Published:Updated:

முட்டுச்சந்து - சிறுகதை

முட்டுச்சந்து - சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
முட்டுச்சந்து - சிறுகதை

- உமா மோகன்

“என்னப் பெத்தாரு... செம் பகமே... ஏ... ஏ... சிரிக்கிறதப் பாரு... நீங்கதான் என்னப் பெத்தாரா... நீங்கதான் செம்பகமா... மூட்றா... மூட்றா பொக்க வாய மொதல்ல மூடு... குஞ்சாமணிய சுத்தி ஒரு கோவணம் கட்ட வக்குல்ல. என்னப்பெத் தாருன்னா வாயப் பொளந்துகிட்டு என்னா சிரிப்பு...” - சாந்தா கொஞ்சிக்கொண்டிருக்கும் அழகைப் பார்த்து பேரனோ என்று நினைத்து விடுவார்கள் தெரியாதவர்கள்.

உமா மோகன்
உமா மோகன்

அது யார்வீட்டுக் குழந்தையாகவும் இருக்கும். சினிமா தியேட்டரிலோ, கல்யாண மண்டபத்திலோ பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பெண் ‘செத்த பாத்துக்கிறீங்களா’ என்று கைமாற்றிவிட்டுக் கழிப்பறை போய் வருபவ ளாயிருக்கும். அதற்குள்கூட இந்தக் கொஞ்ச லாட்டம் நடக்கும்.

சாந்தாவின் மாமியாருக்கு இந்த இருபத்து மூன்று வருடங்களாக அருவி மாதிரி கொட்டிக்கொண்டேயிருக்கும் இந்தக் கனிவு, பரிவு எப்படிச் சாத்தியமென்றே புரியவில்லை.அதுவும் ஒரு கைப்பிடி கடுகை எந்த நேரம் வேண்டுமானாலும் அவன் தலையில் போட்டால் பொரிந்துவிடும்போல் கொதிநிலை யிலேயே இருக்கும் தன் மகனைக் கட்டியும் இவள் எப்படி சாந்தாவாகவே இருக்கிறாள்?

ஆரம்பத்தில் இது ஒரு மாதிரி நடிப்பு என்று தோன்றியது. அப்புறம் புத்தி பிசகு என்று நினைத்தாள். அதுவுமில்லை என்று உறுதி யானது. இது ஓர் அபூர்வப்பிறவி. தன் வீட்டுக்கு வந்திருக்கிறது என்று நெகிழ்வாகக்கூடத் தோன்றும்.

`இப்படித்தான் இருக்கணும், நான் ஏன் இப்படி இருக்கேன் தெரியுமா...’ என்பது மாதிரி விளக்கம் எதையும் சாந்தா கொடுத்தது கிடையாது. இணக்கமாக மகிழ்ச்சியாக இருப்பது அவள் இயல்பு அவ்வளவுதான்.

`நான் ஏன் பச்சப்பசேல்னு இருக்கேன் தெரியுமா’னு எந்தச் செடிகொடியாவது சொல்லிக்கிட்டிருக்கா... நாமதான் அதை அக்குவேறு ஆணி வேறாக ஆராய்ச்சி பண்ணிக்கிட்டிருக்கோம். முழுசா அரை லிட்டர் பால்கூடக் கொடுக்காத லட்சுமி பசுவுக்கு அவள் செய்யும் சவரட்சணைக்குச் சற்றும் குறைந்தது அல்ல... கோபக்கார கணவனுக்கான கவனிப்பு.

மாமியார் ஞானாம்பாளுக்கு நன்றாக நினைவிருக்கிறது. சாந்தா திருமணமாகி வந்து நான்கு வருடங்கள் இருக்கும். உடனே உடனே என்று இரண்டு பிள்ளைகளாயாச்சு. கோபால் எப்போதும்போல் திண்ணைப்பேச்சு வீரன் தான். திடீரெனக் கிளம்பி ஒரு வாரம் பத்து நாள்கள் ஊர்சுற்றப் போய்விடுவான். வயல் வரப்பு கவனிப்பெல்லாம் ஞானாம்பாள்தான்.

குடும்பக்கட்டுப்பாடு பிரசாரத்துக்கென வந்த பக்கத்து நகர நர்சம்மாவோடு கிளம்பி விட்டாள் சாந்தா. மகன் வந்து கோபிப்பானோ என்ற பயம் ஞானாம்பாளுக்கு.

“ஏட்டீ... அந்தக் கழிச்சல்ல போறவன் வந்து குதிக்கப்போறான்...” என்று பயமுறுத்திப் பார்த்தாள்.

“இல்லாட்டியும்... கொஞ்சுவாவளா... வுடுங்க மாமி பார்த்துக்கலாம்.”

அவள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய அன்றுதான் அவனும் வந்தான்.

கோபித்தானா, இல்லை என்ன நடந்தது என்று இன்றுவரை சாந்தா சொன்னதில்லை. கன்னம் கன்றிக்கிடந்த நினைவு.

மாமியின் வழிகாட்டலை அப்படியே பற்றிக்கொள்வது, அக்கம்பக்கம் யாரும் விலகலாக நினைக்க முடியாதபடி புழங்கிக் கொள்வது, பெரிய சத்தம் சவுடு இல்லாமல் பிள்ளை வளர்ப்பது என்று சாந்தாவின் வாழ்வை அவளே வடிவமைத்துக் கொண்டாள்.

அதில் கோபாலின் இடம், தவிடு பிண்ணாக் குக்காகக் காத்திருக்கும் லட்சுமி பசுவைப் போலாகிவிட்டது. ஆனாலும் குதிப்பதற் கொன்றும் குறைச்சல் இல்லை.

அக்கம்பக்கப் பெண்கள், வாசற்படி, திண்ணையில் கதை பேசும் நேரங்களில் நின்னா குத்தம் உக்காந்தா குத்தமெல்லாம் கூண்டிலேறும். பெரும்பாலும், எரிச்சலும் கோபமுமாகக் குமுறுகிறவர்களை சிரிக்கத் தூண்டுவதுபோல் மடை மாற்றுவது சாந்தா வாகத்தான் இருக்கும்.

குறையென்று நினைத்தால் அவளுடைய சினிமா பைத்தியத்தைத்தான் சொல்ல வேண்டும். இடியே விழுந்தாலும் வாரம் ஒரு படமாவது பார்த்துவிட்டு வந்து ஒவ்வோர் அசைவையும் கதையாகச் சொல்லிக் கொண்டிருப்பாள். கதை கேட்கும் ஆர்வத் தோடு சூழும் பெண்களுக்கு இவள் நடுவே அசந்து மறந்துகூட தன் கதையைச் சொல்லாதது ஆச்சர்யமாயிருக்கும். இவர்கள் வீட்டு விஷயம் வெளியே தெரிந்தால் அது ஞானாம்பாளாக சொன்னதாகத்தான் இருக்கும்.

பிள்ளைகளோடு செலவும் சங்கடங்களும் வளர்ந்தாலும் எதுவும் கோபாலை பாதிக்க வில்லை. கடும் காய்ச்சலில் பேரன் கிடக்க வழக்கம்போல மகன் பத்து நாள்கள் எங்கோ போய்விட்ட சந்தர்ப்பத்தில் ஞானாம்பாளே மனம் வெறுத்து, ``புள்ள படுகெடயா கெடக்குன்னு லவ கூட மனசு அடிச்சிக்கல... புலியூரு சோசியன் சொன்னமாறி அப்பிடியே எங்கனயாவுது சாமியாராப் போயிட்டான்னா கூட மனசு ஆறிடும்... ஆளுக்கு ஆளா அரப்படி சோறுக்கு ஆளா குந்தித்தின்னுகிட்டு இப்பிடி உசுர வாங்குறானே” என்று வாய்விட்டே புலம்பத் தொடங்கிவிட்டாள்.

எப்போதும்போல சில நாள்களில் திரும்பி வந்து அதிகாரக்குரலுடன் மிடுக்கு காட்டிய போது `சீ...’ என்றுதான் இருந்தது ஞானத்துக்கு.

முட்டுச்சந்து - சிறுகதை

சாந்தா எப்போதும்போல்தான் இருந்தாள், கூப்பிட்ட குரலுக்கு ஓடிக்கொண்டு.

“வவுத்தெரிச்சலா இல்லையாடி... தவியா தவிச்சு தலையால தண்ணி குடிச்சிட்டு கெடந்தப்ப எங்கனயோ போயிட்டு இப்ப வந்து பவுசு காட்டுது நாயி... என்னன்னு ஒரு வார்த்த கேட்டியா?”

தான் பெற்ற பிள்ளை என்ற ஆற்றாமையே அற்று ஞானம் விலகி விலகிப் போய்க் கொண்டிருந்தாள்.

`ஒனக்கு எந்நேரத்தில ஒங்கப்பன் ஆயி பேரு வெச்சாவொளோ... அவ்வொளச் சொல்லணும்’ - ஆத்திரத்தை விழுங்க முடியாமல் எங்கோ இறக்கிவைப்பாள்.

`தேரு திருநான்னுகூட பெத்த புள்ளவோ கையில நாலு காசு குடுக்க வக்கு இல்ல...கறியப்போடு, கொழம்ப ஊத்துன்னு வழிச்சு வாரி தின்னுகிட்டு போறதுக்குதானா ஒனக்கு வீடு...’ - பட்டை வைத்து மடித்துவிட்டிருக்கும் சட்டைக் கையை ஏற்றிவிட்டுக்கொண்டு பெற்றவளிடமே கை ஓங்கிய அன்று மட்டும், ``சம்முவம்... ஒங்கப்பாவ வெளிய போவச் சொல்லு’’ என்று மகனை விளித்து அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள்.

வெளியே என்றதும், அப்போதைக்கு வெளியே என்று நினைத்துக்கொண்டு கோபாலும் முறைத்தபடி வெளியே போய் விட்டான். மீண்டும் ஊரடங்கிய பிறகு வீட்டுக்குள் நுழையப் பார்த்தால், வழக்கமில்லாத வழக்கமாக உள்தாழ்ப்பாள் போட்டிருந்தது. இன்ன நேரத்துக்கு வீடு திரும்புவான் என்று எந்த நாளும் உறுதியாக குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆகையால், கொண்டி தாழ்ப்பாளை மட்டும் மாட்டி விட்டு எல்லோரும் தூங்கப் போவார்கள்.

என்ன இருக்கு வீடு புகுந்து திருட... ஏதோ அண்டை அயலில் உள்ள ஆடு, மாடு, நாய் இடுக்கு வழி நுழைந்தால் உண்டு.

எரிச்சலில் வேகமாகக் கதவை அறைந் தான் கோபால். ஒன்றும் பயனில்லை. எவ்வளவு நேரம் இப்படித் தட்டுவது... உதைப்பது... ஐம்பது அறுபது வருஷமிருக்கும் அந்தக் கனத்த கதவின் ஆயுள். அங்கங்கே தெறிப்பு விட்டு சிரா துருத்திக்கொண்டிருக் கும் என்பது ஞாபகம் வர, ‘பகல்ல வந்து பேசிக்கிறன் இந்த தூங்குமூஞ்சி நாயிங்கள’ என்ற வீர வசனத்தோடு போய்விட்டான்.

மறுநாள் பத்து பதினோரு மணிக்கு வந்தபோது வறட்டு வறட்டென்று ஈருளியால் மகள் தலையை ஈத்திக்கொண்டிருந்தாள் சாந்தா. தன் அம்மா வயலுக்குப் போய்விட்டிருப்பாள் என்ற கணிப் புடன் ஏதோ வேலையாக வெளியூர் போய்விட்டு வரும் தோரணையில் முற்றத்தில் இறங்கி செம்பு செம்பாகத் தண்ணீரை ஊற்றிப் புறங்காலைத் தேய்த்துக் கழுவிவிட்டு துண்டை எடுக்கப் போனான்.

நெல் மூட்டை அடுக்கிய பெஞ்சின் ஓர் ஓரம் துண்டு, பக்கத்தில் பழையது சட்டி எல்லாம் தயாராக இருந்தது. நியாயமாகத் தனது அதிகாரம் இவ்வாறாக நிலை நாட்டப்பட்டு இருப்பது அவனுக்கு கர்வத்தைத் தந்திருக்க வேண்டும் வழக்கம் போல. ஆனால், இன்று என்னவோ எரிச்சலாக வந்தது. `எங்க சுத்துனாலும் நாயி வைக்கப்போருக்கு தானே வந்து நிக்கணும்' என்று மண்டைக்குள் அலறுவது அம்மாவின் குரலா, மனைவியின் குரலா என்று புரியாமல் கோபம் வெடித்தது.

``ஆயீ... ஏ ஆயீ...”

ஈருளிக்கும் அம்மாவின் கைக்குமாக அல்லாடிக் கொண்டிருந்த மகள் விரிந்த தலையோடு வந்து நின்றாள்.

‘`இன்னிக்கி கார்த்திய இல்ல... என்னா பழேது சட்டியக் கொட்டி வச்சிருக்கு...’’

வேலும் மயிலுமாக விழுந்து கும்பிட்டுதான் மறுவேலை... நிசமாவே கார்த்தியலா என்று சந்தேகம் ஓடினாலும், “ஏட்டீ தலய முடிஞ்சிக்கடி பாப்பா... வாரன்...’’ என்றபடி கை கழுவிக்கொண்டு தோசைக்கல்லை அடுப்பில் ஏற்றினாள்.

இந்த தக்குளியூண்டு புரட்சி தவிர சொல்லிக் கொள்கிற மாதிரி ஒரு முரண்டுகூட பண்ணிய தில்லை சாந்தா. ஞானத்தின் தள்ளாமை வெள்ளாமைக்கு இடைஞ்சலானபோது அதையும் தன் பொறுப்பாக்கிக் கொண்டாள்.

ஞானத்துக்கு இன்னொரு பெரிய குறை சாந்தா பிள்ளைகளைக் கூப்பிட்டு உட்கார வைத்து புத்திமதிகள் சொல்வதில்லை. தன்னையும் அப்படிச்சொல்ல அனுமதிப்பதில்லை என்பதுதான்.

“இஞ்சேரு பாப்பா... அடுத்த தலமொறயாச்சும் புத்தியா மதியா வாழ வேணாமா... அப்பப்ப நாலு வார்த்த சொல்லி வெக்கணும் புள்ள வோள்ட்ட” என்றால்... இதமாகவே, ``மாமீ... அப்பன்னா நீங்க ஒங்க மொவனுக்கு ஒண்ணுஞ் சொல்லாமயா இருந்திய... கட்டிக் குடுத்த சோறும் சொல்லிக் குடுக்குற சொல்லும் எத்தினி நாளக்கி... தானா நெனச்சிப் பார்த்து கத்துக்கணும். செய்வாவோ... நீங்க பயப்படாதிய’’ என்று நகர்த்திப் போய் விடுவாள்.

கைச்செலவுக்கு தட்டுமுட்டாகத் தொடங் கியது. பிள்ளைகள் படிப்புச் செலவு. மாதர் சங்கத்தில் தையல் வகுப்பு எடுக்கிறார்கள் என்று ஆள் கணக்குக்காக எப்போதோ போயிருந்தது இப்போது கைகொடுக்கும் என்று கணக்கு போட்டு ஒரு மெஷினையும் ஏற்பாடு செய்து கொண்டாள்.

மளிகைக் கடையில் பொட்டலம் கட்ட காத்து நிற்கும்போது, “அச்சு முறுக்கு வல்லியா” என்று இரண்டு பேர் விசாரித்தது கண்ணில்பட்டது.

வீட்டுக்கு வந்ததும் கொஞ்சமாகச் செய்து பார்த்தாள். நன்றாகத்தான் வந்திருந்தது.

அன்று மீசையும் தாடியுமாக கண்ணப்பன் ஆட்கள் வந்தபோதுகூட யாரோ முறுக்கு கேட்டு வந்திருக்கிறார்கள் என்றே பிள்ளையை உள்ளே போகச் சொன்னான். கொடியடுப்பைத் தணிவாக வைத்துவிட்டு வந்து, ‘`என்னங்க வேணும்’’ என்றாள்.

‘`கோவாலு எங்கே...’’ என்றான் நெடுநெடுவென்ற ஒருவன்.

நான்கு நாளுக்கு மேலாயிற்று அவன் வீடு வந்து... வந்தவர்கள் அவன் வழக்கமாக இப்படிப் போய்வருவான் என்பதையோ, குடும்பத்துக்கு விவரம் தெரியாது என்பதையோ நம்பவில்லை.

“இஞ்சேருங்க... குடும்பமா சேர்ந்து ஏமாத்த லாம்னு நெனச்சா தொலச்சுப்புடுவோம்” என்று கடுமை காட்டினான்.

``எதுக்குண்ணே பெரிய வார்த்தைலாம் சொல்றிய... நீங்க எதுக்கு அவ்வொளத் தேடுறி யன்னே எனக்குப் புரியல... ஒங்கள நாங்க ஏன் ஏமாத்தப்போறோம்...’’

குரல்கள் உயர்ந்துகொண்டே போக, பக்கத்து வீட்டு சுப்பிரமணி மாமாவைப் பின்வாசல் வழியாகப் போய் அழைத்து வருமாறு பேத்தியை அனுப்பினாள் ஞானாம்பாள். அவள் நிலை இப்போது சற்றுத் தேடுபாடு... கைகால் விழுந்து விட்டதுபோல்தான் கிடக்கிறாள். இருக்கிற வேலைகளில் இப்போது மாமியாருக்குப் பணிவிடைகளும் சேர்ந்துவிட்டிருந்தன.

சுப்பிரமணி மாமா வந்து கேட்டபோது தான் கோபால், அஞ்சும் பத்துமாக கண்ணப் பனிடம் வாங்கிக்கொண்டிருந்த கடன் கணிசமாக வளர்ந்துவிட்டிருந்த செய்தி தெரிந்தது.

`லட்சத்தை நெருங்குவதால் திருப்பிக் கொடு அல்லது அடமானமாக ஏதும் கொடு’ என்று நெருக்கியிருக்கிறான்.

‘`வூடு எங்கப்பா தானா சம்பாரிச்சது... அதுனால எனக்குதான் சொந்தம்...” என்ற வாக்குறுதியோடு கோபால் அப்போதைக்கு தப்பி வந்திருக்கிறான்.

பேச்சு வாக்கில் வீட்டுப்பத்திரம் பற்றித் தன்னிடம் விசாரித்தது ஞானாம்பாளுக்கு நினைவு வந்தது.

“பத்திரத்த வச்சிதான வண்டி ஓடுது... முழுவிப்போவாம மூக்குறதும் வெக்கிறதுமா தான நட்டு அறுக்குறோம்’’ என்று இதுகூடத் தெரியாத சோம்பேறியாக சுற்றும் மகனிடம் வெறுப்போடு சொன்னாள்.

அன்றுதான் எங்கோ கிளம்பினானோ...

“ஏம்பா... அவனே ஒரு வெட்டிப்பய... சீட்டாடிகிட்டு சோறு கண்ட திண்ணைல தூங்கறவன்... அவனுக்குப் போயி கடங் குடுப்பியளா’’ - சுப்பிரமணி கதையை நீட்டக் கூடாது என்ற முடிவுக்கு வந்திருந்தார்.

``நல்லாருக்கே ஒங்க நாயம்... வூடு வாசல்னு வாழுற ஒருத்தன் கடன், கட்சின்னு கேட்டா திருப்பிருவான்னு நம்பிதான குடுக்குறோம்...’’ குரல் உயர்த்துவதன் மூலமே காரியத்தை சாதித்துவிடலாம் என்ற கட்சிக்காரன் போலும்.

அந்தப் பக்கம் இந்தப் பக்கம் இரண்டிரண் டாக நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

``செரிம்மா... இவுங்க நம்ம சொன்னா கேக்கறாப்ல தெரியல. சோமுகிட்ட பேசிட்டு சொல்றோங்க’’ - அடுத்த அஸ்திரத்தை எடுத்து விட்டுப் பார்த்தார் சுப்பிரமணி.

‘`யாருகிட்ட வேணாலும் போங்க... வாங்குன காச குடுக்க வேணான்னு யாரு சொல்றாங்கனு நானும் பாக்குறன்...’’ முறைத்தபடியே வந்த ஆட்கள் வெளியேறினர்.

‘`எங்கம்மா போய்த் தொலஞ்சான் இவன்...’’

ஞானத்தின் படுக்கையருகே உட்கார்ந்து கொண்ட சுப்பிரமணியின் வெறுப்பு, நியாயம் தானே என்று தோன்றியது ஞானாம்பாளுக்கு.

ஊர்ப்பெரிய மனிதராக உருவாகியுள்ள சோமு, கோபாலின் வகுப்புத்தோழன்தான். பெண்களாக நிர்வாகம் செய்யும் இடத்தில் இப்படி வந்து தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்ல வைக்கலாம் என்பது சுப்பிர மணியின் யோசனை.

“காசக்குடுத்தவெ கேக்காம போவானா...’’ சாந்தா மெல்லிய குரலில் கேட்டாள்.

‘`மெரட்டி உருட்டி வாங்கிரலாம்னு நெனப்பாந்தான்... நம்ம வெச்சிருக்கமா எடுத்து நீட்ட...’’ - எக்கச்சக்க யோசனையும் குழப்பமு மாக பொழுது நீண்டது. சோமு வீட்டில் போய் நிற்க வேண்டியிருந்தது.

திரும்பத் திரும்ப கண்ணப்பன், பத்திரம் கைக்கு வரணும் என்றே பிடிவாதம் பிடித்தான்.

கோபால் வாங்கியதுக்கு என்ன ஆதாரம் என்று கேள்வி கேட்டபோது அவனிடம் சரியான பதில் வரவில்லை.

`எப்படி மடக்கிவிட்டேன் பார்த்தியா...’ என்பதுபோல சோமு பெருமையாக இவர் களைப் பார்க்க... ‘`சரியா நெனப்பில்ல அண்ணே... நெனப்புபடுத்தி சொல்றேன். ரெண்டு நாளு டைம் குடுங்க’’ என்று பவ்யமாகச் சொன்னான் கண்ணப்பன்.

“என்னம்மா... ஒன் வீட்டுக்காரன் எங்க என்னன்னு ஏதாச்சும் தெரியுமா... புள்ள குட்டியாச்சு... இந்தா திரும்புனா பொண்ண கட்டிக்குடுக்குற வயசாச்சு. இன்னமுமா இப்பிடி போனா போன எடம்னு கெடக்குறது... அவன் வந்தாதான நாமளும் நெசம் என் னான்னு புரிஞ்சு பேச முடியும்’’ - கண்ணப்பன் வகையறாவை அனுப்பிவிட்டு இவர்களுக்கு ஒரு காபியைக் கொடுத்து சோமு கேட்டது சலிப்பா, நக்கலா என்றே பிடிபடவில்லை.

வீட்டு சங்கதியை ஒரு வார்த்தை வெளியில் பேசாமல் வாழ்ந்த வாழ்க்கை அர்த்தமே இல்லாமல் போக, போகும் வரும் வழியெல்லாம் யாராவது அக்கறையாக நிறுத்தி துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தார்கள்.

`போகலாமா, வேண்டாமா’ என்றுதான் யோசித்துக்கொண்டிருந்தாள். ஆனால், ஞானம் ‘இந்தாருக்குற கொடவாசலுக்கு போவலன்னா நல்லாருக்காது... அதுவும் ஒனக்கு சொந்த சித்தப்பா வேற... வாக்கரிசி எடுக்கணும்ல... போய்ட்டு வா’ என்று மல்லுக் கட்டி அனுப்பியிருந்தாள்.

பைபாஸில் போய்க்கொண்டிருந்த பேருந்து திடீரென என்னவோ தகராறாகி நின்று விட்டது.

“டிப்போவுக்கு சொல்லி வுட்ருக்குங்க... ந்தா வேற வண்டி வந்துரும் போயிறலாம்...’’ - கண்டக்டரின் சமாதானத்தோடு கூடிக்கூடி நின்றுகொண்டிருந்தார்கள்.

‘சம்முவம்... வத்தி பழம்லாம் இங்ஙன நிக்கிற நேரம் வாங்கிரலாம் தம்பி...’

சாந்தாவின் வழக்கமான திட்டமிடலோ, கோபாலின் விதியோ யோசனை பிறந்தது.

அப்படி ஓர் அத்துவானக் காட்டில் கண்ணப்பனோடு கதை பேசியபடி பொவண் டோவும் வெற்றிலை சீவலுமாக கும்மாளமாகப் பேசிக்கொண்டிருந்த கோபால், சாந்தாவும் சண்முகமும் அந்தக் கடையில் வந்து நிற்பார்கள் என்று எப்படி கற்பனை செய்ய முடியும்?