சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

Free from school’ என்ற பெயரில் வெளிவந்த அல்வரிஸின் நூலைக் குழந்தைகள் விரும்பும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சுஷில் குமார்.

குழந்தைகள் அதிகம் வெறுக்கும் இடங்களில் ஒன்று பள்ளிக்கூடம். வரையறுக்கப்பட்ட பாடத்திட்டம், அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஆசிரியர்கள் என, குழந்தைகள் ஒரு சதுரத்துக்குள் மூச்சடக்கிக் கற்கும் எதுவும் அவர்களின் சிறகுகளுக்கு வலுவூட்டுவதாக இல்லை. எங்கேனும் ஒரு சாளரம் கிடைக்காதா என்று குழந்தைகள் தவிக்கிறார்கள். இந்திய இயற்கை வேளாண்மைக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கிளாட் அல்வரிஸ் இந்த நிலையை உணர்ந்து, தன் மகன் ராகுல் அல்வரிஸை பள்ளியிலிருந்து ஓராண்டு விடுவித்து, இயற்கையைக் கற்றுக்கொள்ள அனுப்புகிறார். ராகுல் அல்வரிஸ் தன் வாழ்நாளுக்குரிய மொத்தக் கல்வியையும் அந்த ஓராண்டில் கற்றுக்கொண்டு திரும்புகிறார். அந்த ஓராண்டு நாட்குறிப்புதான் இந்த நூல்.

பக்கத்து வீட்டுக்காரர்களோடு சேர்ந்து விவசாய வேலைகளைக் கற்றுக்கொண்டது, கோவாவில் நடக்கும் தாவரத் திருவிழாக்களில் பங்கேற்றுக் கற்றுவந்து வீட்டில் கள்ளிச்செடி நட்டு வளர்த்தது: காளான் பண்ணைகளில் சுற்றித்திரிந்து தாய்வித்து தயாரிக்கும் தொழில்நுட்பத்தைப் புரிந்துகொண்டது; இருளர்களோடு சேர்ந்து பாம்பு பிடித்து, ஓநாய்ப்பாம்பிடம் கடிபட்டது; சென்னைப் புதுக்கல்லூரிக்கு வந்து டாக்டர் சுல்தான் இஸ்மாயிலிடம் மண்புழு வளர்க்கவும் மண்புழுக் குழிகள் அமைக்கவும் கற்றுக்கொண்டது என ஓராண்டுக்காலம் சுற்றித்திரிந்து தான் கற்றறிந்தவற்றையும் அவற்றைச் செயல்படுத்திப் பார்த்ததில் கிடைத்த அனுபவங்களையும் சுவாரஸ்யமாகப் பதிவு செய்திருக்கிறார் அல்வரிஸ்.

படிப்பறை

தொகுக்கப்பட்ட கேள்விகளுக்கான தொகுக்கப்பட்ட விடைகளை மனனம் செய்து தம் கல்வியை நிறைவு செய்யும் குழந்தைகளுக்கு மத்தியில், பள்ளியை விட்டு இயற்கையைப் படிக்கப் புறப்பட்ட அல்வரிஸ், சிறுவயதிலேயே பல புத்தகங்கள் எழுதும் தனித்திறன் கொண்ட இயற்கைச்சிந்தனையாளராக மாறியிருக்கிறார். உலகெங்கும் உள்ள மாற்றுக் கல்வி அமைப்புகளுக்கும் சூழலியல் இயக்கங்களுக்கும் சிறப்பு அழைப்பாளராகச் சென்று உரையாற்றும் அளவுக்கு அந்தக் கல்வி அவரை உயர்த்தியிருக்கிறது.

‘Free from school’ என்ற பெயரில் வெளிவந்த அல்வரிஸின் நூலைக் குழந்தைகள் விரும்பும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சுஷில் குமார். குழந்தைகளின் பார்வையையும் சிந்தனையையும் விரியச்செய்யும் இந்த அழகிய புத்தகம், பெரியவர்களுக்கும் நிறைய பாடங்களை வைத்திருக்கிறது.தெருக்களே பள்ளிக்கூடம்
ராகுல் அல்வரிஸ் -
தமிழில்: சுஷில் குமார்


வெளியீடு:
தன்னறம் நூல்வெளி,
குக்கூ காட்டுப்பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை-635307 கிருஷ்ணகிரி மாவட்டம்.

இ-மெயில்: thannarame@gmail.com
விலை: ரூ.200
பக்கங்கள்: 204