Published:Updated:

ஆரஞ்சு பொம்மை - சிறுகதை

சிறுகதை
பிரீமியம் ஸ்டோரி
News
சிறுகதை

- ஸ்ரீதர் நாராயணன்

தனலட்சுமிக்கு, வரும் புரட்டாசியில் 48 வயது நிறைகிறது. ஆனால் இப்பொழுதுதான் 24 வயது இளந்தாயைப் போல சுஜிதாக்குட்டி ஓடும் திசையெல்லாம் பாய்ந்து பாய்ந்து ஓடுகிறார். எந்நேரமும் குழந்தையை இடுப்பிலேயே இருத்தி வைக்க வேண்டுமென அவ்வளவு ஆசையாக இருக்கிறது தனலட்சுமிக்கு. பாட்டியின் இஷ்டத்தை சூட்சுமமாகத் தெரிந்துகொண்டதுபோல குழந்தையும் போக்குக் காட்டி, வளைந்து நெளிந்து ஓடுகிறது வீடெங்கிலும்.

“கையிலயே வச்சுப் பழக்கிட்டீன்னா, ஊருக்குப் போனதும் நம்ம பாப்பாதான கஷ்டப்படும்” என்று சிரித்தார் சிவசண்முகம்.

‘இன்னும் இரண்டு நிமிடங்கள்தான். பாட்டிக்குத் தப்பித்து தாத்தாவிடம் போய் ஒண்டிக்கொள்ளும் குழந்தையைக் கட்டி தூக்கிக் கொஞ்சிக் கொண்டு அவரும் ஒருபக்கம் ஓட ஆரம்பித்துவிடுவார்’ என நினைத்துச் சிரித்துக்கொண்டாள் கீர்த்தனா.

“ச்சூ… இன்னும் என்ன பாப்பா கூப்பான்னுட்டு… அவளுக்கே ஒரு பாப்பா பொறந்து ஆச்சு ரெண்டு வருசம். கேட்டா கத்தப்போறா” என்று உள்ளறையை எட்டிப் பார்த்துவிட்டுச் சொன்ன தனலட்சுமி, தன் காலைத் தொட்டுவிட்டு ஓடுகின்ற குழந்தையைப் பிடிக்க முயன்று தோற்றது போல பாவ்லா செய்தார்.

“பிள்ள வளக்கிறதுன்னா சும்மாவா என்ன! இது வயசுல கீர்த்தனாவ நான் ஒண்டியாளா சமாளிக்கல? மூணு மாசக் குழந்தையக் குளிப்பாட்டுறதுலேந்து, ஆறு மாசக் குழந்தைக்குக் கூழக் காச்சி, செரிலாக்கை கரைச்சுக் கொடுக்கிறது, கோரோஜனை உரைச்சுக் கொடுக்கிறது, ஒரு வயசுல சாஸ்தாவுக்கு முடியிறக்கி, பொங்க வச்சு, ஒண்ணர வயசல குழந்தைக்கு உரம் விழுந்து பைரவர் கோவில் வைத்தியசாலைக்கு சுப்பக்கா தூக்கிட்டு ஓட... ரெண்டு வயசுல பொன்னுக்கு வீங்கி வந்து…” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் நிறுத்தி, “உங்களால ஒரு பைசா பிரயோஜனமிருந்துச்சா என்ன? அப்பவும் சரி, இப்பவும் சரி. காலைலேந்து பிராட்பேண்டு தகராறுன்னு அங்க பாப்பா அங்கலாய்ச்சிட்டு இருக்கா. சட்டுபுட்டுன்னு யாரையாச்சும் கூப்பிட்டு சரி செய்ய மாட்டீங்களா. மாப்பிள்ள வீடியோல கூப்பிடற நேரம் வேற” என்றார். கணவரின் மீதான செல்லக் கடுப்பைக் குரல் காண்பித்தாலும், தனலட்சுமியின் முகம் முழுவதும் குழந்தையைப் பார்த்துப் பெருமிதத்தில் விகசித்தபடி இருந்தது.

ஜல்ஜல்ஜல்லென கொலுசு மணிகள் ஒலிக்க, குழந்தை கூடத்தைத் தாண்டி வெளி அறைக்கு ஓடிவிட்டது. போன வேகத்திலேயே ‘பாத்தீ… பாத்தீ…’ எனத் திரும்பி உள்ளே ஓடிவந்தது. தனலட்சுமி குழந்தையை வாரித் தூக்கிக் கொண்டு வாசக்கதவருகில் வந்து எட்டிப் பார்த்தார்.

ஆரஞ்சு பொம்மை - சிறுகதை

வாசல் படியோரமாக, கிரில் கதவிற்கு வெளியே, தலையை உயர்த்தி, வீட்டினுள்ளே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார் வெத்தல பெருமாள். அவருடைய இடது கண் இமை இறங்கி கண்ணை முக்கால்வாசி மறைத்திருப்பதால், அவர் அப்படித்தான் அண்ணாந்தபடி எதிரில் பார்ப்பார். நீலம் போட்டு வெளுத்த சட்டையின் கைகளைச் சுருட்டிவிட்டபடி, பழுப்பேறியிருந்த வேட்டியை ஏறுக்கு மாறாகக் கட்டியபடி, நெடிதுயர்ந்த மரம்போல நின்றிருந்தார். சுற்றி ஒட்ட வெட்டப்பட்டு, உச்சியில் மட்டும் கூடையாய்க் கவிழ்ந்திருந்த தலைமயிர் முழுவதும் வெளுத்திருந்தது.

“நல்லாருக்கியா பாப்பா.” தனலட்சுமியைப் பார்த்ததும் பெரியதாகச் சிரித்தார். உள்ளத்தின் சந்தோஷத்தை அப்படியே காட்டும் வெள்ளந்தியான முகம்.

அந்த சந்தோஷம் அனைத்தும் அப்படியே தனலட்சுமியிடமும் பற்றிக்கொள்கிறது. “வாங்க... வாங்க... இப்பத்தான் அக்காவப் பத்திச் சொல்லிட்டிருந்தேன். உங்களுக்கு நூறாயுசு” என்று வாசக் கதவை விரியத் திறந்தார். இடுப்பில் இருந்த குழந்தை எட்டிப் பார்க்கிறது புது விருந்தாளியை.

“இன்னிக்கு மண்டிக்கு லோடு போகுதுன்னாங்க. நானும் அப்படியே வண்டில ஏறி ஒக்காந்து வந்திட்டேன். இந்தா பைபாஸ் முக்கு வந்ததும், பாப்பாவ பாத்திட்டுப் போயிடலாம்னு இறங்கீட்டேன்” என்று கணகணவெனப் பேசியபடி பெருமாள் வீட்டிற்குள் வந்தார். சிவசண்முகம் சோஃபாவிலிருந்து எழுந்து, முன்னே வந்து பெருமாளின் கைகளைப் பற்றிக்கொண்டார். அவர் முகமும் பிரகாசமாகியிருந்தது.

“வாங்க... வாங்க... பைபாஸ் ரோட்டிலிருந்து நடந்தேவா வர்றீங்க. ஒரு ஆட்டோ வச்சு வந்திருக்கப்படாது?”

கூடத்தினுள்ளே வந்த பெருமாள் சுவாதீனமாக சோபாவின் ஒரு முனையில் அமர்ந்துகொண்டு, “இங்கருந்து வாறதுக்கே எழுவது ரூவா கேப்பான். நமக்கென்ன காட்டுல இறங்கி நடந்து பழகின கட்டை. இந்த ரோட்டுல நடக்கிறதுக்கென்ன?” மீண்டும் பளீரென அதே சிரிப்பு.

“அந்த ஃபேனைப் ஃபுல்லா போட்டு விடுங்க. என்னா வெய்யிலு” என்றார்.

“இந்தா தண்ணி கொண்டாரேன், இருங்க” என்றபடி கூடத்திலிருந்து உள்ளே விரைந்தார் தனலட்சுமி.

“யாரும்மா, பொம்மை அங்கிளா வந்திருக்கிறது?” என்று கேட்டுக்கொண்டே வந்த கீர்த்தனா, குழந்தையை வாங்கிக் கொள்ள கை நீட்ட, அவள் கையைத் தட்டிவிட்டு பாட்டியின் தோளில் முகம் புதைத்துக்கொண்டது குழந்தை.

“இது ‘பாட்டீ’ன்னு கத்திட்டே உள்ள வந்ததேன்னு வெளில எட்டிப் பார்த்தா, அவரு ‘பாப்பா’ன்னு கூப்பிட்டுட்டு நிக்கிறார்” சொல்லி முடிக்குமுன்னே தனலட்சுமியின் குரலில் வெட்கம் மண்டுகிறது.

“ஃப்ரிஜ்ல பாலிருக்கா பாரு. பத்து நிமிசத்துல கொண்டு போய் கொடுக்கலைன்னா, ‘என்ன, காபி போடலையா’ன்னு கேப்பாரு” என்று சொல்லிக்கொண்டே, பெரிய சொம்பு நிறைய குளிர்ந்த நீரோடு கூடத்திற்குத் திரும்பினார் தனலட்சுமி.

“ஊருல மழையாமா. எப்படிப் போகுது சாகுபடில்லாம்” என்று சம்பிரதாயமாகப் பேசிக் கொண்டிருந்தார் சிவசண்முகம்.

ஆரஞ்சு பொம்மை - சிறுகதை

“என்னத்த... கொடிய காத்து, வெத்தல பறிச்சு, கட்டியெடுத்து, தாவாளத்துக்குக் கொண்டு போய்ச் சேக்கிறதுக்கு ஆற கூலிக்கு, சிப்பம் ஆயிர ரூவாகூட போவமாட்டேங்குது. கைல என்னத்த நிக்கப்போகுது” என்றார் பெருமாள் அங்கலாய்ப்பாக.

“அதென்ன அப்படிச் சொல்லிட்டீங்க, ஆத்தூர் வெத்தலன்னா காத்திருந்து வாங்கிட்டுப் போவாங்களே!”

“ஆமாமாம். சொல்லிக்கிட்டாங்க” என்றார் பெருமாள். நீரை முழுவதும் குடித்து சொம்பைச் தரையோடு வைத்துவிட்டு தனலட்சுமியிடம் திரும்பினார்.

“உங்கக்காவுக்கு இப்பவும் உன் நெனப்புதான். நாளைக்கு நாலஞ்சு வாட்டியாவது ‘பாப்பா இப்படிச் செய்யும், பாப்பா அப்படிப் பாக்கும்’ன்னுட்டு. முன்ன மாதிரி பறிக்க, வைக்கன்னுட்டு காட்டுக்குப் போறதுமில்ல. இப்பல்லாம் மூட்டு வலின்னு ஒக்காந்துடறா. எந்நேரமும் டிவிதான். அதில ஏதோ ஒரு சீரியல்ல உன்னாட்டமே ஒரு பொண்ணு வருதுன்னு போன வாரம் பூரா பேச்சு” என்று பெரியதாகச் சிரித்துவிட்டு, கையிலிருந்த காக்கிப் பையைத் திறந்து, உள்ளிருந்து அந்தப் பொம்மையை எடுத்து நீட்டினார்.

தனலட்சுமி இன்னமும் மலர்ச்சியாகி, இடுப்பில் இருந்த குழந்தையை முன்னால் கொண்டு வந்து சொல்கிறார் “இங்க பாரு பாப்பா, என்ன கொண்டு வந்திருக்காங்கன்னு.”

பாட்டியின் தோளில் முகம் புதைத்து பம்மிக் கொண்டிருந்த குழந்தை மெல்ல தலைநிமிர்ந்து பார்க்கிறது அந்த ஆரஞ்சு வண்ண பொம்மையை. சாதாரண பிளாஸ்டிக் பொம்மைதான். கழுத்துவரை இருக்கும் பாப் கூந்தலுடன், கைகளை நேராக வைத்துக்கொண்டு நிற்கும், கவுன் போட்ட சிறுமி. பளீரென அதன் ஆரஞ்சு வண்ணம் கண்ணைப் பறித்தது. படக்கெனக் கையை நீட்டி பொம்மையைப் பற்றிக்கொண்டது குழந்தை.

குழந்தையைவிடப் பெரியதாக உவப்படைந்தவர்போல பெருமாள் உரக்கச் சிரிக்கிறார். ‘ஹெஹ்ஹே...’

“வாங்க தாத்தா” என்று முன்னே வந்த கீர்த்தனாவைப் பார்த்ததும் பெருமாளுக்கு இன்னமும் சிரிப்பு பொங்குகிறது.

“குட்டிப் பாப்பாவா இது” தனலட்சுமியிடம் வியந்து கேட்டார்.

“அப்படியே பாப்பாவ பாக்கிற மாதிரியே இருக்கியே கொழந்தே” என்றார்.

“இது அவ பிள்ளதான். சுஜிதான்னு பேரு” தனலட்சுமியின் குரலில் உணர்ச்சி தளும்புகிறது, “அக்காவ ஒருவாட்டி கூட்டி வரலாம்ல’’ என்றார்.

“வெளில பெருசா போய்க்கிடறதில்ல இப்பல்லாம். நான் இன்னைக்கும் மாசாமாசம் பறிப்பு, பூச்சியரிப்புக்கு மருந்துன்னு காடே கதின்னு கெடக்கறவன். அவ வீடே கதின்னு கெடக்கா.”

கீர்த்தனா பிறக்குமுன்னர் சிவசண்முகம் உடுமலைப்பேட்டையில்தான் வேலையில் இருந்தார். விசாலமான அறைகளும், பெரிய தோட்டமுமாக இருந்த பெருமாளின் வீட்டின் மாடிப் பகுதியைத்தான் முதலில் வாடகைக்குப் பார்த்தார். சிவசண்முகத்தைவிட தனலட்சுமிக்கு வீடு சட்டெனப் பிடித்துவிட்டது. அதைவிட, பெருமாளின் மனைவி சுப்பக்காவிற்கு, தனலட்சுமியை அவ்வளவு பிடித்துவிட்டது. நாளுக்குப் பாதி நேரம், மாடியில் தனலட்சுமியுடன்தான் பொழுது போகும். கீர்த்தனாவைப் பிரசவிக்க கோயம்புத்தூருக்குப் போன ஆறு மாதங்கள் தவிர, நான்கு ஆண்டுகளாக அப்படியொரு பிணைப்பு. சிவசண்முகத்திற்குப் பழனி, திருப்பத்தூர், மதுரை, திருச்சி என எங்கே மாற்றலாகிப் போனாலும், பெருமாள் அவர்களைப் பார்க்கக் கிளம்பி வந்துவிடுவார்.

ஆரஞ்சு பொம்மை - சிறுகதை

“பாப்பா, உங்கக்கா உன்னையப் பத்தியே பேசீட்டிருந்தாளா…” என்று சொல்லிக் கொண்டே, இந்தப் பக்கமா மச்சான் வீட்டு விசேஷம், சகலை மருமகளுக்குக் காதுகுத்து என்று அவருக்கென ஏதாவது காரணம் இருக்கும். வரும்போதெல்லாம் பொம்மை ஒன்றையும் வாங்கிக் கொண்டுவருவார். அரை மணி, ஒரு மணிக்கு மேல் கால் தங்காது. அதற்குள் ஒரு காபியை மட்டும் குடித்துவிட்டு நடையைக் கட்டிவிடுவார். கீர்த்தனாவிற்கு நினைவில் தெரிந்து பெருமாளின் வருகைகள் எல்லாம் அவ்வளவு தித்திப்பாக, சிரிப்பும் சந்தோஷமுமாக நிறைந்திருக்கும் வீடு. இப்போது திருமணமாகி அமெரிக்கா போய், பிள்ளை பெற்றுக்கொண்டு வந்தாலும், பெருமாள் அதே பழைய காலநிலையில் இருப்பதுபோல பொம்மையை வாங்கிக்கொண்டு தனலட்சுமியைப் பார்க்க வந்திருந்தார்.

குழந்தை இப்பொழுது சகஜமாகி அந்த ஆரஞ்சு பொம்மையை இழுத்துக் கட்டிக் கொண்டுவிட்டது. ஒருமுறை அந்தப் பொம்மையை எடுத்துத் தள்ளி வைத்துக் கொண்டு பார்த்தது. என்னமோ அதற்கு மட்டும் ஏதோ தெரிந்ததுபோல மீண்டும் கட்டிக்கொண்டு பாட்டியின் தோளில் சாய்ந்துகொண்டது.

குழந்தையின் உச்சந்தலையில் இரண்டு இணுக்கு மல்லிகைப் பூவை ஹேர்பின் வைத்துச் செருகிவைத்திருந்தார் தனலட்சுமி. அது நழுவி தனலட்சுமியின் தோளில் புரள, அந்தப் பூவைப் பற்றியிழுத்துக் கையில் வைத்து ஆட்டிப் பார்த்துவிட்டு, பொம்மையின் தலைமீது பூவை வைத்துப் பார்த்தது குழந்தை.

அடுக்களையில் பாலைச் சுட வைத்துவிட்டு, காபி டிகாக்‌ஷனை டம்ளரில் ஊற்றினாள் கீர்த்தனா. பின்னாலேயே குழந்தையுடன் வந்த தனலட்சுமி, “ரொம்ப நீர்க்க இருக்கோ. ‘நீ போட்ட காபி மாதிரியில்ல’ன்னு சொல்லிருவாரே” என விசனப்பட்டார் தனலட்சுமி.

குழந்தையை கீர்த்தனாவிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு, “வெளில கோலப்பன் இருந்தான்னா, விசாலம் கபேலேந்து ஒரு காபிய சுருக்க வாங்கி வரச் சொல்லிடலாம்” என்று பரபரப்புடன் கொல்லைப்புறம் போனார். குழந்தை உடனே ‘பாத்தீ…’ என முனகிக்கொண்டே அவரை நோக்கிப் பாய்ந்தது.

“ஐயா கெளம்பறேன்னுட்டு நிக்கிறாங்க. எங்க போயிட்டா உங்கம்மா” என்றபடியே உள்ளே எட்டிப் பார்த்த சிவசண்முகம், தனலட்சுமி போவதைப் பார்த்துவிட்டு, பின்னாலேயே அவரும் போனார்.

ஹாலுக்குக் குழந்தையுடன் வந்த கீர்த்தனா, “தாத்தாவுக்கு தாங்க்ஸ் சொன்னியா? நீ பாட்டுக்கு சைலன்ட்டா பொம்மைய வாங்கிக்கிட்ட” என்றாள்.

பொம்மையின் தலையில் பூவை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருந்த குழந்தை, பெருமாளைப் பார்த்ததும் சட்டென அம்மாவிடம் ஒண்டிக்கொண்டது. பிறகு தலையை மறுப்பாக ஆட்டிவிட்டு மீண்டும் அவள் கழுத்தில் தலையைப் புதைத்துக்கொண்டது.

குழந்தையின் அசைவுகளைப் பார்த்த பெருமாளுக்கு ஒரே சிரிப்பு.

“அதான் கரீக்ட்டு கொழந்தே. நமக்கு பொம்மதான முக்கியம். மிச்சமெல்லாம் நமக்கெதுக்கு” என்று குழந்தையிடம் ‘ஜ்ஜ்ஜஜ்ஜு ஜஜ்ஜஜ்ஜோ’ என்று கொஞ்ச ஆரம்பித்தார்.

“தாங்க்ஸ் சொல்லலைன்னா, தாத்தாகிட்ட பொம்மைய திருப்பிக் கொடுத்திருவேன்” என்று மிரட்டினாள் கீர்த்தனா.

அவளை நிமிர்ந்து ஓரிரு நொடிகள் பார்த்த குழந்தை சட்டெனத் திரும்பி, பெருமாளைப் பார்த்து வெடுக்கென “தாங்க்ஸ்” என்றுவிட்டுத் திரும்பிக்கொண்டது.

பெருமாள் உட்கார்ந்த இடத்திலேயே குதித்துச் சிரித்தார். குழந்தையை நோக்கிக் கையை நீட்ட, பயந்தாற்போல் திரும்பிக்கொண்டது குழந்தை. பிறகு ஏதோ விளையாட்டுப் போல கையை மட்டும் நீட்டி அவர் கையைத் தொட்டுவிட்டு மீண்டும் தலையைத் திருப்பிக்கொண்டது.

பெருமாள் மீண்டும் சிரித்தார். “இப்படித்தான் கொழந்தே… நீயும் சுப்புகிட்ட ஒக்காந்துகிட்டே எங்கிட்ட வெளாடுவே. எங்கிட்ட வரவே மாட்ட. எந்நேரமும் சுப்பு இடுப்புலதான். ஒனக்கு ஒரு சளி, இருமல்னாகூட அவ இறக்கி விடமாட்டா. உனக்குக் கழுத்துல உரம் விழுந்து அழுதிட்டிருந்தப்ப, அவல்லா உன்னவிட அழுதா” என்றார். பெருமாள் குரலில் இருந்த சிரிப்பு மெல்ல மறைந்து, வேதனை படரத் தொடங்கியது.

“அதுக்குள்ள என்னத்த புறப்பட்டீங்க” என்று தனலட்சுமி அடுக்களையிலிருந்து வெளியே வர, அவர் கையிலிருந்த காபி டபராவைப் பார்த்துவிட்டு, “அதான. எங்க காபி கொடுக்காமையே பாப்பா அனுப்பிச்சிடுமோன்னு நெனச்சிட்டிருந்தேன்” என்றார் பெருமாள்.

காபியை வாங்கி, ஒரு ஆற்று ஆற்றிவிட்டு அண்ணாந்து வாயில் விட்டுக் கொண்டுவிட்டு நிமிர்ந்தார்.

“கடைக் காபியாக்கும். ஒங்கூட்டு காபி மாதிரி தெரிலயே” என்றார். வெட்கத்தினூடே தனலட்சுமி, கீர்த்தனாவைப் பார்த்து ‘சொன்னேன் பாத்தியா’ என்பதுபோல சிரித்தார்.

“இருங்க நான் ஸ்கூட்டரில் கொணாந்து விடறேன்” என்று சிவசண்முகம் சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

``இங்கருந்து பஸ்ஸ பிடிச்சா மண்டிக்கு அரை அவர்ல போயிருவேன். நீங்க ஏன் கெளம்பிக்கிட்டு” என்றார் பெருமாள்.

“வெயில்ல எதுக்கு பஸ்ஸு நஸ்ஸுன்னுட்டு. வாங்க கொண்டு விட்டுடறேன்” என்று விடாப்பிடியாக சிவசண்முகமும் வெளியில் வந்தார்.

அவர் ஸ்கூட்டரை எடுத்து ஸ்டார்ட் செய்து வெளியில் வருவதற்குள் பெருமாள், “வரேன் பாப்பா” என்று தனலட்சுமியிடம் சொல்லிக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டார்.

பெருமாள் கிளம்பிப் போனதும் குழந்தை மீண்டும் துறுதுறுவென இறங்கி ஓட ஆரம்பித்து விட்டது. கக்கத்தில் இடுக்கி வைத்திருந்த ஆரஞ்சு பொம்மை மேலும் கீழுமாய் ஆடியது.

காலையிலிருந்து பிராட்பேண்ட் பிரச்னை. இரவுதான் சரியானது. ராம்குமாரின் இந்தியப் பிரயாணம் இரண்டு வாரங்கள் தள்ளிப் போகிறதென, அவன் மெயில் அனுப்பியிருந்தான்.

“நீ இன்னும் டிக்கெட்டைத் தள்ளிப் போட்டால், திரும்பிப் போகும்போது நாமிருவரும் தனியாகத்தான் போக வேண்டியிருக்கும். இந்தக் குட்டி இங்கே பாட்டி, தாத்தாதான் எல்லாத்துக்குமென நன்றாகப் பழகிவிட்டது. சமயத்தில், என்னை ஒரு மனுஷியாக்கூட மதிப்பதில்லை” என்று அவனுக்கு பதிலெழுதிவிட்டு கீர்த்தனா கூடத்திற்கு வந்தாள்.

தனலட்சுமி குழந்தையை மடியில் குப்புறப் போட்டு தட்டிக்கொடுத்துக்கொண்டே டி.வி பார்த்துக்கொண்டிருந்தார். குழந்தை ஆரஞ்சு பொம்மையை தோளோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்திருந்தது. தூக்கத்திலும் அந்த பிளாஸ்டிக் பொம்மையின் மீது பிஞ்சு விரல்கள் மேலும் கீழுமாக வருடிக் கொண்டிருந்தன.

கீர்த்தனாவைப் பார்த்ததும் தனலட்சுமி, “நீயும் இப்படித்தான். குப்புறப்போட்டுத் தட்டிக் கொடுத்தா ரெண்டே நிமிஷத்துல தூங்கிருவ” என்றார் சிரித்துக்கொண்டு.

ஒரு கையால் குழந்தையைத் தாலாட்டுவது போல தட்டிக்கொடுத்துக்கொண்டே, குழந்தையின் கையிலிருந்த பொம்மையை மெல்லப் பிரித்து எடுக்கப் பார்த்தார் தனலட்சுமி. அது அரைத் தூக்கத்தில் ‘ஹ்ம்ம்’ என்று முனகிவிட்டு மீண்டும் பொம்மையை இறுக்கிக் கொண்டது.

ஆரஞ்சு கலரில் என்ன விளையாட்டுச் சாமானாக இருந்தாலும், குழந்தைக்கு அவ்வளவு பிடித்துவிடுகிறது என்று கீர்த்தனா நினைத்துக் கொண்டாள். அதைச் சொன்னால் போதும், ‘கீர்த்தனாவும் அந்த வயதில் அப்படித்தான் இருந்தாள்’ என அம்மா ஆரம்பித்துவிடுவார். பெருமாள் வரும்போதெல்லாம் ஒரு பொம்மை கொண்டு வருவார் என்பது நினைவில் ஆழப் பதிந்திருந்ததுபோல, அவர் என்ன மாதிரியான வண்ணங்களில் பொம்மைகள் கொண்டு வந்தார் என நினைவில்லை.

‘மரகதவீணை’ என்று ஒரு சீரியல், டி.வி-யில் ஏதோ ஒரு சேனலில் ஓடிக்கொண்டிருந்தது. பள்ளிக்கூடத் தலைமையாசிரியை போன்ற தோரணையில் கண்ணாடி அணிந்திருந்த அம்மணி ஒரு சாயலில் அம்மாவைப்போலவே இருப்பதுபோலப் பட்டது கீர்த்தனாவிற்கு.

“ஏம்மா, பெருமாள் அங்கிள் வந்தளவுக்கு, அந்த ஆண்ட்டி... அதான் சுப்பக்கா... நம்ம வீட்டுக்கு வந்ததில்லல்ல” என்றாள்.

பின்புறம் சோபாவில் இருந்த பஞ்சுப்பொதி கரடி பொம்மையை எட்டிப் பிடித்து எடுத்த தனலட்சுமி, குழந்தையின் கையில் அதை மெல்லத் திணித்தபடி ஆரஞ்சு பொம்மையை விடுவிக்க முயன்றார்.

குழந்தை கண்ணை விழித்துப் பார்த்துவிட்டு, அரைக் கிறக்கமாக “பாத்தீ...’’ என்றுவிட்டு ஆரஞ்சு பொம்மையை இழுத்துக்கொண்டது.

ஆரஞ்சு பொம்மை - சிறுகதை

இரண்டாவது முறையாக தனலட்சுமி இழுத்தும் குழந்தை விட்டுக்கொடுக்காமல் சிணுங்க, கீர்த்தனா சற்று முன்னே வந்து குழந்தையின் முதுகைத் தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.

அவளை நிமிர்ந்து பார்த்த தனலட்சுமியின் முகத்தில் ஏதோ ஒரு வேதனை ரேகை குடி கொண்டிருந்தது.

“இவ வயசுதான் இருக்கும். ஒன்னைத் தூக்கிட்டு மாடிப்படியில இறங்கும்போதுதான் கீழ போட்டுடுச்சு சுப்பக்கா. அப்ப ஒங் கழுத்துல உரம் விழுந்து நீ பட்ட பாடு இருக்கே” தனலட்சுமியின் குரலில் இருந்த வேதனை மெல்ல மறைந்து, கசப்பு படரத் தொடங்கியது. படக்கென அந்த ஆரஞ்சு பொம்மையைப் பிடுங்கிப் பக்கத்தில் போட்டுவிட்டு, புரண்டு படுக்க யத்தனித்த குழந்தையை அள்ளித் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு எழுந்தார்.

“படுக்கைல போட்டுடறேன். இல்லன்னா டக்குனு முழிச்சுக்குவா.”

ராம்குமாரின் வீடியோ கால் வருகிறது என்பதை கீர்த்தனாவின் கையில் இருந்த போன் அறிவிக்க, அவள் வேகமாக உள்ளறைக்குத் திரும்பினாள்.

படுக்கையறைக்குள் நுழையுமுன்னர் தனலட்சுமி, சோபாவில் சாய்ந்தமர்ந்துகொண்டு டி.வி பார்த்துக்கொண்டிருந்த சிவசண்முகத்தைத் தொட்டு, அந்த ஆரஞ்சு பொம்மையைச் சுட்டிக் காட்டிவிட்டுச் சென்றார்.

குறிப்பை உணர்ந்துகொண்டதுபோல சிவசண்முகம் சுற்றுமுற்றும் தேடி ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்து அந்தப் பொம்மையை அதனுள்ளே போட்டு மூடி சோபாவின் அடியில் தள்ளிவிட்டார்.

மறுநாள் சனிக்கிழமைக் காலை குப்பை அள்ளிப் போகும் வண்டி ஆறு ஆறரைக்கு வரும். அதுவரை அந்த ஆரஞ்சு பொம்மை குழந்தை கண்ணில் படாமல் இருந்தால் போதும் என நினைத்துக்கொண்டார் சிவசண்முகம்.