மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 4

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

தீ அலையாமல் இருக்க, காற்றுக்கு எதிர்த் திசை திரும்பி நடந்த தேவந்தி, கோயிலின் வடகிழக்கிலிருந்த வேங்கை மரத்தில் தாவி ஏறினாள்.

கருவறையின் இருட்டை விரட்ட இரண்டு கல்விளக்குகள் முயன்று தோற்றன. கல்விளக்கின் சிற்றொளி, கண்ணகி அம்மையின் முன் நெற்றியில் சுடர, முகம் கருமை கலந்த மஞ்சளொளியில் மின்னியது.

தெய்வங்களின் இதழ்க் கடையோரம் விகசித்து நிற்கும் புன்னகை, கண்ணகி அம்மையிடம் இருந்ததில்லை. மனிதத் துயரங்களை அனுபவிக்காத தெய்வங்களின் முகத்திற்கே உரியது விகசிக்கும் புன்னகை. கண்ணகி, தெய்வமான பிறகும் அவளின் இதழோரம் கசிந்து நிற்கிறது துயரத்தின் கசப்பு.

குவித்த கைகள் விலகாமல், அம்மையின் முகத்தைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்த தேவந்தியின் கண்களில் நீர் கசிந்தது. நீரோடிப் பாசி பிடித்து, பாசிப்பச்சையில் நீர் கோத்துக் கோத்து மினுக்கும் பாறையின் கருமைபோல் தேவந்தியின் கன்னங்கள் மின்னின.

“இன்னும் உனக்கு என்ன ஊழ் மிஞ்சியிருக்கிறது என் அம்மையே? செல்வக் குடியில் பிறந்து, செல்வக்குடியில் வாழ்ந்து, கட்டியவனின் ஊழ்வினை உன்னை நிர்க்கதியாய் அலையவிட்டது. காடு, மலையெல்லாம் அலைந்து, கடைசியில் இங்கு வந்து சேர்ந்தாய். உன் கொங்கைகளில் பற்றிய நெருப்பு அணைந்து, செடி கொடிகள் தழைந்து, குடிகள் செழித்துவிட்டன. உனக்குள் மட்டும் இன்னும் அணையாமல் அந்த நெருப்பு இருப்பதை நானறிவேன். ஒவ்வொரு நாளும், உனக்குத் திருநீராட்டுச் செய்யும்போது, கல்லின் குளிர்ச்சியை மீறி, உன் கொங்கைகள் நெருப்புக் கங்குகளாய் என் விரல்களைச் சுடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். தீங்கறியாப் பத்தினிப் பெண்ணின் கண்ணீர் எத்தனை தலைமுறை கடந்து அணையும்? உன்னைச் சுட்டெரிக்கும் நெருப்புதான் உன் இதழ்ச் சிரிப்பை மறைக்கிறது. உன்னைச் செதுக்கிய சிற்பியின் உளி உன்னிடம் தோற்றுவிட்டது.”

தேவந்தியின் மனத்திற்குள், சிந்தனைகள் இளம் ஆல விழுதுகள்போல் ஆடின.

வெளியில் பெருஞ்சத்தம் கேட்டது. மனச் சஞ்சலத்திலும் அவள் பதற்றம் கொள்ளவில்லை.

என்ன சத்தமென்று கண்களைக் குவித்து, காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டாள்.

கோயிலின் கற்சுவரை மோதிச் சிதைக்கும் சத்தம். சீரான ஒலியல்ல. வேகமும் ஒழுங்கின்மையும் அச்சத்தத்தில் இருந்தன.

இன்னும் கவனம் குவித்துச் சத்தத்தைக் கேட்ட தேவந்தி, சட்டென்று எழுந்தாள்.

கருவறையை விட்டு அம்புபோல் பாய்ந்து வெளியேறினாள்.

நீரதிகாரம் - 4

கறுத்த சிறிய மலை கால் முளைத்து எழுந்து நின்று சுவரில் மோதிக்கொள்வதுபோல், யானையொன்று கோயிலின் கற்சுவரில் மோதிக்கொண்டிருந்தது.

ஐந்தாறு மாதங்களுக்குமுன், யானைகள் கூட்டமாய் வந்து மோதியதில், வடபுறத்துச் சுவரின் கற்கள் சரிந்திருந்தன. சரிந்திருந்த சுவரின் இடைவெளிகளில் நீட்டியிருந்த கற்களின் கூர்மையில் தன் நெற்றிக் கும்பத்தால் முட்டித்தள்ளியது மலையனைய யானை.

காட்டுக்குள் தனித்த யானை அபாயமென்பதைத் தேவந்தி நன்கறிவாள்.

யானை, மனித வாசத்தை முகரும்முன் பின்னகர்ந்த தேவந்தி, மீண்டும் கோயிலுக்குள் ஓடினாள். அவள் உயரத்திற்கு இருந்த மூங்கில் கழியொன்றை எடுத்தாள். அதன் நுனியில் சுருணையாகத்துணி இருந்தது. கருவறையில் இருந்த எண்ணெய்க் குவளையில் துணிச் சுருணையை நனைத்தாள். கல் விளக்கருகில் சுருணையின் நுனியைக் காட்டினாள். தயங்கித் தயங்கிப் பிடித்த நெருப்பு, பின் கொழுந்துவிட்டு எரிந்தது.

தீ அலையாமல் இருக்க, காற்றுக்கு எதிர்த் திசை திரும்பி நடந்த தேவந்தி, கோயிலின் வடகிழக்கிலிருந்த வேங்கை மரத்தில் தாவி ஏறினாள். இடது கையில் தீக்கோலை ஏந்தி, ஒவ்வொரு கிளையாக மெல்ல முன்னகர்ந்தாள்.

யானை, முன்பைவிட வேகமெடுத்து மோதியது. தலையையும் காதுகளையும் வேகமாக ஆட்டிய யானை, முழுமையாக நிலை தடுமாறியிருந்தது.

யானையின் பின்புறம் வரை தாழ்ந்திருந்த கிளையில், பாம்புபோல் ஊர்ந்தாள் தேவந்தி. தரையோடு செங்குத்தாக நிறுத்தி, மெல்ல நகர்த்தி வந்த தீக்கோலின் வெம்மை அவளின் கைக்கும் பரவியது. தீச்சுவாலையை அவள் பொருட்படுத்தவில்லை.

யானையின் பின்புறத்தைக் கடந்து, அதன் முதுகு, கழுத்துவரை நன்கு பார்க்கும்படி, கிளையில் மேலும் முன்னேறினாள். யானை வலியில் தத்தளிப்பது தெரிந்தது.

யானை நிமிர்ந்து தும்பிக்கையை உயர்த்தினால், அவளிருக்கும் கிளையைத் தொட்டுவிடும் அளவிற்கான தூரம்வரை தேவந்தி நெருங்கியிருந்தாள்.

யானையின் காது நுனிகளிலும் முதுகிலும் அடை அடையாக அட்டைகள் கடித்துக்கொண்டிருந்தன. தேனடைபோல் அப்பியிருந்த அட்டைகள் கடிக்கும் வலி பொறுக்காமல் யானை கற்சுவரில் முட்டி வலி தணிக்கிறது. நெற்றிக் கும்பத்தில் ஒட்டியிருந்த ஒன்றிரண்டு அட்டைகள் யானை மோதியதில் நசுங்கி விழுந்தன.

தேவந்தி கவனமாகத் தீக்கோலைக் கையில் எடுத்தாள். முன்னகர்ந்தவள் கழியை உயர்த்தி, யானையின் காது நுனியில் கடித்துக் கொண்டிருந்த அட்டைகளின்மேல் தீக்கோலை வைத்தாள். நெருப்பில் பொசுங்கிய அட்டைகள் சுருண்டு கீழே விழுந்தன. யானை சுவரில் மோதித் திரும்பும் வேகத்தைக் கவனித்தபடி, யானையின் போக்கிலேயே கழியை நகர்த்தி, கழுத்திலும் காதிலும் இருந்த அட்டைகளைச் சுட்டுப் பொசுக்கினாள்.

நெருப்பின் வாசம் முகர்ந்தோ, அட்டைகள் பொசுங்கும் நாற்றம் முகர்ந்தோ யானை, சட்டென்று உடம்பைத் திருப்பியது. வேடன் கையில் இருக்கும் வில்லின் லாகவத்துடன் தேவந்தி தீக்கோலை மேலே இழுத்திருந்தாள். கிளையும் அவளும் ஒன்றெனத் தோற்றமளித்தார்கள்.

வலி குறைந்த ஆசுவாசத்தில் யானை ஒரு பக்கம் சாய்ந்து நின்று, சுவரில் உடம்பை வேகமாகத் தேய்த்தது. தேவந்திக்கு யானையின் உடம்பு இப்போது வாகாக அமைய, தீக்கோலினால் யானையின் உடம்பிலிருந்த அட்டைகளைச் சுட்டுப் பொசுக்கினாள்.

சுவரில் சாய்ந்து நின்ற யானையின் கனம் சிதிலமடைந்திருந்த சுவரின் விரிசலைக் கூட்ட, கற்கள் சரிந்தன. கற்கள் சரிய யானை தடுமாறியது. தடுமாற்றத்தைச் சமாளிக்க, தும்பிக்கையை உயர்த்தி, ‘ஹோ’ என்று பிளிறியது. உயர்ந்த தும்பிக்கை, மரக்கிளையின் இடைவெளியில் நுழைய, தீக்கோல் தும்பிக்கையைச் சுட்டது.

நீரதிகாரம் - 4

மிரண்ட யானை, தும்பிக்கையால் மரக்கிளையைப் பிடித்து இழுத்தது. தேவந்தி கீழே விழாமல் இருக்க, இடது கையால் கிளையைப் பற்றியவள், வலது கையால் தீக்கோலை உயர்த்தினாள்.

எரிந்து முடிந்த துணிச் சுருணைகள், நெருப்புக் கங்காய்க் காற்றில் பறந்தன. நெருப்பின் செவ்வொளி பார்த்த யானை மிரண்டு பின்னகர்ந்தது. தேவந்தி யானையை நோக்கித் தீக்கோலை நீட்ட, யானை திரும்பி பூமியதிர ஓடியது.

கோயிலின் தெற்காக ஓடத் தொடங்கிய யானையை மறிப்பதுபோல் குதிரையொன்று வேகமாக வந்து முன் நின்றது.

“ராஜா, பெரியவங்க முன்னாடி நிக்காதீங்க” தேவந்தி கத்தினாள்.

குதிரையின் மேலிருந்த பூஞ்சார் அரசர் கோட ராம வர்மா, குதிரையின் முதுகில் கால்களால் அணைந்தார். கண் இமைக்கும் நேரத்தில் யானையின் பாதையிலிருந்து விலகிய குதிரை, கோயிலுக்குள் நுழைந்தது.

குதிரையைப் பின்தொடர முனைந்த யானையின் கால்களில் அம்புகள் பாய்ந்தன.

“கண்ணகி அம்மையின்மேல் ஆணை. பெரியவங்கள ஒண்ணும் செய்யாதீங்க.”

தேவந்தி சன்னதம் வந்தவள்போல் மரத்திலிருந்து இறங்கி பாய்ந்தோடி வந்தாள்.

பூஞ்சார் அரசருடன் வந்த வீரர்கள் கையில் வில் அம்புடனும் ஈட்டியுடனும் நின்றனர்.

“நெருப்பைக் காட்டுங்க. பெரியவங்க ஓடிடுவாங்க.” தேவந்தி தீக்கோலை வீரர்களை நோக்கி வீசினாள்.

முன்னின்ற வீரனொருவன் தீக்கோலைப் பிடித்து, யானையை நோக்கி வீசுவதுபோல் அசைத்தான்.

வீரர்கள் யானையை விரட்ட உரக்கக் குரல் எழுப்பினர். நெருப்பும் சத்தமும் காலில் அம்பு தைத்ததுமாக யானை திகைத்து நின்று, தேவந்தி இருந்த பக்கமே திரும்பி, காட்டுக்குள் ஓடியது.

“பயமே இல்லையா உனக்கு, நாங்க வரலைன்னா என்னாயிருக்கும்?” ராம வர்மா அதிர்ச்சி நீங்காமல் கேட்டார்.

“நீங்க வந்ததாலதான் குழப்பமே. எனக்கென்ன பயம் ராஜா?” தேவந்தி, ராம வர்மாவுக்குப் பதில் சொல்லிக்கொண்டே, வீரனிடம் இருந்த தீக்கோலை வாங்கிக்கொண்டு கோயிலுக்குள் சென்றாள்.

அரசர் ராம வர்மா, குதிரையை விட்டிறங்கி, கோயிலின் முன்மண்டபத்தில் அமர்ந்திருந்தார். தலைப்பாகையைக் கழற்றினார். வீரனொருவன் ஓடோடி வந்து கையில் வாங்கினான். அவரின் தலையும் முகமும் வியர்த்து வழிந்தது.

”கும்பிடறேன் ராஜா.”

தேவந்தி வணங்கினாள்.

ராம வர்மா தேவந்தியின் வணக்கத்தை ஏற்க தலையசைத்தாலும் அவர் இன்னும் இயல்பாகவில்லை என்பதை தேவந்தி அறிந்தாள்.

“திரும்பும் திசையெல்லாம் சோதனை.”

“கண்ணகி அம்மை இருக்கும்போது உங்களுக்கு என்ன கவலை ராஜா?”

பூஞ்சார் அரசர் எழுந்து, கருவறையின் முன் நின்றார். கண் மூடி, கை குவித்து, கண்ணகியை வணங்கினார்.

விளக்கொளி மங்கியிருந்தது. தேவந்தி உள்ளே சென்று, திரியை மேலெடுத்துவிட்டு எண்ணெய் ஊற்றினாள். கண்ணகியின் முகத்தில் ஒளி சுடர்ந்தது.

வேங்கை மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த கண்ணகிக்கு ஆரத்தி காட்டினாள் தேவந்தி. ஆரத்தியுடன் அரசர் ராம வர்மாவின் முன் நின்றாள். ஆரத்தியைத் தழுவிக்கொள்வதுபோல், இரண்டு கைகளாலும் ஒற்றியெடுத்துக் கண்களில் வைத்துக்கொண்ட ராம வர்மா, மீண்டும் வணங்கினார்.

“மீனாட்சி எங்களுக்குத் தொணையா வந்தாலும், நீதான் எங்களுக்குக் குலதெய்வமா இருந்து காப்பாத்துறாய் கண்ணகி அம்மே. எப்போ உன் திருக்கோயிலுக்கு வர்றத நிறுத்தினேனோ அப்பவே எனக்குச் சோதனை ஆரம்பிச்சிடுச்சி” ராம வர்மாவின் குரல் தழுதழுத்தது.

``ராஜா, நீங்களே இப்படிக் கலங்கினா? அம்மை என்னைக்கும் கைவிட மாட்டா.”

“அவ திருக்கோயில் முன்னாலேயே ஒத்த யானையோட துதிக்கையில செத்திருப்பேன். ஒத்த யானையின் மூர்க்கத்துக்கு முன்னால நானென்ன செய்திருக்க முடியும்?”

தேவந்தி அரசரை உற்றுப் பார்த்தாள்.

“ஆன தும்பிக்கையைத் தூக்குறதுக்கும், உங்க குதிரை கோயிலுக்குள்ள நுழையறதுக்கும் இடையில இருந்த க்ஷண நேரத்தை என்னன்னு நினைக்கிறீங்க? அதான் அம்மையின் அருள். அம்மையின் ஆசீர்வாதம்.”

ராம வர்மாவின் முகத்தில் சட்டென்று ஓர் அமைதி பரவியது.

“அவளோட ஆசீர்வாதம் இல்லாம, இந்தக் காட்டுல சின்ன அசைவும் கிடையாது. ஒத்த ஆன மட்டுமல்ல, எந்த ஆனயும் நம்மள கொல்ல வரதில்ல. பெரியவருக்குப் பதிமூணு, பதினாலு வயசாயிருக்கும். அதான் தொணை தேடி ஒத்தையில உலாத்த ஆரம்பிச்சிட்டார். அதனால மூர்க்கமா இருப்பார். கொஞ்சம் கவனமா இருக்கணும், அவ்வளவுதான். அட்டை ஏறிட்டதால பாவம், அதால கடி தாங்க முடியலை.”

“நீ சொல்றது உண்மைதான் தேவந்தி. நான் இன்னைக்குப் பிழைச்சது அம்மையின் அருள்தான். குழப்பத்துல அம்மையைக் குறை சொல்லிட்டேன்.”

கண்ணகியின் திருமுன் விழுந்து சர்வாங்கமும் தரையில் பட வணங்கினார் அரசர். அவர் உடல் குலுங்குவதைப் பார்த்த தேவந்தி, முன்மண்டபத்திற்கு வந்தாள்.

அரசரின் குதிரையை மர நிழலில் நிறுத்தியிருந்த வீரர்கள், தங்களின் குதிரைகளையும் ஆசுவாசப்படுத்த விடுவித்திருந்தனர்.

ஒற்றை யானையைப் பற்றிய திகிலுடன் கேள்விப்பட்டிருந்த முந்தைய கதைகளையும் வீரர்கள் அடிக்குரலில் பேசிக்கொண்டிருந்தனர்.

அரசர் வெளியில் வரவும் வீரர்கள் பேச்சு நின்றது. இன்னும் விலகி நின்றனர்.

முன்மண்டபத்தில் அமர்ந்த அரசர், தேவந்தியை அமரச் சொன்னார்.

“சித்ரா பௌர்ணமிக்கு அம்மைக்குச் சாந்தி செய்யறதை ரெண்டு வருஷமா விட்டுட்டோம். அம்மை வெக்கையைக் காட்டுறா.”

“அவளுக்குள்ள இருக்க வெக்கை போகாது. எப்பேர்ப்பட்ட வெக்கை அது? பூமாதிரி இருந்தவளை, அணையாப் பெரு நெருப்பாக்கிவிட்ட வெக்கை.”

``தேவந்தி, முக்கியமான விஷயமா பேசணும்னு வந்தேன். வரும்போதே ஒத்த யானையைப் பார்த்தாச்சு.”

“நாட்ல இருக்கிறவங்களுக்குத்தான் தொட்டதுக்கெல்லாம் நிமித்தம், சடங்கு, சம்பிரதாயம். காட்டுல அதெல்லாம் ஒண்ணுமில்லை ராஜா. பெரியவரு கொஞ்சம் மிரண்டுபோயிட்டார். அவர் உடம்புல கடிச்சிக்கிட்டு இருந்த அட்டையெல்லாம் சுட்டுப் பொசுக்கிட்டேன். நம்மள மனசார வாழ்த்திட்டுத்தான் போவும். நீங்க தீநிமித்தமா நினைக்காதீங்க.”

“ஒத்தப் பொம்பளையா காட்டுல எப்படித்தான் இருக்கியோ?”

பூஞ்சார் அரசரின் கேள்விக்கு என்ன பதில் சொல்வாள் தேவந்தி?

மேல்மலையில் இருக்கின்ற மன்னான்களும் ஊராளிகளும், சரிவான இடங்களில் இருக்கின்ற பளியர்குடிகளும் தவிர வனத்தில் மனிதர்களே கிடையாது. தேவந்தி சில நேரங்களில், மாதக்கணக்கில்கூட மனிதர்களைப் பார்க்காமல் இருந்திருக்கிறாள்.

ஆனால், காட்டில் தான் தனியாக இருக்கிறோம் என்ற அச்சம் அவளுக்குள் எழுந்ததில்லை. மனிதர்களுடன் பேசுவதைவிட நீரோடைகளுடனும் செடிகொடிகளுடனும் விலங்குகளுடனும் பேசிக்கொண்டுதான் இருப்பாள். கண்ணகி கோயிலுக்கு முன்பாக அடர்ந்து நின்றிருக்கும் வேங்கை மரத்திற்கு ஒவ்வொரு நேரத்திற்கு வரும் ஒவ்வொரு பறவையும் அவளுக்கு சிநேகிதம். எப்போதும் கலகலவென்று பேசும் உளறுவாயான செஞ்சிலம்பன்கள் ஐந்தாறு வந்துவிட்டால் போதும், பொழுது போவதே தெரியாது.

மன்னான்கள் கட்டிக் கொடுத்த மண் குடிசையில், இலை தழைகளானான கூரையில், இரவு பகலெல்லாம் ஒன்றுதான் தேவந்திக்கு.

அவள் பிராயத்தில் இருக்கும்போது மன்னான் வீட்டுப் பெண்கள் கூப்பிடுவார்கள். ‘கீழே எங்களுடன் வந்து தங்கிக்கோ பூசாரியம்மா. கோயில் பூஜைக்கு மட்டும் மேலே வந்துவிட்டு வா’ என்று.

தேவந்திக்கு அவள் அத்தை சொன்னது நினைவிருக்கிறது.

“அம்மையைத் தேடி, அம்மைக்குத் தோழி தேவந்தி வந்திருக்கா. உயிருக்கு உயிரா இருந்த தோழி கண்ணகி, கோவலனோடு விண்ணுலகம் போனதை, இங்க உள்ள பளியருங்க பார்த்ததா சொன்னவுடன், இங்கியே இருந்திட்டா. செங்குட்டுவன் ராஜா கோயில் கட்டுனதுல இருந்து காலங்காலமா நம்ம வம்சாவளிதான் பூசாரியா இருக்கோம். யார் பூசாரி ஆகுறாங்களோ அந்தப் பொண்ணுக்குத் தேவந்திதான் பேர். தண்ணியில இருக்க மீனு மாதிரிதான், காட்டுல இருக்க நாமும்.”

கோவலன் கொல்லப்பட்ட பிறகு, மதுரையை எரியூட்டிய கண்ணகி கோபம் குறையாமல் பித்துப் பிடித்தவள்போல், பதினான்கு நாள் நடந்து வந்து சேர்ந்த இடம், விண்ணேத்திப் பாறை. கண்ணகியின் ஆளுகைக்குள் இருக்கும் இந்த மங்கலதேவி கோட்டம். ஒற்றை முலையுடன் ஒற்றை வேங்கை மரத்தின்கீழ் நின்று அழுத கண்ணகியைக் கோவலன் மலர் விமானத்தில் வந்து தன்னுடன் அழைத்துச் சென்றதைப் பார்த்த பளியர்கள், கண்ணகியைக் கோபக் கனல் குறையாக் கடவுளாகத் தொழுதனர்.

கண்ணகியின் கோபத்தால்தான் வெக்கை நோயான அம்மை நோய் வருகின்றது என்று பயந்த ஜனங்கள் குளிர்ச்சிதரும் வேப்பிலைகளைப் பறித்து அதன்மேல் படுக்க வைத்தனர். நோய் வந்தவர்கள் குணமடைய கண்ணகியை வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். வேப்ப மரங்களுக்கு மஞ்சள் இட்டு மாலையிட்டனர். நோய் மிகவும் முற்றிவிட்டால், ஊருக்கு ஓர் ஆள் வீதம் கிளம்பி, கண்ணகி கோயிலுக்கு வந்து, வழிபாடு செய்து தேவந்தி கொடுக்கும் வேப்பிலையை ஊர் மந்தையில் வைத்து வழிபடுவர்.

தேவந்தியையே கண்ணகியாக நம்பும் மக்கள்.

தேவந்தி பதில் சொல்லாமல் யோசனையில் இருந்ததில், ராம வர்மா அவராகப் பேச்சைத் தொடர்ந்தார்.

“சாஸ்தா கோயிலுக்குப் போயிருந்தேன், பிரசன்னம் பார்க்க.”

“போற்றி என்ன சொன்னார் ராஜா?”

“என் சம்பத்துகள் நீரோடு போகுமென்றார்.”

அதிர்ச்சியானாள் தேவந்தி.

இருவரும் அமைதியாக இருந்தனர்.

மிரட்சியாகப் பார்த்தபடி, சாய்ந்த நடையில் கடம்ப மானொன்று தேவந்தியின் அருகில் வந்தது.

மானின் தலையைத் தடவிக் கொடுத்தாள் தேவந்தி.

“நல்ல பிராயத்துல இருக்கு. ஆனாலும் என்னை விட்டு நகர மாட்டேங்குது.”

“மலையில வெள்ளைக்காரங்க நடமாட்டம் இருக்கா?”

தான் பேச வந்த விஷயத்திற்குப் பேச்சை நகர்த்தினார்.

“ராஜாவுக்கு நான் ரெண்டு முறை சொல்லியனுப்பினேன். ராஜா வரலை. என்ன ஏதுன்னு தெரியாமத்தான், நானே அம்மை முன்னாடி கலங்கி உட்கார்ந்திருந்தேன்.”

“மலையில என்ன நடக்குது?”

“டாமிங்க கூட்டமா வர்றாங்க. இடத்தை அளக்கறாங்க. மண்ணு, பாறை, கல்லுன்னு சின்னச் சின்ன மூட்டையா கட்டி எடுத்துட்டுப் போறாங்க. அவெங்க பேசறதும் புரியலை. கூட வர்ற நம்மாளுங்கள கேட்டா, ‘ரெண்டு அணா தர்றேன், மலையில வழிகாட்டுன்னு கூப்பிட்டாங்க. வேற ஒண்ணும் தெரியாது’ன்னு சொல்றானுங்க.”

“கண்ணகி அம்மை, அவ கோயில், நீ, இந்தக் காடு, மலை, பேரியாறு இதெல்லாம் என்ன ஆகப்போதுன்னு தெரியலை தேவந்தி.”

அதிர்ந்து எழுந்தாள் தேவந்தி.

“என்ன சொல்றீங்க ராஜா? இந்த மலைக்கும் பேரியாத்துக்கும் ராஜா நீங்க. நீங்களே உங்க வாயால இப்படிச் சொல்லலாமா?”

“இந்த மலைக்கும் ஆத்துக்கும் நான் ராஜான்னு காட்டுல இருக்க நீ சொல்ற. வெள்ளக்காரனும் சமஸ்தானமும் சொல்லலையே?”

“என்ன சமாச்சாரம்னு உடைச்சு சொல்லுங்க ராஜா.”

“இந்த மலையில அணை கட்டப் போறாங்களாம். மேற்கால போற ஆத்தை கிழக்கால திருப்பி விடப்போறாங்களாம்.”

``திருப்பி விட்டு?”

“கடல்ல கலந்து வீணாப்போற தண்ணியில கொஞ்சம் திருப்பி விட்டா, மதுர, சேது நாடு வரைக்கும் தண்ணி போகுமாம். கால்வாய் வெட்டிக்கொண்டு போனா, மக்கள் விவசாயம் செய்ய முடியும்னு பிரிட்டிஷ்காரன் சொல்றான்.”

“நல்லதுதானே ராஜா?”

“நல்லதுதான். பிரிட்டிஷ்காரன் நம்மூர் ஜனங்களுக்கு நல்லது பண்றதுக்கா திட்டம் போடுவான்? அதுவே என்னால நம்ப முடியலை. இந்த இடம் என்னோட பூஞ்சார் சமஸ்தானத்துக்குச் சொந்தம். என்னைக் கேட்காம, திருவாங்கூர் ராஜாகிட்ட குத்தகை கேட்டு ஒப்பந்தம் போடறாங்க. இவங்க நோக்கம் ஆத்தைத் திருப்பறதா, பூஞ்சார் சமஸ்தானத்தை அழிக்கிறதான்னு தெரியலையே?”

என்ன பதில் சொல்வதென்று புரியாமல் தேவந்தி அமைதியாக இருந்தாள். ஏதோ மன வருத்தத்தில் ராஜாங்க விஷயத்தை அரசர் தன்னிடம் சொல்கிறார். தான் முந்திக்கொண்டு சரிக்குச் சரியாகப் பதிலளிக்கக் கூடாது என்பதைப் புரிந்திருந்தாள்.

“கோயிலுக்கும் காட்டுக்கும் என்ன ஆகும் ராஜா?”

”யோசிச்சுப் பார். இந்தக் காட்டுக்குள்ள யாரும் நுழைய முடியாது. நம்மோட மேல் மலைக்கு யாரும் வராம இருக்கிறதாலதான் இந்த இடம் இன்னும் புனிதமா இருக்கு. அணை கட்டுறதுன்னா அங்க மட்டுமா உடைப்பாங்க. மொத்த மலையையும் உடைச்சுப் போடுவாங்க.”

தேவந்தியின் முகத்தில் துயரத்தின் ரேகை படர்ந்தது.

“மலைமேல டாமிங்க வந்துடுவாங்களா?”

“டாமிங்க மட்டுமல்ல, ஊரே வரும். இரும்புக் குழாயெல்லாம் வச்சு மலையை உடைச்சு எடுப்பாங்க. அந்தச் சத்தத்துக்கே காட்டுல இருக்க சீவாத்துங்க ஓடிப்போயிடும்.”

“ஐயய்யோ... காட்டுல வர்ற சின்னச் சின்னச் சத்தமும் காட்டுச் சீவாத்துங்களோடதுதான். அதில்லைன்னா இந்தக் காட்டுக்கே உயிர் இருக்காதே?”

பூஞ்சார் அரசர் தேவந்தியை அருகில் வருமாறு அழைத்தார். அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில், “நூறு வருசமா நடக்காத கால்வாய் வேலை தொடங்கிடிச்சின்னா ஆயிரம் வருசமா நடக்கிற இந்தக் கோயில் வழிபாடு நின்னுடும்” என்றார்.

“ராஜா... என்னது?” என்றாள் அழுகை வெடிக்க.

``ஆத்தைக் கிழக்க திருப்பிட்டாங்கன்னா, இங்க தங்கிப் பூசை பண்ணுற கடைசி தேவந்தி நீதான்.”

``ஐயோ... உங்க வாயால அப்டிச் சொல்லாதீங்க” கதறினாள் தேவந்தி.

நீரதிகாரம் - 4

“அப்போ ஒரு வெள்ளக்காரனையும் மலைமேல ஏற விடாதே. அது உன் பொறுப்பு. அதைச் சொல்லத்தான் வந்தேன்.”

“என் பொறுப்பு என்ன? நம்ம எல்லாரையும் காப்பாத்துற குலதெய்வம், கண்ணகி அம்மையோட பொறுப்பு. அவ இருக்கிற இடத்தை அவதானே காப்பாத்திக்கணும்?”

“ஆபத்து வரும்போது அம்மை குழந்தையாயிடுவா. நாமதான் தாயா தகப்பனா நின்னு காப்பாத்தணும். மதுரையில இருந்து மானவர்ம ராஜா, மீனாட்சியைக் குழந்தை மாதிரிதானே கூடவே தூக்கிட்டு வந்தார்? குழந்தை மாதிரி வர்றவள, பாத்துக்கிற தெம்பையும் அவளே கொடுப்பா.”

வெயிலடித்துக்கொண்டிருந்த வண்ணாத்திப் பாறையில், மழைமேகம் திரண்டதே தெரியவில்லை. அம்பு பாய்வதுபோல், மழைத் தாரைகள் பூமியை அறையத் தொடங்கின. வாலை மேலுயர்த்தியபடி, குதிரைகள் மரத்தடிக்கு நகர்ந்தன.

காற்றுக்கு உதிர்ந்த தழல் நிற வேங்கை மலர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்றன. வேங்கை மலர்கள் மிதந்த வெள்ளம், நெருப்பாறுபோல் மலையை விட்டுக் கீழிறங்கியது.

சிறு ஓடையாகப் பெருகிய நீர், மலையிறங்கி, செஞ்சிவப்பில் பேரியாற்றில் கலந்தது.

மதநீர் ஒழுக, நூற்றுக்கணக்கான களிறுகள் மலையிறங்குவதுபோல் பேரியாறு மலையிறங்கியது.

- பாயும்