சினிமா
தொடர்கள்
Published:Updated:

நீரதிகாரம் - 65 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம் - 65 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம் - 65 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

வேலையாள்களே யானைகளை வேடிக்கை பார்ப்பதும், அவை அருகில் வரும்போதும் போகும்போதும் பயத்தில் அலறுவதும், குழந்தைகள் யானைகளைப் பின்தொடர்ந்து செல்வதுமாக அந்த இடமே கலகலப்பானது.

போர்த்துக்கீசியத் தச்சர்கள் மேல்மலையின் வாழ்க்கைக்கு எளிதில் பழகிவிட்டார்கள். கோழிக்கோட்டின் கடற்கரையையொட்டி, திருவிதாங்கூரின் காலநிலையில் இருந்தவர்களுக்கு மேல்மலை பெரிய சவாலாக இல்லை. இந்தியாவில் பிறந்திருந்தாலும் ஐரோப்பிய ரத்தம் என்பதில் அவர்களுக்குக் குளிரும் பனியும் மழையும் பழகியிருந்தது. வாஸ்கோடகாமா கோழிக்கோட்டுக்கு வந்து நானூறு ஆண்டுகள் ஆகப்போகிறது. அவரைத் தொடர்ந்து போர்த்துக்கீசியத்தில் இருந்து வர்த்தகம் செய்ய வந்தவர்களில் பலர் இந்தியப் பெண்களைத் திருமணம் செய்துகொண்டு இந்தியாவிலேயே இருந்துவிட்டனர். ஐரோப்பியத் தந்தைக்கும் இந்தியத் தாய்க்கும் பிறந்த குழந்தைகள் வளர்ந்து, பல தலைமுறைகளாக இந்திய - ஐரோப்பியத் தன்மையுடன் கோழிக்கோட்டிலும் மாஹேயிலும் கோவாவிலும் ஏராளமான போர்த்துக்கீசியர்கள் வாழ்கிறார்கள். பெரும்பாலும் மதவழிபாட்டிலும் இறைசேவையிலும் அதிகம் கவனம் செலுத்தும் போர்த்துக்கீசியர்கள், மற்ற ஐரோப்பியர்களைப்போல் தந்திரங்களுக்கும் சூழ்ச்சிகளுக்கும் இடம் கொடுப்பதில்லை. அவர்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள்.

நீரதிகாரம் - 65 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மதுரா டிஸ்ட்ரிக்டின் தச்சர்கள், வேலையாள்களின் வீட்டுக் கூரைகளுக்கு அடித்த மரச்சட்டங்கள் அடுத்த அரை மணி நேரத்தில் காற்றில் பறந்து சென்றன. சின்னச் சாரங்கள் ஒரே நாளில் பெயர்ந்து விழுந்தன. பேரளவு சவாலில்லாத வேலைக்கே தடுமாறுகிறார்கள் என்றால், இன்னும் கடினமான வேலைகளுக்கு எதிர்காலத்தில் என்ன செய்வது எனும் யோசனையில்தான் தச்சு வேலையில் தேர்ந்த போர்த்துக்கீசியத் தச்சர்களை அழைத்து வந்திருந்தார்கள். பெர்னாண்டஸ் என்ற வயது கனிந்த தலைமை ஆசாரியின் தலைமையில் இருபது போர்த்துக்கீசியர்கள் மேல்மலையில் தச்சு வேலை செய்தார்கள். வேலையாள்களையும் மலைக்காணிகளையும் உடனழைத்துக்கொண்டு காட்டில் நுழைந்து யானைகளைப்போல் மரங்களைத் தேடினார்கள். நன்கு முற்றிய மரங்களை மலைக்காணிகள் பார்த்துச் சொல்ல, அவற்றை வெட்டி வீழ்த்தப் பணித்தார்கள். நடுக்காட்டிற்குள்ளிருந்த கருங்காலியும் தேக்கும் வெட்டப்பட்டன. வெட்டி வீழ்த்திய மரங்களைத் தூக்கிவர வேலையாள்களைச் சொன்னால் இருபதடி, முப்பதடி நீளம்கொண்ட கட்டைகள் அணை கட்டுமிடத்திற்கு வந்துசேர வாரக்கணக்கிலானது. அவர்களே மாற்று யோசனையும் சொன்னார்கள். மலபார் தேசத்தின் யானைகள் மேல்மலைக்குக் கொண்டுவரப்பட்டன.

மலபார் பிரிட்டிஷ் சர்க்காரின் நிர்வாகப் பகுதி என்பதால், மலபார் கலெக்டர் யானைகளையும் பாகன்களையும் உடனே அனுப்பிவிட்டார். மரங்களின் கிளைகளை முறித்துப்போடும் யானைகளின் வேகத்தைப் பார்த்து மிரண்டனர் வேலையாள்கள். கிளைகளைக் கழித்தவுடன் மரத்தை வேலையாள்கள் துண்டம் செய்துபோட்டதும், யானைகள் அலுக்காமல் தூக்கிக்கொண்டு வந்து குவித்தன. தேக்கடியில் ஐந்தாறு யானைகளும், அணை கட்டும் காட்டிற்குப் பத்து யானைகளும் வந்தவுடன் முகாம் பரபரப்பானது.

வேலையாள்களே யானைகளை வேடிக்கை பார்ப்பதும், அவை அருகில் வரும்போதும் போகும்போதும் பயத்தில் அலறுவதும், குழந்தைகள் யானைகளைப் பின்தொடர்ந்து செல்வதுமாக அந்த இடமே கலகலப்பானது. மலபார் யானைகளின் பிளிறல் கேட்டு, அடிக்கடி காட்டு யானைகளும் அணை கட்டுமிடத்திற்கு வந்து செல்வதுதான் ஒரே பிரச்னை. மழை பெய்தாலும் வெயிலடித்தாலும் யானைகள் அசராமல் வேலை செய்ததில், மற்ற பிரச்னைகளைச் சமாளித்துக்கொள்ளலாம் என்று நினைத்தார்கள் இன்ஜினீயர்கள்.

நீரதிகாரம் - 65 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நதியின் இடக்கரையோரம் இருந்த வேலையாள்களின் கட்டி முடிக்கப்படாத இரண்டாவது வரிசைக் குடிசைகளுக்கு, இரண்டு யானைகள் கீழே குவிக்கப்பட்டிருந்த புற்களை அள்ளி, கூரையின்மேல் விசிறின. கூரையின் மேல் உட்கார்ந்த மேஸ்திரிகள், யானை விசிறும் புற்களை அள்ளியெடுத்துக் கூரையின்மேல் பாவினார்கள். பாகனின் உத்தரவை மீறாமல் அடுத்தடுத்த குடிசைகளுக்கு நகர்ந்தன இரண்டு யானைகளும். இரண்டில் ஒன்று பிடி யானை. கடந்த ஒரு வாரமாகவே பிடி தன் இணையோடு சேரும் விழைவில் நடமாடியது. உடலின் தூண்டலுக்கேற்ப, யானை ஆணுக்கான அழைப்பைக் காற்றில் அனுப்பியது. களிற்றுக்குச் சேதி கடத்த பிடி யானை கழிக்கும் சிறுநீர், இணைவு விரும்பியெழுப்பும் கேளா ஒலி, அதன் உடலில் இருந்து கிளம்பும் திரவத்தின் மணமென்று இயற்கையின் ஒவ்வொரு அம்சமும் பிடி யானைக்குத் துணை நின்றது. மனித ராசி மட்டும் வாய்திறந்து கேட்க வேண்டிய கட்டாயம்.

பகல் பதினொரு மணி இருக்கும். பாறையின் மேலிருந்த மென்பாறைகளைப் பத்தடி ஆழமளவிற்கு எடுத்துக்கொண்டே சென்றிருந்தார்கள் ஒட்டர்கள். நதியின் இடக் கரையில் இருந்து முந்நூறு அடி தூரத்தில் இப்போது வேலை நடந்துகொண்டிருக்கிறது. நேற்று மாலை வெடி வைத்துத் தகர்த்திருந்த சிதிலமுற்ற பாறைகளை உளிகளால் ஆண்கள் உடைத்துத் தள்ள, பெண்களும் மற்ற வேலையாள்களும் அள்ளிக்கொண்டு போய் வெளியில் கொட்டிக்கொண்டிருந்தார்கள்.

நூறு ஆள்கள் ஒன்றுசேர்ந்து பூமியை உதைத்து மேலேற்றுவதுபோல் மண்ணதிர யானைக் கூட்டமொன்று கூடாரங்களை நோக்கி வந்துகொண்டிருந்தது. பிளிறல் சத்தம் கேட்ட ஆள்கள் அலறி, கையில் இருந்த பொருள்களை அப்படியப்படியே நழுவவிட்டார்கள்.

கூரையின் மேல் புற்களையள்ளிப் போட்டுக்கொண்டிருந்த பிடி, காட்டு யானைக் கூட்டத்தைப் பார்த்தவுடன் பரபரத்தது. பெண் யானையின் சமிக்ஞையைக் காட்டில் இனப்பெருக்கத்திற்காகத் தயாராக இருக்கும் ஆண் யானைகள் பலவும் தங்களுக்கான அழைப்பாக எடுத்துக்கொள்ளும். அப்படித்தான் வந்திருந்த கூட்டத்திலிருந்த இரண்டு களிறுகள் அழைப்பு விடுத்த பிடியை நோக்கி நகர்ந்தன.

“இந்தக் குட்டி இஷ்டமுண்டாயி ஜோடிய கூப்பிட்டு விட்டுட்டா... இனி இவளைக் கட்டுப்படுத்த முடியாது... அவளா கரு வாங்கிட்டு வந்தாத்தான் உண்டு, கூடுறதுக்கு ஒரு திவசமும் ஆவும், நாலஞ்சு திவசமானாலும் ஆவும்” என்று கீழே குதித்த பாகன், பெண் யானையின் காலில் இருந்த சங்கிலியின் இன்னொரு முனையை மரத்திலிருந்து அவிழ்த்துவிட்டான்.

இரண்டு களிற்றில் மூத்ததாக இருந்தது, சின்னதை முன்நெற்றியால் மோதியது. ‘நான் செல்கிறேன், நீ எதற்கு வருகிறாய்?’ என்பதுபோல் ஒருவரையொருவர் இடித்துத் தள்ளினர். பிடியோ இணையும் விழைவுடன் தும்பிக்கையை உயர்த்தி அழைப்பு விடுத்தபடி இருந்தது.

இருவரில் யாருக்குச் சம்மதம் தருகிறாய் என்பதுபோல் களிறுகள் இரண்டும் பிடியை நெருங்கிப் பின்புறம் உரசின. இதுவரை அழைப்பு விடுத்த பிடி, இப்போது விருப்பம் இல்லை என்பதுபோல் சின்னச் சிணுங்கல் காட்டிச் சிறு ஓட்டமாய் நடந்தது. சங்கிலியின் விடுவிப்பில் கிடைத்த விடுதலையும் பிடி யானைக்குப் பிடித்திருக்கலாம். பிடி விலகி ஓடியதில் மூத்த களிறு, ‘சரி போ...’ என்பதுபோல், முன்னால் நின்று பார்த்துக்கொண்டிருந்த தன் கூட்டத்துடன் சென்று சேர்ந்துகொண்டது. ‘எத்தனை பிடியைப் பார்த்திருக்கேன்’ என்ற வீறாப்பும் முறைப்பும் அதன் விலகலில் இருந்தது.

போட்டி நீங்கிய உற்சாகத்தில் பிடியுடன் ஓடிய இளையது முன்னால் சென்று அதன் நெற்றிப்படலத்தைத் தன் துதிக்கையில் கோத்துக்கொண்டு அன்பு காட்டியது. பக்கத்தில் சென்று முதுகில் உரசியது. பின்புறம் சென்று பிடியின் உடம்பெங்கும் தன் துதிக்கையால் துழாவி அன்பு காட்டியது.

இருவரின் சேர்க்கைக்குத் தயாராகும் லீலைகளைப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்த யானைக் கூட்டம் திரும்பிக் காட்டுக்குள் நடக்கத் தொடங்கியது. கூட்டத்திற்குள் இருந்த இரண்டு மாதக்கன்று ஒன்று சிறு துள்ளலும் நடையுமாக மற்ற யானைகளின் கால்களினூடாக நடந்தது.

களிறினைத் தடுக்க நினைத்த பிடி, பிளிறியது. மறுப்பது போல் தும்பிக்கையால் முட்டித் தள்ளியது. களிறும் பிடியும் ஒன்றையொன்று முட்டிக்கொள்ள, காட்டுக்குள் போய்க் கொண்டிருந்த யானைக் கூட்டம் மீண்டும் திரும்பியது. பிடியும் களிறும் ஒன்றையொன்று விரட்ட, மற்ற யானைகள் இரண்டையும் சூழ்ந்து நின்றன. என்ன நடக்கிறது என்பதுபோல் யானைகள் ஒன்றினை ஒன்று உராய்ந்தும் தும்பிக்கைகளால் தழுவிக்கொண்டும் நிற்கையில், கன்றோ கூட்டத்தை விட்டுத் தள்ளி நடந்தது. நதிக்கரையோரம் பாறைகளை வெட்டியெடுத்த இடத்திற்கருகிலிருந்த பள்ளத்தினைக் கவனிக்காத யானைக்கன்று, அடுத்த அடி எடுத்து வைத்ததில் சரிந்து பள்ளத்திற்குள் இறங்கியது. பயத்தில் பிளிறிய கன்றின் சத்தம் கேட்டு, யானைக் கூட்டம் திரும்பியது. பள்ளத்தில் விழுந்த கன்றின் தாயோ, கலங்கிப் பிளிறியது.

யானைகளையே கவனித்துக்கொண்டிருந்த வேலையாள்கள் கன்று பள்ளத்தில் விழுந்த சத்தம் கேட்டு ஓடினார்கள். கன்றின் அருகில் செல்ல முடியவில்லை. யானைகள் சுற்றி நின்றன. சிறுவன் சங்கிலி, டெய்லரிடம் தகவல் சொல்ல காட்டுப்பாதை வழியே ஓடினான். ஆங்காங்கு இருந்தவர்கள் எல்லாம் ஒன்று திரண்டுவிட்டாலும் யாரையும் அருகில் வரவிடாமல் யானைகள் சூழ்ந்து நின்றன.

கூடிநின்றவர்களை விலக்கிக்கொண்டு டெய்லரும் மெக்கன்சியும் லோகனும் வந்தார்கள்.

“தொர, கிட்ட போவ முடியாது. யானைக என்ன செய்யும்னு சொல்லவே முடியாது...”

“முப்பதடி பள்ளம்... குட்டியை எப்படி வெளிய எடுக்கிறதுன்னு தெரியலையே?” மெக்கன்சி.

“யானைக வந்தவுடனே வெடி போடணும்னு எத்தன முறை சொல்லியிருக்கேன்... முட்டாளுங்களா...” டெய்லர் கத்தினார்.

