Published:Updated:

கண்கொத்தி - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

- கே.என்.செந்தில்

கண்கொத்தி - சிறுகதை

- கே.என்.செந்தில்

Published:Updated:
சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
சிறுகதை

மீண்டும் ஆரம்பித்துவிட்டான். நேற்றிரவிலிருந்து நான்காவது தடவையாகச் சொல்கிறான். தோதாக இன்றைக்கு ஞாயிறாகப் போய்விட்டது. இரவெல்லாம் உறங்கவே இல்லையாம். அவளோடு பேசிப்பேசியே விடிய வைத்தானாம். பைக்கில் சரிந்து அமர்ந்து எரிந்த கண்களில் ஈரத்துணியை ஒற்றியபடியே சொன்னான். அந்தப் பேச்சை அசட்டை செய்தவனாக வழக்கம்போல அந்த பைக்கிலிருந்து கண் எடுக்காமல் அமர்ந்திருந்தேன். அழகிய கன்றுக்குட்டி போன்ற தோற்றம், அமர்ந்தால் தானாகவே உடம்பிற்குள் ஏறிவிடுகிற தோரணை, வெல்வதற்குப் படைக்கப்பட்டதே இவ்வுலகம் எனத் தோன்றுகிற இறுமாப்பு, வளைவுகளில் சாலையை முத்தமிட்டு எழலாம் என்கிற அளவுக்கு அமைந்த கட்டுப்பாடு, பறவை அலறுவது போன்ற ஹாரன். போதும். கண்களை மூடிக்கொண்டேன். ஒர்க்‌ஷாப்பிலிருந்து எடுத்து வந்து சில தினங்கள்தானே ஆகிறது..! அவன் விழுந்த அன்று தன் காயத்தைக்கூட மறந்து, ஒடுங்கியும் உடைந்தும்போன வண்டியின் பாகங்களைக் கண்டு எப்படித் துடித்துப்போனான். அதனால் தான் பிறரது விரல் நகம்கூட படுவதற்கு அனுமதிப்பதில்லை. ஏதோ உயிருள்ள ஜீவராசிபோல அவ்வப்போது வருடி விடுவான். அதுவும் அவன் ஏறியமர்ந்ததும் உடல்மொழிக்கு மறுப்பே சொல்லாமல் செல்லப்பிராணி போல நடந்துகொள்ளும். மறந்துபோய் ஒருமுறை சாவியோடு விட்டுவிட்டு உள்ளே போய்விட்டான். ஒரு சுற்று வந்து அதேபோல நிறுத்திவிட்டால் தெரியவா போகிறது..! ஆசையாகக் கிளப்பியும்விட்டேன். படிக்கட்டிலிருந்தே பாய்ந்து வந்து மேலே விழுந்து கீழே தள்ளிச் சுருக்கென்ற சொல்லால் குத்தினான். வலிக்காதவன் போல எழுந்ததும் சமாதானப்படுத்த கார் சாவியைத் தந்தான். அவனிடமே திருப்பித் தந்துவிட்டு ‘ஸாரி’யுடன் அந்த அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். ஆனால் ஒரே ஒரு முறை அவன் எதிரிலேயே அதில் சவாரி போக வேண்டும் என்கிற தீ உள்ளே எரிந்தபடியே இருந்தது.

அவன் நீரை மேலே விசிறியபோது தான் அதன் மீதிருந்த கவனம் கலைந்தது. தொடர்ந்தான். ‘முதல்ல வர மாட்டேன்னு தான் சொன்னா…’ இப்போதுதான் இங்கு வந்திருக்கிறானா..! சொல்லி முடிக்க இன்னும் அரைமணி நேரம் ஆகுமே..! எனவே ஒரு தந்திரம் மூலம் இந்தத் தொந்தரவைத் தடுக்கத் தோன்றியது. ஆனால் ஏதோ நெருடியது. அவள் எப்படி அந்த அளவுக்குத் துணிந்து அனுமதித்தாள்..! எனவே அக்குவேறாகத் தெரிந்துகொள்ளவேண்டுமென்ற ஆவல் ஏற்பட்டது. திலீப் வெட்கம் கலந்த சந்தோஷக் குரலில் அதைச் சொல்கிற போதெல்லாம் நம்பாதவனாகப் பாவனைக் காட்டினேன். ‘நாக்கூசாம எப்பட்றா நடந்தமாரியே அடிச்சு வுடுற...?’ கையிலிருந்த பந்தைச் சுவரில் எறிந்து பிடித்தபடியே சீண்டினேன். அந்த அளவு அவன் தைரியசாலி இல்லையே என்கிற ஐயமும் ஓரத்தில் இருந்தது. என் லீலைகளை நான் கொஞ்சம் (கொஞ்சமென்ன நிறையவே) பொய்களைச் சேர்த்துச் சொன்னவை ஏதேனும் உசுப்பியிருக்குமோ! சிரிப்பு வந்தது. காலடியில் விளையாடிக் கொண்டிருந்த அவன் அக்காள் மகளைத் தூக்கி வந்து அதன் தலையில் அடித்து சத்தியம் செய்தான். சொன்னதிலிருந்த கேலியைப் புரிந்துகொள்ளாமல் தன்னை நிரூபிப்பதில் காட்டிய அவசரத்தில் வழக்கம்போல அவனிடம் சிறுபிள்ளையின் அப்பாவித்தனமே தெரிந்தது. வீட்டின் செல்லப்பிள்ளை ஆயிற்றே, பிறகு எப்படி இருப்பான்..?! பயந்த சுபாவியும்கூட. அதை மறைப்பதற்கு தன்னை அதிகமாகக் காட்டிக்கொள்வது அவன் இயல்பு.

கண்கொத்தி - சிறுகதை

ஒருமுறை அவள் ஏதோ வெடுக்கென்று சொன்னதற்காக இரண்டு நாள்கள் சரியாகச் சாப்பிடாமல் அதையே நினைத்தபடி அவளை எதிர்த்துப் பேசுவதற்கும் துணிவில்லாது பம்மிக் கொண்டு அலைந்தவன்தான், இவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறான்..! இன்னும் எட்டுத் தாள்களை ஒரே அமர்வில் தேறிவிட்டால் கணக்குத்தணிக்கையாளனாகிப் பச்சை நிறத்தில் கையெழுத்திடும் தகுதி பெற்றுவிடுவான். அதையொட்டிச் சேர்ந்த அலுவலகத்தில் அதே தகுதிகளோடு அவள் ஒரு மாதம் முன்னதாகவே சேர்ந்திருந்தாள். சமயங்களில் மிக வெளிப்படையாகவே தெரியவரும் அவனது அப்பாவித்தனத்தால் ஒருவேளை அவள் ஈர்க்கப்பட்டிருக்கலாமோ! தும்மினால் தெறிக்கும் தூரத்தில் அவர்களின் நாற்காலிகள் இருந்தன. அவளுடைய அளவெடுத்த பதில்கள், சிறு தவறுகளுக்கே எரிந்துவிழும் குணத்தால் முதலில் திலீப் அவதிப்பட்டான். ஆனால் அப்படிப்பட்ட பெரும்பான்மையினருக்கு அது ஒரு திரை மட்டுமே. அதை விலக்கினால் உணர்ச்சி மயமானவர்களாக, சட்டென்று எளிதில் உடைந்துபோகக் கூடியவர்களாகவே இருப்பார்கள். அவர்களால் கொட்டப்படும் பிரியத்தால் குறிப்பிட்ட ஆட்கள் திக்குமுக்காடிக்கூடப் போகக்கூடும். அந்தக் குறிப்பிட்ட நபர்களில் இவன் முதன்மையாக ஆகியிருக்கலாம். அதனால்தான் அந்த அளவு அவள் அனுமதித்திருக்கிறாள். சென்ற வாரம் பைக்கிலிருந்து அவன் விழுந்த காயத்தைப் பார்த்து அழுதாள் என்றும், தானும் விழுந்து அடிபட்டுவிட்டால் அந்த வலியை அனுபவிக்கலாம் எனவும் காயாத கண்ணீரோடு அவள் புலம்பியதாகச் சொன்னதைக் கேட்ட போது கூடுதலாக உப்புக்காரம் சேர்த்துக் கதை விடுகிறான் என்றே நினைத்துக்கொண்டிருந்தேன். எதையோ யோசித்தவனாக உட்கார்ந்திருந்த என்னிடம் ‘எடத்தைக் காட்றன் வா... அப்பவாவது நம்புறயா இல்லயான்னு பாக்கலாம்’ எனக் கை பற்றி இழுத்தான். `எந்த இடத்தை... அவளுக்கு முத்தங்குடுத்த இடத்தயா?’ சிரித்தவாறே அவனது சுருள்முடியை பதிலுக்கு இழுத்தேன். அதற்குள் அவனது உயிருக்கு நிகரான பைக்கைக் கிளப்பிவிட்டிருந்தான். ஓரக்கண்களால் அதன் பளபளப்பைப் பருகியபடியே ஏறியமர்ந்தேன்.

எதிரெதிர் வீடுகள் என்றாலுமேகூட மேல்சட்டை இல்லாமல் அலைந்த டவுசர் காலத்திலிருந்தே இணைபிரியாதவர்களாக இருந்தோம். அப்பா இல்லாத பிள்ளை அவன். அவர் ஈ.பி-யில் லைன்மேன். மின்சாரம் ஓடிக்கொண்டிருந்த அருகிலிருந்த வேறுகம்பத்தில் தவறுதலாக ஏறி இணைப்பில் கைவைத்தவர் உயிரின்றி மண்ணில் விழுந்தார். தாத்தாவும் பாட்டியும் பிள்ளைகளுடன் தவித்து நின்ற மகளைக் கூட்டிக்கொண்டு வந்துவிட்டனர். வாரிசு அடிப்படையில் அவன் அம்மாவுக்கு அது அலுவலக வேலையாக மாறி வந்தது. வசதிக்குக் குறைவில்லாத வீடு. எனவே வெளியே அவனை விடுவதேயில்லை. பூனையுடன் சேர்ந்து ஓருலகைச் சமைத்து நெடுநாள் அதற்குள்ளாகவே உலவினான். அவன் அக்காவின் திட்டுகளால்தான் ஊரின் தெருக்களை என்னுடன் சுற்றித் தெரிந்துகொள்ள ஆரம்பித்தான். சூடாக வெளியே எடுக்கப்பட்ட க்ரீம் பன் மாதிரியான அவனது தோற்றம் என் சோட்டாளிகளை வெட்கப்பட வைத்தது. எனவே எங்குமே அவனைச் சேர்த்துக்கொள்ளவில்லை. கோபத்துடன் விரட்டினர். பிறகு அவன் கண்டவை, சென்றவை, அறிந்தவை அனைத்துமே என் காலடியிலிருந்து அவனுக்குக் கிடைத்தவைதான். இதற்கு முற்றிலும் மாறாக படிப்பில் வெகுசுட்டி. எனவே இயல்பாகவே அவனுக்கு அடுத்தடுத்த கதவுகள் திறந்தபடி இருந்தன. எனக்கோ நேர்மாறாக நடந்தன. பதினொன்று படிக்கையில், குளித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு அக்காவை எட்டிப் பார்த்தேன், அவள் தூங்கும்போது தொட முயன்றேன் போன்ற புகார்கள் வீதியெங்கும் பரவி வெளியிலேயே வராமல் கிடந்தபோது திலீப்பின் வீடுதான் ஒரே புகலிடமாக இருந்தது. உடனடியாக பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டு கார் வொர்க்‌ஷாப்பிற்கு அனுப்பப்பட்டேன். ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி எழுதிக் கொள்ளும் டைரிகளாக இருவருமே எதையும் மறைக்காதிருந்தோம். ஆனால் முதலாளியின் மனைவியை முத்தமிட்டதை அவனிடம் சொல்லவில்லை. சில பெண்களை முயன்று தாயங்களுக்கு நிகராக அடிகளும் விழுந்தி ருக்கின்றன. கொஞ்சம் சூடான கற்பனைகளுடன் வென்றவைதான் வெளியில் வரும். ஆனால் இவனிடமிருந்து ஒன்றுவிடாமல் கறந்துவிடுவேன். ஒருவேளை இவனும் ஏதாவது மறைத்தி ருப்பானோ..! கொஞ்சம் குரலைக் கீழிறக்கி முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு பேசினால் உண்மை என்று நம்பிவிடுவான். ஆனால் என்னால் வெல்லவே முடியாத ஒன்று அவனது இருசக்கர ரதம். கிளப்பியதுமே அதன் சத்தம் அழகிய பெண்போல, எவரையும் ஒருமுறையேனும் திரும்பிப் பார்க்க வைத்துவிடும். அந்த ஒலியின் துல்லியம்..! அதற்காக மட்டும் எவ்வளவு செலவழித்திருப்பான்..! பெட்ரோலைக் காற்றாக நினைக்கும் மனமும் பணமுமிருந்தால்தான் கட்டுப்படியாகும். டயர்கள் பருத்த தொடைகள்போல அகன்றிருக்கும். றெக்கை மட்டும்தான் இல்லை. கண்ணை மூடினால் பறந்துகொண்டிருப்பதுபோலத் தோன்றிவிடும். இல்லையில்லை, இப்போது சிறகுகள் முளைத்தேவிட்டன. அதன்மீதுதான் அமர்ந்திருக்கிறோம். எவ்வளவு கார்களை ஓட வைத்திருப்பேன். அதி நவீனமானவை, நம்பவியலாத சொகுசுடையவை, கடவுளாக உணரவைப்பவை. எந்த ஒன்றையுமே விதவிதமாகப் பார்த்து அனுபவித்து விட்டால் ஒருகட்டத்தில் அதன்மீது சலிப்புதானே உருவாகும். எனவே ஒரு சமயத்தில் அது ஓர் அடைக்கப்பட்ட பெட்டி என அபத்தமாகக்கூடத் தோன்றியிருக்கிறது. ஆனால் இதுவோ..! காற்றைக் குடித்தும் கிழித்தும் செல்லும் இந்த அனுபவம்..! தரையைத் தொட்டபடியே பறப்பதென்றால்..! ஆனால் விலையோ ஒருபோதும் வாங்கவும் பராமரிக்கவும் முடியாத எட்டாக்கனி. பெருமூச்செழுந்தது. வீலிங் செய்து அந்தரத்தில் முன் சக்கரங்கள் சுழல சில அடிகள் வழுக்கியபடியே சென்று நிறுத்தினான். நான்கு கிலோமீட்டர்களேனும் வந்திருப்போம். சின்னப் பையன்கள் சூழ்ந்துகொண்டு கைதட்டினர். மனதின் மூலையில் சுருண்டு கிடந்த பொறாமை தன் அனைத்துக் கண்களுடன் விழித்துக்கொண்டது.

‘இந்த இடம்தான்...’ இப்போது அவனிடம் மெளனம் சூழந்தது. மனதிற்குள் திரும்பவும் அதை நிகழ்த்திப் பார்த்துக் கொண்டிருக்கிறானா..! கண்கள் இப்படி மின்னுகின்றனவே..! வியப்பாக இருந்தது, அது குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த மரத்தடி. மெல்லிய தூறல் இருவரையுமே எல்லை மீற வைத்திருக்கலாம். சற்றுப் பெரிய ஆட்களின் வீடுகள் போலிருக்கிறது. ஆட்களின் நடமாட்டம் குறைவாகத் தென்பட, கட்டடங்களின் பிரமாண்டங்கள் ஒன்றையொன்று வம்புக்கிழுத்தன. அங்கு கிடந்த கல்மேல் அமர்ந்து சிகரெட்டைப் பற்ற வைத்து சாதாரணமாக அந்தப் பகுதியைக் கண்களால் மேய்ந்தபடியே புகையை பைக்கின் மீது எரிச்சலுடன் படரவிட்டேன். கற்றுக் கொடுத்தவனையே தாண்டிப் போகிறான்கள்..! காறித் துப்பினேன். தனியாக ஒர்க்‌ஷாப் வைக்க இவன் அம்மாவிடம்தான் பணம் கேட்டிருக்கிறேன். எனவே நேரடியாக ஏதும் சொல்லிவிடக்கூடாது. அப்போது பளீரென்று ஒன்றின் மீது கண்கள் நிலைத்தன. அதற்குள் அங்கு வந்ததை அவளிடம் போன் செய்து சொல்லிக் கொஞ்ச ஆரம்பித்திருந்தான்.

நிதானமாக எழுந்து கூர்மையாக அந்த வீட்டையே பார்த்தபடியிருந்தேன். அச்சம் கால்விரல் நகங்களுக்குள் ஊடுருவுவதாகப் பட்டது. முன்னோக்கிச் சில அடிகள் வைத்தேன். முன்புறத்தில் செடிகள் அடர்ந்திருந்த வீட்டினுள்ளிருந்து அது கண்முன் ஓடும் உலகை சாவகாசமாக உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தது. திலீப் அவனாகவே அருகில் வந்து கேள்விக்குறியுடன் நின்றான். பதற்றத்தில் விரலை முன்வாசல் கேட்டை நோக்கி நீட்டிவிட்டிருந்தேன். ‘பாம்பா...’ எனத் திகைத்துப் பின்வாங்கினான். மறுத்ததும் ‘பூனையா..!’ என ஆர்வத்துடன் முன்னேறிச் சென்றான். சட்டைக்காலரைப் பிடித்திழுத்து, துல்லியமாகச் சுட்டினேன். அங்கு ஏதுமறியாப் பேதைபோல கேமரா பல்லைக் காட்டி இளித்துக்கொண்டிருந்தது. ‘அதுக்கு..?’ என்றான் அலட்சியமாக. வண்டி நிறுத்தப்பட்டிருந்த பரப்பளவு முழுவதையுமே அது பசி தீராது விழுங்கிக் கொண்டேயிருக்கிறது என்பது அவனுக்கு உறைக்கவில்லையா? சுற்றிலும் எவருமில்லை என உறுதியான பின் சற்றுத் தள்ளி இழுத்துச் சென்று மொபைலில் சில வீடியோக்களைத் திறந்து காட்டினேன். அவனைப்போலவே பொது இடங்களில் அத்துமீறியவர்களின் ஆபாசங்களின் குவியல்கள் கொட்டியபடியிருந்தன. திலீப்பின் முகம் வெளிறியது. அவனது மயிர்க்கால்கள் ஒவ்வொன்றுமே பயத்தில் குத்திட்டு நிற்க, மொத்த உடலும் விறைப்படைந்ததுபோல இறுகியது. நேற்று அவன் நின்ற இடத்தைக் குறித்துவிட்டு அவ்வீட்டிற்கு அப்பால் வழிப்போக்கனைப் போல நடந்துபோய் அங்கிருந்து நோட்டமிட்டேன். நகராது நிற்கும் என்னை நோக்கி இதயம் வாய்வழியாக வந்துவிடும் என்பதுபோல நிலைகுலைந்து ஓடிவந்து உலுக்கினான். அனாதையாக அவன் வண்டி நின்று கொண்டிருந்தது. அந்தப் பையன்களில் ஒருவன் அதன் உள்ளங்கையளவு கண்ணாடியைத் திருப்பிக்கொண்டிருக்க மற்றவன் ஏற முயல நாயொன்று முன்சக்கரத்தை முகர்ந்தபடி கால்தூக்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தது. உள்ளே புன்னகை அரும்பியது. வெடுக்கென்று மொபைலைப் பிடுங்கி அக்காணொலிகளை மீண்டும் ஓடவிட்டான். ‘விஷயம் பப்ளிக் ஆனவுடனே இதுல சில பொண்ணுக சூசைட் பண்ணிக்கிச்சு...’ என்றதும் அவன் முகம் அஷ்டகோணலாகியது. மூச்சை வாய்வழியே வேகமாக விட்டபடி, வேறேதும் சொல்லிவிடாதே எனக் கெஞ்சும் பாவனையில் வியர்த்துக் கொட்ட அசையாது பரிதாபமாக நின்றான்.

‘சரி... சரி... சட்டுனு எடத்தை காலி பண்ணலாம். இதுக்கெல்லாம்போய் கவலப்பட்டுக்கிட்டு... வாடா’ எனக் கொஞ்சம் தைரியமூட்டி அழைத்தபோதும் திலீப் ஜடம்போல அசையாது கால்கள் நடுங்க, நடக்கத் தெம்பில்லாமல் அங்கேயே குத்தவைத்து அமர்ந்துவிட்டான். அவன் பார்வையிலிருந்த இறைஞ்சுதல் குழந்தையினுடையதுபோலக் கபடமற்றிருந்தது. திடீரென ஆவேசம் வந்தவனாகக் கல்லைத் தூக்கிக்கொண்டு அவ்வீட்டை நோக்கிச் சென்றான்.

‘டேய்... டேய்... பைத்தியக்காரா. நீயே காட்டிக் குடுத்திருவயாட்ட இருக்குது. கீழ போட்றா.ரொம்ப நேரம் இவடத்திக்கு நிக்க வேண்டாம். இதெல்லாம் பிரச்னையாவே ஆகாது…’ என நிறுத்தி அவனையும் வீட்டையும் அத்தெருவையும் ஒருமுறை அளவெடுத்த பிறகு, ‘இந்த ஏரியாவுல திருட்டு, கொல, ஆக்ஸிடெண்டுனு எதுவும் நடக்காம இருந்தா போதும்...’ கால்தூக்கிய அந்த நாயைப் பார்த்தவாறே சொன்னேன். புரியவில்லைபோல. ‘அப்பதான்டா ஆள புடிக்க இங்கயிருக்குற கேமராவை நோண்டுவானுக. இல்லீனா அது பாட்டுக்கு சும்மாதான கிடக்கப் போகுது...’ என்றதும், அவன் முகத்தில் சற்றே நிம்மதி படர்ந்தது. சிறுவன் மாதிரி அங்கேயே தன் செருப்பைக் கழற்றி விட்டுவிட்டு, ஏதும் நடந்துவிடக்கூடாதென வானம் பார்த்து வேண்டிக்கொண்டான். விட்டால் வீட்டைத் தொட்டுக் கும்பிட்டுவிடுவான் போலிருக்கிறது. வண்டியின் அருகில் வந்ததும் சற்று முன் கலைந்துபோன பயம் மீண்டும் அவனைப் பற்றிக் கொண்டது. ஏனெனில் அவளிடமிருந்து அழைப்பு வந்தது. துண்டித்தான். யாரேனும் எங்களைப் பார்க்கிறார்களா என்பதிலேயே என் கவனமிருந்தது. ஆனால் அவனோ குழம்பிப் போய் வண்டியில் வந்ததைக்கூட மறந்தவனாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். இப்போது அதை நானே கிளப்ப முடியும். ஆனால் அது ஒரு இழிவெனத் தோன்றியது.

பிறகு திலீப் தன்னிலை மறந்து ஒருவித ஊசல் மனநிலையுடனேயே காணப்பட்டான். மூன்று நிமிடத்தில் அங்கு கொண்டு வந்த நிறுத்தியவன், வீடு செல்ல அரைமணி நேரத்திற்கும் மேல் எடுத்துக்கொண்டான். அவ்வளவு குறைந்த வேகத்தில் கட்டுப்பாடு நீங்கியவனாக கிட்டத்தட்ட வண்டியை உருட்டினான். சிறிது தூரம் சென்றதும் எதையோ மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டதைப்போல திரும்பவும் அதே இடத்திற்கு ஓட்டி வந்து, தள்ளி நிறுத்தி எதையோ துழாவுவது மாதிரி எல்லாப் பக்கங்களிலும் கண்களைச் சுழல விட்டான். ஏதோ ஒரு குண்டு மஞ்சள் பல்பைப் பார்ப்பதுபோல சர்வசாதாரணமாகச் சூரியனைக் கண்ணெடுக்காமல் வெறித்துக்கொண்டிருந்தான். பிறகு தளர்ந்துபோய் பெட்ரோல் டேங்க் மீது சிறுவனைப்போல தலைவைத்துப் படுத்துக் கொண்டான். அவனுள் என்ன ஓடுகிறது என்பதை யூகித்துவிட்டிருந்தாலும்கூட எழுப்ப மனம் வரவில்லை. இதைச் சொல்லாமலேயே விட்டிருக்கலாமோ என்றிருந்தது. அது ஒரு எச்சரிக்கைக்காகத்தானே சொன்னோம். இப்படிக் கவிழ்ந்து போவான் என நினைக்கவேயில்லையே..! அதற்குள் அவளிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்தபடியிருந்தன. எரிச்சலுடன் துண்டித்து வசவைக் காற்றில் துப்பினான். என்ன, கெட்ட வார்த்தை பேசுகிறான்..! இன்னும் தெரியாமல் என்னென்ன மூடி வைத்திருக்கிறானோ..! தோளைப் பற்றி அழுத்தியதும் திரும்பி ‘நீ யார்?’ என்பதுபோல முறைத்தான். அப்படியானால் அவனுக்குப் பின்னால் ஏறியமர்ந்தது நினைவிலேயே இல்லையா..! யாரிடமோ முறையிடுவது போல கீழிறங்கிய குரலில் ‘பயமா இருக்கு...’ என்றவாறே இல்லாத எச்சிலை சிரமத்துடன் விழுங்கிவிட்டு, கிளப்பினான். இந்த அளவுக்கு பேடித்தனமுடையவனா பொது இடத்தில் துணிந்து அப்படி நெருக்கம் காட்டினான்..? ‘லூஸ்ல வுடுடா... தூங்கி எந்திருச்சா இதுக்கா இப்படி நடுங்கிக்கிட்டு இருந்தோம்னு சிரிப்பா வரும்...’ எனத் தேற்றியதுமே முகம் மலர்ந்து, ‘அப்டியா..! ஒன்னும் பிரச்னையில்லையா... சொல்றா... ப்ளீஸ்...’ என வேண்டினான். அவனை வீட்டில் சேர்ப்பதற்குள் போதுமென்றாகிவிட்டது.

அவச்சொல்லும் மானக்கேடும் பழித்தூற்றலும் தன்னையும் குடும்பத்தையும் தினுசுதினுசாகச் சூழ்வதாகக் கற்பனை செய்தபடியே படுத்திருந்தான். பிறகு அவளுடைய நிலைமை என்னவாகும்? நடுக்கம் குளிர் போல உடம்பெல்லாம் ஓடி அடங்கியது. அவனது வீடு முழுக்க அவன் அறையெங்கும் அந்த ஒற்றைக்கேள்வியே நிறைந்திருப்பதாகத் தோன்றியது, ‘வெளியில தெரிஞ்சா என்ன ஆகறது..?’ திரும்பவும் கேட்டான். ‘நாங்கேரண்டி... ஒன்னும் ஆகாது. மூடிட்டுப் படு...’ என மிரட்டியதும் ‘டக்குன்னு பூகம்பம் வந்து அந்த வீடு இடிஞ்சுருச்சுன்னா...’ படுக்கையிலிருந்து துள்ளி எழுந்து சிரித்தான். கோபத்தில் அடித்துவிட்டிருந்தேன். தவறு செய்த மாணவனைப்போல பணிவுடன் வாங்கிக் கொண்டான். அவனுடனேயே பதினோரு மணி வரை இருந்து, நானே தைலம் தேய்த்துவிட்டு அவன் உறங்கியதைப் பார்த்த பிறகே அங்கிருந்து நகர்ந்தேன்.

காதிற்கருகில் வண்டு ரீங்கரிப்பது போல தொடர்ந்து சத்தமெழவும் ஒளிர்ந்த மொபைலை சலிப்புடன் திறந்தபோது எட்டுத் தவறிய அழைப்புகள் அவனிடமிருந்து வந்திருந்தன. வாரிச்சுருட்டி முகங்கூடக் கழுவாமல் ஓடினால் ஆளைக் காணோம். எதிர்பார்த்தது போலவே அதே இடத்தில் நின்றுகொண்டு ஒரு காதலியின் வீட்டைப் பார்ப்பதுபோல, இல்லையில்லை படுக்கையில் இறுதிநிமிடத்திலிருக்கிற சீக்காளி தன் ரத்தச்சொந்தங்களைப் பார்ப்பதுபோல, அப்படியுமில்லை, தன்னை இணுங்கு இணுங்காகத் தின்னக் காத்திருக்கும், பார்வைக்குச் சாதுவாகத் தோன்றும் மிருகத்தைக் காண்பதுபோல ஏதும் செய்ய முடியாத ஆற்றாமையுடனும் அடக்கப்பட்ட கோபத்துடனும் அங்கேயே பார்த்துக்கொண்டிருந்தான். நல்லவேளையாக அவ்வீட்டிற்கருகில் அடைத்துக் கிடந்த சாக்கடையைக் குத்திக் குடைந்து நான்கைந்து கார்ப்பரேஷன் பணியாளர்கள் போராடிக்கொண்டிருந்தனர். பலரது கவனமும் அங்கேயே குவிந்திருந்தது. அங்கு என்னைக் கண்டதும் சாதாரணமாக ‘நேத்து நைட்டு எந்த அசம்பாவிதமும் நடக்கல’ எனத் தோளைக் குலுக்கினான். போதாததற்கு நாளிதழை வேறு காட்டினான். அங்கிருந்தவர்களை ஏதாவது கேட்டுத் தொலைத்திருப்பானோ..? அவன் கண்கள் அந்தக் கேமராவை விட்டு அகலவேயில்லை. வம்படியாக இழுத்துப் போகவேண்டியிருந்தது. இரவு முழுக்கப் பினாத்தியபடியே உறங்காதிருந்திருக்கிறான்.

கண்கொத்தி - சிறுகதை

அனலாகக் கொதித்த காய்ச்சலால் அடுத்த சில தினங்கள் அவன் அலுவலகம் செல்லவில்லை. திலீப்பின் அம்மா அவன் நடவடிக்கையிலிருந்த மாற்றத்தைக் கேட்ட போது இட்டுக்கட்டி நான் சொன்ன பொய்கள் அவரை வேறெதையும் யோசிக்க விடாமல் தடுத்துவிட்டன. சாலையில் எவரேனும் தன்னை உற்றுப்பார்க்கிறார்கள் எனத் தோன்றினால் அவன் கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். உடனடியாக ஓரத்திற்கு ஒதுங்கி அந்த இணையதளங்களைத் திறந்து அவற்றுக்குள் தன்னுடையதையும் சேர்த்து விட்டார்களா என உதறல் எடுக்கப் பரிசோதித்த பின்பே அவன் மூச்சு நிதானமடையும். அந்தக் கேமராவுக்கும் அவர்கள் நின்றிருந்த இடத்திற்குமிடையே பத்து மீட்டர்கள் சொச்சம் இடைவெளியாம். யாருமற்ற பின் மதியத்தில் நடந்து அளந்து பார்த்து வந்திருக்கிறான். இவனை என்ன செய்ய? பாவப்படுவதா? அடித்து உதைப்பதா? யோசிப்பதற்குள் அதேயளவு தூரத்தில் என்னை நிறுத்தி மொபைலில் வீடியோவை ஓட விட்டான். அதில் என் முகத்தைத் துல்லியமாக அடையாளம் காண முடிந்தது. உதவாக்கரையை எறிவதுபோல தூர மொபைலை வீசிவிட்டு உள்ளே போனான். நல்லவேளை உடையவில்லை. திட்டி அவனிடம் தந்த போது செய்தி சேனல்களில் உள்ளூர்ச் செய்திகளின் முன் மிரண்டு உட்கார்ந்திருந்தான். காக்கிகளைக் கண்டால் வேண்டுமென்றே அவர்கள் முன் தோளை உரசுவது போல நடந்து போவான். அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். எனவே எந்தப் பிரச்னையும் இதுவரை முளைக்கவில்லை என அறிந்து கொள்வான். அப்பாடாவென்றிருக்கும். இந்தச் சமயங்களில் அவன் கவனம் முழுவதுமாக வண்டியிலிருந்து நழுவிப்போயிருந்தது. அந்த இருசக்கர விமானத்தில் பறக்கும் நாள் வெகுதொலைவிலில்லை என்று தோன்றியது.

இந்தக் களேபரங்கள் ஒருவழியாக மட்டுப்பட்டன. அதற்கடுத்த வாரம்கூட எந்த ஆபத்தான தகவலும் வரவில்லை. எனவே திலீப் மெல்ல சீரடைந்தான். ஆனபோதும் புதிதாக ஓர் இடத்திற்குச் சென்றதுமே மொத்த உடம்புமே கண்களாகி கேமரா எதுவும் இருக்கிறதா என மனம் நடுங்க கண்களைச் சுழல விடும் பழக்கம் அவனுக்கு வந்துவிட்டது. பழையபடி அலுவலகத்துக்குக் காலையில் வேறுவழியில் சென்றுவிட்டுத் திரும்புகையில் அவ்வீட்டின் வழியே உல்லாசமாக விசில் அடித்தபடியே கடந்து வரும் அளவிற்குத் தேறியிருந்தான். ஆனாலுமே கூட அவள் அவனுக்கு அவ்வப்போது அனுப்பும் செல்ஃபிகளுக்குப் பின்னாலிருந்த சுவர்களை கூரைகளை நோக்கி அனிச்சையாக அவன் கண்கள் நகரும். அவளுக்கு இந்த விஷயங்கள் எதுவுமே தெரியாமல் பார்த்துக் கொண்டான். அவள் கைகோக்கும்போதுகூட இயல்பாக இருக்க அவனால் முடியவேயில்லை. கண்காணிப்பின் விஷம் அவனை வதைத்துக் கொண்டேயிருந்தது.

அன்று வொர்க்‌ஷாப்பில் சுமாரான வேலையிருந்ததால் பிறருடன் வம்பு பேசிய பின்னும் நேரம் மிச்சமிருந்தது. சக வேலையாள் உதிரிபாகமொன்றுக்கு வெல்டு வைத்து வருவதற்குள் மொபைலிலிருந்த செயலியைத் திறந்தேன். ஒரு பெண் குலுங்கித் தளும்பி விரகத்துடன் அசைந்து ஆடுவதை ஆசைதீரப் பார்த்துக்கொண்டிருந்தபோது திலீப்பிடமிருந்து அழைப்பு வந்தது. குரலில் ஒரு புயலையே கிளப்ப முடியுமென அப்போதுதான் உணர்ந்தேன். பத்தாவது நிமிடத்தில் அங்கிருந்தேன். நடக்காதென எண்ணியது நிகழ்ந்தேவிட்டது. அந்த வீட்டை மட்டுமல்ல, அந்தப் பகுதியையே போலீஸ்காரர்கள் சல்லடையிட்டுக் கொண்டிருந்தனர். சில தினங்களுக்கு முன் நகரின் மாபெரும் ஜுவல்லரியில் இரவு துளையிட்டுக் கொள்ளையடித்த கும்பல் இருவாரங்களாக இந்தப் பக்கமாகத்தான் அடிக்கடி சுற்றித் திரிந்ததாகத் தகவல் வந்திருக்கிறதாம். அவன் என் கைகளை கெட்டியாகப் பற்றிக்கொண்டான். வீடுகளின் கேமராக்களை ஆராய்ந்துகொண்டிருந்த காவலர்கள் தோராயமாக வரையப்பட்ட திருடர்களின் படத்தைக் காட்டி ஆட்களை விசாரித்துக்கொண்டிருந்தனர். பலமுறை விரட்டியும் கூட்டத்தைக் கலைக்க முடியவில்லை. அந்த வீட்டின் காம்பெளண்ட் சுவரையொட்டி நின்றிருந்த ஆட்களுடன் கலந்து அவர்களையே பார்த்து நின்றிருந்தோம். வயதான தம்பதி மெதுவாக வந்து அவர்களின் கேள்விகளுக்குக் கைவிரித்து உதடு பிதுக்கினர். ‘கடந்த மாதம் பெய்த பேய்மழை கொண்டு வந்த பேரிடியில் அந்தக் கேமரா செயலிழந்துவிட்டது’ என்றார் அந்த அம்மா. சரிசெய்ய ஆட்களைப் பலமுறை அழைத்தும் எவருமே வரவில்லையாம். அவர்களாவது அதற்கொரு வழிசெய்ய வேண்டுமென, கொண்டு வந்த நீரை காக்கிகளிடம் குடிக்கத் தந்தார்.

அருகிலிருந்த யாரோ ஓடுவது போலிருந்தது. திலீப்தான். அந்தப் பரவசத்தை அவனால் தாங்கமுடியவில்லை என்று தோன்றியது. கல்லை ஓங்கியபடி அடிக்க வந்தான். பிறகு சிரித்தபடியே கட்டிப்பிடித்தான். என் கன்னத்தைக் கிள்ளி வாயில் போட்டுக்கொண்டான். இவ்வளவு சந்தோஷத்தில் அவனே சாவியைத் தருவான் என நினைத்து அந்த பைக்கிற்கருகில் சென்றேன். எவரிடமோ பேசியபடியே ஏறியமர்ந்தான். வெடித்துச் சிரித்தான். பிறகு என்னைச் சுற்றி அரைவட்டம் போட்டு எழுந்து மிதமிஞ்சிய வேகத்தில் ஹாரனை அலறவிட்டபடி சீறிப் பறந்தான்.

என்ன செய்வதென்று தெரியாமல் அதே மரத்தடியில் அப்படியே நின்றுகொண்டிருந்தேன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism