Published:Updated:

மா.அரங்கநாதன் இலக்கிய விருது - தந்தையின் கனவுக்காக நீதிபதி மகாதேவனின் இலக்கிய முன்னெடுப்பு!

'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' விழா...

"பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளைச் சந்தித்து அவர்களின் படைப்புகளை வாங்கி வருவது முதல் பிழைதிருத்தி அதை அச்சுக்கு அனுப்புவது வரையிலான பல்வேறு வேலைகளையும் ஆர்வமாகச் செய்தார், மகாதேவன். நீதிபதியாக ஆன பிறகும், இலக்கிய ஆர்வத்துக்குக் கூடுமான நேரத்தைச் செலவிடுகிறார்."

மா.அரங்கநாதன் இலக்கிய விருது - தந்தையின் கனவுக்காக நீதிபதி மகாதேவனின் இலக்கிய முன்னெடுப்பு!

"பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளைச் சந்தித்து அவர்களின் படைப்புகளை வாங்கி வருவது முதல் பிழைதிருத்தி அதை அச்சுக்கு அனுப்புவது வரையிலான பல்வேறு வேலைகளையும் ஆர்வமாகச் செய்தார், மகாதேவன். நீதிபதியாக ஆன பிறகும், இலக்கிய ஆர்வத்துக்குக் கூடுமான நேரத்தைச் செலவிடுகிறார்."

Published:Updated:
'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' விழா...

மா.அரங்கநாதன்... தமிழ் இலக்கிய வட்டாரத்தில் தனித்தன்மையுடன் மிளிர்ந்த எழுத்தாளர். தத்துவம், மரபுக்கவிதைகள், ஆன்மிகம், நாவல், சங்க இலக்கியம் உள்ளிட்ட பல பிரிவுகளிலும் புலமை கொண்டிருந்தவர், 'வீடு பேறு', 'ஞானக் கூத்து' உள்ளிட்ட பல்வேறு இலக்கிய நூல்களைப் படைத்தவர். இவரின் மகனும், சென்னை, உயர் நீதிமன்ற நீதிபதியுமான அரங்க.மகாதேவன், தந்தையின் வழியே இலக்கியத்துறையில் பெரும் ஆர்வம் கொண்டவர்.

மா.அரங்கநாதன்
மா.அரங்கநாதன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழர்களுக்கும் தமிழ் கலைகளுக்கும் பங்களிப்பு செய்த முன்னோடி படைப்பாளர்களைக் கெளரவிக்க வேண்டும் என்பது அரங்கநாதனின் கனவு. அவரின் மறைவுக்குப் பிறகு, தந்தையின் கனவை நிறைவேற்றியிருக்கிறார் மகாதேவன். அதன்படி, ஆண்டுதோறும் இலக்கியத்துறை முன்னோடிகள் இருவரைத் தேர்ந்தெடுத்து 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' என்ற பெயரில் விருது வழங்கி, தலா ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கி கெளரவிக்கிறார். இந்த ஆண்டுக்கான விருது விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து, அரங்கநாதனுடன் நெருங்கிப் பழகியவரும், இந்த விருது நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவருமான கவிஞர், ஆவணப்பட இயக்குநர் ரவிசுப்பிரமணியனிடம் பேசினோம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"அரங்கநாதன் சாரின் பூர்வீகம் கன்னியாகுமரி மாவட்டம் திருப்பதிசாரம் கிராமம். சென்னை மாநகராட்சியில் சுகாதாரத்துறையில் வேலை பார்த்தவர். அதன்பிறகு, முழுவீச்சாக எழுத ஆரம்பித்தார். அவரின் முதல் புத்தகம் வெளியானபோது, 'எங்கேய்யா இருந்தீர் இத்தனை காலமாக...?' என்று பாராட்டினார், புகழ்பெற்ற எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான க.நா.சுப்ரமண்யம். நுட்பமான கலையும் படைப்பாற்றலுடனும் கூடிய பல்வேறு நூல்களை எழுதி, தனித்துவமான இலக்கியவாதியாகக் கவனம் பெற்றார் அவர்.

மா.அரங்கநாதன்
மா.அரங்கநாதன்

புதுக்கவிதைக்கு இலக்கணம்போல 'பொருளின் பொருள் கவிதை' என்று அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு, 'கவிஞர்களின் கையேடாக இருக்க வேண்டிய புத்தகம்' என்று பலராலும் பாராட்டப்பட்டது. தமிழுக்கான அடையாளம் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தினால், அவருடைய ஒட்டுமொத்த கதைகளிலும் 'முத்துக்கருப்பன்' என்ற பாத்திரத்தை முன்னிலைப்படுத்தியே எழுதியிருப்பார். அரங்கநாதன் சார், 'முன்றில்' என்ற இலக்கியச் சிற்றிதழைப் பல ஆண்டுகள் நடத்தினார். அதில், தன்னைப் பெரிதும் ஈடுபடுத்திக்கொண்டார் அவரின் மகன் மகாதேவன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகளைச் சந்தித்து அவர்களின் படைப்புகளை வாங்கி வருவது முதல் பிழைதிருத்தி அதை அச்சுக்கு அனுப்புவது வரையிலான பல்வேறு வேலைகளையும் ஆர்வமாகச் செய்தார், மகாதேவன். மரபார்ந்த இலக்கியம் மற்றும் நவீன இலக்கியத்தில் ஆர்வம் கொண்ட நீதிபதி மகாதேவன், சட்டத்துறை வேலைகளுடன், இலக்கிய ஆர்வத்துக்கும் கூடுமான நேரத்தைச் செலவிடுகிறார். குறிப்புகள் இல்லாமலேயே, சங்க இலக்கியங்களை மனப்பாடமாக எடுத்துரைக்கும் அளவுக்கு ஆர்வமும் ஆற்றலும் கொண்டவர்" என்றவர், தந்தையின் நினைவாக நீதிபதி மகாதேவன் நடத்திவரும் இலக்கிய விருது விழா குறித்தும் பகிர்ந்தார்.

'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' விழா...
'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' விழா...

"அரங்கநாதன் சார், 'முன்றில் இலக்கிய அமைப்பு' மூலமாக இலக்கிய விருது விழா நடத்த ஆசைப்பட்டார். கவிதை, சிறுகதை, நாடகம், மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை உட்பட இலக்கியத் துறையில் பல பிரிவுகளிலும் சிறப்பான பங்களிப்பு செய்துவரும் படைப்பாளர்களைத் தேர்வுசெய்து கெளரவிக்க நினைத்ததுடன், அவர்களுக்குத் தனது சொந்தப் பணத்தில் சன்மானம் வழங்கவும் விரும்பினார். ஆனால், சில காரணங்களால் அந்த முன்னெடுப்பை அவரால் நடத்த முடியவில்லை. 2017-ல் அரங்கநாதன் சார் மறைந்துவிட்டார்.

பின்னர், தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் இலக்கிய விருது விழாவை, அவரின் நினைவுதினத்தில் நடத்துவதெனத் திட்டமிட்டார், நீதிபதி மகாதேவன். 'முன்றில் இலக்கிய அமைப்பு' சார்பில், 2018 மற்றும் 2019-ல் 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' என்ற பெயரில் விழாவை நடத்தினார். அதில், விருது பெற்ற இலக்கியவாதிகளுக்குத் தன் சொந்தப் பணத்தில் சன்மானமும் வழங்கினார். இந்த நிலையில், கொரோனா சிக்கலால் அடுத்த இரண்டு ஆண்டுகள் விழாவை நடத்த முடியவில்லை" என்று இடைவெளிவிட்டார் ரவிசுப்பிரமணியன்.

ரவிசுப்பிரமணியன்
ரவிசுப்பிரமணியன்

மூன்றாம் ஆண்டாக நேற்று நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன், எஸ்.சண்முகம் எழுதி, சாகித்திய அகாடமி பதிப்பித்த 'இந்திய இலக்கியச் சிற்பிகள் : மா.அரங்கநாதன்' என்ற நூலை வெளியிட்டார். மேலும், 'குடவாயில்' பாலசுப்பிரமணியன் மற்றும் டிராட்ஸ்கி மருது ஆகியோருக்கு விருதுகளையும் வழங்கி கெளரவித்த வெ.ராமசுப்பிரமணியன், விழாவில் சிறப்புரையாற்றினார்.

"பழங்கால கல்வெட்டுகள், செப்புத் தகடுகள், சிலைகள் போன்ற பல அரிய ஆவணங்களைக் கண்டுபிடித்தும், நூற்றுக்கணக்கான ஆய்வுக்கட்டுரைகளை எழுதியும், கல்வெட்டு ஆராய்ச்சியில் தமிழகத்தில் பெரும் பங்காற்றியுள்ளார் 'குடவாயில்' பாலசுப்பிரமணியன். மரபார்ந்த இயங்குபட வேலைகளை நீண்டகாலமாகச் செய்துவரும் டிராட்ஸ்கி மருது, அச்சு ஊடகங்களின் வாயிலாக நவீன ஓவியத்தைப் பாமர மக்களிடம் கொண்டு சென்றதிலும், காண்பியக்கலை வெளிப்பாட்டுக்குக் கணினியைப் பயன்படுத்தியதில் முன்னோடியாகவும் திகழ்பவர். இளம் கலைஞர்களை இயங்குபடத்துறையில் ஊக்கப்படுத்தி வளர்த்துவிடும் மருது, சினிமாத்துறையில் கலை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

ஓலைச்சுவடி
ஓலைச்சுவடி

தமிழ் மரபுக்கும் இலக்கியத்துறைக்கும் சிறப்பான பங்காற்றிய இந்த இரண்டு முன்னோடிகளைப் போலவே, வருங்காலத்திலும் பல படைப்பாளர்களைப் பெருமிதப்படுத்த இருக்கிறோம்" என்று மகிழ்ச்சியுடன் முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism