Published:Updated:

வீரயுக நாயகன் வேள்பாரிக்கு மலேசிய விருது... சு.வெங்கடேசன் பெருமிதம்!

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

வீரயுக நாயகன் வேள்பாரி - அனைத்துலக சிறந்த படைப்பாக மலேசியா அமைப்பு அறிவிப்பு!

'காவல் கோட்டம்' எனும் வரலாற்று நூலுக்கு கடந்த 2011-ல் சாகித்ய அகாதமி விருது பெற்ற சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில் தொடராக எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி'க்கு மலேசிய அரசு தற்போது விருது அறிவித்துள்ளது.

இந்த நூல், ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே உலகத் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் சு.வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வரும் நிலையில் அவருடைய 'வீரயுக நாயகன் வேள்பாரி' மலேசிய பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி துறையில் பாடநூலாக இருந்து வருகிறது.

வீரயுக நாயகன் வேள்பாரி
வீரயுக நாயகன் வேள்பாரி

இந்த நிலையில்தான் மலேசியாவின் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கம் 'வேள்பாரி' நூலுக்கு விருது அறிவித்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் இவ்விருது பத்தாயிரம் அமெரிக்க டாலர்களைப் பரிசுத்தொகையாக கொண்டது. இது இந்திய மதிப்பில் 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ளது.

கொரோனா காலமாக இருப்பதால் விருது விழாவை நடத்த முடியாத சூழலில், விருது நூலாசிரியருக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுபற்றி சு.வெங்கடேசனிடம் பேசினோம். "மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பெரிய விருதுத் தொகை என்பதை கடந்து, தமிழ் வரலாற்று நூல்கள், இலக்கியங்கள் கடல் கடந்து தமிழ் மக்களிடம் போய் சேர்ந்தது மகிழ்ச்சியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் இந்த நவீன காலத்தில் இளைய தலைமுறையினரிடம் போய் சேர்ந்ததில் பெரு மகிழ்ச்சி. ஒரு படைப்பு விருதுக்குத் தேர்வு செய்யும்போது வாசகர்களின் கவனத்தைப் பெறுகிறது. புதிய வாசகர்களை அடைகிறது.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

மலேசிய வாசகர்களிடம் ஏற்கெனவே வரவேற்பைப் பெற்றுள்ளது வேள்பாரி. பல வாசகர்கள் வேள்பாரி பற்றி மின்னஞ்சல் அனுப்பி வருகிறார்கள். தொலைபேசியில் பேசுகிறார்கள். இந்நூல் பற்றி தொடர்ந்து விவாதிக்கிறார்கள். இந்த நிலையில் மலேசிய இலக்கிய விருது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது... தேர்வு செய்தவர்களுக்கும் வாசகர்களுக்கும் என் நன்றி" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு