பிரீமியம் ஸ்டோரி

லக்ஷ்மி, கற்பூரவில்லையை எடுத்து மோந்து பார்த்தாள். அவளுக்கு மிகவும் பிடித்தமான அந்த வாசனை வரவே இல்லை. உடல் சோர்விலும் இனம்புரியாத பயத்திலும் கைகள் நடுங்க, சாமி படத்தினருகே இருந்த மணம் மிகுந்த தசாங்க ஊது வத்தியை மோந்தாள். எந்த வாசமும் வரவில்லை.

அப்படியானால், கணகணவென்றிருந்த உடற்சூடும், ஆளை அடித்துப்போட்டது போன்ற உடல்வலியும், அசதியும் அந்த கொரோனா நச்சு உயிரின் தாக்குத லால் ஏற்பட்ட விளைவுகள்தானோ? அங்கே, இங்கே என்று சுற்றிக் கொண்டிருக்கும் அந்தக் கொடூர கொரோனா நோய் கடைசியில் தனக்கே வந்து விட்டதை உணர்ந் தாள். கொரோனாவால் இறந்த தாய்மாமாவின் இறுதிச் சடங்கில்கூட பங்கேற்கவில்லையே என்ற ஆற்றாமை எழுந்தது.

பொற்கொடி
பொற்கொடி

திடகாத்திரமாய் இருந்த மாமா திடீரென இறந்த சேதி கேட்டு துடிதுடித்து, இறுதி மரியாதை செய்யும் பொருட்டு வேகமாய் கிளம்பியவளைத் தடுத்து நிறுத்தினான், அவள் மகன் நந்தா. கொரோனா இரண்டாம் அலையைச் சமாளிக்க இயலாமல் மக்கள் மடிந்து கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினான். கர்ப்பிணி மருமகள் கஸ்தூரி, ஒருபடி மேலே போய், தன் வயிற்றிலிருக்கும் லக்ஷ்மியின் பேரக்குழந்தையை கொரோனா விலிருந்து காப்பது அவள் கடமை என்று அறிவுறுத்தினாள்.

காரணம் நியாயமாகவே இருந்தபோதும், தாய்மாமாவின் முகத்தைக் கடைசியாய் பார்த்துவிட கதறியது மனம். இறுதி முயற்சி யாக, துக்கவீட்டிலிருந்து அப்படியே, சொந்த இருப்பிடமான செஞ்சிக்குப் போய்விடுவதாகச் சொன்னாள்.

“என்னம்மா குழந்தை மாதிரி அடம் பிடிக்கிறே... நீ இங்க இருந்தாதானேம்மா, கஸ்தூரியோட பிரசவ சமயத்துல உதவியா இருக்கும்?”

“ஏண்டா... முதல் பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்குப் போறதுதானே முறை” என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

கணீர் என்ற குரலில் மாணவ மாணவியருக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த தான், இன்று மருமகளுக்கு பயந்து மெள்ளப் பேசுவதை உணர்ந்து சுயகோபம் கொண்டாள்.

“அவ அம்மா வீட்டுக்குப் போறதுல அவளுக்கு இஷ்டமில்லைம்மா. அவ அம்மா, பி.பி பேஷன்ட் வேற. உன்னளவுக்கு எந்த வேலையும் செய்ய முடியாதும்மா!”

இதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பதுபோல், ஃபிரிட்ஜிலிருந்து தன் மனைவிக்கு பழங்களை எடுக்கும் சாக்கில் அகன்றான்.

கொரோனா முதல் அலையில் பாதிப் புற்று மகனும் மருமகளும் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து, பாசத்தில் பரிதவித்து, செஞ்சியிலிருக்கும் தன் வீட்டை போட்டது போட்டபடி விட்டுவிட்டு, சென்னைக்கு வந்தாள் லக்ஷ்மி. சென்னையின் மையப்பகுதி யில் இருந்த அந்த கேட்டடு கம்யூனிட்டியில் இரண்டு படுக்கை அறை அப்பார்ட்மென்ட். குப்பைக் கூளமாய் இருந்த வீட்டை சுத்தம் செய்து, மிளிர வைத்தாள். கிட்டத்தட்ட ஒரு மாத மருத்துவமனை வாசத்துக்குப் பிறகு, வீட்டுக்கு வந்த மகனையும் மருமகளையும் உள்ளங்கையில் வைத்துத் தாங்கினாள். சத் தான உணவுகளைச் சமைத்துக் கொடுத்தாள்.

“மாமி! இவ்வளவு தூரம் ஹாஸ்பிட்டல், வீடுன்னு எங்களோட எக்ஸ்போஸ் ஆகியும் உங்களுக்கு கொரோனா வரலை. உங்க உடம்புல எதிர்ப்பு சக்தி அதிகம்” என்று மெச்சுவது போல் மருமகள் சொன்னாலும், அவள் குரலில் இருந்த பொறாமை உணர்வை இனம் கண்டுகொண்டாள் லக்ஷ்மி.

“அம்மா... இப்போ வேணும்னா உனக்கு கொரோனா வராம இருக்கலாம். ஆனால், நீ செஞ்சிக்குத் திரும்பிப் போன பிறகு, உனக்கு ஏதாவதுன்னா என்னால தாங்க முடியாது.”

`செஞ்சியில் நான் நன்றாகத்தானே இருந் தேன். சென்னையில் இருக்கும் உங்களுக்குத் தானே உடல்நலம் கெட்டுப்போனது' என்று நினைத்து அங்கேயே தங்கியவளுக்குள் ஆயிரமாயிரம் எண்ண ஓட்டங்கள்.

ஒருபக்க பாடம் பயில ஒன்பது சந்தேகங்கள் கேட்கும் ஸ்வாதி; படித்து அரசியல்வாதியாகி, அம்மா உணவகம் திறப்பேன் என்று சொல்லும் பிரவேஷ்; அமைதியும் ஒழுங்கும் நிறைந்த செந்தமிழன் என்று தனித்தன்மை கொண்ட மாணவர்களை பல மாதங்களாகப் பார்க்க முடியாமல், கற்பிக்க முடியாமல் தன்னைப் போன்ற ஆசிரியர்களின் வாழ்க்கை அர்த்த மற்றதாகிக் கொண்டிருப்பதை அடிக்கடி நினைத்து, உள்ளுக்குள்ளேயே வெம்பிக் கொண்டிருந்தாள்.

லக்ஷ்மி டீச்சர் - சிறுகதை

திருமணமாகி நான்கு ஆண்டுகள் கழித்து கர்ப்பம் தரித்திருக்கும் மருமகளுக்கு அடுத்த வாரம் சீமந்தம் செய்ய முடிவெடுத்திருக்கும் நிலையிலா இந்த கொரோனா வர வேண்டும் என்று மனம் நொந்தவள், அசதியுடன் படுக்கையில் சாய்ந்தாள்.

“என்னம்மா, இன்னிக்கு சுண்டல் ஏதும் செய்யலையா... கஸ்தூரிக்கு பசிக்குதாம்.”

“உடம்புக்கு முடியலைடா!”

“என்ன ஆச்சும்மா?” அறையினுள்ளே நுழையாமலே கேட்டான்.

“ஜுரம் அடிக்குது; உடம்பு வலிக்குது. கொரோனாவா இருக்குமோனு கற்பூரத்தை மோந்து பார்த்தேன்; வாசனையே தெரியலை.”

“ஊரே, உன்னைப் போலதான் அவஸ்தைப் பட்டுக்கிட்டிருக்கு. பயப்படாதேம்மா!” என்றவன், பயத்துடன் அகன்றான். அடுத்த அறையில் மகனும் மருமகளும் பேசும் சத்தம் காற்றுவாக்கில் வர ஆரம்பித்தது.

“அம்மாவுக்கு கற்பூர வாசம்கூட வரலையாம், கஸ்தூரி!”

“கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?” என்று சொல்லி `களுக்'கென சிரித்தாள் கஸ்தூரி. அந்தப் பழமொழி, லக்ஷ்மியின் மனதைக் குத்திக் கிழித்தது.

ஒரு மணி நேரம் கழித்து, “அம்மா, நான் கஸ்தூரியை அவங்கம்மா வீட்டுக்குக் கூட்டிட் டுப்போறேன். உனக்கு இப்படி இருக்கறதால, அவ இங்கே இருக்குறது பாதுகாப்பில்லை.இட்லி வாங்கிட்டு வந்திருக்கேன். டீப்பாய்ல வைக்கிறேன். மெள்ள எழுந்து சாப்பிட்டுட்டு படுத்துக்கோ!”

“சரிப்பா!” என்றவள், அதீத அசதியில் கண்களை மூடிக்கொண்டாள். சிறிது நேரம் கழித்து எழுந்து சாப்பிட்டாள். சுவையறியாத தால், இட்லி மண் போல் இருந்தது. மாத்திரைகளை விழுங்கினாள். வீடு அமைதியாய் இருப்பது வெறுமை உணர்வைத் தர, டிவியை ஆன் செய்தாள்.

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட காமெடி நடிகர் விவேக் மரணம்.

சேனல்களை மாற்றினாலும் மாறாமல் ஒளி-ஒலித்துக்கொண்டிருந்தது கொரோனா செய்தி. மனதை பாரம் அழுத்த டிவியை நிறுத்தினாள். அமைதியைக் கிழித்துக்கொண்டு செல்போன் ஒலிக்க, பதற்ற நெஞ்சை அழுத்தியபடி எடுத்தாள்.

“ராத்திரி 10 மணிக்கு மேல ஆயிடுச் சும்மா. அதனால, அங்கே வர முடி யலை. நீ சாப்பிட்டுட்டியா? மாத்திரை போட்டுக்கிட்டியா... பத்திரமா இரும்மா!” என்று துண்டித்தான்.

கையிலிருந்த போனையே வெறித்த படி அமர்ந்திருந்த லக்ஷ்மி, பத்து வருடங்களுக்கு முன்பு மறைந்த கணவனையும், தான் நம்பும் கடவுளையும் துணைக்கு அழைத்து, மரண பயத்தையும் சுய பச்சா தாபத்தையும் விரட்ட முனைந்தாள்.

தன் நலத்துக்குப் பின்தான் பிறர் நலம் பேண முடியும் என்ற பேருண்மையைப் புரிய வைத்த கொரோனா, நாளை இருப்போமா என்பதே தெரியாத நிலையில், சகமனிதர்களின் குற்றங்களை மறக்க மன்னிக்க பயிற்சியும் அளித்தது. குறித்த தேதியில் மருமகளுக்கு சீமந்தத்தை நடத்திவிடச் சொல்லி மகனுக்கு அறிவுறுத்தினாள். ஒரு வாரம் கழித்து, வழக்கம் போல் சாமிக்கு விளக்கேற்றும்போது, தசாங்க ஊதுவத்தியின் மணம், சுகமாய் நாசியை வருட, பெருமகிழ்ச்சியடைந்தாள்.

மருமகளிடம் சந்தோஷம் பொங்க இதைப் பகிர்ந்தவள், நார்மல் டெலிவரிக்கான அறிவுரைகளையும் கூறினாள். ‘ம்’ என்ற ஒற்றைச் சொல்லே பதிலாய் வர, மருமகளுக்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதை முழுமை யாக உணர்ந்துகொண்டாள் லக்ஷ்மி.

குடியிருப்பு வளாக பூங்காவில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொண்டாள். ஒரு நாள், அங்கே அமர்ந்து புரியாமல் படித்து வெறுமனே மனப்பாடம் செய்து கொண்டிருந்த எட்டாம் வகுப்பு மாணவனுக்கு தமிழ் இலக் கணத்தைப் புரியும்படி சொல்லிக் கொடுத்தாள். அவளின் கற்பித்தல் திறனை அங்கு வசிப்பவர் களுக்கும் பரப்பினான் அவன். ஐந்து, பத்து, இருபது என அவளிடம் பாடம் கற்கும் பிள்ளைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது.

சிசேரியன் என்பதால் மருத்துவமனை யிலேயே ஒரு வாரம் இருந்துவிட்டு வீட்டுக்கு வந்தாள் கஸ்தூரி. பேரனைக் கண்டு மகிழ்ச்சி யில் மிதந்தாள் லக்ஷ்மி. குழந்தையைக் குளிப்பாட்டி, கவனித்து, கஸ்தூரிக்கு பத்திய சாப்பாடு, சத்தான சூப், கீரை வகைகள் சமைத்து, கஸ்தூரியுடனே வந்து தங்கிவிட்ட அவளுடைய தாயையும் கவனித்து என்று பம்பரமாய் சுழன்றாள் லக்ஷ்மி.

“லக்ஷ்மி டீச்சர்! லக்ஷ்மி டீச்சர்!” - அவளைத் தேடி குடியிருப்பு வளாக மாணவர்கள் வீட்டுக்கே வர ஆரம்பித்தனர். ஆனால், அந்த மாணவர்களின் மரியாதையும் அன்பும் கலந்த விளிப்பு, மருமகள் கஸ்தூரியின் காதுகளுக்கோ நாராசமாய் இருந்தது.

“அவங்க நம்ம வீட்டு வாசல் வரை வர்றது எனக்குப் பிடிக்கலை” என்றாள் தீர்மானமாய்.

“அவங்க ரொம்ப நல்ல டீச்சர். நமக்குத் தொந்தரவு இல்லாம பார்க்குலதானே சொல்லித் தர்றாங்க? அதை எப்படி வேணாம்னு சொல்றது?”

எது சொன்னாலும் கேட்டுக் கொண்டிருந்த கணவன், இப்போது பதிலுக்கு பதில் பேசுவதை சற்றும் விரும்பவில்லை அவள். “உங்கம்மா ரொம்ப நல்ல டீச்சர்னு சொல்றியே... அப்படீன்னா ஏன் இன்னும் கவர்ன்மென்ட்லேருந்து நல்லாசிரியர் விருது வாங்கலை? உங்கம்மா ஒரு டீச்சர் அவ்வளவு தான். எக்ஸ்ட்ராஆர்டினரி கிடையாது.”

மௌனமானான் நந்தா.

அடுத்த நாள், தன் அறையைக் கூட்ட வந்த பணிப்பெண்ணைக் கண்டதும் கோபம் தலைக்கேறியது கஸ்தூரிக்கு.

“ஏய்! யாரு நீ? எதுக்கு என் ரூமுக்கு வந்தே?”

“புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேம்மா. என் பேர் மல்லிகா!”

“என்னைக் கேட்காம, உன்னை யாரு வேலைக்கு வெச்சது...'' - அடிக்குரலில் உறுமினாள். அங்கே வந்த லக்ஷ்மி, “நீ போம்மா, மல்லிகா. நான் அப்புறமா கூப்பிடுறேன்” என்று சொல்ல, விட்டால் போதும் என்று வெளியேறினாள் அப்பெண்.

“எனக்கு உடம்பு முன்னைப்போல இல்லை. ரொம்ப சோர்வா இருக்கு. தனி ஆளா செய்ய முடியலை. அதனால நந்தாகிட்ட கேட்டு, நான்தான் மல்லிகாவை வேலைக்கு வெச் சேன்.”

“உங்க இஷ்டத்துக்கு ஆள் வைக்க, இது உங்க வீடில்லை'' - கஸ்தூரியின் குரல் உயர்ந்தது.

பதறி வந்த கஸ்தூரியின் தாய், “சம்மந்தி அம்மா, நான் பேசிப் புரிய வைக்கிறேன். நீங்க வேலையைப் பாருங்க” என்று லக்ஷ்மியின் கைப்பற்ற, அங்கிருந்து அகன்றாள்.

“உனக்கு அறிவே இல்லையா? அந்தம்மா கோவிச்சுட்டுப் போயிட்டா, என்ன பண் ணுவே? குழந்தையைக் குளிப்பாட்ட ஆள் வெச்சா மூவாயிரம் ரூபாய். மூணு வேளை சமையல் செய்ய பன்னிரண்டாயிரம் ரூபாய் கொடுக்காம ஆள் கிடைக்காது; அப்படியே கொடுத்தாலும், இவ்வளவு ருசியாவும் சுத்தமா வும் யாரும் நமக்குச் செய்ய மாட்டாங்க...''

தாயையே பார்த்தபடியே மௌனமாக அமர்ந்திருந்தாள் கஸ்தூரி.

லக்ஷ்மி டீச்சர் - சிறுகதை

அழைப்பு மணி ஒலித்தது. லக்ஷ்மி, குழந்தையைத் தூளியில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள். கஸ்தூரியும் அவள் அம்மாவும் டிவி சீரியலில் ஒன்றியிருந்தனர். லேப்டாப் முன்பாக இருந்த நந்தா, எழுந்து கதவைத் திறந்தான்.

ஆறடியில் ஆஜானுபாகுவான ஓர் இளைஞனும் ஜீன்ஸும் டி-ஷர்ட்டும் அணிந்த ஓர் இளம்பெண்ணும் நின்றிருந்தனர். வரவேற் பறையில் அமர வைத்துவிட்டு, “அம்மா! உன்னைத் தேடி ரெண்டு பேர் வந்திருக்காங்க.''

லக்ஷ்மியைக் கண்டதும் இருவருமே எழுந்து கொண்டனர்.

“வணக்கம் டீச்சர். நான் முரளி. 2010 பேட்ச். செஞ்சி அரசுப் பள்ளியில உங்க ஸ்டூடன்ட்!

சிரித்தபடி எதிரில் அமர்ந்த லக்ஷ்மி, அவர்களையும் அமரச் சொல்லிவிட்டு, “ஆண்டு விழாவுல டிராமாவெல்லாம் போடுவியே, அந்த முரளிதானே?”

“ஹப்பா!” - நெஞ்சில் கை வைத்து விளை யாட்டாய் பெருமூச்சுவிட்டான் முரளி.

``இப்போ என் பெயர் வேழவேந்தன். சினிமா டைரக்டர். அடுத்த வாரம் என் முதல் படத்தோட பூஜை. ரொம்ப முக்கியமான ஆட்களைத்தான் கூப்பிடுறோம். செஞ்சி ஸ்கூல் போய், அங்க உங்க வீட்டு அட்ரஸ் தேடிப் போனேன். ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் உங்க பிள்ளை யோட அட்ரெஸ் கண்டுபிடிச்சேன். என் எழுத்துத் திறமையை அடையாளம் கண்டு, பாராட்டி ஊக்கப்படுத்தி, முன்னேறத் தூண்டினதே நீங்கதான் டீச்சர்” என்றவனின் குரலில், நன்றியின் நெகிழ்ச்சி.

“இவளை அடையாளம் தெரியுதா டீச்சர்?” என்று கேட்டான் குறும்பாக.

“நீ என்னம்மா செய்யுறே?”

“ஸ்டேட் லெவல் கிரிக்கெட்டர்!”

“ஓ... நீ மணிமேகலைதானே! ஆள் அடையாளமே தெரியலை... ரொம்பவே மாறிட்டியே.”

“நீங்கதான் என் கிரிக்கெட் கோச்சிங்க்காக என் அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வெச்சீங்க. எனக்கு முதல்முதல்ல பேட் வாங்கித் தந்ததும் நீங்கதான்.”

முகத்தில் பூரிப்பு பொங்க... “சரி... சரி. என்ன சாப்பிடுறீங்க?” என்றாள் லக்ஷ்மி.

“பழைய மாணவர்கள் சேர்ந்து உங்களுக்கு விழா எடுக்கலாம்னு இருக்கோம். ஒரு தேதி சொல்லணும்” என்றாள் மணிமேகலை.

“முதல்ல இந்தக் கொரோனா ஓயட்டுமே” என்றாள் லக்ஷ்மி புன்னகையுடன்.

அறையிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த கஸ்தூரிக்கு, மாமியாரின் பெருமையை அங்கீகரிக்க மனதில் இடமிருக்கவில்லை.

`பள்ளிகள் திறப்பு... முதல்வர் அறிவிப்பு!' என்ற தலைப்புச் செய்தி, லக்ஷ்மியின் காதுகளில் தேனாய் பாய்ந்தது. பெட்டிப் படுக்கைகளுடன் தயாராகி விட்டவள், “நந்தா! நான் ஊருக்குக் கிளம்புறேன்” என்றாள்.

“ஏன்மா... தனியா செஞ்சியில கிடந்து அவஸ்தைப்படணும்னு நினைக்கிறே. இந்த வயசுல நீ கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லையேம்மா!” என்றான் படபடப்பை மறைத்தபடி.

“இங்கே நீ ஆயிரம் வசதி செய்து கொடுத்தாலும், தங்கக் கூண்டுல இருக்குற மாதிரிதான். இன்னும் எத்தனை காலம் இருப்பேனோ அதுல ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு பாடத்தோடு சேர்த்து நம் சமூகத்துக்குத் தேவையான அறத்தையும் சொல்லிக் கொடுக்கணும்னு முடிவெடுத்துட் டேன். புரிஞ்சுக்கோப்பா நந்தா!”

அம்மாவின் வார்த்தைகளில் இருந்த உறுதியை முற்றாக உணர்ந்துகொண்ட நந்தா, “அம்மம்மா வுக்கு டாட்டா சொல்லு” என்றான் தன் மகனிடம்.

“மாமி! நீங்க இல்லாம எப்படி குழந்தையை வளர்ப்பேன்?” என்று கலக்கத்துடன் கேட்டாள் கஸ்தூரி.

மருமகளின் தலை கோதி புன்னகைத்த லக்ஷ்மி, “அவன் உன் குழந்தை. இப்போ நீயும் ஒரு தாய். முதல்ல கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கும். போகப்போக தாய்மையே தன்னால புரிய வைக்கும். பயப்படாதே!” என்ற லக்ஷ்மி, பேரனின் கன்னத்தில் ஆசையாய் முத்தமிட்டு, கலங்கிய தன் கண்களைத் துடைத்தபடி வீட்டுக்கு வெளியே தயாராக இருந்த கால்டாக்ஸியில் ஏறிக்கொண்டாள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு