Published:Updated:

மச்சக்காரி - சிறுகதை

மச்சக்காரி -  சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மச்சக்காரி - சிறுகதை

- ஆ.ஆனந்தன்

மச்சக்காரி - சிறுகதை

- ஆ.ஆனந்தன்

Published:Updated:
மச்சக்காரி -  சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
மச்சக்காரி - சிறுகதை

ராஜமாணிக்கம் தனது டி.வி.எஸ் ஐம்பதை கொஞ்சம் வேகமாகச் செலுத்திக்கொண்டிருந்தார். தடியன் குடிசையிலிருந்து பண்ணைக்காடு வந்து அங்கிருந்து இறங்கி, கொடைக்கானல் சாலையைப் பிடிக்க வேண்டும். இது ஒன்றும் அவருக்குப் புதிதல்ல, இந்த முறை கொஞ்சம் அவசரம். மார்கழிக் குளிரும், முந்தைய இரவில் உடல் வலியெனக் கொஞ்சமாக அருந்தியிருந்த பிராந்தியும் சேர்ந்து அசந்து தூங்கிவிட்டார். பண்ணைக்காடு பிரிவில் காத்திருப்பதாக ரேஞ்சர் சார் சொல்லியிருந்தார், அவர் சொன்ன நேரத்துக்குப் போய்விடவேண்டுமே என்கிற வேகம்தான். மற்றபடி எதிலுமே நிதானமாகச் செயல்படக்கூடியவர்தான் ராஜமாணிக்கம்.

தனது முப்பதாவது வயதில் வனத்துறையில் பாரஸ்ட் வாட்ச்சராகச் சேர்ந்து மூன்று வருடங்களுக்கு முன்புதான் பாரஸ்ட் கார்டாகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். எல்லாம் இந்தக் கொடைக்கானல் மலை ரேஞ்சில்தான். அவருக்குச் சொந்த ஊரும் கே.சி.பட்டிதான்.

பண்ணைக்காடு ஊருக்குள் நுழையவும், அவர் பாக்கெட்டில் இருக்கிற கைப்பேசி அழைக்கவும் சரியாக இருந்தது. எடுத்துப் பார்த்தார், புது ரேஞ்சர் சார்தான்.

“சார், வணக்கம் சார்.”

“எங்கேயிருக்கீங்க?”

”பண்ணக்காடு ஊருக்குள்ள சார்.”

“சரி, பதற்றப்படாதீங்க, நான் கிளம்பக் கொஞ்சம் லேட்டாயிருச்சு, காலை டிபன் சாப்பிட முடியல. பண்ணைக்காட்டில ஏதாவது கிடைக்குமா?”

“இருக்கும் சார்.”

“கையில பணம் இருக்கா?”

“இருக்கு சார்.”

“சரி எனக்கு மூணு இட்லியும், ஒரு வடையும் வாங்கிட்டு வரமுடியுமா?”

“சொல்லுங்க சார், சார் இது போதுமா?”

“அதெல்லாம் போதும், அப்படியே என் டிரைவருக்கும் ஏதாவது வாங்கிட்டு வாங்க.”

“சரி சார், இன்னும் இருபது நிமிஷத்தில அங்க இருப்பேன் சார்.”

“சரி, நாங்க இந்தக் கரடி ஸ்பாட்டுகிட்ட இருப்போம், வாங்க.”

“சரி சார்.”

பண்ணைக்காட்டில் இருக்கும் பெரிய டீக்கடையில் இட்லி வடை தோசை பார்சல்களைச் சொல்லிவிட்டு, ஒரு வடையை வாங்கிக் கடித்துக்கொண்டே டீயை உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தார் ராஜமாணிக்கம். 

இப்ப வந்திருக்கிற ரேஞ்சர் ரொம்பத் தங்கமான மனிதர். இந்த ஒரு வருடத்தில் அவர் நடக்காத காடுகளே இல்லையெனச் சொல்லிவிடலாம். தனக்குக் கீழ் வேலை பார்க்கும் யாராக இருந்தாலும் அவர்களை மனிதர்களைப் போல நடத்துவார். கை நீட்டத் தெரியாதவர். அவர் வந்ததிலிருந்து இந்தக் கொடைக்கானல் மலை ஏரியாவில் மரம் திருடுறது, காப்பிக்கொட்டை களவாங்கிறது, ஆரஞ்சுத் தோட்டத்தில் பழம் திருடுறது, செளசெள காய்களைக் களவாடுறது, மலை வாழைப்பழங்களை வெட்டுறது, சின்னச் சின்ன மிருகங்களை வேட்டையாடுறது எல்லாமே முற்றிலுமாகத் தடுக்கப்பட்டிருக்கிறது. தினமும் காலை கிளம்பினார் என்றால் இரவு வரை ஒரு நாளைக்கு ஒரு ஏரியா எனச் சுற்றிக்கொண்டேயிருக்கும் ஆர்வலர். இதுவரை இருந்த ரேஞ்சர்களிலேயே அதிகம் படித்தவர், காட்டில் எந்த மரத்தைக் காட்டிப் பேர் கேட்டாலும் மரத்தின் பெயர் மட்டுமல்ல, மரத்தின் தாவரக் குடும்பத்தின் சரித்திரத்தையே சொல்லக்கூடியவர்.

மச்சக்காரி -  சிறுகதை

ராஜமாணிக்கம் டிபன் பார்சலுடன் வந்து ரேஞ்சரின் ஜீப் பக்கத்தில் நிறுத்தி “சார், குட்மார்னிங்’’ என்றார். டிபன் பொட்டலத்தை வாங்கிக்கொண்டே ‘‘குட்மார்னிங்’’ சொன்ன ரேஞ்சர், வேகமாகப் பிரிக்கத் தொடங்கினார், நல்ல பசி போலிருக்கு என ராஜமாணிக்கம் நினைத்துக்கொண்டார்.

ரேஞ்சர் சிகரெட்டைப் பத்த வைத்துக் கொண்டே, ``ராஜமாணிக்கம், இந்தப் பக்கம் புலி நடமாட்டம் இருக்குன்னு நமக்கு ரிப்போர்ட் வந்திருக்கு, கொஞ்சம் எல்லோரும் ஜாக்கிரதையா இருங்க’’ எனச் சொல்லிவிட்டு ராஜமாணிக்கம் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்.

“சார், நான் ஆடலூர், பாச்சலூர், பன்றிமலை, கே.சி.பட்டி, பண்ணைக்காடு, இங்க இந்த ஊத்து வரைக்கும் ஒரு நாளைக்கு இரண்டு தடவையாவது கடந்து போய்க்கிட்டு இருக்கேன், கண்ணுல பட்டமாதிரி தெரியல சார், ஆனா புலிகள் இங்க இருக்குன்னு போன வருஷம் வந்த கல்லூரிப் பசங்க கால் தடத்தை போட்டோ எடுத்துக் காண்பிச்சாங்க சார். நல்ல வயசான புலின்னும் சொன்னாங்க சார், இன்னும் என் கண்ணுல எதுவும் படல சார்” என்றார்.

தான் சொல்லும் பொய்யை எங்கே ரேஞ்சர் கண்டுபிடித்துவிடுவாரோ என்று தலையைக் குனிந்துகொண்டு அவர் கண்களைப் பார்க்காமல் பேசிக்கொண்டிருந்தார். 

ரேஞ்சர், ``சரி ராஜமாணிக்கம், இன்னைக்கு எந்தப் பக்கம் போறீங்க’’ என்றார். ராஜமாணிக்கத்துக்கு இன்னைக்கு எங்கேயாவது மரத்தடியில் படுத்துத் தூங்க வேண்டும்போல் இருந்தது, இருந்தாலும் சமாளித்துக்கொண்டு ``தடியன்குடிசைப் பக்கம் சார்’’ என்றார். ``சரி, எதுன்னாலும் எப்போன்னாலும் எனக்கு போன் பண்ணுங்க.’’ சொல்லிவிட்டுக் கொடைக்கானல் நோக்கிக் கிளம்பினார் ரேஞ்சர்.

ராஜமாணிக்கம் ரோட்டோரத்திலிருந்த நல்ல அகலமான தடுப்புச் சுவரில் உட்கார்ந்தார், இடுப்புப் பகுதியில் வலியெடுக்கிற மாதிரி இருந்தவுடன் அந்தச் சுவரிலேயே அப்படியே படுத்தார். உடல் வலியும் அசதியும் சேர, தன்னை மறந்து தூங்கத் தொடங்கினார்.

மலை முழுவதும் நல்ல வளமான மரங்களாலும் கொடிகளாலும் நிறைந்திருந்தது. இரண்டு வருட மழைப்பொழிவு மலையெங்கும் பச்சையத்தை வாரி இறைத்திருந்தது. 

இலைகளின் மக்கல் வாடையும் பனிப் பொழிவின் ஈரமும் வீசும் மிக மெல்லிய காற்றும் ஒரு சொர்க்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. உயர்ந்த மரங்களில் வானரங்கள் தாவித் தாவி விளையாடிக்கொண்டிருக்க, காட்டெருமைகள் கொஞ்சம் தைரியமாக ரோட்டோரம் வந்து மேய்ந்துகொண்டிருந்தன. 

கேளையாடுகள் இரவில் வந்து மேய்ந்துவிட்டு உதிர்த்துவிட்டுப் போயிருந்த மலங்கள் ஆங்காங்கே உருண்டு கிடந்தன. அவ்வப்போது மெல்லிய வளைவுகளில் திரும்பும் பேருந்துகள் மற்றும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களின் ஓசைகள் கேட்டுக் கொண்டேயிருந்தன. பலத்த ஒலிப்பான்களின் சத்தம் மலையெங்கும் எதிரொலித்து அடங்கியது.

சைக்கிளில் மேல் மலையிருந்து சுள்ளிக் கட்டுகளையும், புல் கட்டுகளையும் பின்னால் கட்டிக்கொண்டு சரிவில் இறங்கி அவரவர் ஊர் நோக்கிப் போய்க்கொண்டிருந்தவர்களின் பேச்சுச் சத்தமும் எங்கிருந்தோ கேட்கிற மாதிரி இருந்தது. அவர்கள் அதிகாலையிலேயே பேருந்துகளில் சைக்கிளைப் போட்டு மலை மேல் தங்களுக்கு ஏதுவான இடங்களில் இறங்கி சுள்ளிகளையும் புல்லையும் சேகரிப்பார்கள். மாலை வரும்பொழுது சைக்கிளில் கட்டி எடுத்துக்கொண்டு சைக்கிளை மலை இறக்கத்தில் செலுத்தியபடி வந்துவிடுவார்கள், அவர்களின் பேச்சு, பாட்டு சில நேரங்களில் விசில் சத்தம் என காட்டுக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும், காபி தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கும் ஒரு உற்சாகத்தையும், தனியாக வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பயம் போக்கும் மருந்தாகவும் இருக்கும். 

ராஜமாணிக்கத்துக்கு அந்தப் பழைய இரவு ஞாபகத்துக்கு வந்தது.

ஞாபகம் ஒன்றுதானே இப்படி எப்போது வேண்டுமானாலும், மலையிலிருந்து சரிந்து உருளும் பாறைகள் மாதிரி வந்து பாதையை மறிக்கும். அன்றைக்குக் கொடைக்கானலில் நடந்த அலுவலகக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேருந்தில் திரும்பிக்கொண்டிருந்தார். கூட்டத்தின் முடிவில் மாற்றலாகிப் போகிற ரேஞ்சருக்குப் பிரிவு உபசார விழா. அது முடிந்து விருந்து உண்டுவிட்டு, அங்கிருந்து கிளம்பவே இரவு எட்டு மணியாகிவிட்டது. அவர் பேருந்தில் கிளம்பி ஊத்து பஸ் ஸ்டாப்பில் இறங்கி அங்கே அவர் வைத்திருந்த தனது டி.வி.எஸ் ஐம்பதை எடுத்துப் பண்ணைக்காட்டுக்கு வந்து ரேஞ்ச் ஆபீசில் படுத்து ஓய்வெடுத்துவிட்டு காலையில்தான் வீட்டுக்குப் போகமுடியும். 

பேருந்து ஊத்து வந்தடையவே, இரவு பத்தரை மணியாகிவிட்டது. ஊத்தில் ஒரு டீக்கடையைத் தவிர அனைத்தும் மூடப்பட்டிருந்தன. அந்தக் கடையையும் இன்னும் அரை மணி நேரத்தில் அடைத்துவிடுவார்கள். காட்டெருமைகள் மலைகளைக் கடப்பதற்கு ரோட்டில்தான் இறங்கும், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது, அதோடு அதன் பிறகு போக்குவரத்தும் இருக்காது. எல்லோரும் வீட்டுக்குள் அடைந்துவிடுவார்கள்.

ராஜமாணிக்கம் தனது டி.வி.எஸ் ஐம்பதை எடுத்தவர், தனக்கு முன்னால் போகும் பேருந்தின் பின்னால் போய்க்கொண்டிருந்தார். தனது வாகனத்தின் சத்தமே தனக்கு ஒரு பயத்தை உண்டாக்கிக்கொண்டிருப்பதாக ராஜமாணிக்கம் உணர்ந்தார். மரங்கள் அசைவற்று பெரிய பெரிய பூதங்களாக வழியெங்கும் பின்னோக்கிப் போய்க் கொண்டிருந்தன. கொஞ்சம் தனது வாகனத்தை நிறுத்தி இளைப்பாறிவிட்டுச் செல்லலாம் என்றால் இருட்டும், மிருகங்களின் அதுவும் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும் காபித் தோட்டங்கள் இருபுறமும். 

அந்த மாதிரி எண்ணத்தை அங்கேயே விட்டுவிட்டு நிதானமான வேகத்தில் பண்ணைக்காடு நோக்கிப் போய்க்கொண்டிருந்தார். அதிக வேகமெடுத்து வாகனம் ரிப்பேர் ஆகி நின்றுவிட்டால் அந்த இருட்டில் என்ன செய்ய முடியும்? பண்ணைக்காட்டுப் பிரிவை நெருங்கும்பொழுது ஒரு வளைவில் வாகனத்தைத் திருப்பிய ராஜமாணிக்கம் அப்படியே அதிர்ச்சியில் உறைந்துபோய் வாகனத்தை நிறுத்தினார்.

நடுரோட்டில் மூன்று புலிக்குட்டிகள்.

ஒரு மாதம்தான் ஆகியிருக்கும்போல, மூன்றும் ஒன்றின் மேல் ஒன்று என மாறி மாறித் தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தன. ராஜமாணிக்கத்துக்கு அந்த மார்கழிக் குளிரிலும் மாரடைப்பு வந்ததுபோல் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. தனது வாகனத்தில் வைத்திருந்த டார்ச் லைட்டை எடுத்து ஒளியைப் பெருக்கி அவற்றின்மேல் படும்படியாகச் செலுத்தினார். அவை எதையும் கவனிக்காமல் அவற்றின் விளையாட்டிலேயே கவனமாக இருந்தன. மீண்டும் பார்த்தார், புலிக்குட்டிகள்தான். உடலெங்கும் வரிகள் இருந்தன. சிறுத்தை என்றால் புள்ளிகள்தான் இருக்கும்.

ராஜமாணிக்கம் தனது வாகனத்தை முன்னோக்கி நகர்த்தலாமா என யோசனை பண்ணிக்கொண்டிருக்கும் பொழுதே, அவருக்குள் இருந்து அவரது முதுகைத் தொட்டு ஜாக்கிரதை செய்கிற குரல் வந்தது. மூன்று புலிக்குட்டிகள் இப்படி சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கின்றன என்றால் நிச்சயம் அதன் தாய்ப்புலி இங்கே எங்கேயாவது இருக்கும். அங்கிருந்து தன் குட்டிகளைப் பார்த்துக்கொண்டேயிருக்கும், பக்கத்தில் போனால் நிச்சயம் தனது உயிர் தப்பாது.

புலிக்குட்டிகள் விளையாடிக் கொண்டே தனக்கு முன்னால் ரோட்டிலேயே ஒரு இருபது அடி தூரம் போய்க்கொண்டிருந்தன. அவை ஒன்றின் மேல் ஒன்று தாவித் தாவிப் புரண்டுகொண்டிருக்கும் பொழுதே தனது வாகன வெளிச்சத்தில் அதில் ஒன்று பெண்குட்டியென அடி வயிற்றில் தெரிந்த புடைத்த புள்ளிகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டார். 

அந்தப் புலிக்குட்டியின் வலது காதோரத்தில் உடல் புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து ஒரு பெரிய மச்சம்போல் இருந்ததும் தெரிந்தது. அவ்வளவு படபடப்புக்கும் மத்தியில் அந்த மச்சம் ஒரு பிரகாசத்தை அதனிடம் வைத்திருப்பதாக நினைத்தார்.

இருபதடி தூரம் போன குட்டிகள் அப்படியே ரோட்டோரம் ஒதுங்கி சரிவில் இறங்கத் தொடங்கவும், சரியாக மேல் மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருந்த கார் ஒன்று, ராஜமாணிக்கத்தின் வாகனத்தை உரசுகிற மாதிரி தாண்டிப் போகவும் சரியாக இருந்தது. ராஜமாணிக்கம் தன்னையறியாமல் ``முருகா” என வாய்விட்டுச் சொல்லிக்கொண்டே தனது வாகனத்தில் பண்ணைக்காடு விலக்கை நோக்கிப் போக ஆரம்பித்தார். 

அடுத்த ஒரு சிறிய வளைவில், குட்டிகள் இறங்கிய இடத்திலிருந்து பதினைந்தடி தூரத்தில் சரிவின் மரங்களுக்கிடையே பெரிய புலியின் உறுமல் கேட்டது. ராஜமாணிக்கம் தனது சக்தியெல்லாம் இழந்து பலமற்று தனது வாகனத்தை நிறுத்திவிட்டு அதிலேயே அமர்ந்திருந்தார். 

தன்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் டார்ச் லைட்தான், அடுத்து தனது வாகனம். அவருக்குத் தெரியும், இரண்டும் அவசரத்துக்கோ ஒரு பெரிய புலிக்கோ ஈடு கொடுக்காது என்று. இருந்தாலும் உதவிக்கு ஆளோ, ஆயுதங்களோ இல்லாத இந்த இடத்தில் இரண்டுதான் தனக்கு உதவும். ஒன்று கடவுள் நம்பிக்கை, இரண்டாவது தனது தைரியம். தனது வாகனத்தை நிறுத்தி விளக்கை அணைத்தார், டார்ச லைட்டைக் கையில் நன்றாக இறுகப் பற்றியவராக வாகனத்தின் பின்னால் நின்றுகொண்டார். 

வாகனத்துக்கு முன்னால் ரோடு, பின்னால் ராஜமாணிக்கம், அவருக்குப் பின்னால் மலைப்பாறை. தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தார், மணி ஒன்று எனக் காட்டியது.

 இனி இந்த ரோட்டில் வாகனப் போக்குவரத்தும் இருக்காது. உதவிக்கு யாரும் வரமுடியாது. கைப்பேசியை எடுத்துப் பேசலாம் என்றால் குரல் கேட்டு புலி தன்னை நோக்கி வந்துவிடக்கூடும்

புலியின் விறைத்துத் திரும்பும் காதுகள் இந்த மலைக்காட்டின் அத்தனை திசைகளின் ஓசையையும் அப்படிக் கண்காணிக்கும். அதையும் தனது வாகனத்தின் சைடு பெட்டிக்குள் போட்டுவிட்டார்.  

இருபது நிமிடங்களுக்கும் மேலாக அப்படியே உறைந்த நிலையில் நின்றார். யானைகள், மான்கள் இல்லாத இந்த மலைப்பிரதேசத்தில் புலியா என அவருக்கு அச்சம் கலந்த ஆச்சர்யம். பறவைகள், சிறு மிருகங்களின் நடமாட்டம்கூட இல்லை, இவரது பயத்தை இருட்டும் அமைதியும் மேலும் அதிகரித்தது.

தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ரோட்டில் நடந்து அந்தப் புலியின் உறுமல் வந்த திசையில் நடக்கத் தொடங்கினார். உறுமல் பலம் பெறத் தொடங்கியது. நடுக்கம் இருந்துகொண்டேயிருக்க. உறுமல் சத்தம் வந்த சரிவின் அருகில் நெருங்கி தனது டார்ச் லைட்டைச் செலுத்தினார். 

மூன்று புலிக்குட்டிகளும் தாயின் அருகில் பதுங்கிக் கிடக்க, தாய்ப் புலி அசையாமல் நின்றுகொண்டிருந்தது. அடிவயிறு ஒரு அவஸ்தையில் மேலும் கீழும் ஏறி ஏறி இறங்கிக்கொண்டிருந்தது.

வாயிலிருந்து உமிழ் நீர் வடிந்தது. புலி ஏதோ சிரமத்தில் இருக்கிறது என அறிந்துகொண்டார், கொஞ்சம் தைரியம் வர தனது டார்ச் லைட்டை புலியின் உடல் முழுவதும் பாய்ச்சிப் பார்த்தார். 

புலியின் வலது கால் இரண்டு சிறிய ஆனால் வலுவான மண்ணுக்குள் புதைந்துகிடந்த பாறைகளுக்குள் சிக்கிக்கொண்டிருக்க, காலை எடுக்க முடியாமல் வலியில் உறுமிக்கொண்டும் முனகிக்கொண்டும் இருந்தது.

அப்படியே விட்டுவிட்டுப் போனால் தனக்கு ஒரு ஆபத்தும் இல்லை, கைப்பேசியை உபயோகித்து வனத்துறைக்குச் சொன்னாலும் உடனே யாரும் வரப்போவதில்லை. `உனக்குத்தான் ஆபத்தில்லையே, அங்கேயே இரு. விடிஞ்ச உடன வந்திருவோம்’ என்றுதான் சொல்வார்கள், அல்லது, `அப்படியே போயிரு, காலைல நாங்க வரும் பொழுது இருந்தா புடிச்சு காட்டுக்குள்ள விட்றலாம். இல்லேன்னா அடுத்த வேலையைப் பார்த்துக்கலாம்’ என்று சொல்வார்கள். அதனால் யாரையும் அழைக்கவில்லை, அவருக்கு ரேஞ்சரை அழைக்கலாம் என்று தோன்றியது.

ஆனால் வந்திருக்கிற புது ரேஞ்சர் மாதிரி இல்லை பழைய ரேஞ்சர். இதிலேயும் நாலு காசு பார்த்துவிடுவார். அந்த ஆளுக்கு போனே போடக்கூடாது என்று முடிவெடுத்துவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தார். அப்படி அவர் நின்ற கொஞ்ச நேரத்தில் மொத்த மலையும் அவருக்கு எதிரே வந்து நின்று துலங்குவதுபோல் இருந்தது.

மச்சக்காரி -  சிறுகதை

புலியும் தனக்குத் துணைக்கு ஒரு ஆள் கிடைத்திருக்கிறான் என்றோ, அல்லது, அவர் உதவி செய்யப்போகிறார் என்று தெரிந்தோ என்னவோ, மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க குட்டிகளை நக்குவதும் ராஜமாணிக்கத்தைப் பார்த்து மெதுவாக உறுமுவதுமாக இருந்தது. மலங்காட்டில் ஊர்ந்து செல்கிற புழுவில் இருந்து பெரிய உசுர்ப் பிராணி வரைக்கும் பாதுகாப்பு பற்றிய அந்த உள்ளுணர்வு உண்டு. இத்தனை வருட சர்வீஸில் அவருக்கு அது தெரியும்.

ராஜமாணிக்கம் அப்பொழுதான் பார்த்தார், அதன் வலது காலில் இருந்து லேசாக ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. ‘சரி, ஏதாவது செய்து பார்க்கலாம்’ என்று தோன்ற, பக்கத்தில் பத்தடி நீள கனமாக கம்பு போல் ஏதாவது கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே நடந்தார். புலி கொஞ்சம் பெரிசாக உறுமத் தொடங்கியது.

தனது வாகனத்தின் அருகில் போனவுடன் ரோட்டோரம் அவர் எதிர்பார்த்ததுக்கு மேலாக, நீளமான கனமான கழியொன்று கிடைத்தது, தலைச்சுமையாய் வருகிறவர்கள் சுமையை இறக்கி வைத்துவிட்டு மீண்டும் தலைக்கு ஏற்ற உபயோகிக்கிற கழி அது. அதன் ஒரு முனை இரண்டாகப் பிரிந்தும் இருக்கும்.

அந்தக் கழியை எடுத்துக்கொண்டு வந்து தனது டார்ச் லைட்டை ஒரு பாறையின் மேல் வெளிச்சம் புலியின் கால்களில் படும்படி வைத்துவிட்டு, புலியைப் பார்த்தார். அதுவும் இவர் நமக்கு உதவி செய்யத்தான் போகிறார் என அமைதியாக ஆனால் அதிகமாக மூச்சு வாங்கிக் கொண்டு நின்றுகொண்டிருந்தது. மூன்று குட்டிகளும் தாயின் மடிக்கு முட்டி மோதிக்கொண்டிருந்தன.

ராஜமாணிக்கம் மெதுவாக மிக மெதுவாக அந்தக் கழியை இரண்டில் சிறியதாகத் தோன்றிய பாறையின் அடியில் செருக முயற்சி செய்தார். அந்தச் சின்ன அசைவும் புலிக்கு ஏதோ ஒரு வகையில் தொந்தரவு செய்திருக்குமோ என்னவோ, ராஜமாணிக்கத்தைப் பார்த்து முகத்தைத் திருப்பி பெரிய உறுமலாகப் போட்டது. ராஜமாணிக்கம் அப்படியே பயந்து போய்க் கீழே விழுந்துவிட்டார். 

தனது கைக்கடிகாரத்தில் மணி பார்த்தார், மணி மூன்று. இன்னும் இரண்டு மணி நேரத்தில் பண்ணைக்காடு மக்களெல்லாம் ரோட்டோரம் ஒதுங்க பண்ணைக்காடு விலக்குக்கு வந்துவிடுவார்கள், அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஒரு வெறி வர எழுந்து. தன் முயற்சியைத் தொடங்கினார். நாலைந்து முறைக்குப் பிறகு பனியில் இளகிப்போயிருந்த மண் கொஞ்சம் அசைந்து கொடுத்தது. அழுத்திப் பாறைக்கு அடியில் கழியைக் கொடுத்து இறுக வைத்தார்.  தன் பக்கம் இருந்த மறுமுனையைக் கீழ் நோக்கிச் செலுத்தி நெம்பிப் பாறையைப் பெயர்க்க முயற்சி செய்தார்.

 புலி தனது மொத்த பலம் அனைத்தையும் கால்களில் இறக்கி அவற்றை உருவி எடுக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. மூன்று குட்டிகளும் ராஜமாணிக்கத்தையே பார்த்துக்கொண்டிருந்தன. ராஜமாணிக்கம் தனது வியர்வையைத் துடைத்துக்கொண்டு “இருங்கடா குட்டிகளா, இன்னும் கொஞ்ச நேரத்தில உங்க அம்மாவை விடுவிச்சுருவேன்’’ என்று சொல்லி, கையைக் காட்டினார். அவை மண்ணில் விழுந்து புரண்டன. தாய்ப் புலி தன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றது. வலி பொறுக்க முடியவில்லையோ என்னவோ. “கொஞ்சம் பொறுத்துக்கம்மா தாயே” என்றார். புலி அவரைப் பார்த்து அப்படியே நின்றது. 

மேலும் பலம்கொண்ட மட்டும் சக்தியைத் திரட்டி அழுத்தினார், கல் அசைந்துகூடக் கொடுக்கவில்லை. கொஞ்ச நேர யோசனைக்குப் பிறகு பக்கத்தில் ரோட்டோரத்தில் கிடந்த ஒரு கல்லை உருட்டி வந்து கழிக்கு அடியில் கொடுத்து இறுக்கி, தனது மொத்த எடையாலும், இந்த மலையில் இதுவரை அவர் அடைந்திருந்த அனுபவங்களின் பாரத்தை எல்லாம் அதில் இறக்கி, கீழ் நோக்கிக் கழியை அழுத்தினார். பாறை இலேசாக அசைந்து கொடுத்தது. 

ராஜமாணிக்கம் நன்றாக மூச்சை இழுத்தார். சுக்குநாறிப் புல் நசுங்குவது போல் ஏதோ ஒரு பச்சை அவருக்குள் நிரம்பியது. அம்மைக்காரியின் மடியை முட்டுகிற மூன்று குட்டிகளில் மச்சம் விழுந்திருக்கும் பெண்குட்டியையே பார்த்தபடி கழியை இன்னும் கொஞ்சம் பாறைக்கு அடியில் செலுத்தி இறுக்கிவிட்டார்.

பிறகு கழியின் மேலேயே ஏறி அமர்ந்து கால்களைத் தரையில் ஊன்றி, அப்படியே தனது கால்களைத் தரையிலிருந்து உயர்த்த, தனது உடல் எடையில் பாறை அசைந்து விலகுவதை உணர்ந்து புலியைப் பார்த்துக்கொண்டே சட்டென்று எழுந்து நின்று, தாழ்வாய் இருந்த கழியின் மேல் ஏறி நின்றார். 

பாறை பெயர்ந்து சரிவில் உருள புலி தனது காலை விடுவித்துக்கொண்டு ராஜமாணிக்கத்தைப் பார்த்து முழு வாயையும் திறந்து பெரிய குரலெடுத்து உறுமிவிட்டு அப்படியே நின்றது, மூன்று குட்டிகளும் தாய்ப்புலிக்கு முன்னால் வந்து நின்று ராஜமாணிக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. தாய்ப்புலி தனது வலது காலைத் தூக்கி நின்றது. அந்தக் கால்களில் இருந்து ரத்தம் மெல்லிதாகச் சொட்டிக் கொண்டிருந்தது. 

ராஜமாணிக்கம் அசையாமல் நின்று கொண்டிருந்தார். கையில் ஆயுதம் இல்லை, ஓடுவதற்குக் கால்களில் வலு இல்லை, டார்ச்சும் பாறை மேல் இருக்கிறது. தன் தலை முகமெல்லாம் வழிந்த வேர்வையைக்கூட வழித்தெறிய முடியாமல் அப்படியே நின்றார்.

புலி மீண்டும் ராஜமாணிக்கத்தைப் பார்த்து உறுமிவிட்டு சரிவில் திரும்பி இறங்கத் தொடங்கியது. மூன்று குட்டிகளும் தாயின் உடல் ஒட்டி நடக்கத் தொடங்கின. 

ராஜமாணிக்கம் அந்தத் திசையையே பார்த்தபடி இருந்தார். உடம்பு சிலிர்த்தது அவருக்கு. சுருண்டு கம்பி போலாகி நின்ற இரண்டு முன்கை ரோமங்களையும் நீவிவிட்டபடி கண்ணை மூடி நின்றார். மூச்சு வாங்க நடந்து தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு பண்ணைக்காடு நோக்கிப் பயணமானார். 

பண்ணைக்காட்டு அலுவலகத்தில் படுக்கப் போகுமுன் இதைப் பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது என முடிவெடுத்துவிட்டுப் படுத்தவர் அசந்து உறங்கத் தொடங்கினார்.

அன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மணியிருக்கும், தனது பைக்குள்ளிருந்த கைப்பேசி ஒலிக்கவும் ராஜமாணிக்கம் தூக்கம் கலைந்து எழுந்தார். நாளை மறுநாள் தடியன் குடிசை ரேஞ்ச் ஆபீசில் வைத்து நடக்க இருக்கிற கூட்டத்துக்கு அவசியம் வரவேண்டுமெனக் கூறி விட்டு ரேஞ்சர் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார். ராஜமாணிக்கத்துக்கு அவர் டென்ஷனில் இருக்கிறார் என்று மட்டும் தெரிந்தது 

கூட்டம் தொடங்க இருக்கும்பொழுது சக ஊழியர்கள் வாயிலாக கூட்டமே இரண்டு வாரங்களாக, காபி தோட்டங்களுக்குள் புகுந்து ஆடுகளையும் கோழிகளையும் வேட்டையாடி இழுத்துச் செல்லும் புலியைப் பிடிப்பது பற்றித்தான் எனத் தெரிந்துகொண்டார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னால் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என்கிற பெரிய மனப் போராட்டத்துக்குப் பிறகு, சொல்லக்கூடாது என்ற உறுதியுடன் கூட்டம் நடக்கிற அறைக்குள் நுழைந்தார்.

எதிர்பார்த்தது போலவே புலியின் நடமாட்டம் பற்றியும் அதை எப்படிப் பிடித்து அடர்ந்த வனத்துக்குள் அனுப்புவது என்பது பற்றியுமே விவாதிக்கப்பட்டது. 

அன்றைய கூட்டத்துக்கு வந்திருந்த மாவட்ட வன அதிகாரி, ``ராஜமாணிக்கம், உங்க சரகத்திலதான் கேமராவில புலியின் நடமாட்டம் பதிவாயிருக்கு. பண்ணைக்காட்டுக்குக் கீழ கொடி எஸ்டேட்டுக்குக் கீழதான் ஆடுகளை அடிச்சிருக்கு. அப்படியே கீழ இறங்குனா மஞ்சளாறு டேம், தண்ணி குடிக்க அங்க இறங்குனா உங்களுக்கே தெரியும், பக்கத்தில ஏகப்பட்ட கிராமம் இருக்கு; இல்ல மேல ஏறுனா பண்ணைக்காடு ஊர் இருக்கு. ரோட்டுலேயும் நிறைய ஆரஞ்சுத் தோட்டங்களும் அங்கேயே குடியிருக்கிற மக்களும் இருக்காங்க. இப்ப உங்களுக்கு நான் சொல்றது புரிஞ்சிருக்கும், உங்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். நீங்களும் சீனியர். அதனால உங்க பக்குவத்தில புலியைப் புடிச்சு எல்லோரையும் காப்பாத்துங்க” என்றார். 

ராஜமாணிக்கத்திற்கு மனசுக்குள் சிரிப்பு. நான் சீனியர்தான், ஆனா ஏதோ புலி பிடிக்கிறதுல நான் பெரிய ஆள் என்கிற மாதிரி பேசுறாரே என்று நினைத்துக்கொண்டார்.

``அப்பா, உன்னையப் பாக்க யாரோ வந்திருக்காங்க” ராஜமாணிக்கத்தை மகன் எழுப்பினான். அதிகாலை ஐந்து மணி இருக்கும். வாசலில் கொடி எஸ்டேட்டில வேலை பார்க்கிற பேயத்தேவன் நின்றுகொண்டிருந்தான். 

“என்ன பேயா...”

“யோவ் என்னய்யா தூக்கம், ராத்திரி தண்ணியா?”

“சும்ம இருய்யா நீ வேற, இந்தப் புலி படுத்தியெடுக்குது. அதிகாரிகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியல, இதுல எங்க தண்ணியும் கிண்ணியும்?”

“அதைச் சொல்லத்தான்யா வந்தேன். எங்க எஸ்டேட்டுக்குக் கீழ கிழக்க பாத்தாப்ல, கூண்டு வச்சிட்டுப் போனீங்கில்ல, அதில அந்தப் புலி கிடக்குய்யா.”

“என்னய்யா சொல்ற?”

மச்சக்காரி -  சிறுகதை

“நான் பாத்துட்டு வந்துதானே சொல்றேன். என்னா சத்தம், கிட்டக்க போக முடியல. கூண்டையே உடைச்சிரும் போல.”

“சரி, இப்ப எங்க போற?”

“பண்ணக்காட்டில போயி, டீ சாப்பிட்டுட்டு அப்படியே எஸ்டேட்டுக்குத்தான், வேற எங்க?”

“சரி இரு நானும் வர்றேன்” ராஜமாணிக்கம் கிளம்பத் தொடங்கினார்.

இருவரும் கொடி எஸ்டேட்டை நெருங்கும் போதே புலியின் உறுமலில் காடே குலுங்கிக் கொண்டிருந்தது. ``ராஜீ, நீ கிளம்பு, என்னைய முதலாளி தேடுற நேரம். இப்ப வந்திருவாரு, நான் போறேன்’’ சொல்லிக்கொண்டே பேயன் அவனுடைய வழியில் பிரிய, ராஜமாணிக்கம் புலிக்கூண்டை நெருங்கிக்கொண்டிருந்தார்.

நன்றாக விடிந்துவிட்ட காலை. கிழக்கு வெளுத்து சூரியன் மேலெழும்பும் நேரம். கூண்டுக்குள் இருந்த புலி இங்கும் அங்கும் நடந்து கொண்டேயிருந்தது, கூண்டைத் தன் முன்னங்கால்களால் பலம்கொண்ட மட்டும் அறைந்தது. புலியைப் பிடிக்கக் கூண்டின் கடைசியில் கட்டப்பட்டிருந்த ஆடு பயத்தில் குறுகி முனங்கிக்கொண்டிருந்தது.

 காலை நேர வெயிலில் மஞ்சள் வண்ணத்தில், கரிய பட்டைக் கோடுகளுடன் புலி பளபளவென உலாத்திக்கொண்டிருந்தது ராஜமாணிக்கத்துக்கு சந்தோஷமாக இருந்தது. பக்கத்தில் போய்ப் பார்த்தார். அவ்வளவு நேரம் நடந்துகொண்டிருந்த புலி, ராஜமாணிக்கத்தைப் பார்த்ததும் அப்படியே இரண்டு நிமிடம் தன்னை ஒரு மெழுகு பொம்மை போல ஆக்கி அசையவே இல்லை. ஒரு ஆழ்ந்த சுவாசத்தில் உயிர்பெற்று, கூண்டின் கதவை ஒட்டி வந்து அமைதியாக நின்றது. 

ராஜமாணிக்கத்துக்கு அதைத் தடவிக் கொடுக்கவேண்டும் போல இருந்தது. பயந்து கொண்டே தனது வலது கையை நீட்டினார், புலி நெருங்கி வருவதுபோலத் தெரிந்தது. அவர் அதன் முதுகில், அப்படியே தலையில், கழுத்துக்குக் கீழ் என மெதுவாகத் தடவிக்கொடுத்தார். புலி முனகிக் கொண்டே மேலும் கூண்டுக் கம்பிகளை ஒட்டி அதன் உடல் அமுங்க நின்றது. கொஞ்சம் தடவிக் கொடுப்பதை நிறுத்தியதும் புலி நடந்து, தன்னை முழுவதுமாக அவருக்குக் காட்டுவதுபோல தனது உடலைத் திருப்பி அவர் பக்கம் வந்தது. ராஜமாணிக்கம் அதன் அடிவயிற்றைப் பார்த்தார். 

 “அடியே என் மச்சக்காரி, நீதானா...” தன்னை மறந்து கத்திவிட்டார்.

அவர் கண்களில் நீர் வர, புலியை அதுவும் அந்த மச்சத்தைத் தடவிக்கொடுத்துக்கொண்டே அதனுடன் பேசத் தொடங்கினார்.

“மச்சக்காரி, நல்லவேளை கூண்டில சிக்கின. இல்ல, கொஞ்ச நாளுல உன்னைய யாராவது கொன்றுப்பாங்க. என்ன, அதில் தப்பிச்சு உப்புத் தின்னு பழகிட்டா அப்புறம் நீ ஆட்களையும் வேட்டையாட ஆரம்பிச்சிருவ.

இப்ப உன்னைக் கொண்டுபோய் சோலைக் காட்டில விடப்போறாங்க, அது நல்ல இடம், சாப்பிடவும், குடிக்கத் தண்ணியும் நிறைய கிடைக்கும். நிறைய கூட்டாளி கிடைப்பாங்க, முக்கியமா எங்கள மாதிரி மனுசங்க தொந்தரவு இருக்காது, சந்தோஷமா இருக்கலாம், போய்ட்டு வா” என்றார். அவர் சொல்வதையெல்லாம் புலி புரிந்துகொண்டதுபோல லேசாக உறுமியது.

ராஜமாணிக்கம் மச்சக்காரியின் உடல் முழுவதும் தடவிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்.

தூரத்தில் ஜீப் வருகிற சத்தம் கேட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism