பொது நூலக மேம்பாடு, புதிய நூலகங்கள், அறிவுசார் நகரம் என அரசு முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் பற்றிய அறிவிப்புகள் புத்தக ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.
2022-2023 ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட் அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தற்போது அறிவித்து வருகிறார். தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த ஆகஸ்டில் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த ஆட்சி தாக்கல் செய்யும் இரண்டாவது பட்ஜெட் இது. நூலக மேம்பாடு பற்றி அமைச்சர் வாசித்த அறிவிப்புகள் இதோ,
1. பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து மேம்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்க உயர்மட்ட குழுவை அரசு அமைத்துள்ளது.
2. புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் உயர்தர நூலகங்கள் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டாண்டுகளுக்குள் அமைக்கப்படும். இந்நூலக கட்டிடங்களுக்கு தமிழறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
3. சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்த புத்தக வாசிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பு மக்கள் இயக்கமாக எடுத்து செல்ல சென்னை போலவே அனைத்து மாவட்டங்களிலும் புத்தக காட்சிகள் நடத்தப்படும்.
4. இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் 4 இலக்கியத் திருவிழாக்கள் கொண்டாடப்படும்.
5. புத்தகக் காட்சி, புத்தகத் திருவிழாக்களுக்கு 5.6 கோடி ரூபாய் மதிப்பீடு ஒதுக்கீடு செய்யப்படும்.
6. மனித வளத்தை மேம்படுத்தி அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைதூர இலக்கு. அறிவு சார் நகரம் 'Knowledge City' உருவாக்கப்படும். உலகின் முதன்மை பல்கலைக்கழங்களின் கிளைகளை அது கொண்டிருக்கும். TIDCO, SIPCOT, TANSITCO போன்றவற்றின் உதவியோடு ஆய்வகங்கள் பல்கலைக்கழகங்கள் தோறும் அமைக்கப்படும்.
தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாடு
"தமிழ்மொழிக்கும் இந்தோ ஐரோப்பிய மொழி குடும்பத்திற்கும் இடையிலான உறவை வெளிக்கொணரும் வகையில், தமிழ் வேர்ச்சொல் வல்லுநர்களைக் கொண்ட குழு அமைத்து அகரமுதலி உருவாக்கும் சிறப்பு திட்டம் அரசு செயல்படுத்தும்." அகரமுதலி திட்டத்திற்கு 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரியாரின் சிந்தனைகளும் எழுத்துக்களும் எல்லோருக்கும் கொண்டு செல்லும் வகையில் பெரியாரின் சிந்தனைகள் தொகுப்பை 21 இந்திய மற்றும் உலக மொழிகளில் அச்சு மற்றும் மின்னூல் பதிப்புகளாக வெளியிட இருப்பதாகவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தப் பணிகளுக்காக 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.