Published:Updated:

“என் புத்தகம் திருப்பி அடிக்கும்! ”

சாந்தலா
பிரீமியம் ஸ்டோரி
சாந்தலா

நான், அப்பா, அம்மா நொய்யல் ஆறு முழுவதும் பயணிச்சோம். அங்கே இருக்குற பறவைகள், தாவரங்கள், பூச்சிகளை போட்டோ எடுத்து ஆவணப்படுத்தினேன்.

“என் புத்தகம் திருப்பி அடிக்கும்! ”

நான், அப்பா, அம்மா நொய்யல் ஆறு முழுவதும் பயணிச்சோம். அங்கே இருக்குற பறவைகள், தாவரங்கள், பூச்சிகளை போட்டோ எடுத்து ஆவணப்படுத்தினேன்.

Published:Updated:
சாந்தலா
பிரீமியம் ஸ்டோரி
சாந்தலா

கோவை ஆனைக்கட்டி மலையில், 2019-ல் நடந்த கோர விபத்து அது. குடி போதையில் பைக்கில் அசுர வேகத்தில் வந்த இளைஞர்கள் ஏற்படுத்திய விபத்து, ‘மக்களின் மருத்துவர்’ என்று கோவை மக்களிடம் நற்பெயர் பெற்ற மருத்துவர் ரமேஷின் மனைவி ஷோபனாவின் உயிரைப் பறித்தது. நொறுங்கிப்போன ரமேஷ், மனைவியின் சடலத்துடன் அந்தச் சாலையில் இருந்த டாஸ் மாக்கை மூடச்சொல்லிப் போராடினார். டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த விபத்தில், கால் பகுதி துண்டாகி ரத்த வெள்ளத்துடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார் ரமேஷின் மகள் சாந்தலா.

எந்த இடத்தில் தாயை இழந்து, தானும் மறு பிறவி எடுத்தாரோ அதே இடத்தில் இன்று மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னைக்காகச் செயல்படத் தொடங்கியிருக்கிறார் 17 வய தாகும் சாந்தலா. தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள சட்ட விரோத செங்கல் சூளைகளுக்காக நடந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராக ஏராளமானோர் போராட் டங்கள் நடத்தினாலும், சமீப காலமாக சாந்தலாவின் குரல் அங்கு ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது. தடாகம் பள்ளத்தாக்கில் உள்ள நீர்நிலை பாதிப்புகளை செயற்கைக் கோள் மூலம் ஆவணப்படுத்தி, ‘Stuck in the Days of Abundance: The Strange Case of Streams at Thadagam Valley’ என்ற புத்தகத்தை எழுதியிருக்கிறார் சாந்தலா. செம்மண் கொள்ளை மாபியாக்களின் சுரண்டல்களை நேரடியாக ஆய்வு செய்தபோது, அவர்களின் தாக்குதலுக் கும் உள்ளாகியிருக்கிறார். எழுத்தில் மட்டுமல்ல, களத்திலும் செயற்பாட்டாளராக நிற்கும் சகுந்தலாவை சந்திக்க, மருத்துவர் ரமேஷ் இல்லத்துக்குச் சென்றோம்.

“என் புத்தகம் திருப்பி அடிக்கும்! ”

செம்மண் கொள்ளையர்களால் தாக்கப் பட்ட காயம் சாந்தலாவின் முகத்தில் தெரிந்தது. மெல்லிய புன்னகையுடன் பேசத் தொடங்கினார். ``சின்ன வயசுல இருந்தே எனக்கு சுற்றுச்சூழல் மேல ஆர்வம் அதிகம். சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தோட ‘Birds of India’ புத்தகம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அது பறவைகள் பத்தி என்னோட ஆர்வத்தை இன்னும் தூண்டுச்சு. நாலாம் வகுப்புப் படிச்சப்போ, ஹோம் ஸ்கூலிங்ல படிக்க ஆரம்பிச்சேன். ஒன்பதாம் வகுப்பு வரைக்கும் ஹோம் ஸ்கூலிங்தான். ஸ்கூல்ல கை ஒடிய ஹோம்வொர்க் கொடுத்தப்போ, எனக்குப் பிடிச்சதை பண்ண நேரம் இருந்த தில்ல. ஹோம் ஸ்கூலிங்லதான் எனக்குப் பிடிச்ச விஷயங்களை பத்தி நிறைய ஆய்வு பண்ண முடிஞ்சுது’’ என்பவர், பதின் பருவத் தில் சூழலியல் சார்ந்து இயங்க ஆரம்பித்தது பற்றிக் கூறினார்.

‘`நான், அப்பா, அம்மா நொய்யல் ஆறு முழுவதும் பயணிச்சோம். அங்கே இருக்குற பறவைகள், தாவரங்கள், பூச்சிகளை போட்டோ எடுத்து ஆவணப்படுத்தினேன். பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதுறது முக்கியம்ங் கறதால, பழங்குடி குழந்தைகள் அதிகம் இருக்கற ஒரு ஸ்கூல்ல சேர்ந்தேன். அவங் களோட வாழ்வியல் இயற்கையோட ஒரு அங்கமா இருக்குறதால, அந்தப் பிள்ளைங் களோட படிக்கணும், பழகணும்னு ஆசைப் பட்டேன். அப்படியே பழங்குடி மொழியும் தெரிஞ்சுக்கிட்டேன். ஸ்கூலுக்கு பஸ்லதான் போவேன். வழியில நிறைய தண்ணீர் பாலங்கள் இருக்கும். லீவுல, இங்கே இத்தனை ஆறு ஓடுதானு ஒரு ஆர்வம் கிளம்ம, 24 வீர பாண்டி பிரிவுல இருக்குற நீர்நிலைகளை ஆவணப்படுத்தினேன்’’ என்றவர், அந்த துயர நாள் பற்றிப் பகிர்ந்தார்.

‘’11-ம் வகுப்பு பள்ளி ஆரம்பிச்ச நேரம். அன்னிக்கு நானும் அம்மாவும் அவங்க பைக்ல ஸ்கூல்ல இருந்து திரும்பினப்போ, எதிர்ல குடிச்சுட்டு பைக்ல வந்த மூணு பேர் எங்க மேல மோதிட்டாங்க. எனக்குக் கண், காது, வாய், மூக்குனு ரத்தம் கொட்ட, ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போனாங்க. ரொம்ப நாள் ஐ.சி.யூலயேதான் இருந்தேன். அம்மாவும் ஆஸ்பத்திரிலதான் சிகிச்சையில இருக்காங்கனு சொல்லிருந்தாங்க. நார்மல் வார்டுக்கு வந்த கொஞ்ச நாள் கழிச்சுதான் அம்மா இறந்துட்டாங்கனு சொன்னாங்க. பல மாசங்களா தினமும் அழுதுட்டே இருந்தேன்.

விபத்துக்கு அப்புறம் ஆறு மாசம் கழிச்சுத் தான் நடந்தேன். உடல் அளவுல ஒரு வருஷத் துல மீண்டுட்டேன். மனசளவுல மீள முடியல. எனக்கு அம்மாவும், பாட்டியும்தான் ரொம்ப நெருக்கம். அம்மா இறந்த ரெண்டு மாசத்துல பாட்டியும் இறந்துட்டாங்க. அந்த ரெண்டு இழப்பும் என்னை ரொம்ப பாதிச்சது. ரூம்லயேதான் அடைஞ்சிருப்பேன். ஆம்பு லன்ஸ் சத்தம் கேட்டாலே ஒரு மாதிரி ஆகிடு வேன். ஸ்கூல் போக ஆரம்பிச்சப்போ என்னால சரியா நடக்க, ஓட முடியல. கால்ல பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிருந்தாங்க. எல்லாரும் பரிதாபமா பார்க்குறது என்னை தொந்தரவு பண்ணிட்டே இருந்துச்சு...’’

“என் புத்தகம் திருப்பி அடிக்கும்! ”

17 வயதுக்குள் வாழ்க்கை தன்னை சுழற்றிய சுழல்களைச் சொன்னவர், மீண்ட கதையும் சொன்னார்... ‘`தனிமையை என்ன பண்ணுறதுனு தெரியாம என் மனசுல தோணுறதை யெல்லாம் வரைய தொடங்கினேன். சி.பி.எஸ்.இ 12-ம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றப்போ, கொஞ்ச நாள் காலேஜ் வேண்டாம்னு முடிவு பண்ணேன். தடாகம் பள்ளத்தாக்குல இருக்குற செங்கல் சூளைகள் செம் மண்ணை சுரண்டி, சுற்றுச்சூழலுக்கு நிறைய பிரச்னை ஏற்படுத்திருக்கு. மக்கள் உடல்நலனும் பாதிக்கப்பட்டு புற்றுநோய் வரை ஏற்பட்டது பற்றி அப்பா இதைப் பத்தி நிறைய சொல்லுவாரு. பிரச்னைகளை வெளிக் கொண்டு வரவும் நிறைய போராடுவாரு. அப்ப இங்க இருக்குற சூளைக்காரங்க, ‘மனைவி செத்தும் நீங்க திருந்தலயா?’னு கேட்டாங்க. அப்பதான், நான் இந்தக் களத்துல இன்னும் ஆழமா, தைரியமா இறங்கினேன்.

தடாகம் பள்ளத்தாக்குல இருக்கற நீர்நிலைகளோட நிலையை ஆவணப்படுத்தற பணிகளை 2021 அக்டோபர் மாசம் தொடங்கினேன். சின்ன வயசுல, எங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்குற சங்கனூர் ஓடைக்கு, தண்ணி வர்றப்போ எல்லாம் அப்பா என்னைய கூட்டிட்டு போவார். இப்ப அங்க எல்லாம் தண்ணி வர்றது இல்ல. சமீபத்துல நல்ல மழை பெய்தப்போகூட இங்க தண்ணி வரல. இவங்க செம்மண் தோண்டினதுக் கான எல்லா ஆதாரமும் திரட்டினேன். ஏன் தண்ணி வரலைங்கிற கேள்விக்கு விடை தேடறதுதான் ஆய்வு புத்தகமா உருவாச்சு.

நீதிமன்றம் நீதியை கொடுக்காம, சட்டத்தை மட்டுமே பேசிட்டு இருக்கு. சட்டம் விதிகளால உருவானது. இங்க யாருமே விதியைப் பின்பற்றுவது இல்லலைங்கறதுதான் பிரச்னையே. தடாகம் பள்ளத்தாக்குக்கும், இங்க இருக்குற நீர்நிலைகளுக்கும் தேவை நீதிதான். புத்தகத்துல இருக்குற விஷயத்தை தமிழாக்கம் பண்ணிருக்கேன். ஓர் ஓவியத்துல, ஒரே ஓவியத்துல மலைகள் சுரண்டப்பட்டது, யானைகள், சிறுத்தை, பறவைகள், பட்டாம்பூச்சி எல்லாத்துக்கும் நடக்கற அநீதிகளை சொல்ல முயன்றேன்.

“என் புத்தகம் திருப்பி அடிக்கும்! ”

நாங்க ஆய்வு பண்ணிட்டு இருந்தப்ப, என்னை கெட்ட வார்த்தைல எல்லாம் திட்டி முகத்துல குத்தி னாங்க. இவங்க அடிச்சது எல்லாம் எனக்கு பெருசா வலிக்கல. நான் அதைவிட பெரிய வலிகள அனுபவிச்சுருக்கேன். இதுக்காக நான் பயந்து ஓட மாட்டேன். காலேஜ் போகலாம்னு முடிவு பண்ணிருந் தேன். இவங்க அடிச்சதால, தடாகம் பள்ளத்தாக்கு சம்பந்தமா இன்னும் நிறைய பண்ணணும்னு முடிவு பண்ணிருக்கேன். இங்க இருக்குற தாவரங்களை முழுமையா ஆவணப்படுத்தி மார்ச் மாசத்துக்குள்ள அடுத்த புக்கை ரிலீஸ் பண்ண திட்டமிட்டிருக்கேன். எனக்கு கித்தார், போட்டோகிராபில ரொம்ப ஆர்வம். டிரோன் கேமரா ஆபரேட் பண்ணுவேன். தடாகம் பள்ளத்தாக்கை அடிப்படையா வெச்சு ஷார்ட் பிலிம் எடுக்கணும். அதெல்லாம் முடிச்சுட்டுதான் காலேஜ் போவேன்” - தடதடக்கிறார் சாந்தலா.

அக்கினிக் குஞ்சு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism