மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 35 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

கொடைக்கானலில் என்னுடைய பங்களாவில் பிரிட்டனில் இருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் வந்த மாடுகள் வைத்திருக்கிறேன். காப்பிலியர்களின் காளைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்

கம்பம் ஓடைப்பட்டி மந்தையில் முண்டியடித்துக்கொண்டு நின்றது ஜனக்கூட்டம். கூட்டத்தில் மூச்சுவிடும் சத்தம் மேலெழவில்லை. எல்லோரின் கவனமும் சிறு மண்மேடையில் வைக்கப்பட்டிருந்த கரும்புக் கட்டின்மேல் இருந்தது. திமில்கள் உயர்ந்தெழுந்த காளைகள் தூரத்தில் ஒன்றின் முகவாயை ஒன்றுடன் உரசிக்கொண்டும், கால்களைத் தேய்த்துவிட்டும், உடம்பினை வாலினால் விசிறிவிட்டுக் கொண்டும் இருந்தன. வளைந்த கொம்புகள் இணைந்து, பூமாலையின் தோற்றம் பெற்றிருந்தன.

சாணமிட்டு நன்றாக மெழுகிய தரையில் வெற்றிலை பாக்கு, வாழைப்பழம் எனப் பூஜைக்கான பொருள்களோடு சூடமும் தயார் நிலையில் இருந்தது.

காப்பிலியர்கள் தங்களின் ‘தேவரு ஆவு’ என்ற தம்பிரான் காளையைத் தேர்ந்தெடுப்பதற்காகக் கூடியிருந்தார்கள். காப்பிலியர்களுக்குச் சொத்தே கால்நடைதான். கன்னட தேசத்தில் இருந்து மதுரைக்கு மேற்கே குடிபெயர்ந்தவர்கள் தங்கள் குலதெய்வம் வீரு சிக்கம்மாவோடு, அவரவர் வீடுகளில் இருந்த கன்று காலிகளையும்தான் தங்களுடன் பிடித்துக்கொண்டு வந்தார்கள். 100, 150 மாடுகள் கொண்ட பெரிய மந்தைகளுக்குச் சொந்தக்காரர்களான காப்பிலியர்களுக்கு மேல்மலையும் அதன் புற்களும்தான் ஆதாரம்.

மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் தம்பிரானின் தலைமையில்தான் கிளம்பும். கன்றுகளும் கிடாரிகளும் மேயுமிடத்தில் தம்பிரான்தான் மேற்பார்வை. வேறு காளைகள் நெருங்க முடியாது.

நீரதிகாரம் - 35 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

சென்ற வாரம் மேய்ச்சலுக்குச் சென்ற இடத்தில் வயது முதிர்ந்த தம்பிரான் வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தது. காட்டில் விஷப்பூச்சிகளும் விலங்குகளும் கடவுளின் அவதாரமான தம்பிரானைத் தீண்டியதைக் காப்பிலியர்கள் பார்த்ததும் இல்லை; கேள்விப்பட்டதும் இல்லை. தேவரு ஆவு இறந்ததை அபசகுனமாக எண்ணி, காப்பிலியர்கள் தங்கள் குலத்திற்குக் கெடுதல் ஏதும் வந்துவிடுமோ என்று மனம் சோர்ந்தார்கள்.

தீமை சூழும் முன், என்ன பரிகாரம் செய்வதென்று கவலையுடன் கூடி ஆலோசித்தார்கள். கூட்டத்தில் ஆலோசனை நடக்கவில்லை. கலவரம்தான் நடந்தது. தம்பிரானின் திடீர் மரணத்துக்கு யார் காரணம், என்ன காரணமென்று யோசித்து ஆளாளுக்கு ஒருவர்மேல் ஒருவராகப் பழி சொன்னவர்கள், கடைசியில் லெவிஞ்சே துரைக்கு மாடுகளை விற்ற காப்பிலியனைக் குற்றம் சொன்னார்கள்.

மதுரையில் கலெக்டராக இருந்து ஓய்வுபெற்று, பழனிமலையில் குடியேறிவிட்ட பிரிட்டிஷ் அதிகாரி லெவிஞ்சே, ஆறாண்டுகளுக்கு முன் காப்பிலியர்களிடம், அவர்களின் மாடுகளை விலைக்குக் கேட்டார். எதற்காக என்று அவரிடம் கேட்கத் தயக்கம். அப்படியும் கூட்டத்தில் இருந்த வயசாளி ஒருவர், “எதுக்குன்னு தெரிஞ்சா அதுக்கேத்த மாதிரி கன்னு காலிய கொடுப்போம் துரை” என்று கேட்டிருக்கிறார்.

