
இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அவர் தங்கசேரிக்காரர். இரண்டாவது தங்கசேரி முழுக்க முழுக்க கிறிஸ்தவமயமாகிவிட்டது

“தொடக்கத்திலேயே நான் உங்களிடம் சொல்லியிருக்கிறேன் யுவர் எக்ஸலென்ஸி. மகாராஜாவின் முடிவை மாற்றக்கூடிய அளவிற்கு வலிமை வாய்ந்தவர்கள் சமஸ்தானத்தில் இருக்கிறார்கள். தம்புராட்டி தானாக இந்தக் கடுதாசியை அனுப்பியிருக்க மாட்டார்.”
“மகாராஜாவை மீறும் அளவிற்கு அதிகாரம் படைத்தவர்கள் யார் இருக்க முடியும்? இந்த நிமிஷமே அவர்களை என்ன செய்கிறேன் பாருங்கள்.” ஹானிங்டனுக்குக் கோபம் எல்லை மீறியது.
“எங்களைப் போன்ற அரசு அலுவலர்கள் என்றால்தான் உங்களுக்கு பயப்படுவார்கள். தம்புராட்டியுடன் இருப்பவர்கள் எல்லாம் உறவுமுறை சார்ந்தவர்களாக இருப்பார்கள். இல்லையெனில் தந்திரிகளாக இருப்பார்கள்.”
“உங்கள் மகாராஜாவே பிரிட்டிஷ் சர்க்காருக்குக் கட்டுப்பட்டவர். இதில் தம்புராட்டியுடன் இருக்கும் எடுபிடிகளைப் பற்றி எனக்கென்ன கவலை? உங்கள் மகாராஜாவைக் கிடுகிடுக்க வைக்க, ஒரே ஒரு டெலிகிராம் போதும். இதுவே ஐம்பது வருஷத்திற்கு முந்தைய பிரிட்டிஷ் அதிகாரியென்றால் உங்களையெல்லாம் பேசவே விட்டிருக்க மாட்டான். இப்போது நாங்கள் சாத்விகமான ஆட்சியாளர்கள் என்ற முகமூடியை அணிந்துகொண்டிருப்பதால் உங்களையெல்லாம் உட்கார வைத்துப் பேசிக்கொண்டிருக்கிறோம். திருவிதாங்கூர் சமஸ்தானத்தைப் பிடிப்பதற்கு எங்களுக்கு இரண்டு மணி நேரமாகாது. பிரிட்டிஷ் படைகள் வந்திறங்கினால் மலைக்கும் கடலுக்கும் இடையில் அகப்பட்ட எலிபோல் மாட்டி திருவிதாங்கூர் சீரழிய வேண்டியதுதான்” ஹானிங்டனின் கோபம் நிலையழிந்து எல்லோரின் மேலும் பாய்ந்தது.
பென்னிக்கு நம்பிக்கை முற்றிலும் தகர்ந்தது. “உண்மையில் துரதிர்ஷ்டம் பிடித்த திட்டம்தானோ? பாடாய்ப்பட்டு இழுத்துக்கொண்டு வந்து நிலையில் நிறுத்திய பிறகும், கூடிவராமல் நிற்கிறதென்றால் என்ன சொல்வது?” யாரிடமென்றில்லாமல் மனம் வெறுத்துச் சொன்னார் பென்னி.
குருவாயிக்குப் பென்னியைப் பார்த்து மனம் கசிந்தது. ஹானிங்டனும் பென்னியைப் பார்த்தார்.
“பென்னி, மை பாய், கவலைப்படாதே, நம்பிக்கை தளராதே. இதென்ன சேதி என்று விசாரித்து இப்போதே முடிவுக்குக் கொண்டு வருவோம்.” தானும் தளர்ந்துவிடக் கூடாதே என்ற விடாப்பிடியில் பேசினார் ஹானிங்டன்.
“என்ன சேதின்னு எனக்கும் புரிபடலை. தம்புராட்டியின் கடுதாசிதானா என்று நான் பார்க்கலாமா யுவர் எக்ஸலென்ஸி?” திவான் ராமய்யங்கார் குழப்பமான சிந்தனையில் கேட்டார்.
ஒன்றும் சொல்லாமல் ஹானிங்டன் கடிதத்தை ராமய்யங்காரிடம் நீட்டினார். கையில் வாங்கியவர் யோசனையுடன் படிக்க ஆரம்பித்தார். அழகிய இங்கிலீஷில் எழுதப்பட்டிருந்த கடிதத்தைத் தொடங்கியிருந்த விதத்திலேயே லெட்சுமி தம்புராட்டியின் கடிதமென்று திவானுக்குப் புரிந்துவிட்டது. மகாராஜா மூலம் திருநாள் அறியாமல் தம்புராட்டி இந்தக் கடிதத்தை அனுப்பியிருப்பாரா அல்லது மகாராஜாவுக்குத் தகவல் சொல்லிவிட்டுச் செய்திருக்கிறாரா என்று குழம்பினார். கடிதத்தின் வரிகளில் தெரிந்த கடுமை, வழக்கமாக பிரிட்டிஷ் சர்க்காருக்குச் சமஸ்தானத்தைச் சேர்ந்தவர்கள் எழுதும் பாணியில் இல்லை. கடிதத்தில் வெளிப்படையான பிரேமம் இழையோடியிருக்கும். ‘தன்னையும் சமஸ்தானத்தின் அதிகாரிகளையும் ஒப்பந்த ஷரத்துகளை விவாதித்துக் கையெழுத்திட அனுப்பிவிட்டு, பின்தொடர்ந்தாற்போல் கடிதம் வருகிறதென்றால் சமஸ்தானத்தில் என்ன நடக்கிறதென்று புரியவில்லையே?’ யோசிக்க யோசிக்க திவானுக்கும் மனம் குழம்பியது.

பேச்சுவார்த்தையில் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காகத் திவானுடன் சமஸ்தானத்து அதிகாரிகள் வருவதுபோல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும், உண்மையில் பேச்சுவார்த்தை முன்பின்னாகச் சென்றுவிடாமல் கவனமாகக் கண்காணிப்பதில் தேர்ந்தவர் மராமத்து செக்ரட்டரி குருவில்லா. தேவைப்பட்டால் மட்டுமே வார்த்தைகளை வெளியிடுவார். பேச்சினால் மராமத்துத் துறையில் ஒரு காரியமும் நடக்காது என்பதைப் புரிந்துகொண்டதோடு, பேசினாலே காரியம் கெட்டுவிடும் என்பதையும் தன் அனுபவத்தினால் நன்குணர்ந்தவர். இப்போது மெல்ல வாய் திறந்தார்.
“இதற்கெல்லாம் காரணமாக ஒருவர் இருக்கலாம் என்று நினைக்கிறேன்...” திவானுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகச் சொன்னார்.
“யார்?” திவான் குரல் உரத்துக் கேட்டது. தன்னால் யூகிக்க முடியாததை குருவில்லா சொல்ல வரும் அதிர்ச்சி, திவானின் குரலில் இருந்தது.
“யூகம்தான்...”
“சொல்லும்... தயங்க வேண்டாம்.”
“சங்கரன் தம்பியாக இருக்கலாம்.”
“சங்கரன் தம்பி? சமஸ்தானத்தின் மேனேஜர்?”
“ஆமாம் திவான். தங்கசேரி வேண்டுமென்று சொல்வதில் இருந்து என்னால் யூகிக்க முடிகிறது.”
“தங்கசேரிக்கும் அவருக்குமென்ன தொடர்பு?”
“இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அவர் தங்கசேரிக்காரர். இரண்டாவது தங்கசேரி முழுக்க முழுக்க கிறிஸ்தவமயமாகிவிட்டது. ஊரே தேவாலயம்போல் இருக்கிறது என்று அடிக்கடி வருத்தப்பட்டுப் பேசி வந்திருக்கிறார். ஒருவேளை இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கசேரியைச் சமஸ்தானம் கைப்பற்றிக்கொண்டால் மக்களை மீண்டும் தாய்மதத்திற்குத் திரும்பச் செய்ய முடியும் என்று அவர் நினைத்திருக்கலாம். மகாராஜா விசாகம் திருநாள் காலத்திலேயே சங்கரன்தம்பி நினைப்பதுதான் நடந்திருக்கிறது. இப்போது சொல்லவே வேண்டாம். லெட்சுமி தம்புராட்டியும் மகாராஜாவும் அவர் பேச்சைக் கேட்கும்படி நடந்துகொள்கிறார். கொட்டாரத்திற்குள் அவர் உடல் பாவனையைப் பாருங்கள். தர்பாரில் அவர் பாவனையைப் பாருங்கள்.”
குருவில்லா சொல்லச் சொல்ல, பென்னிக்கு அதிர்ச்சியாக இருந்தது. எந்தெந்த விஷயத்தின்மேல் எந்தெந்தப் பிரச்சினைகள் திரண்டெழுந்து வருகின்றன?
“தங்கசேரி பிரிட்டிஷ் கைக்குப்போய் நூறு வருஷத்துக்கு மேல் ஆயிடுச்சு. இப்போ சங்கரன் தம்பிக்கு என்ன திடீர் அக்கறை, ஈடுபாடு?” கோபம் வந்தது திவானுக்கு.
“சங்கரன் தம்பிக்கு நேரடியாக என்ன ஈடுபாடென்று உறுதியாகத் தெரியவில்லை திவான் சாகிப். ஆனால் சமஸ்தானம் முழுக்க கிறிஸ்துவர்களுக்கும் நம்மவர்களுக்கும் நடக்கும் பனிப்போரை இங்குள்ளவர்கள் அனைவரும் நன்கறிவோமே?”
குருவில்லா சொன்னவுடன், உண்மைதான் என்றெண்ணி அங்கிருந்தோர் யோசனையில் ஆழ்ந்தனர். பென்னிக்கு மட்டும் குருவில்லா என்ன சொல்ல வருகிறார் என்பது புரியாததால் அமைதியானார். விஷயம் எதிர்பாராத புது திசையில் செல்வது ஹானிங்டனுக்குப் புரிந்தது. இந்துக்களின் மத அனுஷ்டானங்களை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக மகாராஜாவே சென்றாலும், மகாராஜாவை எதிர்த்துக் கலகம் செய்வார்கள். இந்தியா முழுக்க நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை ஹானிங்டன் அறிவார். பிரிட்டிஷாரையும் சூத்திர சாதியினராக நடத்தும் மக்கள், சாதியக் கட்டுமானத்தைக் காக்க துணிந்து கலகம் செய்வார்கள்.
லெட்சுமி தம்புராட்டியின்மேல் வருத்தம் வந்தது. திருவிதாங்கூரில் கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நிகழும் பிரச்சினையை, பெரியாறு அணை ஒப்பந்தத்துடன் இணைத்த அவரின் தந்திரத்தை நினைத்துக் கோபமும் வெடித்தது. இவர்களின் சாதிய அபிமானமும் மக்கள்மீது காட்டும் பாரபட்சமும்தான் கிறிஸ்துவத்தில் மக்களைத் தள்ளுகிறது என்பதை ஏற்க முடியாதவர்கள்.
“என்ன செய்வது மிஸ்டர் அய்யங்கார். தம்புராட்டிகள் மகாராஜாக்களோடு தர்பாரில் உட்காரும் அனுமதி பெறாதவர்கள் என்றாலும் தம் உரிமையைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். லெட்சுமி தம்புராட்டி இங்கிலீஷ் படித்தவர், ஐரோப்பிய தேசத்தின் சுதந்திர நடைமுறைகளை அறிந்தவர் என்று நம்பினேன். என் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டாரே? ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா விசாகம் திருநாளின் மனம் கவர்ந்த தம்புராட்டி, மகாராஜாவின் உயரிய எண்ணங்களை மனம் கொள்ளவில்லை என்பதையறியும்போது வருத்தம் மேலோங்குகிறது.”
திவான் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். கனத்த பாறை வேரோடுவதைப்போல் விரும்பாத அமைதி அவ்விடத்தில் வேரோடியது. மிகுந்த பிரயாசைக்குப் பிறகு, திவான் தலைநிமிர்ந்து உட்கார்ந்து எல்லாரையும் பார்த்துப் பேசினார்.
“ஹிஸ் எக்ஸலென்ஸி விசாகம் மகாராஜாவின் ஜீவித காலத்திலேயே கையெழுத்துப் பெற நான் முயன்றிருக்க வேண்டும். ஆற்று மணலை அள்ளி வைத்து, பிள்ளையார் பிடிக்கும் முயற்சிபோல், பேரியாறு அணை ஒப்பந்தம் பற்றிய பேச்சு எப்போது எடுத்தாலும் ஒன்றுசேரவில்லை. தாமதத்திற்கான காரணத்தை என்னுடையதாக ஏற்றுக்கொள்கிறேன்” திவானின் குரல் குற்றவுணர்ச்சியில் தத்தளித்தது.
“முடிந்ததைப் பேசி என்ன ஆகப் போகிறது அய்யங்கார். எல்லாரும் அவரவர் பங்குக்குத் தாமதப்படுத்தியிருக்கிறார்கள். அரசாங்கக் கோப்புகளில் நூறு வருஷத்துக்குத் தொடர்ந்து எழுதப்பட்டும், விவாதிக்கப்பட்டும், நிராகரிக்கப்பட்டும் ஒரு திட்டம் இருந்த கதையை நாம் கேள்விப்பட்டிருக்கிறோமா? பெரியாறுதான் ஒரே முன்னுதாரணம். இன்றைய நாளும் அதன் நீண்ட நிராகரிப்புப் பட்டியலில் ஒரு நாளாக மாறிவிடக் கூடாது. என்ன செய்யலாம், சொல்லுங்கள்?”
“மகாராஜாவிடம் செல்வதில் பொருளில்லை. அவரின் சம்மதத்தைத் தெரிவித்துவிட்டார். லெட்சுமி தம்புராட்டியும் நான் பார்த்தவரை ஒப்பந்தத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானம் கையெழுத்திட வேண்டும் என்று விரும்பியவர்தான். மகாராஜாவின் சம்மதம், தம்புராட்டியின் விருப்பம் இரண்டையும் பின்னுக்குத் தள்ளி இந்தக் கடுதாசி வந்திருக்கிறதென்றால், அவர்களை அச்சுறுத்தும் இடத்திலிருந்து கோரிக்கை வந்திருக்கலாம். பத்மநாபரின் ஆட்சிக்குக் களங்கம் உண்டாக்கும் நடவடிக்கைகளென்று ஏதேனும் ஒன்றைச் சொல்லியிருப்பார்களென்று அனுமானிக்கிறேன். இந்து அனுஷ்டானங்களுக்குப் புறம்பான நடவடிக்கைகளுக்கு மகாராஜா கவனம் செலுத்தியே ஆக வேண்டும். மகாராஜாவோ, அரண்மனையைச் சேர்ந்தவர்களோ அதில் கவனம் தப்பினார்களென்றால் ஆங்காங்கு கலகங்கள் வெடிக்கும்.”
“யுவர் எக்ஸலென்ஸி…” பென்னியின் குரல் வறண்டிருந்தது.
“நான் அன்று சலிப்பில் சொன்னேன், துரதிர்ஷ்டம் பிடித்த திட்டமாக இருக்கிறதே என்று. உண்மையில் அப்படித்தான் போலிருக்கிறது பென்னி” ஹானிங்டன் குரலில் சோர்வைக் கண்ட குருவாயி, “நோ ஹனி, எதற்கு இவ்வளவு விரக்தி?” என்றாள். பின்னர் எதிரில் இருந்த பென்னியிடம், “பென்னி, கொஞ்ச நேரம் அவகாசம் கொடுங்கள். பின்னணியில் யார் இருக்கிறார்களென்று நான் விசாரித்துச் சொல்கிறேன்” என்றாள்.
“இப்போதே முடியுமா குருவாயி?”
“யுவர் எக்ஸலென்ஸி பிரிட்டிஷ் ரெசிடென்ட்டின் பெயரைப் பயன்படுத்தினால் எந்தக் கோட்டையின் கதவையும் திறக்கலாம் ஹனி.”
“இப்படித்தான் நம்புகிறோம். காரியம் ஒன்றும் நடக்கவில்லையே?” ஹானிங்டன் அலுப்பாய்ச் சொன்னார்.
“மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வந்துவிட்டோமே மேடம் எக்ஸலென்ஸி?”
“மனம் சோர்ந்துவிடாதீர்கள் பென்னி. எத்தனை இடர்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள்?”
பென்னிக்குப் பதில் சொல்ல முடியவில்லை. ‘இடர்களைக் கடப்பது என்றால் கடந்துவிட வேண்டும். புதிது புதிதாய் முளைத்துக்கொண்டே இருந்தால்?’ என்று கேட்டுத் தனக்குள் மூழ்கினார்.
“லிசன் மை பாய்… மதப் பிரச்சினைகளில் மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னரும் பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயுமே கடுமை காட்ட மாட்டார்கள். இழப்பு நம் பக்கம் இருந்தாலும், நியாயம் நம் பக்கம் இருந்தாலும், சாதிய விஷங்களுக்குள் தலையிடாத தந்திரத்தைத்தான் கையிலெடுப்பார்கள். நாம் தலையிட்டுப் புதிதாக ஒன்றைச் செய்யப்போக, பெரியாறு அணை கட்டும் திட்டத்தை ரத்து செய்தாலும் ஆச்சரியப்பட முடியாது. நீ இன்ஜினீயர் என்பதால் உனக்குச் சுதேசி மக்களின் கல்மிஷங்கள் தெரியாது. நான் ஆட்சியாளனாகவும் மேஜிஸ்ட்ரேட்டாகவும் இருந்ததால் எனக்கு இவர்களின் மனோபாவம் புரியும். இவர்கள் எல்லாரையும் இந்துக்கள் என்று பொதுவாய் நாம் புரிந்து வைத்திருக்கிறோம். திருவிதாங்கூரில் இந்துக்களிலேயே நான்கு சாதியினர் இருக்கிறார்கள். நம்பூதிரிங்க, தான் புனிதமானவங்க, முதன்மையானவங்கன்னு சொல்லிக்கிருவாங்க. அவங்க இருக்கிற இடத்துல இருந்து 16 தப்படி தள்ளி நின்னுதான் நாயர் சாதி ஆளுங்களே பேசணுமாம். நாயர் சாதி ஆளுங்க கிட்ட இருந்து 16 தப்படி தூரத்தில் நின்னுதான் ஈழவர் சாதி ஆள்கள் பேசணும். ஈழவர்கள்கிட்ட இருந்து 16 தப்படி தூரத்தில் நின்னுதான் புலையர்கள் பேசணும். இவங்களாவது பரவாயில்லை. ஆள் கண்ணில் படுற மாதிரி நின்னு பேசலாம். நாயாடின்னு ஒரு சாதி, அவங்க இந்த மேற்சாதி ஆளுங்க கண்ணுலயே படக்கூடாதாம். மறைஞ்சு நின்னுதான் பேசணுமாம். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு சாப்பாடு, வீடு, போட்டுக்கிற உடுப்பு எல்லாம் ஒவ்வொரு விதம். கிறிஸ்துவப் பாதிரியார்களுக்கு இந்துக்களோட இந்தப் பாரபட்சம் ரொம்ப வசதியாப்போச்சு. கண்ணுலயே படாதே, 16 தப்படி தள்ளி நில்லுன்னு சொல்லுற உங்க மதத்தை மாதிரி இல்லாம, பக்கத்தில் உட்கார வச்சு நீயும் நானும் சமம், நம் அனைவருக்கும் கடவுள் ஒன்னுதான்னு அன்பாச் சொல்லுற பாதிரியாரை அவங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதா? இந்த நம்பூதிரிங்க இருக்காங்க பாரு, திருவிதாங்கூர் பிராமணரைத் தவிர, மத்த பிரசிடென்சியில் இருந்து சமஸ்தானத்தில் குடியேறிய கன்னட பிராமணர், மராட்டா பிராமணர், தமிழ் பிராமணரா இருந்தாக்கூட அவங்க மலையாள பிராமணருக்கு ஒரு மாத்துக் கம்மிதான்னு சொல்லுறவங்க. வெறும் அறுபது எழுபதாயிரம் பேர்தான் மலையாள நம்பூதிரிங்க இருப்பாங்க. ஆனா இரண்டரை மில்லியன் ஜனங்களுக்கும் இவங்க சொல்றதுதான் புனிதம், இவங்க மறுக்கிறது எல்லாம் தீட்டு, விதிக்கிறதுதான் சட்டம், விதி, தண்டனை எல்லாம். போலீஸோ, மாஜிஸ்ட்ரேட்டோ, மகாராஜாவோ எல்லாம் ரெண்டாம்பட்சம்தான். மகாராஜாக்களும் நம்பூதிரிகள் சொல்றதைத்தான் கேட்பாங்க. ஏன்னா, சாதியப் படிநிலையில் இரண்டாவதா இருக்கிற நாயர் சாதியைச் சேர்ந்தவங்கதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்து மகாராஜாக்கள். நம்பூதிரியில் எழுபது சதவிகித குணம் நாயர்களுக்கும் இருக்கும். நம்பூதிரிங்க எப்பவும் நேரடியா தங்களுடைய வேற்றுமையைக் காட்ட மாட்டாங்க. நாயர்களையும் ஈழவர்களையும் தங்களோட எதிர்பார்ப்புகளைச் செய்ய வைப்பாங்க. அதில்தான் அவங்க வெற்றி இருக்கு.”
பென்னி முகம் வெளுத்து உட்கார்ந்திருந்தார்.
“ஏசுசபை பாதிரியார்கள் மாதிரி நாம் ஏன் மத விஷயத்தில் தலையிட முடியாதுன்னா, எங்கயாவது கலகம் வெடிச்சா, பாதிரியார் சம்பந்தப்பட்ட விஷயமா மட்டும் அந்தக் கலகம் முடிஞ்சிடும். பாதிரியாருடைய திருச்சபை மட்டும் பதில் சொல்லிட்டுப் போயிடும். நாம சம்மந்தப்பட்டதுன்னா பிரிட்டிஷ் பேரரசி வரைக்கும் விஷயம் போகும். விசாரணை நடக்கும்.”
“பெரியாறு அணை ஒப்பந்தத்தோட இந்தப் பிரச்னை எப்படிச் சேருது யுவர் எக்ஸலென்ஸி? எனக்கு அடிப்படையே புரியலை.”
“பிரிட்டிஷ் இந்தியா மாதிரி சிக்கலான தேசத்தை நீ பார்க்கவே முடியாது பென்னி. இங்கு கடவுளைவிட சக்தி வாய்ந்தது சாதி. சாதி பெருசா கடவுள் பெருசான்னா, இந்தியாவுல சாதிதான் பெருசு என்பார்கள். நான் ஒரே ஒரு உதாரணம் சொல்றேன் கேள். இப்ப இருக்கிற மனநிலையில் உனக்குக் கேட்டுப் புரிஞ்சிக்க முடியுமான்னு தெரியலை, ஆனாலும் கேள். தங்கசேரியில் சமீபத்தில் நடந்த சம்பவம். என்ன கேட்கிறியா பென்னி?”
“சொல்லுங்கள் யுவர் எக்ஸலென்ஸி.”
“நம்பூதிரிகள் தாங்கள் பயன்படுத்துகிற பாதை வழியாக ஐரோப்பியர்கள் யாரையும் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். இதுதான் இங்கு நடைமுறை. சமஸ்தானத்தின் மற்ற சாதிகளுக்கு என்ன விதியோ அதே விதிதான் ஐரோப்பியர்களுக்கும். ஒரு ஏசுசபை பாதிரி, அவர் இந்தியா வந்து ஓராண்டுதான் ஆகியிருந்தது, திருவிதாங்கூருக்கு வந்து நான்கைந்து மாதங்கள்தான் ஆகியிருந்தது, அந்தப் பாதிரியார் ஒரு நம்பூதிரி பிராமணரின் வீட்டை ஒட்டியிருந்த பாதை வழியாக அருகிலிருந்த கடற்கரை கிராமத்தின் தேவாலயத்திற்குப் போயிருக்கிறார். ஒரு நாள் பாதிரியார் சைக்கிளில் சென்றபோது, பிராமணர் எதிரில் பல்லக்கில் வந்திருக்கிறார். பாதிரியார் பிராமணரைப் பொருட்படுத்தாததோடு, சைக்கிளிலிருந்து இறங்காமல் போயிருக்கிறார். அவ்வளவுதான், அந்தப் பிராமணர் தன் ஆசாரமே தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூவிக் கூப்பாடு போட்டு, அன்று முழுக்க நீரில் நின்று ஜபம் செய்துகொண்டிருந்தாராம். அடுத்த நாள் பாதிரியார் குதிரையில் வரும்போது பிராமணர்கள் நான்கைந்து பேர் வழியை மறித்து நின்றிருக்கிறார்கள். கூட்டமாகத் தன்னை நோக்கி வந்தவர்களைப் பார்த்தவுடன் பாதிரியார் குதிரையை நிறுத்தி, இறங்கப் பார்த்திருக்கிறார். பிராமணர்கள் கூச்சலிட்டிருக்கிறார்கள். “துஷ்டா, கீழே இறங்கி, இந்தப் பூமியைத் தீட்டாக்காதே. இந்தப் பாதை வழியாக இனி வரக்கூடாது. சூத்திரர்கள் இந்த வழியாக நடக்க அனுமதியில்லை” என்றார்களாம். ‘நான் சூத்திரன் இல்லையே? பிரிட்டிஷ்காரன்’ என்று சொல்லியிருக்கிறார் பாதிரியார். “நீ மாம்சம் தின்பாய்தானே? நீயும் சூத்திரன்தான். இனி இந்தப் பாதையில் வரக்கூடாது. புரிஞ்சுதா? உயிரோடு இருக்கணும்னா தப்பிச்சு ஓடிப்போ” என்று மிரட்டியிருக்கிறார்கள். ‘நான் தேவாலயத்திற்கு இறை சேவை செய்ய வந்திருக்கிறவன். தேவாலயத்திற்குச் சென்றே ஆக வேண்டும். தேவாலயம் செல்ல இன்னொரு குறுக்கு வழி சொன்னார்கள். அந்த வழியையும் பார்த்தேன். உங்கள் வீடுகளுடைய கழிவு நீர்தேங்கி நாற்றமெடுத்த பாதை அது. என்னால் அவ்வழியாகப் போக முடியாது’ என்று மறுத்துவிட்டு குதிரையில் வேகமாகக் கூட்டத்தைக் கடந்துபோனாராம். கோபத்தின் உச்சிக்குப் போன நம்பூதிரிகள் மாலை பாதிரியார் திரும்பி வரும்வரை காத்திருந்திருக்கிறார்கள்.”
“ஆம், நான்தான் இந்தப் பிரச்னைக்கான மேல்முறையீட்டுக் கடிதத்தை மெட்ராஸ் கவர்னருக்கு அனுப்பினேன்” திவான் ராமய்யங்கார் நினைவுகூர்ந்தார்.
“பிறகு என்ன ஆனது?” பென்னிக்கு வியப்பாக இருந்தது.
“என்ன ஆகும்? பாதிரியார் மாலை திரும்பி வரும்போது கையில் கிடைத்த ஆயுதங்களோடும் உடைந்த தட்டுமுட்டுச் சாமான்களோடும் ஒரு கூட்டமே காத்திருந்தது. பாதிரியார் தலை தெரிந்தவுடன் அவர்மேல் சரமாரியாகக் கல்லெறிந்தது கூட்டம். அவரை இழுத்துப் பிடித்துக் கட்ட புலையர் கூட்டத்தையும் வரவழைத்திருந்தார்கள். ஈழவன் ஒருவன் பாதிரியாரின் கையில் இருந்த பையைப் பிடுங்கிக் கொண்டோடினான். நான்கைந்து பேர் அருகில் இருந்த கோவில் கம்பத்தில் கட்டிப் போட்டார்கள். ஒரு நாள் முழுக்க சோறு தண்ணீர் இல்லாமல் பாதிரியாரைப் பட்டினி போட்டு, மயக்கத்தில் பாதிரியின் தலை தொங்கிய பிறகுதான் நம்பூதிரிகள் அவிழ்த்துவிட்டார்களாம். நம் திவானும் பிராமணர்தான். தமிழ் அய்யங்கார். அவருக்குக் கோபம் வரலாம். இருந்தாலும் உண்மையைச் சொல்லித்தானே ஆகணும். அவர்களைப் பொறுத்தவரை அய்யங்கார்கூட மாற்றுக் குறைவுதான். நம்பூதிரிகள் இரக்கம் என்பதே இல்லாமல் பாதிரியிடம் நடந்துகொண்டார்கள். அந்திசாய அவிழ்த்துவிடப்பட்ட பாதிரியார் தன்னுடைய பையைக் கொடுத்தால்தான் கிளம்புவேன் என்று அடம்பிடித்திருக்கிறார். மீண்டும் அடித்துப் போட்டுவிடுவோம் என்று கூட்டம் மிரட்டியதில் பாதிரியார் அரைமனதாகக் கிளம்பியிருக்கிறார்.”

“காட்டுமிராண்டித்தனமாக இருக்கே? பாதை என்ன அந்தப் பிராமணர் வீட்டுச் சொத்தா?”
“யார் சொத்தையும் தன் சொத்தாக அனுபவித்துக்கொள்ளும் உரிமையைச் சாதி அவருக்குக் கொடுத்திருக்கிறதே, என்ன செய்ய முடியும்? அவமானமும் ஆத்திரமும் அடங்காத பாதிரியார் போலீசுக்குப் போய்ச் சொல்லியிருக்கார். எந்தப் போலீசு விசாரிக்கும்? அப்புறம் பேஷ்கர் திவானிடம் போய்ச் சொல்லியிருக்கிறார். தன்னுடைய பையைக் கண்டுபிடிச்சுக் கொடுப்பதோடு, எந்தக் குற்றமும் செய்யாத தன்னை ஊர்க் கோவிலில் வைத்து அவமானப்படுத்தியவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்று முறையிட்டார். விசாரணை உங்கள் முன்னால்தான் நடந்ததே அய்யங்கார்... சொல்லுங்க என்னாச்சுன்னு?”
“யுவர் எக்ஸலென்ஸி...” திவான் தயங்கினார்.
“என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க அய்யங்கார்.”
“என்ன நடந்துச்சு? திருவிதாங்கூரே ஒரு வாரம் திருவிழா பாக்குற மாதிரி தர்பார் ஹாலுக்கு வந்துடுச்சு. விசாரணையில நம்பூதிரிங்க மேல தப்பு இருக்குன்னு நிரூபணம் ஆனாலும் என்ன செய்ய முடியும்? பத்து ரூபா அபராதம் போட்டு விட்டுட்டோம். பாதிரிக்கு அதிர்ச்சி. என்னைக் கட்டிப்போட்டு அவமானப்படுத்தினவங்களுக்கு உங்க சட்டத்தில இதானா தண்டனைன்னு கத்திட்டு, என்னோட பையைக் கொடுங்கன்னு கேட்டுக்கிட்டே இருந்தார்.”
“பையில் என்ன வச்சிருந்தாரோ முக்கியமா?” வருத்தமாய்ச் சொன்னார் பென்னி.
“பாதிரியாருடைய அம்மா ஆறு வயசில் இறந்துட்டாங்களாம். அவங்க அம்மாவுடன் இருக்கிற ஒரு ஓவியத்தைத்தான் பொக்கிஷமா வச்சிருந்தாராம். அவங்க அம்மா சாகுறதுக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி வரைந்த ஓவியமாம். அம்மா மடியில் உட்கார்ந்திருக்கிற அவரைப் பார்த்தால் குழந்தை ஏசு போலவே இருக்கும் என்று ஓவியத்தைக் காட்டிச் சொல்வாராம். அதற்காகத்தான் அவர் மீண்டும் மீண்டும் தன்னுடைய பையைக் கேட்டிருக்கிறார்.”
“பை கிடைத்ததா?” பென்னி ஆர்வமாய்க் கேட்டார்.
“பை கிடைத்தது. புலையன் ஒருவன் வீட்டுப் பின்னாடி இருந்த குட்டையில் போட்டிருக்கிறார்கள். பத்து நாளில் ஊறிப்போய் விட்ட கான்வாசில் வண்ணங்கள் கலைந்துவிட்டன. வாழ்வின் கனவுகள் கலைந்துபோன சின்னஞ்சிறு குழந்தையின் கனவு, முப்பது வருஷம் கழித்து மீண்டும் கலைந்துபோனது.” துயரம் ததும்பிய குரலில் மேலும் தொடர்ந்தார் ஹானிங்டன்.
“பாவம் பாதிரியார். கடல் கடந்த தேசத்திலிருந்து இந்தத் தேசத்தின் மக்களுக்காகச் சேவை செய்ய வரும் பாதிரியார்களின் துயரங்கள் தனி. அதில் உள்ளூர் மக்களின் தாக்குதல்கள் ஒரு பக்கம். பாதிரியார் கொஞ்சம் விடாப்பிடியானவர். எங்களோடு விஷயத்தை விடவில்லை. மெட்ராஸ் பிரசிடென்சியின் கவர்னருக்கு மனு அனுப்பினார். கவர்னர் விசாரித்துத் தன் முடிவைச் சொல்ல ஆறு மாதமானது. ஆறு மாதமும் பாதிரியார் உணர்ச்சிக் கொந்தளிப்பிலேயே இருந்தார். கவர்னர் கடைசியில் நம்பூதிரிக்கு விதிக்கப்பட்ட தண்டனைத் தொகையை முப்பது ரூபாயாக்கினார். மனிதர்களிடையே பேதம் பார்க்கும் உள்ளூர் மக்களின் வழக்கங்கள் விரைவில் மாற்றிக்கொள்ளப்பட வேண்டும். மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை விதைக்கும் செயல்களைச் செய்யக் கூடாது என்று பிரிட்டிஷ் தரப்பின் அறிவுரை ஒன்றைச் சொல்லி தன் தீர்ப்பை முடித்துக்கொண்டார். பாதிரியாருக்குத் தாங்க முடியாத ஏமாற்றமாகிவிட்டது.”
“யுவர் எக்ஸலென்ஸி, பாதிரியார் என்ன ஆனார்?”
“எல்லாரும் அவர் லண்டனுக்குத் திரும்பிப் போய்விடுவார் என்றுதான் எதிர்பார்த்தார்கள். இரண்டு மாதத்தில் இயல்புக்குத் திரும்பிய பாதிரியார், கழிவுநீர்க் குட்டை இருந்த இடத்தைச் சுத்தம் செய்து, மக்கள் முகம் சுளிக்காமல் சென்று வரும் பாதையாக்கினார். நம்பூதிரிகள் வீட்டுக் கழிவைக் குழாய் வைத்துப் பாதை மாற்றினார். மக்கள் கடந்த ஒரு வருஷமாய் நிம்மதியாய் அந்தப் பாதையில் நடக்கிறாங்க. தன்னுடைய அவமானத்தையே முதலீடாக்கிய தூய ஆத்மா.”
“எக்ஸலென்ட் யுவர் எக்ஸலென்ஸி. வைரம் போன்ற குணம் கொண்ட ஆத்மா” பென்னிக்கு சந்தோஷம் பொங்கியது.
“சுபமாகத்தான் முடிந்திருக்கிறது. பிறகெப்படி இந்தக் கடுதாசி?” குருவில்லா கேட்டார்.
“நல்ல கேள்வி. பாதிரியார் தன்னுடைய அவமானத்தைப் பொருட்படுத்தாது இறை சேவை செய்ய தேவாலயம் செல்வதைப் பிரதானமாக எண்ணினார். பாதிரியின் போதனைகளைக் கேட்டு மக்கள் கிறிஸ்துவினைத் தங்கள் இறைவனாக ஏற்றுக்கொள்வதையும் ஞாயிறு தப்பாமல் தேவாலயம் செல்வதையும் பொறுக்காதவர்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும். தங்கசேரி மக்கள் முழுக்க கிறிஸ்துவத்திற்கு மாறிவிட்டதைப் பொறுக்காமல்தான், தங்கசேரியைச் சமஸ்தானத்திற்கு விட்டுக்கொடுக்கும் கோரிக்கையை வைத்திருப்பார்கள்.”
“இதுதான் காரணமாக இருக்கும்” குருவாயி உறுதியாகச் சொன்னாள்.
“ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னரிடம் ஆலோசனை கேட்டுவிடுவது நல்லதென்று எனக்குத் தோன்றுகிறது” ஹானிங்டன்.
“வேண்டாம் யுவர் எக்ஸலென்ஸி...” பென்னி அலறினார்.
“விஷயம் முழுமையா நம் கைவிட்டுப் போகாமல் இருக்கணும்னா இதுதான் சரியா இருக்கும் பென்னி. நான் ஒரு கடிதமெழுதி கவர்னரின் செக்ரட்டரிக்கு ஆள்மூலம் நேரடியாகக் கொடுத்து நான்கைந்து நாளில் பதில் வாங்கி வரச் சொல்கிறேன்.”
பென்னி திகைத்து நின்றார்.
மதமோ, கடவுளோ, சாதியோ, மரபான நம்பிக்கையோ... எல்லாம் தம்மைக் கட்டுப்படுத்தும் தளைகளே என்றுணர்ந்து அவற்றிலிருந்து விடுவித்துக்கொள்ளும் சுதந்திரம் தரும் பேரின்பத்தை உணரும் மக்கள், எல்லாக் கூராயுதங்களையும் செயலிழக்கச் செய்யும் வல்லமை வாய்ந்தவர்கள் என்பதை உணர்த்திட காலம் காத்திருக்கத் தொடங்கியது.
- பாயும்