!