லெவிஞ்சே, “கொடைக்கானலில் என்னுடைய பங்களாவில் பிரிட்டனில் இருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் வந்த மாடுகள் வைத்திருக்கிறேன். காப்பிலியர்களின் காளைகள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நான் மதுரை கலெக்டராக இருந்தபோது மீனாட்சி கோயில் வாசலில் நடக்கும் மாட்டுத்தாவணிக்குத் தவறாம வருவேன். 3000, 4000 பேர் கூடும் சந்தையில் உங்க மாடுகளுக்குத்தானே விலை அதிகம்? சித்ரா பௌர்ணமி நடக்கிறது என்றால் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதைப் பார்க்க மட்டுமா மக்கள் மதுராவுக்கு வருவாங்க? கோலாகலமா இருக்கும் மாட்டுத்தாவணியைப் பார்க்கவும்தானே வருவாங்க?” என்றார்.

காப்பிலியர்கள் குடியேறிய உடனே, ஊரில் கோயில் இருக்கிறதா என்று பார்க்கிறார்களோ இல்லையோ முதலில், மேய்ச்சல் தரை ஒன்று இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அல்லது மேய்ச்சல் நிலத்துக்கு அடுத்துள்ள இடத்தில் குடிசையைக் கட்டிக்கொள்வார்கள். தம்பிரான் தோப்பெனப்படும் மேய்ச்சல் தரையில், மாடுகளுக்குக் கட்டுப்பட்டதுபோல் ஈரம் வற்றவே வற்றாது. தம்பிரான் தோட்டத்துக்குச் செல்ல மாட்டைப் பழக்கிவிட்டால் போதும், மாடுகளுக்கு ஓராள் புல்லறுத்துக் கொண்டு வைப்பதோ, மேய்ச்சலுக்குக் கூட்டிக்கொண்டு செல்லும் கட்டாயமோ இல்லை. கொட்டகையில் குழுதாடி வைத்துத் தண்ணீர் காட்ட வேண்டியதும் இல்லை. தம்பிரான் தோப்பில் இருந்து மாடுகள் மேய்ச்சல் முடிந்து தானாகத் திரும்பிவிடும்.

“அதெல்லாம் சரி துரை, நீங்க உங்க தேசத்து மாடு வச்சிருக்கீங்கன்னு சொன்னீங்க? எங்க காளைங்களைக் கூட்டிக்கிட்டுப் போய்?”

“உங்களோட காளைகளையும் எங்களோட மாடுகளையும் சேர்த்துப் புதிய ரக மாடுகளைப் பிறக்க வைக்கப் போறேன்.”

கோபத்துடன் எழுந்த வயசாளியொருவர், “துரை, உங்க ஆராய்ச்சியெல்லாம் உங்களுக்குள்ள வச்சிக்கோங்க. மாடு எங்களோட சம்பத்து மட்டுமல்ல, சாமி. ஊரை விட்டுப் பிழைக்கக் கிளம்பினா ஒவ்வொரு சாதியும் சாமியையும், வீட்ல இருக்க நகைநட்டுங்களையும்தான் எடுத்துக்கிட்டு வரும். நாங்க மாடுகளைத்தான் எங்க சம்பத்தா கூப்பிட்டுக்கிட்டு வருவோம். ஒரே ஒரு கன்னுக்குட்டி இருந்தாப் போதும், ஒரு மந்தையை உருவாக்கிடுவோம். நீங்க சொல்றதெல்லாம் சாமி குத்தம். என்னால ஏத்துக்கிட முடியாது” என்று சொல்லி, லெவிஞ்சேவின் பதிலுக்குக் காத்திருக்காமல் கிளம்பினார்.

பெரிய அதிகாரி. கலெக்டராக இருந்தவர். என்ன செய்வாரோ என்று கூட்டம் நடுங்கியது. லெவிஞ்சே மக்களின் விருப்பமின்மை அறிந்தவுடன், பேச்சை மாற்றினார்.

“சரி வேண்டாம். இப்போதைக்கு எனக்கு விலைக்குத் தாருங்கள், நான் பழனிமலையில் வளர்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லி, ஐந்தாறு மாடுகளைக் கன்றுகளுடன் வாங்கினார். பழனிமலையும் கம்பம் பகுதியின் மேல்மலையும் சீதோஷ்ணத்தில் பெரிய அளவுக்கு மாறாததால் மாடுகள் நன்றாகவே இருந்தன. மலைமேல் புற்களை மட்டும் மேய்ந்து காத்திரமாக வளர்ந்தன. சென்ற வாரம் பழனிமலையில் இருந்து, காப்பித் தோட்டத்திற்கு வேலைக்கு வந்தவர்கள் மூலமாக, லெவிஞ்சே இறந்துபோன செய்தியைக் கேள்விப்பட்டார்கள். இவர்களிடம் வாங்கிச் சென்ற மாடுகள் பெருகி, இருபதுக்கும் மேலாகி இருக்கின்றன. இங்கிலீஷ் காளையுடன் கலப்பு செய்த காப்பிலியர்களின் பசு ஐந்தாறு ஆழாக்குப் பால் கறப்பதாகச் சொன்னார்கள். இவர்களின் பசு கள்ளிச் சொட்டுப்போல் ஒரு ஆழாக்குப் பால் கறந்தாலே அரிது. பசுவிடம் பால் பீய்ச்சும் வழக்கமே காப்பிலியர்களிடம் கிடையாது. கன்றுக்கு எவ்வளவு பால் தேவையோ அவ்வளவு பால் கட்டினால் போதுமென்ற அவர்கள் வேண்டுதல்தான் குறைவான பாலூற வைக்கிறதோ என்னவோ! ஐந்தாறு ஆழாக்குப் பால் கறக்க பசுவின் ரத்தத்தை உறிஞ்ச, கலப்பு நடந்தது என்று கேள்விப்பட்ட ஒரு வாரத்திற்குள் மேயச் சென்ற தம்பிரான், மலைமேல் இறந்து கிடந்தது தெய்வக்குத்தம் என்றே ஜனங்கள் நம்பின.

இறந்த தம்பிரானைக் கம்பு கட்டி, தோளில் சுமந்து மலைமேல் இருந்து ஆறு பேர் தூக்கி வந்தார்கள். ஆறு பேர் சேர்ந்தும் தம்பிரானின் சுமையைத் தாங்க முடியவில்லை. ஊர் மந்தைக்குத் தூக்கி வந்து, பள்ளமெடுத்து, இறுதிச் சடங்குகள் செய்து அடக்கம் செய்தார்கள். சக்கிலியரின் கத்தி, இறந்த மாடுகளின் தோலைத் தொடுவதற்கும் காப்பிலியர்கள் அனுமதிப்பதில்லை.

தம்பிரான்தான் மந்தைக்குத் தலைவன். அதுதான் ஒட்டுமொத்த மந்தையையும் வழிநடத்தி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லும். மலைமேல் மாடுகளை மேய்ச்சலுக்கு எப்போதும் பத்திவிட்டுவிட முடியாது. கடும் வெயிலிலும், பனிக்காலத்திலும், காட்டில் காய்ச்சல் பரவும் காலங்களிலும் மலைக்கு மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. காட்டில் காய்ச்சல் பரவும் காலங்களில் மலைக்குச் சென்றால் கால்நடைகள் நோயில் செத்து விழும். தம்பிரானுக்குத்தான் காடு பற்றி நன்றாகத் தெரியும் என்பதால் மேய்ச்சலுக்குச் செல்லும் முடிவைத் தம்பிரானிடம் கொடுப்பார்கள். கடும் வெயில் காலத்தில் மேய்ச்சலுக்கு மலைக்குப் போகலாமா வேண்டாமா என்று தம்பிரானிடம்தான் கேட்பார்கள். தம்பிரான் தன் முன்னால் வைக்கும் சொம்பில் இருக்கும் பாலில் வாய் வைத்தால்தான் மலைமேல் மேய்ச்சலுக்குச் செல்ல உத்தரவு தருகிறது என்று பொருள். அனுமதி கொடுத்த மகிழ்வில் தம்பிரான் துள்ளலும் குதியாட்டமுமாக மலையேற, பின்னால் மாடுகள் அணிவகுக்கும்.

தம்பிரான் தன்னைக் காவல் வீரனாக, கடவுளாக எண்ணிக்கொள்ளுமோ என்னவோ, மந்தை தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உரிமையில் சீறிக்கொண்டுதான் நடக்கும். காட்டில் மிருகங்களின் நடமாட்டம் தெரிந்தாலோ, விஷப்பூச்சிகள் இருந்தாலோ குரலெடுத்துக் கத்தி எச்சரிக்கை செய்யும்.

தம்பிரான் இறந்தவுடன், தலைவன் இல்லாத கூட்டமாகத் தத்தளித்த மந்தைக்கு அடுத்த தலைவனைத் தேர்ந்தெடுக்க நல்ல நாள் குறித்தார்கள். தங்கள் சாதி சனங்களைக் கூட்டியதோடு, மந்தையின் எல்லாக் காளை மாடுகளையும் ஓட்டி வந்து நிற்க வைத்தார்கள்.

தெய்வத்தை வேண்டிக்கொண்டு, பூசைகள் செய்து, கரும்புக் கட்டொன்றை மையத்தில் வைத்துக் காத்திருந்தார்கள். எந்தக் காளை முதலில் வந்து கரும்பின் தோகையைப் பிடித்திழுக்கிறதோ, அந்தக் காளைதான் தம்பிரான் காளை.

காப்பிலியர்கள் கூட்டத்தை வழிநடத்தும் துணிவுகொண்ட தலைவன் வர வேண்டுமே என்று மனமுருகி வேண்டி நின்றார்கள். ஓரத்தில் தம்பிரான் காளையின் கொம்புக்கு வர்ணம் தீட்டி, பூமாலை அணிவிக்க, அதன் பொறுப்பாளன், தம்பிரானின் கோபாலன் (கீதாரிகளுக்கு கோபாலன், கண்ணன் என்பதுதான் காப்பிலியர்கள் வைத்திருக்கும் பொதுப் பெயர்) தயாராக நின்றிருந்தான். தம்பிரானின் மரியாதை அவனுக்கும் உண்டு.

வெண்சாம்பல் நிறத்தில், உயர்ந்த திமிலும் வளைந்த கொம்புகளும் கொண்ட காளையொன்று முதலில் அடியெடுத்து வைத்தது. பிராயத்தைத் தொடப்போகும் இளமையின் மினுமினுப்பு அதன் உடலில் இருந்தது. இடமும் வலமுமாக நின்ற காளைகளைப் பின்னுக்குத் தள்ளி, மண்ணை முகர்ந்த படியே முன்னோக்கி வந்த காளை, பூசை செய்திருந்த இடத்தருகே வந்தவுடன் சிறு துள்ளலில் பாய்ந்து கரும்புக் கட்டில் மேலெழும்பி இருந்த நீண்ட தோகையை உருவி இழுத்தது. கூட்டம் ஆர்ப்பரித்தது. கீதாரி ஓடிச்சென்று காளையை அணைத்துக்கொண்டு, “தேவுரு ஆவு” என்று அதன் திமிலில் முத்தமிட்டான். கடவுளின் அவதாரமான தம்பிரானுக்கு நந்தகுமார சாமி என்று பெயரிட்டு, கற்பூர ஆரத்தி காண்பித்தனர். தயாராக இருந்த வண்ணத்தை எடுத்துக் கொம்புகளுக்குத் தீட்டினர். விதவிதமான காட்டுப் பூக்களினால் தொடுக்கப்பட்ட பூமாலையைக் கன்றுக்கு அணிவித்தனர். தங்களை அணுகிய தீமைகள் களைந்தொழியட்டும் என்று ஒவ்வொருவருக்குள்ளும் பிரார்த்தனை பெருகியது.

காப்பிலியர்கள் தம்பிரான் காளையைத் தேர்வு செய்து முடிக்கும் வேளையில், ஐந்தாறு குதிரைகளும் கோச் வண்டி ஒன்றும், நடந்து வருபவர்களுமாகச் சத்தம் உண்டாக்கி மந்தையை அணுகினர்.

வருவது யாரென்று தெரியாமல், வெள்ளைக்கார துரை ஒருவரைப் பார்த்து கூட்டம் திகைத்து நின்றது.

குதிரையில் வந்தவர்கள் முன்னுக்கு வந்து, குதிரையில் இருந்து இறங்கி, உடனடியாக அங்கிருந்த கல்லாசனத்தைத் தூசி தட்டி, தயார் செய்தார்கள். ஆசனத்தின் அருகில் வந்து நின்ற கோச்சில் இருந்து மதுரை கலெக்ட்ரேட் ஹெட் அசிஸ்டென்ட் ராபர்ட் இறங்கினார்.

பெரும்பாலும் ஹெட் அசிஸ்டென்ட்டாக உள்ளூர் ஆட்களை நியமிப்பதுதான் வழக்கமென்றாலும், பெரியாறு அணைத் திட்டம் வரவிருக்கிறது என்றவுடன் அவசர அவசியமான வேலைகள் நடைபெற வேண்டிய இடங்களில் பிரிட்டிஷாரையே நியமித்தார்கள். மாவட்ட நிர்வாகம் பிரிட்டிஷாரை அதிகம் நம்பியது. மாவட்டத்தின் பப்ளிக் வொர்க்ஸ் மெட்ராஸ் கவர்னரின் கண்காணிப்பிற்குள் வந்தது. கலெக்டரும் எஸ்.பி-யும் சின்னச் சின்ன விஷயங்களையும் கண்காணித்தார்கள்.

``எல்லாம் அப்டியப்டியே ஒக்காருங்க…” சிப்பந்தி கூட்டத்தை அமைதிப்படுத்தினான்.

கூட்டம் மிரண்டது. திடீரென்று இத்தனை பேர் தங்களைத் தேடி வந்திருப்பதன் காரணம் என்னவாக இருக்கும் என்று ஆளாளுக்குப் பேசினார்கள்.

சத்தம் குறையாததைக் கவனித்த சிப்பந்தி பக்கத்தில் கிடந்த கல்லின்மீது ஏறி நின்று கூட்டத்தை அமைதிப்படுத்தினான். சிப்பந்தியின் சத்தம் பொறுக்காத ஹெட் அசிஸ்டென்ட் கல்லின்மேல் ஏறி நின்றார். கொச்சையான தமிழில் பேச ஆரம்பித்தார். ராபர்ட் பேசத் தொடங்கியவுடன் கூட்டம் அமைதியானது.

“பஞ்ச காலத்துல நீங்கல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டீங்க, நினைவிருக்கா?”

அமைதியாகப் பார்த்தார்கள்.

“கடிக்கிறதுக்குப் பச்சைப் புல்லே இல்லாம ஒங்க மாடுங்க எத்தினி செத்துப்போச்சு? நீங்களாவது பரவாயில்லை. மலையில இருக்க புல், பூண்டுன்னு எதையோ மாடுங்களுக்குக் கொடுத்து, காப்பாத்திட்டீங்க. பழனியில தாது வருஷப் பஞ்சம் முடிஞ்சப்ப ஊரில் ஒரு மாடு, ஆடு இல்லை. எல்லாம் செத்து விழுந்துடுச்சி. பஞ்சம் ஒரு பக்கம். கோமாரி, காலரான்னு தொற்று நோய்க ஒரு பக்கம். இப்பத்தான் கொஞ்ச கொஞ்சமா ஜனங்க மீண்டு வர்றாங்க. இனிமே பஞ்சம், வறட்சின்னு வராம இருக்க என்ன வழின்னு சர்க்கார் யோசிச்சுதான் பெரியாத்துத் தண்ணிய இங்க இருக்க வைரவனாத்தில விடப்போறாங்க. வைரவனாத்துத் தண்ணியும் சுருளி ஆத்துத் தண்ணியும் வைகையில் சேர்ந்து, வைகையில் இருந்து மேலூர் போய், ராம்நாடு போவப்போவுது.”

துரை சொல்வது நல்ல செய்தியாக இருந்தாலும் இதையெல்லாம் தங்களைத் தேடி வந்து ஏன் சொல்லுகிறார் என்று புரியாமல் கூட்டம் விழித்தது.

“மதுரா கலெக்டர் எதுக்கு என்னை அனுப்பியிருக்கார்னா…”

‘அதைச் சொல்லு துரை…’ என்பதுபோல் மலர்ச்சி காட்டினர்.

“மலைமேல டேம் வேலை ஆரம்பிக்கப் போறாங்க. ரெண்டே ரெண்டு வருஷந்தான், பெரியாத்துத் தண்ணி உங்க ஊர் வழியா ராம்நாடு கண்மாய் வரைக்கும் ஓடிடும்.”

கூட்டம் ஆர்ப்பரித்தது. பெரியாற்றின் தண்ணீர் வரப்போகிறது, வரப்போகிறது என்று மூன்று தலைமுறையாகக் கம்பத்தில் பேச்சிருக்கிறது.

“நிஜமாவே வந்துடுமா துரை? என் அப்பாரு சாவும்போது, என் பேரன் காலத்துக்குள்ளயாவது இந்த ஊர் ஜனங்க பெரியாத்துத் தண்ணியைக் குடிக்கணும்டேன்னு கடேசி வார்த்தை சொன்னார்.” வெற்றிலை குதப்பியவாறு குழறிச் சொன்னார் பெரியவர்.

“வருது... வருது… ட்ருவாங்கூர் ராஜா கிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. டேம் கட்ட வேலை ஆரம்பிச்சுட்டாங்க. உங்களுக்குத் தண்ணி ஒரு போகத்துக்கே பத்தாம இருந்தது. இனிமே நீங்கல்லாம் ரெண்டு போகம் விவசாயம் செய்யலாம். வேலை இல்லைன்னு சேவல் சண்டை நடத்துறது, வருஷம் முழுக்க ஜல்லிக்கட்டு மாட்டைப் பத்திக்கிட்டுப் பொழுது போக்குறது, மலைமேல சொட்டாங்கல் விளையாடுறது எல்லாத்தையும் விட்டுட்டு, நிலத்துல வேலை செய்யணும்.”

“என்ன செய்யணும்னு சொல்லுங்க துரை… செஞ்சிடுறோம். பெரியாத்துத் தண்ணி வருதுன்னா சும்மாவா?”

“கம்பத்துல இருந்து மேலூர் வரைக்கும் ஒவ்வொரு இடத்துக்கும் ஒவ்வொரு வேலை இருக்கு. உங்க வேலை என்னன்னா...”

கூட்டத்திற்கு ஆர்வம் அதிகமானது.

“நீங்க எப்பவும் செய்யுற வேலைதான்.”

“சொல்லப்பு…” குரல் தூரத்தில் இருந்தது.

“என்ன செய்வீங்களோ, எப்படிச் செய்வீங்களோ தெரியாது, நிலத்தை உழுறதுக்கு மாடுகளைச் சேர்த்துடணும். காளைகளை விட்டுக் கன்னு போட வைப்பீங்களோ, இல்ல, மத்த ஊர்ல இருக்க உங்க கொடிவழி சொந்தக்காரங்க கிட்ட போய் மாடு பிடிச்சிக்கிட்டு வந்து வளப்பீங்களோ... இருக்கிற நிலத்தை உழுறதுக்குப் பத்து மாடு வேணும்னா, இப்போதைக்கு இரண்டு மாடு கணக்குக்குத்தான் இருக்கு. தண்ணி வந்த பிறகு, உழுறதுக்கு மாடு இல்லைன்னா, நிலத்தைக் கரம்பா போட்டு வைக்க முடியாதே? தண்ணி நம்ம எல்லையைத் தொடுவதற்கு முன்னால், வாய்க்கால் வெட்டுறது, கால்வாயைத் தூர் வாருவது எல்லாம் செய்யணும்னு சொல்லியிருக்காங்க. நீங்க நிலத்தை உழுவதற்கு மாடுகளைப் பெருக்கிடணும்.”

“மாட்டைப் பெருக்கிறதுன்னா? நாம ஈத்த ஈனுறதா?” ஒரு பெண் சன்னமான குரலில் கேட்க, “அஞ்சு மாசத்துக்கு ஒரு பிள்ளை பெத்துக்கணும்னாலும் என் மாமன் சரின்னுதானே சொல்லப்போறார், உனக்கென்ன?” என்றாள் அருகில் இருந்தவள்.

“ஆமாம் பின்ன, மாட்டைப் பெருக்குன்னா என்னா அர்த்தம்?”

துரை அடுத்து பேசியது இவர்களுக்குப் பதில் சொல்வது போலிருந்தது.

“உங்க சாதி சனம் கோயம்புத்தூர், திருப்பூர், மைசூர்லல்லாம் இருக்காங்க. எங்கெங்க மாடுக இருக்கோ, போய் வாங்கிட்டு வாங்க.”

“துட்டு…”

“சர்க்காரே வீட்டுக்கு ஒருத்தருக்கு மாடு கன்னு வாங்கித் தரப்போவுது. ரெண்டு வருஷத்துல ஒவ்வொரு வீட்லயும் நாலா அஞ்சா பெருக்கி இருக்கணும்.”

‘வீட்டுக்கு ஒரு மாடு கன்று வாங்கித் தரப்போகிறார்கள், புதுத் தம்பிரான் வந்த நேரம், அதிர்ஷ்டம்தான். மந்தை பெருக்கப்போகுது…’ என்று கூடியிருந்தவர்களிடையே உற்சாகம் பெருகியது.

“காளை மாடுங்களாக இருந்தா நல்லது…”

“நாங்க என்ன திருமங்கலத்துக்காரனுங்களா? பசு மாட்டை வச்சு நிலத்தை உழுறதுக்கு?” ஏளனம் பேசினான் கொஞ்ச வயதுக்காரன் ஒருத்தன்.

“பசு மாடுன்னு கேலி பேசாதேடா… கரிசக் காட்டு மண்ண உழுது போடுறதுன்னா சும்மாவா? களப்பை அத்தன லேசுல உள்ள இறங்காது. கரிச மண்ண உழுதுபோடுதுன்னா எவ்ளோ போட்ஸான பசுவா இருக்கணும் பார்த்துக்கோ.”

நீரதிகாரம் - 35 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“சத்தத்தைக் கொறைங்கப்பா. கூட்டத்துல ஆளாளுக்குப் பேசாதீங்க. துரை பேசி முடிக்கட்டும்.” எங்கிருந்தோ ஓடிவந்து கூட்டத்தின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்துக்கொண்ட கிராம கர்ணம் குரலை உயர்த்தினார்.

“துரை, ஒரே ஒரு தயவு பண்ணணும் துரை” இறைஞ்சும் குரலில் கேட்டு, தள்ளாடி எழுந்து நின்றார் கீதாரி ஒருவர்.

“என்ன செய்யணும், சொல்லுங்க..?”

“மலைமேல மேய்ச்சலுக்குப் போற ஆடு மாடுக தலையை எண்ணி அதுக்கு வரி போடுறாங்க. வரி கட்டலைன்னா கன்னு காலிகள ஓட்டிக்கிட்டுப் போயிடுறாங்க. நீங்க வீட்டுக்கொரு மாடு கன்னு கொடுக்கிறேன்னு சொல்றீங்க. மேய்ச்சலுக்குக்கூட கூழோ கஞ்சியோ குடிச்சிட்டு ஓட்டிக்கிட்டுப் போயிடுவோம். எங்களால வரி கட்ட முடியாது துரை.”

“சர்க்கார் கொடுக்கிற மாடுகளுக்கு வரி கட்ட வேண்டியதில்லை…”

“சர்க்கார் மாட்டை வளக்கிறவங்களுக்கும் வரியை ரத்து பண்ணுனா உபகாரமா இருக்குமே துரை…” சட்டென்று பெரியவர் கேட்டவுடன் என்ன பதில் சொல்வதென்று ஹெட் அசிஸ்டென்ட் சில நிமிடங்கள் நிதானித்தார்.

“நானே அதை முடிவு செய்ய முடியாது. பேஷ்குஷ் கலெக்டரும் டிஸ்ட்ரிக் கலெக்டரும்தான் முடிவு செய்வாங்க. நீங்க கேட்கிற கோரிக்கையை ஏத்துக்கிற சூழல் இருக்குன்னு நினைக்கிறேன்… பார்க்கலாம்” என்று சொல்லி, எல்லாரையும் பார்த்துக் கும்பிட்டுவிட்டு கோச் வண்டியில் ஏறினார் ராபர்ட்.

மாமதுரை, பேரியாற்றின் பெருக்குக்காகக் காத்திருக்கிறது.

கி.பி.1790ஆம் ஆண்டு மதுரையைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி, நவாபுகளிடமிருந்து வரிவசூலைச் செய்வதற்காக மெக்லாய்ட் என்றொரு கலெக்டரை நியமித்தது. நவாபுகளின் அமில்தாரர்களிடம் வரிவசூல் செய்வது கடினமாவதை உணர்ந்த கம்பெனி, மதுரையைத் தனி மாவட்டமாக்கி, அதன் முதல் கலெக்டராக ஜார்ஜ் பாரீஷை கி.பி.1803ஆம் ஆண்டு நியமித்தது. ஜார்ஜ் பாரீஷ், மதுரை என்னும் வரலாற்று நகரம் வீழ்ச்சியின் இருண்மைக்குள் சிக்கியிருப்பதை உணர்ந்தார்.

மதுரையின் ஆவணங்களைப் புரட்டினார். பஞ்சம், வறட்சி, வெள்ளம், காலரா, பிளேக் என மதுரையின் முந்தைய நூற்றாண்டு அழிவுச் செய்திகளால் நிரம்பியிருந்ததைச் சொல்லின அவர் கையிலிருந்த ஆவணங்கள். அரைகுறைச் செல்வத்தையும் அமைதியையும் காளையார்கோவில் போரை முடித்து வைத்து, துரோகத்தின் ஆசனத்தில் அமர்ந்திருந்த உள்ளூர் ஆட்சியாளர்கள் மொத்தமாக விலை பேசிவிட்டார்கள்.

மதுரையின் நடுநாயகமாக மீனாட்சி இருக்கிறாள். மீனாட்சி நகர்வலம் வர சுற்றி நான்கு வீதிகள். வீதிகளைச் சுற்றிக் கோட்டை. கோட்டைமீது கொத்தளங்கள். கொத்தளத்தின்மேல் பாதுகாப்பு வீரர்கள். கோட்டைக்குள்ளே குடிகள். குடிகள் உழுவதற்கு நிலங்கள். எல்லாம் இருந்தன மதுரையை வளமாக்க வற்றாத நதியில்லா குறை மட்டும்தான். மேல்மலையின் சிற்றாறுகளின் நீர் வாங்கி, பெருக்கெடுக்கும் வைகையில் வருஷத்துக்குப் பத்து நாள் வெள்ளம் பெருகினாலே அதிகம்.

நீரின்றி தரிசாகப் போன நிலங்களுக்கு உயிர்கொடுக்க நினைத்தார் பாரீஷ். ராமநாதபுரத்தின் பிரதானி முத்திருளப்ப பிள்ளை முயன்றதாகச் சொல்லப்பட்ட பெரியாற்றை வைகையில் இணைக்கும் திட்டத்தினை ஆய்வு செய்ய மேல்மலைக்குச் சென்ற முதல் ஆட்சியாளர் ஜார்ஜ் பாரீஷ். மீனாட்சி கோயிலின் நிலங்களான ‘சிப்பந்தி பொறுப்பு’ நிலங்களை வைத்திருந்தவர்களை அழைத்து, மாவட்டத்தில் உள்ள நிலங்களின் பின்புலங்களைக் கேட்டறிந்தார். சர்க்கார் நிலம், ஜீவதானம், சத்திரம், பாளையம், இனாம், அரைக்கட்டளை எனப் பன்னிரண்டு வகையான நிலங்கள். இரண்டு போகம் விளையும் நிலமென்று சர்க்கார் நிலங்கள் மட்டும்தான்.

மதுரைக்கு வேண்டியது வருஷத்திற்கு ஐந்தாறு மாதமாவது நீர் நிலைகளை நிரப்பும் ஆறு. உண்மையோ கட்டுக்கதையோ, தன் காதுக்கு வந்த செய்தியைப் பிடித்துக்கொண்ட பாரீஷ் மேல்மலைக்கு ஏறினார். பேரியாறு உற்பத்தியாகும் இடத்தையும், மேற்கு நோக்கிப் புரண்டோடும் அதன் வேகத்தையும் பார்த்த பாரீஷுக்கு உற்சாகம் பிறந்தது. `தண்ணீர், தண்ணீர்... எத்தனை வெள்ளம்’ என்று வியந்த பாரீஷ், பேரியாற்றின் தண்ணீர் வைகையில் கலந்துவிட்டால், குறைந்தது பத்து மாதத்திற்காவது நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கும் என்று கணக்கிட்டார்.

பாரீஷின் கணக்கைத் தப்புக்கணக்காகக் காலம் முயன்றது. அடர்ந்த காட்டில், பாரீஷுக்குக் காய்ச்சல் கண்டது. நினைவிழந்து கிடந்தவரை, உடன் சென்றவர்கள் அவநம்பிக்கையுடன் தூளி கட்டி மலையில் இருந்து இறக்கி, அங்கிருந்து மதுரைக்குத் தூக்கி வந்தார்கள். மருத்துவம் பார்த்து, கொஞ்சம் நினைவு திரும்பியவுடன் பாரீஷ், மதுரை மாவட்டத்தின் இன்ஜினீயர் கேப்டன் கால்டுவெல்லை அனுப்பினார். மலைமேல் சென்ற கால்டுவெல், “ஒருபோதும் சாத்தியமாகவே முடியாத திட்டம்” என்று அறிக்கை கொடுத்தார். கலெக்டரின் நல்லெண்ணத்தைவிட, அணை கட்டப்போகும் இன்ஜினீயரின் கருத்தை ஏற்க வேண்டிய நிலையில் இருந்த கம்பெனி, பெரியாற்று அணைத் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. பதினாறு ஆண்டுகள் மதுரையின் புகழ்மிகு கலெக்டராக இருந்த ரோஸ் பீட்டரின் கவனத்தையும் பெரியாறு அணை கவரவில்லை. பிறகு வந்த பிளாக்பெர்ன்னும் முயலவில்லை.

கி.பி.1863இல் மேஜர் பேய்ன், 1867இல் மேஜர் ரீவ்ஸ், 1872இல் ஸ்மித், இப்போது பென்னி குக் எனத் தொழில்நுட்பத்தையும் மனிதத் துயர் துடைக்கும் மாண்பையும் இணைத்துப் பெற்ற நல்லுள்ளங்கள் பேரியாற்றை மதுரைக்குக் கொண்டு வர முயன்றார்கள். முந்தையவர்கள் அத்தனை பேரின் ஆலோசனைகளையும் தவறுகளையும் சரிசெய்து, புதிய திட்டத்துடன் பிரவாகமெடுக்கும் பேரியாற்றை மதுரைக்குத் திசை திருப்பப் போகிறார் ராயல் இன்ஜினீயர் பென்னி குக். பஞ்சமென்று வந்தால் ஐந்து லட்சம், பத்து லட்சம் மக்களைச் சாகக் கொடுத்து, ஐம்பதாயிரம், ஒரு லட்சம் பேரை பாம்பனிலும் மண்டபத்திலும் நீண்ட வரிசையில் காத்திருக்கச் செய்த மதுரையின் குடிகளை அமைதிப்படுத்த பேரியாறு வரப்போகிறது.

பல நூறு ஆண்டுகளாக மதுரையின் ஆட்சியாளர்கள் உருவாக்கிய நீர்நிலைகள் நீர்வரத்து குறைந்து மண்மூடிக் கிடந்தன. அரசர்கள் கண்மாய்களைக் கட்டி, வாய்க்கால்களை வெட்டி வைத்திருந்தாலும் மாமதுரை விரிவடைந்த அளவு நீர் நிலைகள் பெருகவில்லை. மனிதத் தேவை பெருகுவது முதலில் நீரில் இருந்துதானே?

இயற்கையிலேயே குளமோ, குட்டையோ உருவாக பேராறு இல்லாத இயலாமையில் தவிக்கும் மாமதுரையின் நூற்றாண்டுத் தாகம் தணிக்கப் பேராறு பெருக்கெடுக்க இருக்கிறது.

பேரியாறு ஒன்றும் பூமாலை அல்லவே, தலை குனிந்து ஏற்றுக்கொள்வதற்கு. பெருக்கெடுக்கும் ஆழியல்லவா அவள்?

களிற்றின் ஒரு கவளம் போல், மாமதுரையை அள்ளி உண்ட கடல்கோள்களின் துயர நினைவழித்து, தன்னைக் காக்க ஆழியெனத் திரண்டு வரும் மேல்மலையின் நீர் அரசியை வரவேற்கத் தயாராகிறது மாமதுரை.

- பாயும்