Published:Updated:

குற்றத்தின் கண்கள் - சிறுகதை

குற்றத்தின் கண்கள்
பிரீமியம் ஸ்டோரி
குற்றத்தின் கண்கள்

- அரிசங்கர்

குற்றத்தின் கண்கள் - சிறுகதை

- அரிசங்கர்

Published:Updated:
குற்றத்தின் கண்கள்
பிரீமியம் ஸ்டோரி
குற்றத்தின் கண்கள்

மகாலிங்கமும் அவர் உதவியாளரும் காரில் போய்க்கொண்டிருந்தனர். பிரச்னைக்குரிய ஒரு இடம் விலைக்கு வருகிறது என்ற தகவல் அவர் காதுகளுக்குக் கிடைத்ததுமே, அவர் உடலில் உள்ள அனைத்து அணுக்களுமே பரபரப்பாக இயங்கத் தொடங்கின. முடிந்த அளவிற்கு தகவலை ரகசியமாக வைத்திருக்க முயற்சி செய்தார். ஆனால், தகவல்களை ரகசியமாக வைத்திருப்பது எப்போதுமே முடியாத ஒன்றாகவே இருக்கிறது. அதுவும் இதுபோன்ற ஒரு தொழிலில் அது நிச்சயம் சாத்தியமற்றது. மகாலிங்கத்தின் செல்வாக்கும் அவரின் பணபலமும் மற்றவர்களுக்குத் தெரியும். தகவல் தெரிந்தாலும் அதை நெருங்க யோசிப்பார்கள். அதையும் மீறி சிலர் முயற்சி செய்வார்கள் என்றும் அவருக்குத் தெரியும்.

அவர்கள் இடத்திற்குப் போய்ச் சேர்ந்ததும் வேகமாக ஓடிவந்து ஒருவர் காரின் கதவைத் திறந்துவிட்டார். அவர்தான் மகாலிங்கத்திற்கு இந்த இடத்தைப் பற்றிய தகவலைச் சொன்னவர். காரை விட்டு இறங்கியதுமே மகாலிங்கம் அவரிடம் ரகசியமாக “என்னய்யா பிரச்னை” என்றார்.

“இடத்த வித்துட்டு ரெண்டு புள்ளைங்களும் பிரிச்சிக்கலாம்னு இருக்கானுங்க. அப்பன், ‘நான் இருக்கற வரைக்கும் விக்கக்கூடாது’ன்னு குதிக்கறான்.”

“பேசிப் பாத்தியா?”

“என்னப் பாத்தாலே அடிக்க வரான்.”

“எங்க இருக்கானுங்க?”

“அதோ அந்த வீடுதான்!”

மகாலிங்கம் வீட்டைப் பார்த்தார். சுற்றிலும் ஒரு முறை பார்த்தார். நல்ல இடம். கிடைத்தால் பெரிய லாபம் கிடைக்குமென்று அவர் மனம் கணக்குப்போட்டது. மெல்ல வீட்டை நெருங்கினார்கள். மகன்கள் இருவரும் வாசலில் நின்றிருந்தனர். மகாலிங்கத்திற்கு வணக்கம் வைத்தனர். அவரும் பதிலுக்கு அலட்சியமாக ஒரு வணக்கம் வைத்தார். கூட இருந்தவர் “எங்க” என்றார்.

“காலைலயே பிரச்னை. உள்ள போயி கதவச் சாத்திக்கினாரு” என்றான் ஒரு மகன்.

“போயி கூப்பிடுங்க” என்றார் மகாலிங்கம்.

இரண்டு மகன்களும் தயங்கியவாறே உள்ளே சென்றனர்.

மகாலிங்கம் அருகிலிருந்த கிணற்றை எட்டிப் பார்த்தார். உள்ளே சுத்தமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு இருந்தது.

உள்ளேயிருந்து அவர்கள் “அப்பா... அப்பா...” என்று கூப்பிடும் குரலும் தொடர்ந்து கதவு இடிபடும் சத்தமும் கேட்டது. பின் ‘ஐயய்யோ’ என்ற அலறல் சத்தம் கேட்க, மகாலிங்கமும் அவர் உதவியாளரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு வேகமாக உள்ளே ஓடினர். கதவு உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த அனைவரும் அதிர்ச்சியில் நின்றுகொண்டிருந்தனர். பெண்களின் குரல் மீண்டும் ஓலமாகக் கேட்க ஆரம்பித்தது. மகாலிங்கமும் அதிர்ச்சியாக உள்ளே பார்த்தார். உள்ளே அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர், மேலாடை எதுவுமில்லாமல் வெறும் வேட்டி மட்டும் கட்டிக்கொண்டு, அது அவிழ்ந்து விழும் நிலையில தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார். அவர் உடல் லேசாக ஆடிக்கொண்டிருந்தது. கண்கள் மூடாமல் திறந்துகொண்டிருந்தன. தூக்கில் தொங்கினால் கண்கள் திறந்தா இருக்குமென்று அவர் தனக்குள் கேட்டுக்கொண்டார். அந்தக் கண்கள் மகாலிங்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. அவரும் அவற்றையே பார்த்துக்கொண்டிருந்தார். முதல்முறையாக அவருக்குள் ஏதோ ஒன்று செய்தது. அதை அவரால் என்னவென்று சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை.

குற்றத்தின் கண்கள் - சிறுகதை

சில நாள்களாக மகாலிங்கத்திற்கு தன்னை யாரோ பின்தொடர்வதுபோல் தோன்றிக் கொண்டிருந்தாலும் அன்றுதான் அவர் அதை கவனித்தார். அன்று காலை முதலே உற்சாகமாகக் காணப்பட்டார். நீண்ட நாள்களாக இழுபறியில் இருந்த ஒரு இடம் முடிவதற்கான அறிகுறிகள் தெரிந்தன. முடிந்தால் நல்ல கமிஷனும் மேலும் சில செல்வாக்கான நண்பர்களும் கிடைக்கப் பெறுவார்.

மகாலிங்கம் சாதாரண கல்யாண புரோக்கராகவே வாழ்க்கையைத் தொடங்கினார். அதுவும் ஒரு விபத்தாக நிகழ்ந்தது. அவருடைய இருபத்து மூன்றாவது வயதில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவர்கள் அணியில் யார் மூலமாகவோ விளையாட வந்த நாற்பத்து மூன்று வயதுடைய ராமமூர்த்தி என்பவருடன் நட்பு ஏற்பட்டது. அவருக்குச் சில உதவிகள் செய்ததன் மூலமாக நெருக்கமாகி, ஒரு சந்தர்ப்பத்தில் அவருக்கு உதவியாளராகி, பின்பு அவருக்கு உடல்நிலை சரியில்லாத ஒரு சந்தர்ப்பத்தில் முழுக் கல்யாண புரோக்கராகப் பரிணமித்தார். ‘அவர் செய்து வைத்த சில திருமணங்கள் பிரச்னை ஆனபோது அவர் அதைத் திறமையாகச் சமாளித்தார்’ எனவும், அதேநேரம் ‘அந்தப் பிரச்னைகளை அவரே திட்டமிட்டு உருவாக்கினார்’ என்றும் ஊரில் பேசிக்கொண்டனர். அதாவது, உண்மையான குடும்பம்போல் ஒன்றை உருவாக்கி, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை ஒரு பணக்காரக் குடும்பத்தில் நுழைத்து, பின் அந்தப் பெண்ணைப் பற்றிய உண்மைகள் தெரிந்ததும் பஞ்சாயத்து செய்து ஒரு பெருந்தொகையைப் பெற்றுப் பிரச்னையைப் பைசல் செய்ததாகவும், பின் அவரே அந்த வீட்டுப் பையனுக்கு வேறு நல்ல பெண் பார்த்துத் திருமணம் செய்துவைப்பதாக உறுதியளித்ததாகவும், அவர்கள் அதை மறுத்துவிட்டு வேறு பெண்ணை அந்தப் பையனுக்குப் பார்த்ததாகவும், ஆனால் அந்தப் பையன் தற்கொலை செய்துகொண்டதாவும் ஊருக்குள் ஒரு கதை உலாவருகிறது. உண்மையில் மகாலிங்கத்தைப் பற்றி இந்தத் தொழிலில் பல கதைகள் சுற்றிவருகின்றன. பெரும்பாலும் மகாலிங்கத்தின் உண்மைத் தன்மையைக் கேள்விக்குட்படுத்தும் கதைகள். ஆனாலும் அவர் தொடர்ந்து தன் தொழிலில் வளர்ந்து வந்தார். அவருடன் தொழிலில் ஈடுபட்டவர்கள் யாரும் நல்லவர்கள் என்று பெயரெடுத்தவர்கள் இல்லை. புதிதாக வந்தவர்கள் யாருமே நன்றாக வாழ்ந்தார்கள் என்றும் சொல்வதற்கில்லை.

மகாலிங்கம் தன் அலுவலக இருக்கையிலிருந்து கண்ணாடி வழியாக மெல்ல நோட்டமிட ஆரம்பித்தார். அவர் கண்கள் மெல்ல, மிக மெல்ல அலுவலகத்திற்கு வெளியே இருக்கும் ஒவ்வொரு முகமாக ஆராய்ந்தன. அவருக்கு சந்தேகமாக இருக்கும் நபர்களின் மீது மட்டும் அவை கொஞ்ச நேரம் நிலைத்து நின்று அவர்களின் மொத்த உருவத்தையும் ஆராய்ந்தன. அது ஏற்கெனவே தன் நினைவுகளில் பதிவாகிய முகமா என அலசி ஆராய்ந்து, இல்லை என்று நிச்சயமான பின்பே அவர் கண்கள் அடுத்த ஆளை நோக்கி நகர்ந்தன. இடைப்பட்ட நேரத்தில் சிலர் வந்து போனார்கள். ஆனால், அங்கேயே நின்றுகொண்டிருந்தவர்களை மட்டுமே மகாலிங்கம் கணக்கில் எடுத்துக்கொண்டார். உள்ளேயிருந்து அவர் பார்ப்பது வெளியே தெரியாது என்பதால், தைரியமாக ஆராய்ந்துகொண்டிருந்தார். அவருடன் பேசுவதற்கும் சந்தேகம் கேட்கவும் வந்த சில வேலையாட்களிடம், ‘கொஞ்ச நேரம் கழித்து வரும்படி’ சொன்னார். மிகுந்த குளிராக இருந்த அந்த அறையில் தனக்கு லேசாக வியர்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்த நொடி, தன் தேடலை நிறுத்திவிட்டுப் பெருமூச்சொன்றை விட்டார். மெல்ல எழுந்து தன் அறையை விட்டு வெளியே வந்து சுற்றிப்பார்த்தார். கொஞ்சம் பெரிய அலுவலகம். சில அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டு, திருமணம், நிலம் என இருபிரிவுகளாக இருந்த இடத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பரபரப்பாக இருந்தனர். முக்கியமாக நிலம் சார்ந்த பிரிவில் பரபரப்பு சற்று அதிகமாகவே காணப்பட்டது.

மகாலிங்கம் வெள்ளை பேன்ட் வெள்ளைச் சட்டை அணிந்திருந்தார். அவர் நிலங்களைக் கைமாற்றிவிட ஆரம்பித்தவுடன் வெள்ளைச் சட்டை மட்டுமே அணிவது என்று முடிவெடுத்தார். அதன்பிறகு அலுவலகம் ஆரம்பித்து வளர ஆரம்பித்ததும் வெள்ளை உடை மட்டுமே அணிகிறார். ஐம்பத்திரண்டு வயதான மகாலிங்கம் தன் நரை முடிகளில் கவனம் செலுத்தவில்லை. அது தன் தொழிலுக்கு ஒரு பெரிய மனித அடையாளம் தருவதாக நம்பினார். கழுத்திலும் கைகளிலும் தங்கத்தின் ஆதிக்கம் தெரிந்தது. கம்பீரத்துடன் நிமிர்ந்து தன் அலுவலகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த அவரின் கண்கள் திடீரெனச் சுருங்கின. தூரத்தில் ஏதோவொன்று சுவரை ஒட்டி இருப்பதுபோல் தோன்ற, வேகமாக அதை நோக்கி ஓடினார். முதலாளி எதற்காகவோ ஓடுவதைக் கண்ட ஊழியர்கள், செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு அவர் பின்னாலேயே ஓடினர். வேகமாகச் சென்ற அவர் சுற்றும் முற்றும் பார்த்தார். எதுவும் இல்லை. ஊழியர்களும் எதைத் தேடுகிறோம் என்று தெரியாமலேயே தேடிக்கொண்டிருந்தனர். அவரிடம் கேட்கவும் அச்சப்பட்டனர். ஊழியர்கள் பின்னால் நிற்பதையே அறியாமல் அவர் எதையோ யோசித்துக்கொண்டே வெளியேறினார்.

குற்றத்தின் கண்கள் - சிறுகதை

மறுநாள் முதல் வேலையாகத் தன் அலுவலகம் மற்றும் வீடுகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த முடிவு செய்தார். ஆட்கள் உடனடியாக வேலையைத் தொடங்கினர். ‘தான் எதற்காகவோ வேவுபார்க்கப்படுகிறோம். தன்னை அழிக்கும் அளவிற்கு தைரியமுள்ள ஒரு எதிரி உருவாகி விட்டான்’ என அவர் நம்பத் தொடங்கினார். முக்கியமாக அலுவலகத்தில் அவர் கண்கள் கோப்புகளில் இருப்பதைவிட, சுற்றி இருந்தவர்களின் மேல்தான் இருந்தன. கேமராவில் விழும் காட்சிகளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். அலுவலகம் முழுவதுமே பதற்றத்திற்குள்ளாக ஆரம்பித்தது.

இரண்டு நாள்கள் கழித்து ஒரு மதியத்தில் மகாலிங்கம் தன் அலுவலகத்தில் உட்கார்ந்து சிலரிடம் பேசிக்கொண்டிருந்தபோது வெளியே ஏதோ கூச்சல் கேட்க ஆரம்பித்தது. அதன் சத்தம் அதிகரிக்கவே இவர் எழுந்து வெளியே செல்ல முயன்றார். வேகமாக உள்ளே வந்த அலுவலகப் பணியாள், “சார், போவாதீங்க சார்” என்றான்.

“ஏன், என்ன பிரச்ன?”

“போன மாசம் ஒரு லேண்ட் முடிச்சோம்ல சார், கெழவரோடது...”

“ஆமா!”

“அவரு பசங்க வந்து பிரச்ன பன்றானுங்க. அவனுங்க கையெழுத்து இல்லாம வித்தது செல்லாதுன்னு...”

“பைத்தியமா அவனுங்க. அது அந்தாளு சொந்தமா வாங்கினது, வித்தான், போனான். இவனுங்களுக்கு என்ன?”

“எதாவது காசு புடுங்கப் பாப்பானுங்க சார்.”

“இரு, நான் வரேன்” என்று மகாலிங்கம் வெளியே சென்றார். அங்கே இரண்டு இளைஞர்கள் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வந்து பிரச்னை செய்து கொண்டிருந்தனர். மகாலிங்கத்தைப் பார்த்ததும் அவர்களின் சத்தம் அதிகரித்தது.

“என்னப்பா... என்ன பிரச்ன?”

“நீதான எங்கப்பன ஏமாத்தி நெலத்த வாங்கினவன்” என்று கோபமாகக் கேட்டான் ஒருவன். இதைக் கேட்டதும் மகாலிங்கத்திற்குக் கோபம் தலைக்கேறியது. அவன் ‘ஏமாற்றியவன்’ என்று சொன்னதுகூட அவருக்குக் கோபமில்லை. அவர் தொடர்ந்து அதைத்தான் செய்துகொண்டிருந்தார். ஆனால் அவன் அவரை ‘நீ’ என்று சொன்னதைத்தான் அவரால் தாங்கமுடியவில்லை. சாந்தமாக வாலாட்டிப் பார்க்கலாம் என்று வெளியே வந்தவர், சட்டென வெறிபிடித்த நாயாக மாறினார். “டேய் பொறம்போக்கு, உங்கொப்பன் என்ன கொழந்தய இன்னா? இல்ல அவன் நெலத்த விக்க வரும்போது நீங்க எங்க மேஞ்சின்னு இருந்தீங்க. மரியாதையா ஓடீடுங்க. இல்ல குடும்பத்தோட காலி பண்ணிடுவேன்” என்று அவர் சொன்ன நொடி அந்த இடமே அமைதியானது. அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு இரண்டு காவலர்கள் அங்கு வந்திருந்தனர். வந்தவர்கள் நேராக மகாலிங்கத்திடம் வந்து ஒரு வணக்கம் வைத்தனர். இதன் பிறகு அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என சற்று அமைதியடைந்த மகாலிங்கம் அப்போதுதான் அதை நன்றாக கவனித்தார், கூட்டத்தில் இரண்டு கண்கள் அவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்ததை.

குற்றத்தின் கண்கள் - சிறுகதை

கண்கள் என்றால் வெறும் கண்கள்தான். சுற்றி மூக்கு, வாய், முகம், உடல் என எதுவும் இல்லை. ஒரு ஜோடி கண்கள். சாதாரணமாக மனிதனின் உயரத்தில் எங்கே இருக்குமோ அதே இடத்தில் அந்தரத்தில் மிதந்துகொண்டிருந்தன. அவற்றின் பார்வை மகாலிங்கத்தை விட்டு அகலவேயில்லை. சட்டெனத் தலையை உலுக்கிவிட்டுப் பார்த்தார். அந்தக் கண்கள் அங்கே இல்லை. வேகமாக உள்ளே சென்று சற்றுமுன் நடந்த அனைத்துச் சம்பங்களையும் மறுபடியும் சிசிடிவி திரையில் பார்த்தார். அந்தக் கண்கள் அதில் தெரியவே இல்லை. நன்றாக மீண்டும் மீண்டும் பார்த்தார். அப்படி அந்த இடத்தில் எதுவும் இருந்ததற்கான அறிகுறிகளே இல்லை. மகாலிங்கம் சோர்ந்து நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தார். அன்று தனது அலுவலகத்தில் ஏதோ ஒன்றைப் பார்த்துவிட்டு வேகமாகச் சென்று தேடியது எதை என்று அவருக்குப் புலப்படத் தொடங்கியது. அதுவும் நிச்சயம் கண்களாகத்தான் இருக்கும் என்று நம்பினார். தனக்கு யாராவது ஏதாவது செய்துவிட்டார்களா, அல்லது, தனது மனநலன் பாதிக்கப்பட்டுவிட்டதா என்று அவர் குழம்பினார். அவர் மனம் இரண்டாவதை ஏற்க மறுத்தது. முதலாவது காரணத்தையே நம்பியது.

தனது அலுவலகம் மற்றும் வீடுகளில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், யாரிடமும் எந்தக் காரணமும் சொல்லவில்லை. சுற்றி இருந்தவர்கள் ஆளுக்கொரு காரணத்தை ஊகித்துக்கொண்டனர். மகாலிங்கம் தொடர்ந்து பதற்றத்தில் இருப்பதையும் அவர்கள் கவனித்தவாறே இருந்தனர். அவரின் தொழில் போட்டியாளர்களுக்கு இந்த விஷயம் காதில் விழ, அவர்களும் தங்களுக்கு ஏற்ற கதைகளைப் பரப்பத் தொடங்கினர்.

பூஜைகள் சிறப்பாக நடந்தன. பூஜைகளுக்குப் பிறகு அவர் சில கோயில்களுக்குச் சென்று வரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். அதன்படி ஒரு மாதத்திற்கு குடும்பத்துடன் கோயில் கோயிலாகச் சுற்றினார். ‘இனி எதுவும் நிகழாது’ என்று நம்பத் தொடங்கியிருந்த ஒருநாள் காலை அவர் அலுவலக அறையில் அவர் மேஜையின் மீதிருந்த ஒரு கோப்பின் மீது ஒரு ஜோடி கண்கள் ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்தன. கதவைத் திறந்தவர் பதறியடித்துக்கொண்டு வெளியே வந்து விழுந்தார். அலுவலகத்தில் இருந்தவர்கள் பதற்றமாக ஓடிவந்து அவரைத் தூக்கிவிட்டார்கள். வார்த்தைகள் எழாமல் மேஜையையே காட்டினார். ஆனால், அங்கு கோப்புகளைத் தவிர எதுவுமில்லாததால் மற்றவர்கள் குழம்பினர். அவருக்குத் தண்ணீர் கொடுத்து அறையில் உட்கார வைத்துவிட்டுச் சென்றனர். அவர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்தார். சிறிது நேரம் கழித்து, கதவைத் தட்டிவிட்டு உதவியாளர் ஒருவர் உள்ளே வந்து தயங்கியபடியே “சார்” என்றார்.

மகாலிங்கம் அவரைப் பார்க்காமலேயே “ம்” என்றார்.

“அந்த அஞ்சி கிரெளண்ட் லேண்ட் ஒண்ணு பேசிட்டிருந்தோமே...”

“ஆமா, ஓகே சொல்லிட்டானா? அவனுக்கு வேற வழியே இல்ல. நம்ப கிட்டதான் வந்தாகணும்.”

“இல்ல சார், நேத்து நைட் அவர் தூக்கு மாட்டிக்கிட்டாராம்.”

மகாலிங்கம் அதிர்ச்சியாக அவரைப் பார்த்து “என்னய்யா சொல்ற” என்றார்.

“ஆமா சார், விஷயம் பெருசாயிடும்போல. கொஞ்ச நாள் அமைதியா இருப்போம். இப்போதைக்கு கடன் பிரச்னைன்னு விசாரணை போகுது. அது நம்ம பக்கம் திரும்பாம இருக்கணும்.”

“நம்ம பக்கம் ஏன் திரும்புது?”

“நாம குடுத்த ப்ரெஷர்னுகூடப் பேசிக்கறாங்க சார்!”

மகாலிங்கம் அமைதியாக சிறிது நேரம் யோசித்தார். பிறகு, “அந்தாளோட டாக்குமென்ட்ஸ் எதுவும் இங்க இருக்க வேண்டாம்” என்றார்.

“சார், அது உங்க டேபிள்லதான் இருக்கு” என்று உதவியாளர் கையைக் காட்ட, மகாலிங்கம் அப்போதுதான் கவனித்தார். சிறிது நேரத்திற்கு முன் அந்தக் கோப்பின் மீதுதான் கண்கள் இருந்தன.

மகாலிங்கம் மிகவும் சோர்ந்துபோயிருந்தார். தனக்கு யாரோ செய்வினை செய்துவிட்டார்கள் என நம்பினார். ஆனால், அதற்காக அவர் செய்துகொண்டிருந்த எந்த வேலைகளையும் நிறுத்தவில்லை. தினம் தினம் அவருக்குக் கண்கள் தெரிவது அதிகரித்துக்கொண்டேயிருந்தது. அவரும் மெல்ல அதற்குப் பழகத் தொடங்கிவிட்டார். முன்புபோல் பதற்றமடையவில்லை. ஆனால் விழித்திருக்கும் ஒவ்வொரு நொடியும் பயந்துகொண்டேயிருந்தார்.

இப்போது கண்களிலிருந்து நீர் வரத் தொடங்கியிருந்தது. அவர் பார்க்கும்போதெல்லாம் அந்தக் கண்கள் அழுதுகொண்டிருந்தன. யாராவது உள்ளே வரும்போது அந்தக் கண்கள் மறைந்தாலும், அவை சிந்திய கண்ணீர் மட்டும் அங்கேயே இருந்தது. பிறகு யாரையாவது கூப்பிட்டு, துடைக்கச் சொல்வார். ‘தெரியாமல் தண்ணீரைக் கொட்டிவிட்டேன்’ என்பார். ஆனால், அது அடிக்கடி நடக்கும்போது அலுவலகத்தில் அதைப் பற்றிய பேச்சுகள் எழத்தான் செய்தன.

மகாலிங்கம் தன் உதவியாளரை அழைத்தார்.

“சார்!”

“அந்தப் பசங்க பேசினானுங்க. அவங்க அப்பா செத்துட்டாருல்ல, இனிமே பிரச்னையில்லையாம். அவங்க அம்மா கையெழுத்துப் போட ஒத்துக்கிச்சாம். நான் அந்த எடத்தப் பாத்துட்டு அப்படியே வீட்டுக்குப் போறேன். ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா மட்டும் போன் பண்ணு.”

“சரிங்க சார்.”

மகாலிங்கம் வேலைகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். வீட்டில் யாருமில்லை. மனைவியும் பிள்ளைகளும் வெளியூர் சென்றிருந்தனர்.

சோர்வாக வந்து கட்டிலில் படுத்துக் கண்களை மூடிக்கொண்டார். சிறிது நேரத்திற்குப் பிறகு அறைக்குள் ஏதோ ஒரு வாசனை வந்தது. நன்றாகக் குளிரெடுத்தது. ஏசியைக் குறைக்கலாமென்று தோன்றியபோதுதான் அவருக்கு நினைவு வந்தது, தான் ஏசியே போடவில்லையென. கண்களைத் திறக்க முடியாமல் திறந்தார். ஒரு நொடி அவர் மூச்சே நின்றுவிடும்போல் இருந்தது. அவரைச் சுற்றிப் பல ஜோடி கண்கள் மிதந்துகொண்டிருந்தன. அந்தக் கண்களிலிருந்து கண்ணீர் அருவி மாதிரி கொட்டிக்கொண்டிருந்தது. மகாலிங்கம் கத்த நினைத்தார். குரல் எழவில்லை. அந்த அறை கண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரால் அசைய முடியவில்லை. மெல்ல கண்ணீர்க்குளத்தில் மூழ்கிக்கொண்டிருந்தார். அவர் முழுவதும் மூழ்கும் வரை அவரின் கண்கள் சுற்றியிருந்த ஒவ்வொரு கண்ணையும் பார்த்து இறைஞ்சிக் கொண்டிருந்தன. அவர் முழுவதும் மூழ்கியதும் அந்தக் கண்களும் அதே நீரில் விழுந்து கரைந்தன.

மறுநாள் காவல்துறையினர் மகாலிங்கத்தின் உதவியாளரிடம் விசாரித்துக்கொண்டிருந்தனர்.

“அவர் எப்போ ஆபீஸ்ல இருந்து கிளம்பினார்.”

“நேத்து சாயங்காலம் ஒரு அஞ்சி மணி இருக்கும் சார். இந்த பிராப்பர்ட்டிய பாத்துட்டு வீட்டுக்குப் போறன்னு சொல்லிட்டுப் போனார்.”

குற்றத்தின் கண்கள் - சிறுகதை

“அதுக்கப்பறம் நீங்க அவருக்கு எதுவும் போன் பண்ணலயா?”

“இல்ல சார்.”

தூரத்திலிருந்து ஒரு கான்ஸ்டபிள் வந்து, “சார், பாடிய எடுத்துடலாமா” என்றார். விசாரித்துக்கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ‘சரி’யெனத் தலையாட்ட, கிணற்றுக்குள் மிதந்துகொண்டிருந்த மகாலிங்கத்தின் பிணத்தை எடுக்கும் வேலைகள் ஆரம்பித்தன. இன்ஸ்பெக்டர் மீண்டும் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

“அவருக்கு எதிரிங்க...”

“அது நிறைய பேர் இருக்காங்க சார்!”

“கொலை பண்ற அளவுக்கு?”

“அதுவும்தான் சார்.”

“ம்...”

“சார், ஒரு விஷயம்...”

“சொல்லுங்க...”

“போன வாரம் இந்த இடத்தப் பாக்க நானும் அவர்கூட வந்திருந்தேன் சார்.”

“சரி... அதுக்கென்ன?”

“அப்போ இந்தக் கெணத்துல ஒரு சொட்டுக்கூட தண்ணி இல்லாம வெறும் பாறைங்கதான் இருந்துச்சி. அதுக்குள்ள எப்படி சார் இவ்ளோ தண்ணி வந்திருக்கும்?”

இருவரும் குழப்பமாகக் கிணற்றைப் பார்த்தனர். கயிற்றில் கட்டப்பட்டு மகாலிங்கம் மெல்ல மெல்ல மேலே ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் குற்றத்தின் பாரங்களையும் சேர்த்து அவர்கள் இழுக்க முடியாமல் இழுத்துக்கொண்டிருந்தனர்.