லைஃப்ஸ்டைல்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
Published:Updated:

2K kids: உனக்கு சரினு படுறதுதான் சரி! - முதிய தம்பதி கற்றுக்கொடுத்த பெண் முன்னேற்றப் பாடம்

முதிய தம்பதி கற்றுக்கொடுத்த பெண் முன்னேற்றப் பாடம்
பிரீமியம் ஸ்டோரி
News
முதிய தம்பதி கற்றுக்கொடுத்த பெண் முன்னேற்றப் பாடம்

க.ஜீவபாரதி, ஓவியம்: ஜீவானந்தம்

படித்த குடும்பத்தினரே தங்கள் வீட்டுப் பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் போது, ‘எவ்ளோ கஷ்டப்பட்டாலும் இதுதான் விதி, இதைத்தான் ஏத்துக்கணும், பொறுத் துப்போ... சரியாகிடும்’ என்று அவர்களை மீண்டும் அந்த நரகத்துக்குள் தள்ளும் நிலைதான் இன்றும் உள்ளது. இந்த நிலையில், புகுந்த வீட்டில் கொடுமைக்கு உள்ளான தன் பேத்தி யிடம், ‘நீ வெளியேறி வா, நாங்க பார்த்துக்குறோம்’ என்று சொல்லி உறுதுணையாக நின்ற அந்தத் தாத்தாவும் பாட்டியும் அவர்களின் பேத்திக்கு மட்டுமல்ல... எனக்கும் தந்திருக்கும் தைரியம் நிறைய நிறைய..!

என்ன நடந்தது?

சிறு வயதிலேயே தந்தையை இழந்த குழந்தைகள் அவர்கள். தாயாலும் கைவிடப் பட்டனர். அண்ணனும் தங்கையும் ஆதரவற்று நிற்க, அவர்களின் தாய்வழி தாத்தாவும், பாட்டியும் அவர்களை வாரியணைத்துக் கொண்டனர். அவர்களுடைய வாடகை வீட்டில் நால்வரும் இணைந்த ஒரு புதுவாழ்வு ஆரம்பமானது.

படிப்பறிவற்ற அந்த முதிய தம்பதி, ஏற்கெனவே வறுமையுடன்தான் வாழ்க்கை நடத்தி வந்தனர். இந்த நிலையில், அவர்களின் பேரப்பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு அவர்களுக்குக் கூடுதல் சுமையாகிப் போனது. என்றாலும், தையல் தொழில் செய்து வந்த அந்தத் தாத்தாவும், சிறு சிறு கூலி வேலைகளைச் செய்து வந்த அந்தப் பாட்டியும் தங்கள் உழைப்பை இன்னும் பெருக்கி பிள்ளைகளை வளர்த்தனர்.

பேரனையும் பேத்தியையும் பள்ளியில் படிக்க வைத்தனர். தங்களைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்ட தாத்தா, பாட்டியை அந்தப் பிள்ளைகள் அப்பா, அம்மா என்றே அழைத்தது வியப்பு. ஒரு கட்டத்தில், தங்கள் பேத்திக்குத் திருமணம் முடித்துவைத்தனர்.

எதிர்பாராவிதமாக, அந்தப் பேத்தியின் திருமண வாழ்க்கையில் நிம்மதியில்லை. கணவரும் புகுந்த வீட்டினரும் அவரை மிகவும் கொடுமைப்படுத்தினர், மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். தன்னை அரும்பாடுபட்டு கரையேற்றிய தாத்தா, பாட்டிக்கு மேலும் சிரமம் கொடுத்துவிடக் கூடாது, அவர்களுக்கு பாரமாக ஆகிவிடக் கூடாது என்று அந்தப் பெண் அனைத்தையும் சகித்துக்கொண்டார்.

ஆனால், தாத்தா, பாட்டி இருவரும் சமூக மதிப்பீடுகளிலிருந்து விலகி நின்று தங்கள் பேத்தியின் பிரச்னையை அணுகினர். ஊருக்காக, உறவுக்காக திருமண உறவு என்ற பெயரில் நிகழ்த்தப்படும் கொடுமைகளை, அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டு வாழ்வதை விட, தன் பேத்தியை அதிலிருந்து விடுவித்து விடுதலை அளிக்கும் முடிவை எடுத்தனர். பல சட்டப் போராட்டங்களைச் சந்தித்து, தன் பேத்திக்கு விவாகரத்துப் பெற்றனர். ‘என்னால உங்களுக்கு இன்னும் செலவு, நான் உங்களுக்கு இன்னிக்கு வரை பாரம்’ என்று மருகிய தன் பேத்தியை, நம்பிக்கை வார்த்தைகள் சொல்லித் தேற்றினர். தொடர்ந்து, அவருக்கு மறுமணமும் முடித்துவைத்தனர்.

இதற்கிடையில், முதல் திருமணம் முறிவுற்ற போதும், மறுமணத்தின்போதும் அந்தக் குடும்பத்தையும், அப்பெண்ணையும் ஊரும் உறவும் பேசிய பேச்சுகளையெல்லாம், தாத்தாவும் பாட்டியும் துளியும் பொருட்படுத்த வில்லை. அந்த வார்த்தைகளை எல்லாம் தங்கள் பேத்தியையும் புறந்தள்ளச்சொல்லி அவர்கள் தைரியமூட்டிய விதம்தான், உண்மையில் பெண் முன்னேற்றப் பாடம்.

‘இது உன் வாழ்க்கை. அதுல வர்ற பிரச்னைகளைப் பத்தி நாட்டாமை பேசுற ஊரு அதை வாழப்போறதில்ல. நீதான் வாழப் போற. யாரு என்ன சொன்னாலும் காதுல வாங்கத் தேவையில்ல. உனக்கு சரினு படுறதுதான் சரி’ என்ற அவர்களின் வார்த்தைகள்தான், அந்தப் பெண் ணுக்குத் தெளிவைக் கொடுத்துத் தேற்றின.

2K kids: உனக்கு சரினு படுறதுதான் சரி! - முதிய தம்பதி கற்றுக்கொடுத்த பெண் முன்னேற்றப் பாடம்

எத்தனையோ படித்த, வசதியான, நகர்ப்புற குடும்பங்களிலும்கூட, தங்கள் பெண்கள் புகுந்த வீட்டின் கொடுமைகளைச் சொல்லி அழும்போது, ‘என்ன ஆனாலும் அது தான் உன் வாழ்க்கை, விதி’ என்று அவர்களைத் திருப்பி அனுப்புவதைப் பார்த்திருக் கிறேன். மேலும், முதல் திருமணம் முடிவுக்கு வந்த பெண்களுக்கு, மறுமணம் பற்றிய முடிவை எடுக்கத் தயங்கியதால் அந்தப் பெண் களை விலகாத இருளுக்குள் வைத்திருக்கும் குடும்பங்களையும் அறிவேன்.

இந்த நிலையில், ‘யாரு என்ன சொன்னா என்ன... பிடிக்காத வாழ்க்கையை வாழாத... எந்த முடிவையும் ஊருக்காக எடுக்காத...’ என்று தன் பேத்திக்கு சமூக மதிப்பீடுகளை உடைத்து வெளிவர தைரியம் கொடுத்த அந்த முதிய தம்பதியின் தீரம், எனக்குள்ளும் ஓர் அக்கினிக் குஞ்சை வைத்துள்ளது.

இப்போது அவர்களின் பேத்தி சந்தோஷமாக வாழ்கிறார். அவரின் ஒவ்வொரு புன்னகை யிலும் நான் தரிசிக்கிறேன்... விட்டு விடுதலை யான ஒரு பறவையின் சுதந்திரத்தை!