Published:Updated:

எழுந்து வரும் எழுத்து!

சி.சு.செல்லப்பா
பிரீமியம் ஸ்டோரி
சி.சு.செல்லப்பா

நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்றான சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் திரைவடிவம் பெறவிருக்கிறது; இ

எழுந்து வரும் எழுத்து!

நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்றான சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் திரைவடிவம் பெறவிருக்கிறது; இ

Published:Updated:
சி.சு.செல்லப்பா
பிரீமியம் ஸ்டோரி
சி.சு.செல்லப்பா

‘19-A, பிள்ளையார் கோவில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை-5’ என்ற முகவரியில் இருபதாம் நூற்றாண்டுத் தமிழிலக்கியத்தின் வேர் ஆழப்பட்டிருந்தது. நவீனத் தமிழிலக்கியத்தின் பிதாமகர்களில் ஒருவரான சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ இதழ், அவர் வாழ்ந்த இந்த வீட்டிலிருந்துதான் வெளிவந்தது.

தமிழின் முன்னோடிச் சிற்றிதழான ‘எழுத்து’, 1959 ஜனவரியில் முதன்முதலில் வெளியானது; தொடர்ந்து மார்ச் 1970 வரை 11 ஆண்டுகள் வெளியான ‘எழுத்து’, நவீனத் தமிழிலக்கியத்தின் போக்கினை வடிவமைத்தது. ‘எழுத்து’ தொடங்கப்பட்டு 62 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று, ‘எழுத்து’ இதழை அமேசான் கிண்டிலில் வெளியிடுவதற்கான பணிகள், செல்லப்பாவின் பிறந்தநாளான செப்டம்பர் 29 அன்று தொடங்கியிருக்கின்றன. ‘அழிசி’ பதிப்பகம் மூலம் வெளியாகும் ‘எழுத்து’ கிண்டில் பதிப்பின் பிரதிகள், அக்டோபர் 2 தொடங்கி ஒவ்வொரு இதழாக அமேசானில் வெளியாகின்றன.

எழுந்து வரும் எழுத்து!

நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகளில் ஒன்றான சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’, வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் திரைவடிவம் பெறவிருக்கிறது; இதற்கான ஒப்பந்தத்தில் செல்லப்பாவின் மகன் சுப்ரமணியன், நாவலைப் பதிப்பித்திருக்கும் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தின் கண்ணன், இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் கடந்த ஜூலை மாதம் கையெழுத்திட்டிருந்தனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த தொகையில், ரூ. 5 லட்சத்தைச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைக்கு நிதிக்கொடையாக வழங்கியுள்ளார் சுப்ரமணியன்; இந்த நிதிக்கொடையிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ‘செல்லப்பா நினைவு உரை’ நிகழவிருக்கிறது.

சி.சு.செல்லப்பா
சி.சு.செல்லப்பா
Picasa

“தமிழ் இலக்கிய இயக்கத்தில், தமிழ் மொழியைப் பழைமையிலிருந்து புதுமைக்குக் கொண்டுவரும் முயற்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு ‘எழுத்து’ ஆரம்பிக்கப்பட்டது. புதுக்கவிதைகள் மற்றும் இலக்கிய விமர்சனத்துக்கே ‘எழுத்து’ முக்கியத்துவம் கொடுத்தது; கதைகளுக்கு இடம் குறைவுதான். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் ‘எழுத்து’வில் எழுதினார்கள்; ‘எழுத்து’வுக்கென்றே தனி எழுத்தாளர்களும் இருந்தார்கள். அடுத்த தலைமுறை எழுத்தாளர்களும் ‘எழுத்து’வில் எழுதிப் பயிற்சி பெற்றார்கள். இது பிற்காலத்தில் ‘கசடதபற’, ‘நடை’ போன்ற தனித்துவமான சிற்றிதழ்கள் உருவாகக் காரணமாக அமைந்தது” என்று தொடங்கிய சுப்ரமணியன், “எல்லாப் பொருளாதார நெருக்கடிகளையும் மீறியே ‘எழுத்து’வை அப்பா கொண்டுவந்தார். திருவல்லிக்கேணி பெரிய தெருவில் அமைந்திருந்த சென்ட்ரல் பிரஸ் என்ற அச்சகத்தில் தான் ‘எழுத்து’ அச்சிடப்பட்டது. அம்மாவுக்கு இலக்கியத்தில் ஈடுபாடு இருந்ததில்லை; ஆனால், பிழைதிருத்தம் போன்ற பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ‘எழுத்து’ உருவாக்கத்தில் அப்பாவுக்கு அவர் பக்கபலமாக இருந்தார். பெரிய தெருவிலிருந்த என்னுடைய பள்ளிக்குச் செல்லும்போதும் வரும்போதும் அம்மா, அப்பா யாருடனாவது நானும் அச்சகத்துக்குச் சென்று ‘எழுத்து’ உருவாவதைப் பார்ப்பேன். அச்சாகி முடிந்த பிரதிகளைப் பைகளில் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வருவோம். சந்தாப் பட்டியலில் இருக்கும் முகவரிகளை எழுதி, ஸ்டாம்ப் ஒட்டி, அப்பாவுடன் ரிக்‌ஷாவில் தபால் ஆபீசுக்குச் சென்று ‘எழுத்து’வைச் சந்தாதாரர்களுக்கு அனுப்பும் வேலையில் நான் அதிகம் ஈடுபட்டிருக்கிறேன். ‘எழுத்து’வின் விலை அப்போது 50 பைசா” என்று நினைவுகளில் அந்தக் காலகட்டத்துக்குப் பயணப்பட்டார்.

“திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் உரிமையாளரின் வீட்டில்தான் நாங்கள் குடியிருந்தோம். அந்தப் பழக்கத்தின் மூலம், ஒவ்வொரு காலாண்டிலும் ‘எழுத்து’ வெளியாகும்போது, திரைப்படங்கள் தொடங்குவதற்கு முன்பும், இடைவேளையிலும், ‘எழுத்து’வுக்கு விளம்பர ஸ்லைடு போடுவதற்கு அப்பா ஏற்பாடு செய்திருந்தார். சந்தாதாரர்கள் தவிர்த்து, நியூஸ்பேப்பர் கடைகளில் ‘எழுத்து’ விளம்பரப் போஸ்டருடன் 5 பிரதிகளை விற்பனைக்குக் கொடுப்பார். இப்படி அதிகம் செலவில்லாத உத்திகள் மூலமாக ‘எழுத்து’வைக் கொண்டு செல்லும் முயற்சிகளில் அப்பா ஈடுபட்டார். ஆனால், இவையெல்லாம் பொருளாதார ரீதியில் எந்தப் பலனையும் பெற்றுத் தரவில்லை. ஆனால், தமிழிலக்கியச் சூழலில் அதன் தாக்கம் மிக ஆழமாக இருந்தது!”

சுப்ரமணியன்
சுப்ரமணியன்
ஸ்ரீனிவாச கோபாலன்
ஸ்ரீனிவாச கோபாலன்

‘வாடிவாசல்’ திரைப்பட ஒப்பந்தம் கையெழுத்தானது குறித்து ‘விகடன்’ தளத்தில் வெளியாகியிருந்த சுப்ரமணியனின் பேட்டியைப் படித்துவிட்டு, ‘எழுத்து’ இதழ்களைக் கிண்டில் பதிப்பாக வெளியிடும் முயற்சிக்கு அனுமதி கோரி சுப்ரமணியனை அணுகியிருக்கிறார் ‘அழிசி’ பதிப்பக உரிமையாளர் ஸ்ரீநிவாச கோபாலன். மகிழ்ச்சியுடன் சம்மதித்த சுப்ரமணியன், ஸ்ரீநிவாசனின் சேகரிப்பில் விடுபட்டிருந்த ‘எழுத்து’ இதழின் பிரதிகளைச் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், புதுச்சேரி பிரெஞ்சு நிறுவனம் ஆகிய இடங்களிலிருந்து பெற்றுத் தந்திருக்கிறார்.

எழுத்தையே தன் அடையாளமாகக் கொண்ட சி.சு.செல்லப்பாவின் நினைவுகளை இன்னும் பல ஆண்டுகள் உரக்கச் சொல்லட்டும் இந்த ‘எழுத்து.’