மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 72 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

டெய்லர், ராயல் இன்ஜினீயரிங் கல்லூரியில் எங்களுக்குப் பேட்ரன் போலிருந்த மதர் ரோஸ் அவர்களைச் சென்று பார்த்தேன். மதரின் ஆரோக்கியம் முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது.

‘டியர் டெய்லர்,

இன்னும் முப்பது நாள்களில் மேல்மலையில் இருப்பேன். தூத்துக்குடிக்குக் கப்பலில் வந்த இயந்திரங்கள் இப்போது கூடலூர் வந்தடைந்திருக்கும். கூடலூரிலிருந்து தேக்கடி வரை வயர் ரோப் பாதை அமைப்பதற்கான இயந்திரங்களை எடுத்துப் பாதையமைக்கும் வேலையை நான் வருவதற்குள் நீங்கள் நிறைவு செய்துவிட முடியும். முள்ளியபாஞ்சன் நதியில் தடுப்புச் சுவரெழுப்பி நீரைத் தேக்கும் வேலை முடிந்துவிட்ட செய்தியும் அறிந்தேன். படகுகளின் மூலம் இயந்திரங்களை மேல்மலைக்குக் கொண்டு செல்ல நாம் முயல்வோம்.

லண்டனுக்கு வந்த பயணத்தின்போது சூயஸ் கால்வாயில் சிறப்பாகப் பயன்படுத்தப்படும் லாக் சிஸ்டத்தைப் பார்த்தேன். தேக்கடியில் இருந்து மேல்மலைக்கு கனமான இயந்திரங்களை நாம் அப்படித்தான் கொண்டு செல்ல முடியும். சிற்றாறு என்பதால் நமக்குச் சிரமங்கள் ஏற்படலாம். ஒரே அளவான நீரோட்டமும், ஆண்டு முழுவதும் வெள்ளப்பெருக்கும் முள்ளியப்பாஞ்சனில் இருப்பதில்லை என்பதும் நமக்குள்ள இடர்ப்பாடுகள். ஆனாலும் பரவாயில்லை. பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ள மாதங்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். அந்தச் சின்னஞ்சிறு நதிதான் நமக்கு மேல்மலையில் கிடைத்துள்ள முதன்மையான வழி. பெரிய இடர்ப்பாடுகளின்றி லாக் சிஸ்டத்தைச் சின்னஞ்சிறிய முள்ளியபாஞ்சனில் எப்படிப் பயன்படுத்த முடியும் என்று ஆராய்ந்து வருகிறேன்.

நீரதிகாரம் - 72 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

எப்போதும் பதற்றமாகவே இருப்பாய் என்பதை அறிவேன். ஜார்ஜி, குழந்தைகளைக் கொடைக்கானலில் விட்டுவிட்டு வந்ததைப் போலவே, மேல்மலையும் எனக்கு ஏக்கம் தருகிறது. நானும் பதற்றமாகத்தான் இருக்கிறேன். அணை கட்டுமிடத்தில் பாறையில் பள்ளம் இருப்பதைப் பற்றிக் கவலையோடு எழுதியிருந்தாய். உன் கடிதம் படித்தவுடன் எனக்கும் அப்படித்தான், படிக்கும்போதே கவலை எழுந்தது. செய்த ஆய்வுகளையெல்லாம் மீறி, பாறையில், அதுவும் முப்பது, நாற்பது அடி அகலத்திற்கு பள்ளம் இருக்கிறது என்ற செய்தி கவலையாக இருந்தது. உனக்குத் தெரியுமா டெய்லர்? நான் இந்தியாவுக்கு என்னுடைய 19 வயதில் வந்தேன். முதல் பதினெட்டு மாதங்கள் சின்னச் சின்ன வேலைகள் பார்த்தேன். பிறகு பொதுப்பணித்துறையில் பணியமர்த்தப்பட்டேன். நார்த் ஆற்காடு, சேலம், பெங்களூர் என்று வெவ்வேறு இடங்களில் பணியில் இருந்தாலும், பெரியாறு புராஜெக்ட்டோடு வேலைக்கு வந்த இரண்டு, மூன்று வருஷங்களிலேயே இணைக்கப்பட்டேன். நான் வேறு வேறு ஊர்களில் பணியில் இருந்தாலும், கம்பம் பள்ளத்தாக்கில் மேல்மலை ஆய்வுக்காக டெபுடேஷனிலேயே பல வருஷங்கள் சென்றிருக்கிறேன்.

இந்தியாவில் இன்னும் எனக்கு எட்டாண்டுகள்தான் பணி இருக்கிறது. 55 வயதில் ஓய்வுக்குப் பிறகு லண்டன் திரும்பிவிடுவேன். இப்போது யோசித்துப் பார்த்தால், என் பணிக்காலம் முழுவதும் பெரியாறு புராஜெக்ட்டின் சாத்தியம் பற்றி மட்டுமே நான் ஆய்வு செய்திருக்கிறேன். இப்போது அணை கட்டும் வேலையும் தொடங்கிவிட்டது. தொடக்கத்தில் இருந்து இந்தப் புராஜெக்ட் கொடுக்கும் சவால்களை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. சாதாரண, குறைந்த ஆயுள் கொண்ட மனிதனாகிய என் வாழ்நாளில் பெரியாறு அணை மட்டுமே நிறைந்திருப்பதைப் புரிந்துகொள்கிறேன். மீதமுள்ள நாள்களும் பெரியாறு தரப்போகும் சவால்களைத் தீர்ப்பதுதான் வாழ்க்கையாக இருக்கப் போகிறது. ஒருவகையில் நான் மகிழ்கிறேன். என்னுடைய வேகமும், முரட்டுத்தனமும் நீருடன் நிகழ்த்தும் யுத்தத்தால் வருகிறதென்று இப்போது புரிகிறது. உன் கடிதம் சில நிமிடங்களுக்குத்தான் கவலையைக் கொடுத்தது. உடனே நான் உற்சாகமும் உத்வேகமும் நிரம்பியவனாகிவிட்டேன்.

ஆம் டெய்லர், மை டியர், யோசித்துப் பார். கடினமான பாறையின் மேலே நாம் அணைக்கான கட்டுமானத்தைத் தொடங்கியிருப்போம். இப்போது? கடினப் பாறையை மேலும் உறுதிப்படுத்தி, அடித்தளம் அமைக்க வாய்ப்பு அமைந்திருக்கிறது. பாறையின் பள்ளத்தை, உடைந்த கற்களால் மட்டும் நிரப்பி நாம் அடித்தளத்தை அமைக்க வேண்டாம். கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்போவதைப் போலவே, சுண்ணாம்பையும் சுர்க்கியையும் சேர்த்து பாறையின் பள்ளத்தை நிரப்பிவிட்டோமானால், அடித்தளம் மேலும் உறுதியாகும். பல நூறாண்டுகள் ஆனாலும் அணையின் அடித்தளம் பற்றிய கவலையே கிடையாது என்ற யோசனை தோன்றியவுடன் அடுத்த கப்பலிலேயே இந்தியா வந்துவிடக் கால்கள் பரபரக்கின்றன. பெரியாறு அணை, தனக்கு நேரக்கூடிய இன்னல்களை உணர்ந்து, முன்கூட்டியே ஒவ்வொரு இடர்களையும் தானே களைந்து, தன்னைத்தானே கட்டிக்கொள்வதைப்போல் உணர்கிறேன். தேவனின் கிருபை ஸ்தூல வடிவம் கொள்வது இப்படியான வழிகளில்தானே? கவலைப்படாமல் இரு. நான் வருவதற்குள் ஜூன் மாத சீசன் தொடங்கிவிடும். நீங்களெல்லோரும் மேல்மலைக்குச் சென்றிருப்பீர்கள். நீ மேல்மலைக்குச் செல்வதற்குள் வயர் ரோப் பாதையை அமைத்துவிடு. குறைந்தது ஒன்றிரண்டு டன் சுண்ணாம்பையாவது அணைத் தளத்திற்குக் கொண்டு சேர்த்துவிடு. பருவம் நமக்குச் சாதகமாக இருந்தால் இரண்டு வாரத்திற்குள் நாம் பள்ளத்தைச் சரிசெய்துவிடலாம்.

நீரதிகாரம் - 72 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

இயந்திரங்களை வாங்குவதற்கு இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. இண்டியா ஆபீசுக்குத் தினம் சென்றேன். ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு ஏஜெண்டிடம் வாங்கிக் கொடுத்த இண்டெண்டை வைத்துத் தரமான பொருள்களை யார் கொடுப்பார்கள், யார் நேரத்துக்குப் பொருள்களை அனுப்பிவைப்பார்கள் என்று சரிபார்த்துச் சொல்ல, ஒரு குழுவே இருந்தது. இந்தியாவுக்கு இன்ஜினீயரிங் பொருள்களை வாங்கியனுப்பும் ஒவ்வொரு ஏஜெண்டின் முழு வரலாற்றையும் அலசி ஆராய்ந்துதான் ஏஜெண்ட்களைத் தேர்வு செய்திருக்கிறது இண்டியா ஆபீசு. பார்லிமெண்ட் மெம்பர்ஸ் அவர்களுக்கு வேண்டியவர்களை உள்ளே நுழைக்க முயன்றதையும் கவனமாகத் தவிர்த்திருக்கிறோம். இப்படியாகத் தினம் அலைந்து, இறுதியாக இயந்திரங்களை வாங்கிப் பொருள்களைக் கப்பலில் அனுப்பியாயிற்று. இன்னும் ஒரு பகுதி மட்டுமே அனுப்ப வேண்டும். இரண்டொரு நாளில் அவையும் கப்பலில் ஏற்றப்படும். நமக்கு உடனடியாகத் தேவைப்படும் பாறைகளில் துளையிடும் இயந்திரங்கள் போன்றவை, நான் இண்டியா வந்த பிறகுதான் இங்கிலாந்திலிருந்து கிளம்பும். அதுவரை சமாளிப்போம்.

டெய்லர், ராயல் இன்ஜினீயரிங் கல்லூரியில் எங்களுக்குப் பேட்ரன் போலிருந்த மதர் ரோஸ் அவர்களைச் சென்று பார்த்தேன். மதரின் ஆரோக்கியம் முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது. படுக்கையில்தான் இருக்கிறார். அவரின் அங்கங்கள் செயலிழந்துவிட்டன. நினைவு மட்டும் வெகு கூர்மையாக இருக்கிறது. கூர்மையான நினைவுகளும் செயலிழந்த அங்கங்களுமாக இருப்பது எவ்வளவு துயரம் தெரியுமா டெய்லர்? மதர் ரோஸ் என்னைப் பார்த்தவுடன், “ஜான்...” என்று கட்டித் தழுவ கைகளை நீட்டுகிறார். நினைவுகளில் அவர் கரங்கள் நீளுகின்றன. நிஜத்தில் மேலுயர்த்த முடியாத கரங்கள் அவரை வேதனைகொள்ள வைத்தன. “மை சன்... மை சன்” என்றழைத்து, என் நினைவுகளின் மூளையில் என்றுமே நினைத்துப் பார்க்காமல் கிடந்த நினைவுகளைப் பேச்சில் ஒளிரச் செய்தார். என்னுடன் தேர்வான ஆறு இன்ஜினீயர்களின் பெயர்கள்கூட நினைவு வைத்திருக்கிறார். ‘பிரௌன்லோவுடன் உன் பிணக்குகள் தீர்ந்துவிட்டனவா’ என்று கேட்டார். ‘இப்போதுதான் உறுதியாகியிருக்கிறது’ என்றவுடன், அவர் முகத்தில் சிரிப்பு தெரிந்தது. சிரிப்பு உடனே கவலையாகவும் மாறியது.

இந்தப் பயணத்தில் மதர் ரோஸைச் சந்தித்தது என்றும் நினைவில் நிற்கும். மதர், தன் இறுதி யாத்திரைக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறார். எல்லோரும் செல்லப்போகும் வழிதான் என்றாலும் அவருக்கு நாள் குறிக்கப்பட்டது போலிருக்கிறது. தேவ கிருபையால் அவர், தன் அன்பு ஜானை அங்கு சந்திக்க வேண்டும்.

கப்பலுக்குச் செல்லும்முன், இந்தக் கடிதத்தை உனக்கு அனுப்பிவிட்டுக் கிளம்ப விரும்பினேன். நான் முந்துகிறேனா, கடிதம் முந்துகிறதா பார்ப்போம்.

அன்பு,

ஜான் பென்னிகுக்.’

பென்னியின் கடிதத்தைப் படித்த டெய்லருக்கு மனம் கனத்தது. வாழ்க்கை தரும் அனுபவத்தில் இருந்து ஒருவர் தன்னை எவ்விதம் ஓர் உன்னதமான ஆன்மாவாக மாற்றிக்கொள்ளலாம் என்பதற்குப் பென்னியே சிறந்த உதாரணமென்று நினைத்தார். அணை கட்டுமிடம் பற்றியிருந்த கவலை மறைந்ததில் டெய்லருக்கு உடலும் மனமும் லேசானது.

அம்மையநாயக்கனூரில் ஏற்றிவிட்ட பொருள்களின் முதல் வண்டியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இந்த நேரத்தில் பென்னியின் கடிதம் வந்ததை நன்முகூர்த்தமாக எண்ணினார். பென்னி சொல்லியிருந்த சுண்ணாம்பு, சுர்க்கிக்கான ஏற்பாடுகளையும் விரைந்து செய்ய வேண்டுமென்ற வேகம் பிறந்தது. லோகனிடமும் மெக்கன்சியிடமும் கூடலூரில் தற்காலிகமாகக் கட்டப்பட்டிருந்த கிடங்கில் இயந்திரங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கச் சொல்லிவிட்டு, தான் குருவனூத்துச் செல்வதாகச் சொல்லிக் கிளம்பினார்.

“உதவிக்கு ஆள்கள் வேண்டாமா டெய்லர்?”

“இப்போதைக்குத் தேவைப்படாது லோகன், நீ கவனமா இங்கேயே இரு...” என்று சொல்லி, குதிரையின் அடிவயிற்றை, முழங்காலில் அணைந்தார். குதிரை கிடங்கிருந்த இடத்தின் சுற்றுச் சுவரைக் கடந்து, பின் வேகமெடுத்து, குருவனூத்து நோக்கிச் சென்றது.

குருவனூத்தை நோக்கிக் குதிரையில் விரைந்து கொண்டிருந்த டெய்லருக்கு, முன்பு பார்த்த பெரியவரின் நினைவு வந்தது. கட்டுமானத்திற்குத் தேவையான நல்ல சுண்ணாம்பைத் தேடிச் சென்றபோது, ஒரு சுண்ணாம்புக் குன்றைக் காட்டியதும், அந்தச் சுண்ணாம்பால் கட்டிய கோட்டையின் வலிமையைச் சுட்டிக்காட்டியதும் துல்லியமாக நினைவுக்கு வந்தது.

பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவுக்கு வருகையில் தொடக்கக் காலங்களில் துபாஷிகளை நம்பித்தான் இருந்தார்கள். துபாஷிகள், தாங்கள் நினைப்பதை நடத்திக்கொள்ள சில செய்திகளை விரிவாகச் சொல்லாமல் மறைப்பது, சில தகவல்களைத் தவறாகச் சொல்வது எனப் பிரச்சினைகள் எழுந்தன. துபாஷிகளின் அதிகாரம் கூடியதோடு பெரும் குழப்பங்களும் சூதும் நிறைந்தன. பிரிட்டிஷார் வசமிருந்த சென்னப்பட்டனம் என்ற மெட்ராஸ் பிரசிடென்சி கொஞ்ச காலம் பிரெஞ்சு வசம் சென்றதற்கும் துபாஷிகளின் தப்புந்தவறுமான தகவல் பரிமாற்றமே காரணம். பிறகுதான் கிழக்கிந்தியக் கம்பெனி விழித்துக்கொண்டது. இந்தியாவுக்குப் பணிபுரிய வருபவர்கள் இங்கு வேலையில் சேர்ந்தவுடன் அந்தந்தப் பகுதியின் மொழியைக் கட்டாயம் படிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

டெய்லரால் சர்க்கார் நடத்திய வெர்னாகுலர் எக்ஸாமில் இரண்டு முறை வெற்றிபெற முடியவில்லை. விடுப்பு கொடுத்து, தேர்வில் வெற்றி பெற்ற பிறகே பணிக்குத் திரும்பலாம் என்ற கட்டாயம் வந்தபிறகுதான் மிகுந்த சிரமத்திற்கிடையில் மூன்றாவது முறை தேர்ச்சி பெற்றார். பேசும் உள்ளூர் ஆளின் உதட்டசைவை வைத்தே டெய்லர் சொற்களை யூகித்தறிவார். மெட்ராஸில் ஓரளவுக்குச் சாத்தியப்பட்ட இப்பழக்கம் மதுரையில் செல்லுபடியாகவில்லை. கம்பம் பள்ளத்தாக்கின் மனிதர்கள் மலைமக்களைப்போல் சொல்லுச்சரிப்பை உதட்டிற்குக் கடத்தாமல் நாவிலேயே முடித்துக் கொள்கிறார்கள். அவர்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதில் டெய்லருக்குச் சிரமங்கள் இருந்தன. இரண்டாண்டுக் காலமாகக் கம்பம் பள்ளத்தாக்கிலேயே இருப்பதால் உதட்டசைவை வைத்துப் புரிந்துகொள்ள ஓரளவு பழகியிருந்தார்.

ஊருக்கு நடுவே இருந்த பெரிய அரச மரத்தடியில் பெரியவர் இருப்பாரா என்ற எண்ணம் ஓடியது. இருக்க வேண்டுமென்று மனம் விரும்பியது.

தூரத்திலிருந்து பார்க்கும்போதே அரச மரத்தடியில் ஒருவரும் தென்படவில்லை. டெய்லரின் மனம், தன் எதிர்பார்ப்பு பொய்ப்பதை ஏற்க முடியாமல் சோர்ந்தது. இருந்திருந்தால் நல்லது என்று மீண்டும் பிடிவாதத்திற்குத் திரும்பியது. அரச மரத்தின் நிழல் படருமிடத்தில் இருக்கும் நீண்ட கருங்கல் சுமைதாங்கியில்தான் பெரியவர் படுத்திருப்பார். சுமைதாங்கிக் கல் காலியாகக் கிடந்தது. கடிவாளத்தைப் பிடித்ததில் குதிரை நின்றது. சேணத்தில் கால்வைத்துக் கீழே குதித்தார். ஒருவரையும் உடன் அழைத்து வராமல் போனது சிக்கலென்று புரிந்தது. எங்கிருக்கிறார் என்று தேடிப் பார்க்கவாவது உதவிக்கு வேண்டுமே?

கோடை தீவிரம் கொண்டிருந்த நாள். வெயில் தன் கட்டுப்பாட்டுக்குள் ஊரை வைத்திருந்தது. பசிய புற்களிருக்கும் இடத்தில் குதிரையை விடுவதற்குச் சுற்றிலும் பார்த்தார் டெய்லர். புற்கள் காய்ந்து ஈர்க்குச்சிகளாய் நின்றிருந்தன. சரி, நிழலிலாவது நிற்கட்டும் என்று சொல்லி, சுமைதாங்கிக் கல்லின் ஓரத்தில் குதிரையை விட்டு எதிரில் இருந்த மலையைப் பார்த்து நின்றார்.

மலைக்குப் பக்கவாட்டுப் பகுதியான இங்கிருந்துதான் வயர் ரோப் மூலம் சுண்ணாம்பை ஏற்றித் தேக்கடிக்குக் கொண்டு செல்ல வேண்டும். மரக்கம்பங்கள் நடப்பட்டுவிட்டன. வயர் ரோப்பும் இரும்புச் சாமான்களும் மாட்டு வண்டியில் இன்று மாலைக்குள் வந்துவிடும். சுண்ணாம்பை மலைமேல் ஏற்றிவிட்டால் வேலையைத் தொடங்கிவிடலாம். சீசன் சரியான நேரத்தில் தொடங்கும். சீசன் தள்ளிப் போவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

டெய்லர் மலையைப் பார்த்துக்கொண்டே அரச மரத்தைச் சுற்றி வந்தார். அழுக்குப் படிந்த வேட்டி போர்த்தப்பட்டிருக்க, கைகாலைச் சுருட்டிக்கொண்டு ஓர் உருவம் முடங்கிக் கிடந்தது. டெய்லருக்கு முகம் மலர்ந்தது. உள்ளுக்குள் நல்லுணர்வின் மலர்ச்சியெழுந்தது. அருகில் சென்று கையில் இருந்த கோலால் தரையில் தட்டினார். அசைவில்லை. வேறு வழியின்றி குனிந்து, முகத்தின் மேலிருந்த வேட்டியை லேசாக விலக்கினார். டெய்லருக்குச் சந்தோஷம் பிடிபடவில்லை. பெரியவர்தான். ஆழ்ந்த உறக்கத்திலிருந்தார். வாய் பிளந்து கண்கள் மேலேறி அவரின் தூக்கம் ஏறக்குறைய இறுதி உறக்கம் போலிருந்தது. தொந்தரவு செய்யத் தயக்கமிருந்தாலும், அவரின் இறுதி உறக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் உற்சாகத்துடன் எலும்பாய் இருந்த அவரின் தோளைப் பிடித்து மெல்ல உலுக்கினார்.

திடுக்கிடல்கள் எதுவுமின்றி, விழி திறந்தவர் தன் முன்னால் நிற்கும் வெள்ளைக்கார துரையை ஊன்றிப் பார்த்தார். நிதானமாக மீண்டுமொரு முறை விழி மூடித் திறந்து நினைவுகளைத் திரட்டியெடுக்கும் தீவிரத்துடன் அவர் விழிகள் இமைகளுக்குள் சுழன்றன. தன் கட்டுப்பாட்டிற்குள் இருந்து தங்களை விடுவித்துக்கொண்ட அவயங்களை அவ்வப்போது மன்றாடித்தான் ஒத்துழைக்கக் கோருவார் போலும். இப்போதைய கோரிக்கைக்கு உடன்பட்டுக் கால் பெருவிரல் அழுத்தம் பெற்று ஊன்றி நிற்க, முழங்கை ஊன்றி, எழுந்து உட்கார்ந்தார்.

உட்கார்ந்தவர் டெய்லரை ஏறிட்டுப் பார்க்கவில்லை. குனிந்து தரையைப் பார்ப்பதும், பிறகு நிமிர்ந்து மலையைப் பார்ப்பதுமாக இருந்தார்.

டெய்லர் தன் அங்கியின் பாக்கெட்டுக் குள்ளிருந்து நீண்ட சுருட்டொன்றை எடுத்துப் பற்ற வைத்தார். புகையிலை வாசத்திற்குப் பெரியவரின் விழி விரிவதைப் பார்த்த டெய்லர் அவருக்கும் ஒரு சுருட்டைக் கொடுத்தார். நெருப்புச் சுருணையின்றிப் பற்ற வைக்கும் டெய்லரின் விந்தையை மாயமென நினைத்தார் பெரியவர். ஆர்வமாய் வாங்கி வேகமாய் வாயில் வைத்து முதல் புகையை வெளியேற்றும்போது பெரியவரின் முகத்தில் மந்தகாசம் தெரிந்தது. இருவரும் நிதானமாகப் புகையை வெளியேற்றினார்கள்.

``சுருட்டுப் புடிக்குமா?’’

“புத்திய மயக்கிடுதே, மோகினிப் பிசாசு மாதிரி.”

“மோகினிப் பிசாசைப் பாத்திருக்கீங்களா?”

“இதெல்லாம்தான் பிசாசுங்க... ” சுருட்டைக் கையிலெடுத்துப் பார்த்துக்கொண்டே சொன்னார் பெரியவர்.

சுருட்டை வேகவேகமாக இழுத்துப் புகையை வெளியேற்றியவரின் விழிகள் காலத்தின் மறைந்தோடிய நாள்களுக்குள் புதையுண்டன.

டெய்லருக்குப் பெரியவரின் மெலிந்த உடல் ஆலமரத்தின் விழுதினைப் போலிருந்தது. உறுதியும், காலத்தினை உறிஞ்சிக் குடித்த தீரமும் இருக்கும் ஆலம் விழுதில். பெரியவரின் உடலில் கூடுதலாக வாழ்வின் கதைகளும் இருந்ததால் மினுமினுப்புக் கூடிக் கிறக்கம் தந்தது.

“நான் ஏழெட்டு வயசு வரைக்கும் நடக்காம இடுப்புல இழுத்துக்கிட்டுத் திரிஞ்சேன். எங்க அய்யா என்னைய கீழ உட மாட்டாரு. எங்க போனாலும் தோள்ல தூக்கிப் போட்டுக்கிட்டுப் போவாரு. நடந்திருந்தா, கையைப் புடிச்சிக்கிட்டு அவரோட மொழங்காலுக்குள்ளத்தானே கெடந்திருக்கணும். நடக்காததால அவரோட தோளுமேல ஒக்காந்துக்கிட்டு ஊரையே பாத்துக்கிட்டுப் போறதுக்குச் சௌகரியமா இருந்துச்சி. எல்லாப் பேரும் என்னைய நிமிந்து பாத்துத்தான் பேசணும், சிரிக்கணும். அப்பவே மண்டையில ஒரு கிறுக்கு ஏறிக்கிடுச்சி." பெரியவர் தனக்குள் உறைந்திருந்த காலத்தின் ஒரு பக்கத்தைத் திறந்துவைத்துப் பார்த்துப் பேசுவதாக நினைத்தார் டெய்லர்.

“அப்படி ஒரு நா அய்யா தோள்மேல என்னத் தூக்கிப் போட்டுக்கிட்டு நடக்கிறாங்க, நடக்கிறாங்க... தொலைதூரத்துக்கு நடக்கிறாங்க. என்ன கேட்டாலும் வாப்பேச்சுல. பதில் இல்ல. அய்யா மாதிரி நானும் கொஞ்சம் ரோசக்காரந்தானே? அந்த ரத்தம்தானே? ஒடனே, பக்கத்துல வந்த மரத்த தாவிப் பிடிச்சுக்கிட்டு, அய்யா தோள்மேல இருந்து மரத்துல தொங்கிட்டேன். கேக்குறதுக்குப் பதில் சொல்லலைன்னா கூட வர மாட்டேன்னு ஒரே புடிவாதம். அய்யாவுக்குக் கண்ணுமண்ணு தெரியாமக் கோவம் வரும். பக்கத்துல கெடந்த ஒரு தொவர விளார உடைச்சியெடுத்து என்ன போட்டு அடி அடின்னு அடிச்சாரு. விளாரு நார் நாராப் போச்சே தவிர என் கண்ணுல இருந்து சொட்டுத் தண்ணி வரல. வாயத் தெறந்து கூச்சலும் போடலை. கல்லுகணக்கா தொங்குனேன். ஆத்தாகிட்ட பால குடிச்சிக்கிட்டுக் கெடந்த வயசுல அந்த வீறாப்பு ரொம்ப அதிகம்னு இப்போ தோணுது.”

நீரதிகாரம் - 72 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

பெரியவர் எதற்கு இந்தக் கதையை ஆரம்பித்தார், எங்கு கொண்டு நிறுத்தி என்ன சொல்லப்போகிறார் என்று புரியாமல் டெய்லர் குழப்பமாய்ப் பார்த்தார்.

“எனக்குப் புரிஞ்சிக்கிற வயசில்ல... இந்தப் பாருங்க கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் தெரியுதா? ஒரு இடிஞ்சுபோன கோட்ட?”

டெய்லர் சுற்றியும் பார்த்தார்... ‘‘கோட்டை எங்கு இருக்கு? சின்னக் கட்டடம்கூட இல்லாத வனாந்தரம்.’’

“என்ன பாக்குறீங்க? அதான் கெடக்கே செங்கக்கல்லு... அதல்லாம் கோட்டையோட செவருதான்.”

டெய்லர் உற்றுப் பார்த்ததில் சரிந்து, இடிந்து போயிருந்த சுவரின் எச்சங்கள் ஆங்காங்கு தெரிந்தன.

“அந்தக் கோட்டையோட ஏஜெண்ட்டா பிள்ளையை சர்க்கார் போட்டுச்சு. அவரு சேது நாட்டு ராஜாவோட பிரதானியா இருந்தவரு. எங்க அய்யாவுக்கு அப்பா, என் பாட்டனாரோட பூர்வீகம் சேது நாடுதான். பயிர் பச்சை கட்டி நிக்க சொட்டு மழை இல்லன்னு பஞ்சம் பொழைக்கக் கூடலூருக்கு வந்திருக்காங்க. இங்க கையில் கெடைச்ச வேலையப் பாத்துக் கஞ்சி குடிச்சப்பதான் பிள்ளை இந்த ஊருக்கு வந்திருக்காரு. ஊர்ப்பாசம்தான் ஒட்டுவாரொட்டியாச்சே... எப்படியோ பாட்டன் மோப்பம் புடிச்சு பிள்ளைகிட்ட போய் ஒட்டிக்கிட்டு கோட்டையில வேலைக்குச் சேந்துட்டாரு. ஊர்ல அவருக்கு மகிம கூடிப் போச்சு. ஆனா என்னா ஒன்னுன்னா, அப்போ திருவாங்கூர் ராஜாவுக்கும் வெள்ளக்காரங் களுக்கும் கம்பம் கூடலூர் யாருக்குச் சொந்தம்னு பெரும் தாவா. ஒரு வழியா வெள்ளைக்கார தொரைங்களுக்குத்தான் சொந்தம்னு ஆன பொறவும் ஏலமலையைக் குத்தகை எடுத்திருந்த ஒரு செட்டியார் பிரச்சினையைக் கெளப்பிட்டாரு. ஒரு வழியா கோட்ட வெள்ளக்காரங்க கைக்கு வரவும் பாட்டனுக்கு மகிமைன்னா மகிமை... தல பெருக்கிற மகிம.

அப்படி இருக்கிற ஒரு நாள்ல திருவாங்கூர் ராஜா சேது நாட்டுக்கு யாத்திர போனாராம். காசிக்குப் போய் வர்றவங்ககூட சேது தேசத்து சமுத்திரத்துல கால நனைக்காமப் போவ மாட்டாங்களே, அப்படி ஒரு ஐதிகம் இருக்கே... அந்த மேனிக்கு இவங்க கெளம்பிப் போனாங்க. எப்பவும் நாஞ்சி நாட்டு வழியா போறவங்க அந்த வட்டம் மேல்மலை ஏறியெறங்கி கூடலூர் வழியா கீழ எறங்கிட்டாங்க. பிள்ளை, அய்யாவை ஒத்தாசைக்குக் கூடப் போச்சொன்னாரு. என்ன சண்டையோ சங்காத்தமோ தெரியல, போற வழியில தங்குன சத்திரத்துல இருந்த தண்ணியக் குடிச்சிருக்காங்க. பெருங்கொடும, ராஜாவத் தவிர கூட இருந்த குதிரக்காரன், பல்லக்குத் தூக்கி, காவக்காரன் மொத்தப் பேரும் செத்துப் போனாங்களாம். ராஜா நட்ட நடுக் காட்டுக்குள்ள இருந்த சத்திரத்துல ஒத்தையில நின்னிருக்காரு. எங்க பாட்டன், ரொம்ப ஒறப்பமான ஆளு. நீங்க ஒன்னும் வெசனப்படாதீங்க ராஜா, நான் ஒங்கள பத்திரமா ஊருக்குக் கொண்டு சேத்துடுறேன்னு சொல்லிட்டு, ஊருக்குள்ள ஓடிப்போயி பத்தாளுங்கள கூட்டிக்கிட்டு வந்திருக்காரு. ராஜாவுக்கு முகம் செத்துப்போச்சாம். பத்மநாபர் இப்படித் தன்னைத் தன்னந்தனியா தவிக்க விட்டுட்டாரேன்னு தெகைச்சு நின்னிருக்காரு.

எங்க பாட்டனார் கூட்டிக்கிட்டு வந்த ஆளுக காத்தாப் பறந்து நாலு கழிங்கள வெட்டிக் கொண்டாந்து அதுல தூளி கட்டி, ராஜாவத் தூக்கிட்டுப் போவத் தயாரா இருந்தாங்க. ராஜா வயசுல எளைப்புமில்ல, மூப்புமில்ல. ஆனா திருவாங்கூர் ராஜால்லாம் பாத்திருக்கீங்களா, கொஞ்ச வயசுலயே மூப்பாத் தெரிவாங்க. மடியில எமன வச்சிக்கிற மாதிரியே மூஞ்சி செத்துக்கெடக்கும்…” கேலி சொல்லி, தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டு பேச்சைத் தொடர்ந்தார் பெரியவர். “ஆனா, ரொம்ப அபிமானமா இருப்பாங்க. செத்துக் கிடந்த தன்னோட குடிகளப் பாத்துக் கண்ணீர் விட்டாராம் ராஜா. செத்துப்போனவங்களுக்கு மரியாதையா வழியனுப்பி வைக்கணும்னு சொல்லி, அவங்களோட பிரேதங்கள நல்லபடியா அடக்கம் பண்ணச் சொல்லுறாராம். வந்தவங்க எல்லாம் கையோட குழிய வெட்டி, ஒவ்வொருத்தரா இருவத்தஞ்சு பேரையும் அடக்கம் பண்ணி, முடிச்சப்புறம் ராஜாவை சமஸ்தானத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போவத் தயாரா இருந்திருக்காங்க. ஆனா ராஜா ஒத்துக்கலையாம். சேது யாத்திரையை முடிக்காம ஊருக்குப் போனா குத்தம் வந்துடும்னு சொல்லிட்டு யாத்திரையை முடிச்சாராம். பாட்டன் ஒரு கரைச்சாமி மாதிரியே ராஜாவைக் கொண்டுபோய் ஊர் சேர்த்ததுக்குப் பிரதி உபகாரமா, கூடலூர்க் கோட்டையோட ஏஜெண்டாக்கிட்டாராம்.

கோட்ட பாதுகாப்புன்னு நெனச்சி ராஜாக்கமார் கட்டுறாங்க தொர. ஆனா ஒவ்வொரு கோட்டையும் மனுச ரத்தம் குடிச்சிட்டுத்தான் ஊதிப் பெருத்து நிக்குதுக. கூடலூர்க் கோட்ட எங்க பாட்டனையும் முழுங்கிடுச்சி.”

பெரியவரின் விரல்கள் துடித்துக் கொண்டிருந்தன. காலத்திற்குள் தொலைத்த ஒன்றைக் காற்றில் தேடுவதுபோல் தவித்தன. டெய்லருக்குப் பெரியவரின் உணர்ச்சிப் பிரவாகத்தோடு ஓட முடியாவிட்டாலும் தன் அமைதி அவரின் துயரங்களுக்குக் கொடுக்கும் மரியாதையாக நினைத்தார்.

தண்ணீர் நஞ்சானது தற்செயலா, திட்டமிட்ட சதியா என்று ஆராய சமஸ்தானத்தின் படையே திரண்டு வந்தது. தண்ணீர் நஞ்சானது எப்படியென்று கண்டறிய முடியாமலேயே காலங்கள் ஓடின.

பெரியவர் வானைப் பார்த்தார். வெகு உயரத்தில் கழுகொன்று சிறகசைக்காமல் பறந்தது. அதன் கூர்மையான விழிகள் இலக்கின் தீவிரத்தில் இருந்தன.

“நீங்க வருவீங்கன்னு தெரியும் தொர. அதுக்குத்தான் காத்துக்கிட்டு இருந்தேன்.”

டெய்லருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“எப்படித் தெரியும்?”

“உள்ள இருக்க கொறளிக்கு என்னதான் வேலை, சொல்லிடுச்சி. இந்த ஆன்மா இத்தன நாள் இழுத்துக்கிட்டுக் கெடக்குதுன்னா அதுக்கு ஒரு காரணம் இல்லாமயா இருக்கும்? என்ன கைத்தாங்கலா கூட்டிக்கிட்டுப் போறீங்களா?”

பெரியவர் கேட்டவுடன் டெய்லர் பெரியவரின் கைப்பிடித்து நடக்க வைத்தார்.

எங்கு செல்லப் போகிறோம் என்பது பெரியவருக்கும் தெரிந்திருக்குமா என்பது டெய்லருக்குச் சந்தேகமாக இருந்தது.

“இதோ இந்தக் காடு மலையெல்லாம் புவனேந்திர ராசாவோடது. ஏலத்தோட்ட மொதலாளிங்க, திருவாங்கூர் ஆளுககூட கூடிக்கிட்டு, காணிக் கல்ல கொஞ்சம் கொஞ்சமா கூட்டிப்போட்டுப் பாதி மலையை முழுங்கிட்டாங்க. புவனேந்திர ராஜாவோட எடமும் அப்படித்தான் அவங்க கைய வுட்டுப் போச்சு...” என்று தட்டுத் தடுமாறி நடந்தார்.

மேல்மலையை ஒட்டியிருந்த கோட்டையின் சிதிலங்களுக்கு மத்தியில் இருந்த ஓரிடத்திற்குப் பெரியவரின் கால்கள் விரைந்தன. கால்களில் முள்ளும் கல்லும் குத்துகின்றன என்பதை அவர் உணரவே இல்லை. டெய்லருக்கு முழங்காலளவு நீண்டிருந்த பூட்ஸைத் தாண்டி முள் கீறி, ரத்தம் கசிந்தது.

சின்னக் குன்றின் வெளிப்பக்கம் கடந்து அழைத்துச் சென்ற பெரியவர் ஓரிடத்தில் நின்றார். முன்னால் வந்த டெய்லர் வியந்தார்.

ஆங்காங்கு செங்கல் குவியல்களாகக் கிடந்தன. தூரத்தில் ஓரிடத்தில் இரண்டு குன்றளவு செம்மண் குவியல் இருந்தது.

“இந்த மண்ணு எல்லாப் பள்ளத்தையும் ரொப்பிடும். பெத்தவ புள்ளய அணைச்சுக்கிறாப்பல பாற இந்த மண்ணுகூட ஒன்னுக்குள்ள ஒன்னாச் சேந்துடும். தண்ணியில சம்பாதிச்ச பாவத்த தண்ணியிலதான் கரைக்கணும் தொர?” சொல்லிவிட்டு, டெய்லரை எதிர்பார்க்காமல் தனித்து நடந்தார் பெரியவர்.

பிரமிப்பிலிருந்து விடுபட முடியாமல் நின்றார் டெய்லர்.

- பாயும்