“ஆன தொண தேடி வந்துச்சி தொர. வெடி போட்டோம்னா காட்டு யானைக ஓடிப்போயிடும், இந்தக் குட்டி தவிச்சுப்போயிடுமேன்னு இருந்துட்டோம்...” கங்காணி ஒருத்தன் சொல்ல,

“முட்டாளுக, நீங்களா ஒரு காரணத்தைச் சொல்லுங்க. இப்போ என்னா செய்யிறது?” எல்லார் முகத்திலும் கவலை அப்பியது. யானைகளின் பிளிறல் காட்டை உலுக்கியது.

“அந்தப் பள்ளத்தை மூடலாம்னு முதல்லயே சொன்னேன். நீதான், வரிசையா மேல்பாறைகளை உடைச்சு எடுத்துக்கிட்டு வரட்டும். இந்தக் குழிய அதுல சேர்த்துக்கலாம்னு சொன்னாய்.” மெக்கன்சியிடம் கோபம் காட்டினார் டெய்லர்.

“டிரையல் பிட் எடுத்தவுடனே மூடியிருக்கணும். இப்போ வந்து என்கிட்ட கோபப்பட்டா?” மெக்கன்சியும் பதிலுக்குக் கோபம் கொண்டார்.

“இப்போ நடக்க வேண்டியதைப் பேசுவோம்... எல்லாம் போங்க. போய் அவங்கங்க வேலையைப் பாருங்க...” என்று டெய்லர் சொன்னாலும் யாரும் இடத்தை விட்டு நகரவில்லை.

“எதுனா வழி சொல்லுங்க தொர. பாவம், வாயில்லா ஜீவனுங்க. புள்ளையைப் பிரிஞ்சி எப்டி அலைபாயுது பாருங்க...” பாகன் கெஞ்சினான்.

“என்ன செய்யணும்னாலும் முதல்ல யானைக இந்த இடத்தை விட்டுப் போனாத்தான் நாம கிட்டவே போக முடியும்...” டெய்லர் சொன்னவுடன், ஆம் என்பதுபோல் எல்லாரும் அமைதியாக நின்றார்கள்.

“இப்போ யானைகள விரட்டுறதுக்கு என்ன வழி?” டெய்லர் கேட்க, ஒருவரும் வழிபுரியாமல் விழித்தனர்.

“பக்கத்துல பத்தடி வரைக்கும் நாம பாறையை வெட்டியெடுத்திருக்கோம். பக்கவாட்டுல இன்னும் கொஞ்சம் சாய்தளம் மாதிரி மண்ணை வெட்டிவிட்டா, குட்டி வெளிய வந்துடுமில்ல?”

“கிட்ட போகாம இங்கிருந்து பள்ளம் வெட்டுவியா லோகன்?” டெய்லர் கேட்டவுடன் மற்றவர்களும் அமைதியானார்கள்.

“வெடி போட்டுப் பாக்கலாமா தொர?” கூட்டத்திலிருந்த கங்காணி கேட்க, டெய்லர் அமைதியாக நின்றார். பிறகு, “இப்போ வெடி போட்டா யானைக குட்டிய விட்டுட்டுப் போயிடுமா? நம்மகூட இருக்க யானைலாம் மிரண்டு ஓடிடாதா?” என்று பாகனைக் கேட்டார்.

“காட்டு யானைகளைப் பத்திச் சொல்ல முடியாதுங்க தொர... கோவத்துல நம்ம பக்கம் திரும்புனாலும் திரும்பிடும். நம்ம யானைகள சங்கிலி போட்டுக் கட்டிட்டு, பக்கத்துல நாங்க நின்னுக்கிட்டம்னா அதுக ரொம்ப மிரளாதுங்க. காட்டு யானைக, குட்டிய விட்டுட்டுப் போவுமான்னு தெரியலையே.”

தூறல் ஆரம்பித்தது. தூறல் விழுகிறதே என்று உணர்வதற்குள் பெருமழை பிடித்துக்கொண்டது. டெய்லர் அசையாமல் நின்றதைப் பார்த்து, மற்றவர்களும் குடிசைகளை நோக்கி நகரவில்லை.

“இன்னைக்கு வேலை போனதோட, எப்போ குட்டிய எடுத்து வெளிய விட்டுட்டு வேலையை ஆரம்பிப்போம்னும் தெரியலையே?” மெக்கன்சிக்குக் கவலை அதிகமானது.

மழைக்கு யானைகளும் அசையாமல் நிற்க, இவர்களும் அசையாமல் நின்றார்கள். பொழுது சாய்வதற்குள் இருள் வந்துவிட்டது. கொசுக்களும் பூச்சிகளும் படையெடுத்து ஆள்களை மொய்த்தன.

குழிக்குள்ளிருந்து சுற்றி நிற்கும் யானைகளைப் பார்த்து குட்டி மேலும் வலியுடன் பிளிறியது. குழியின் சுவர்களில் மோதித் திரும்பிய தன் குட்டியைப் பார்த்து, குழிக்குள் இறங்க முனைந்தது தாய் யானை. அதிக எடை கூடிய உடலே வரமாகவும் சாபமாகவும் பெற்ற யானைகள், குழிக்குள் மாட்டிக்கொண்ட கன்றைக் காக்க உள்ளிறங்க முடியாமல் கண்ணீர் வடிய நின்றன.

‘விடிந்ததும் முதல்வேளையாக, மன்னான்களில் ஆனைவிரட்டிகள் இருக்கிறார்கள், அவர்களை அழைத்து வந்தால், மந்திரம் போட்டு, யானைகளைக் காட்டுக்குள் அனுப்பிவிடுவார்கள். நாம் குட்டியைப் பக்கத்தில் குழியெடுத்து வழியுண்டாக்கியோ, கயிறு கட்டியோ வேகமாக மீட்டெடுக்கலாம்’ என்று பாகன் சொன்னான். மன்னான் காணிக்குச் சென்று ஆளைக்கூட்டி வரவே பொழுது சாய்ந்துவிடும். அதுவரை என்ன செய்வது என்று டெய்லருக்கு யோசனை. ஆனாலும் இப்போதைக்கு அது ஒன்றுதான் வழி என்று பேயத்தேவனை அழைத்து, உடன் ஒருவரை அழைத்துக்கொண்டு மன்னான்காணிக்குச் செல்லச் சொன்னார்.

அறுநூறு, எழுநூறு பேரளவில் விடிய விடிய நிற்பதும் உட்காருவதுமாக இருந்தார்கள். பிள்ளைகளுடன் இருந்தவர்கள் தங்களின் குடிசைக்குத் திரும்பியிருந்தாலும் குழிக்கு அருகிலேயே இருக்கும் குடிசைகளை நோக்கி யானைகள் வந்துவிட்டால் என்ன செய்வதென்ற பயத்தில் குத்தவைத்து உட்கார்ந்திருந்தார்கள்.

அன்று இரவு முழுவதும் காடு, யானைகளின் துயர்பிழியும் பிளிறலில் தூங்காமல் விழித்திருந்தது.

மழை ஓய்ந்தது என்றறிந்து, சிவப்பேறிய விழிகளோடு சூரியன் வெளிவருகையில் வேலையாள்களும் ஒன்றுதிரண்டார்கள்.

“வெடிக்குப் பதில் தீப்பந்தம் காட்டலாமா? யானைக பயந்து ஓடுமாமே?” கேள்வி ஞானத்தைச் சரிபார்க்கக் கேட்டார் கங்காணி ஒருவர்.

“பந்தம் ஏத்திக் காமிக்கலாம் தொர...” பாகன் சொல்ல, ஆளுக்கொரு திசைக்கு ஓடினார்கள். வேலையாள்களின் குடிசைகளுக்கு மத்தியில் நெருக்கமாக நான்கு பக்கமும் சுவர்போல் கல்லடுக்கி, மேலே ஒரு கருங்கல் பாறையால் மூடி கரித்துண்டுகள் போட்டு, கல்லடுப்பில் எப்போதும் அணையாதபடி கங்கு வைத்திருந்தார்கள். யார் அடுப்பு மூட்ட வேண்டுமென்றாலும் ஐந்தாறு கங்கை வெளித்தள்ளி எடுத்துக்கொண்டு, அதற்குச் சமமாக விறகுக் கட்டைகளையும் கரித்துண்டுகளையும் போட்டு வருவார்கள். அணை கட்டுமிடம் முழுக்க ஏழெட்டு இடங்களில் கல்லடுப்புகளில் நாள் முழுவதும் கங்குகள் கனன்றபடிதான் இருக்கும். நெருப்பு அணைந்தால் புதிதாகப் பற்ற வைப்பது கடினம். நடுக்காட்டின் ஈரத்திற்கும் மழைக்கும் கரித்துண்டு பற்றுவதே பெரும்பாடென்பதால், கங்கு அணையாமல் பார்த்துக்கொள்ள கரைக்கு ஒருவர் நிரந்தரமாக இருந்தார். ஒவ்வொரு கல்லடுப்பிலிருந்தும் கங்குத் துண்டங்களை எடுத்துப்போட்டு, துணிச் சுருணையில் தீ வைத்தார்கள். அவசரத்துக்கு உதவுமென்று மறைத்து வைத்திருக்கும், உரசினாலே பற்றிக்கொள்ளும் சுளுந்திக் குச்சிகளை, இப்போது தேடியெடுத்துத் தேய்த்துத் தீ உண்டாக்கினார்கள்.

பத்துப் பதினைந்து பேர் மொத்தமாகச் சேர்ந்து தீப்பந்தங்களை யானைகளின் முன்னால் ஆட்ட, கூட்டமோ அசராமல் பார்த்தது.

“கொஞ்சம் கொஞ்சமா முன்ன போங்கப்பு...” மொக்கைமாயன் குரல் கொடுத்தார்.

தீப்பந்தம் பிடித்தவர்கள் முன்னேற, வருபவர்களை நோக்கிக் கடுமையாகப் பிளிறியது தாய் யானை. முட்ட வருவதுபோல் முன்னகர்ந்து, பின் கன்று இருக்கும் பள்ளத்தருகே சென்றது. உள்ளிருந்த குட்டியின் சிணுங்கல் நிற்கவே இல்லை. தீப்பந்தங்கள் முன்னேற, ஈரம் கோத்திருந்த யானையின் கண்களில் அச்சம் கூடியது. பிடியைத் தேடி வந்த களிறுகள் இரண்டும் பின்னகர்ந்து, ‘வ்வா...’ என்று ஒரு மிரட்டல் விட்டுக் காட்டுக்குள் ஓடின.

நீரதிகாரம் - 65 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“பயந்து ஓடுது ஆன... போங்க, போங்க...” பின்னிருந்து கூட்டம் உற்சாகம் காட்டியது. ஈரமாய் இருந்த தன் தொப்பியைக் கையில் எடுத்து, மீண்டும் அணிந்தார் டெய்லர். என்ன நடக்கப்போகிறதென்று தெரியாத பதற்றம் அவரை நிலைகுலைய வைத்திருந்தது.

ராசுமாயனும் கூட்டாளிகளும் முன்னேறினார்கள். இரண்டு களிறுகள் சென்றாலும் மற்ற யானைகள் நகரவில்லை.

“எப்போ... இதெல்லாம் பொம்பள ஆனைக. குட்டியோட அம்மா, ஆத்தா, பெரியாத்தான்னு இருக்கும். இதுக குட்டிய விட்டுப் போறது கஷ்டம்தான்...” நமச்சிவாயம் சொன்னான்.

“நெருப்புக்கு அஞ்சும்... நீங்க போங்கப்பா...” மொக்கைமாயன் குரல் கொடுத்தார்.

“ஏய்... ஏய்...” என்று யானைக்கூட்டத்தை விரட்ட குரலெடுத்துக் கத்தியபடி தீப்பந்தத்தோடு திடீரென்று முன்னோக்கி ஓடினார்கள். யானைகள் திடுக்கிட்டு ஓடின. ஓடும் யானைகளைப் பார்த்துக் கூட்டம் உற்சாகமாகி, குழியை நோக்கி ஓடிவந்தது. யானைகள் பின்னகர, கூட்டம் முன்னகர்ந்தது. முட்டிமோதி, கூட்டம் குழிக்குள் இருந்த குட்டியைப் பார்த்தது. தும்பிக்கையை உயர்த்தி மேலே பார்த்துக்கொண்டிருந்த குட்டியின் பிளிறல் மனத்தைப் பிழிந்தது.

“சட்டுனு வழி விடுங்கப்பா... எல்லாரும் அவங்கவங்க வேலைக்குப் போங்க. பத்திருபது பேர் மட்டும் இருங்க...” புனல்வடிவ ஒலிபெருக்கியில் உத்தரவு கொடுத்தார் டெய்லர். யாரும் அசையவில்லை.

“சொல்றது கேட்கலையா?” மீண்டும் சத்தமிட, “தொர, ஆளுக்கு ஒரு மம்மட்டி வெட்டிப் போடச் சொல்லுங்க. குழிக்குப் பக்கத்துல சாய்மானமா வெட்டிக்கிட்டே போலாம்... தாய விட்டுப் பிரிஞ்சு தவதாயப்படுது குட்டி...” மாயன் சொல்ல, “பந்தம் புடிக்கிறவங்க அங்கேயே நில்லுங்க, பத்துப் பத்துப் பேரா, ரெண்டு பக்கமிருந்தும் பள்ளம் எடுத்துக்கிட்டு வாங்க...மெக், மத்தவங்கள அந்தக் கரைக்கு அனுப்பிடு. மொத்தமா வச்சிக்கிட்டு வேலை நடக்காது...” என்றார் டெய்லர்.

மெக்கன்சியும் லோகனும் வேலைத்தளத்தில் நின்றார்கள். இருவருக்குமே வேலையாள்கள் பயப்படுவார்கள். இருவருமே அதிகம் கடுமை காட்டுவார்கள். கட்டுப்படாமல் இருப்பவர்களுக்கு அடி உதையும் விழுந்திருக்கிறது என்பதால் கூட்டத்தில் பெரும்பகுதியினர் பிரிந்து அவரவர் வேலையைப் பார்க்கச் சென்றனர்.

இளம்வயதுப் பையன்களும் தங்களை இளம் வயதினராக நினைத்துக்கொண்டுள்ள மத்திம வயது இளைஞர்களுமாக மண்வெட்டிகளோடு வந்தார்கள். குழிக்குப் பக்கத்திலேயே மண்ணை வெட்டினார்கள். “ரொம்பப் பக்கத்திலேயே வெட்டுங்க. பத்தடி ஆழத்துக்குப் பக்கவாட்டுல வெட்டுனா கூடப்போதும், பாகனை உள்ள இறக்கி, குட்டியை மேலத் தூக்கி விட்டுடலாம். என்ன கணமிருக்கும்?” என்றார் டெய்லர்.

“கட்டாயம் மூணாளு கணமிருக்கும் தொர...” என்றார் மாயன்.

காட்டுப்பகுதிக்குள் சின்ன அசைவு வந்தாலும் சுதாரிப்பாகப் பார்த்து நின்றிருந்தார்கள் தீப்பந்தங்கள் வைத்திருந்தவர்கள்.

“டேய் சூதானமா இருங்கடே... ஆனைக குட்டிய விட்டுட்டு ரொம்ப தூரம் போவாதுக. ஏமாந்த நேரம் உள்ள பூந்துடுங்க...” கங்காணி ஒருத்தன் எச்சரிக்கை விடுத்தான்.

வாயில் வெற்றிலைச் சிவப்புடன் ரத்தினம் பிள்ளை, அப்போதுதான் ஓடோடி வந்தார்.

“கும்பிடுறேன் துரை... நான் கிளம்பிப்போன ரெண்டு நாளுக்குள்ள என்னென்னமோ நடந்துடுச்சி போலவே?”

“ஒன்னும் நடக்கலை பிள்ளை. போன காரியம் என்னாச்சுன்னு சொல்லுங்க.”

“லண்டன்ல இருந்து தூத்துக்குடிக்குக் கப்பல் வந்து சேர்ற தேதி இன்னும் உறுதியாகலையாம் துரை. கலெக்டர் துரையைப் பார்த்து, ‘கலெக்ட்ரேட் ஆளுகதான் தூத்துக்குடிக்குப் போகணும். பென்னி துரை அனுப்பற மிஷினுங்கள அம்மையநாயக்கனூர் வரைக்கும் கொண்டாந்து சேர்க்கறது உங்க பொறுப்புதான்’னு நீங்க சொன்னதா தகவல் சொல்லிட்டு வந்திருக்கேன். புராஜெக்ட் இன்ஜினீயருங்க தூத்துக்குடிக்குப் போறதாத்தானே எனக்குத் தபால் வந்ததுன்னு சொன்னார். நீங்க சீப் செக்ரட்டரிக்கு எழுதியிருந்த தபாலைக் காட்டினேன். சூப்பிரண்டெண்ட் இன்ஜினீயர் மெக்கன்சியைத் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கச் சொல்லித்தான் தகவல் சொல்லியிருந்தார். ஆனா மலையில் மூணே மூணு இன்ஜினீயருங்க, நாலஞ்சு ஓவர்சீயர்களை வச்சிக்கிட்டு வேலை செய்யறது ரொம்பக் கஷ்டம். இதில் மெக்கன்சி தூத்துக்குடி போயிட்டா மேல்மலையோட கால்வாய் வேலையும் சுரங்கம் வேலையும் நின்னுடும்னு மதுரா கலெக்டர் பொறுப்பில் இயந்திரங்கள் எடுத்துட்டு வந்தா உதவியா இருக்கும்ணு டெய்லர் துரை எழுதினதுக்கு, சீப் செக்ரட்டரி ஏற்பு கொடுத்துட்ட தபாலையும் காட்டுன பிறகுதான் கலெக்டர் துரை இறங்கி வந்தார். நம்ம புராஜெக்ட் ஆளுகள பாத்தாலே கடுகடுன்னு ஆயிடுறாரே கலெக்டர் துரை, என்ன காரணம் துரை?”

“இப்போ அதெல்லாம் யோசிக்க நேரமில்லை. இந்தக் குட்டிய மேல தூக்க என்ன வழின்னு பாருங்க.”

கதை கேட்கலாம் என்று காது அரிப்புடன் வந்திருந்த ரத்தினம் பிள்ளைக்கு ஏமாற்றமாக இருந்தாலும், தான் கதை சொல்ல நிறைய தகவல்கள் சேகரிக்கும் சூழல் இருப்பதைப் பார்த்து சுவாரசியமானார்.

கன்று விழுந்திருந்த குழிக்கு அருகில் இன்னொரு குழி வெட்டிக்கொண்டிருந்தவர்களின் அருகில் சென்றார். “வேகமா போடுங்கடா, மண்வெட்டி வலிக்குதுன்னு சொல்லுதா?” என்று குரல் கொடுத்துவிட்டு, குனிந்து குழிக்குள் கிடந்த கன்றைப் பார்த்தார். “அடடா, ரெண்டு, மூணு மாத்தைய குட்டியா இருக்கே?” என்று சொல்லிவிட்டு, தீப்பந்தம் பிடித்துக்கொண்டிருந்தவர்களுக்கு அருகில் வந்தார்.

“பெத்த பிள்ளையா, தன் உசுரான்னா, ஆன கூட தன் உசுருதான்னு நெனைக்குது பாருங்கடா” என்று ஒரு கண்டுபிடிப்பை விவரித்தார்.

“அந்தா கெளைக அசையுது பாருக, அங்க நின்னுதான் ஆத்தா ஆன இன்னும் பாத்துக்கிட்டு இருக்கு, எங்கயும் போவல” என்று தீப்பந்தம் பிடித்திருந்த ஒருவன் சொன்னவுடன், பிள்ளை திடுக்கிட்டார். “சூதானமா பிடிங்கடா...” என்று சொல்லிவிட்டுத் தள்ளி நடந்தார்.

“பெரியவுக எங்க இருக்காங்க... யாரும் ஒன்னும் செஞ்சிடலையே?” பதறியபடி ஓடிவந்தாள் கண்ணகி கோயில் பூசாரி தேவந்தி.

நெற்றியில் நீறுபூசி, நடுவில் குங்குமம் வைத்து, கெண்டைக்காலுக்குமேல் உயர்த்திக்கட்டிய நூல்புடவையும், தண்டையணிந்த கால்களுமாக வந்து நின்ற தேவந்தியைப் பார்த்தார் டெய்லர்.

“கும்பிடுறேன் தம்புரான். பெரியவக குழிக்குள்ள விழுந்துட்டாகன்னு கேட்டவுடனே குலை நடுங்கிப்போச்சு. அதான் அப்படியே ஓடியாந்தேன். காணியில ஆனவெரட்டி ஒருத்தர் இருக்காரு. உடையானோட மகன் மனவேடன் ராஜா. பெரியவங்களுக்கு ஒன்னுன்னா ஓடியாந்துடுவாங்க... நான் போய்ப் பாக்க அனுமதிக்கணும்.”

“கோயில் பூசாரிதானே நீ?”

“ஆமாம் தம்புரான்...”

“எங்க பார்த்திருக்கேன்னு யோசிக்கிறேன்.”

“பெரிய இன்ஜினீயர் தொரையைப் பாக்க தேக்கடிக்கு வந்தனே தொர?”

“ஆமாம்... ஆமாம்... காணிங்கள கூப்பிட்டுக்கிட்டு வந்த. மன்னானைக் கூப்பிட ஆள் போயிருக்கு. அதென்ன பேர் சொன்ன, மனவேடன் ராஜாவா? அது காலிகட் சாமரின் குடும்பத்து சின்ன ராஜா பேராச்சே? இப்போ கும்பகோணம் சப் கலெக்ட்ரா இருக்காரே?”

“அட அம்மையே... அதெல்லாம் தெரியாதுங்க தொர. மன்னான்காணி உடையானுடைய மகன். நான் ஆசையா ராஜான்னு கூப்பிடுவேன்.”

“நேத்து மதியத்தில் இருந்து வேலை கெட்டுப்போச்சு. என்ன செய்யறதுன்னு சொல்லு” என்று டெய்லர் சொன்னவுடன், தேவந்தி பாய்ந்து குழிக்கருகில் ஓடினாள்.

குட்டி குழிக்குள் சுற்றிச் சுற்றி வந்து பிளிறுவதைப் பார்த்தவளுக்கு அடிவயிறு கலங்கியது. “எண்ட கண்ணகி அம்மையே, இந்தக் காட்டுல இருக்க ஒவ்வொரு ஜீவராசிக்கும் நீதான் காவல். பெரியவகள எப்படியாவது வெளிய கொண்டு வந்துடு அம்மே...” என்று தரைபடிந்து வணங்கினாள்.

புதிதாக ஒரு பெண் வந்து டெய்லரிடம் பேசியதையும், அவள் வேகமாய் குழிக்கருகில் வந்து வணங்கி நின்றதையும் பார்த்த தீப்பந்தம் பிடித்திருந்தவர்கள், பந்தத்தை இறக்கிப் பிடித்து அருகில் வந்து வேடிக்கை பார்த்தார்கள். அறிவுக்கூர்மைமிக்க யானைகள் கணநேரம் கிடைத்த இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் வேகநடையில் வந்து பின்னாலிருந்த நபரைத் தும்பிக்கையால் தூக்கி தூர எறிந்தன. யானைகள் திரும்ப வந்துவிட்டதை உணர்ந்தவுடன் கையிலிருந்த தீப்பந்தத்தைத் தூர எறிந்துவிட்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்கள் வேலையாள்கள். தன்னை நோக்கி யானைகள் வருவதைப் பார்த்த தேவந்தி, பாய்ந்து சென்று ஓடியவர்கள் எறிந்து சென்ற இரண்டு தீப்பந்தங்களைக் கையில் எடுத்தாள். அதற்குள் தாய் யானை பள்ளத்திற்கருகில் வந்து குட்டியை எட்டிப் பார்த்துக் குரல் கொடுத்தது. தாயின் குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த கன்று, வலியுடன் பிளிற, தாயும் மண்டியிட்டு குழிக்குள் இறங்குவதைப்போல் உட்கார்ந்தது. ஒரு கணமும் தாமதிக்காமல் யானையின் முதுகுமீது கால் வைத்துப் பாய்ந்தோடி அதன் முதுகில் அமர்ந்தாள் தேவந்தி. அவள் கையிலிருந்த தீப்பந்தம் யானையை அச்சுறுத்த, அதிர்ந்தெழுந்தது.

“எல்லாம் தள்ளிப்போங்க, நா பெரியவங்கள தூரமா கூட்டிட்டுப் போறேன், நீங்க சீக்கிரமா குட்டிய வெளிய தூக்குங்க. பயந்துகெடக்குது பச்சப்புள்ள” என்ற தேவந்தி, யானையின் காதைப் பிடித்திழுத்தாள். யானை குழியை விட்டு முன்னகர்ந்தது. மற்ற யானைகளும் தேவந்தியின் யானையைப் பின்தொடர்ந்தன.

யானையின்மீது அமர்ந்து தீப்பந்தத்தோடு செல்லும் பெண்ணைக் கூட்டம் வியந்து பார்த்தது.

- பாயும்