Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

படிப்பறை

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியாவை அடையாளப்படுத்துவதற்குக் காரணம் தேர்தல்கள். 1952-லிருந்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிகள் சந்தித்துவந்த தேர்தல்கள், எப்படி கார்ப்பரேட் நிறுவனங்களால் திட்டமிடப்படுபவையாக மாறிப்போயின என்பதை விரிவாக விளக்குகிறது ‘இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?’ புத்தகம்.

நூலின் ஆசிரியர் சிவம் சங்கர் சிங், பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர், பா.ஜ.க-வின் அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியவர் என்னும் அனுபவங்களின் அடிப்படையில் சமீபகாலத் தேர்தல்கள் குறித்து உள்ளும் புறமும் விளக்குகிறார். பஞ்சாப், மணிப்பூர், திரிபுரா என்னும் வெவ்வேறு நிலப்பரப்புகளில் வெவ்வேறு சூழல்களில் எப்படித் தேர்தல் பிரசாரங்கள் கட்டமைக்கப்பட்டன என்பதை சிவம் விளக்குவது நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஃபேக் நியூஸ் உருவாக்குவது, யாருக்கு வேலை பார்க்கிறார்களோ அந்தத் தலைவருக்கான பூதாகரப்பிம்பங்களை சமூக வலைதளங்களின் மூலம் கட்டியெழுப்புவது, எதிர்க்கட்சித் தலைவர்கள் குறித்து இழிவான மற்றும் பொய்யான பிம்பங்களை உருவாக்கிப் பரப்புவது, தரவு பகுப்பாய்வைப் பயன்படுத்தி உத்திகளை உருவாக்குதல், சாதி, மதவெறியூட்டும் வகுப்புவாத அரசியல் என்று தேர்தல் ஆலோசனை நிறுவனங்கள் என்னென்ன செய்கின்றன என்பதை அவர் விரிவாக முன்வைக்கும்போது இந்திய ஜனநாயகம் குறித்த கவலையே மேலிடுகிறது.

படிப்பறை

திரிபுராவில் மாணிக் சர்க்கார் என்னும் நேர்மையான கம்யூனிஸ்ட் முதல்வரை எப்படி வீழ்த்தினோம் என்று சிவம் சங்கர் சிங் விளக்கும்போது அரசியலுக்கும் லட்சியவாதத்துக்கும் உள்ள உறவு குறித்த அவநம்பிக்கையே எழுகிறது. பா.ஜ.க-வுக்கு நீண்டகாலம் அரசியல் ஆலோசனைப்பணிகளில் ஈடுபட்டிருந்ததால் பா.ஜ.க எப்படிப் பொய்யான செய்திகளை உருவாக்குகிறது, சிறுபான்மையினருக்கு எதிரான செய்திகளைப் பரப்புகிறது, வாட்ஸப் குழுக்களின் மூலம் வகுப்புவாத உணர்வு எவ்வாறு ஊட்டப்படுகிறது என்பதை விரிவாக விளக்குகிறார்.

பெரும்பாலும் இவை தென்னிந்தியாவுக்கு வெளியேயான அனுபவங்களாக இருப்பது மட்டுமே ஒரே குறை. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் தேர்தல் ஆலோசனைப் பணிகளில் ஈடுபட்ட யாராவது இப்படி ஒரு புத்தகத்தை எழுதும்போது நமக்கு இன்னும் பல உண்மைகள் தெளிவாகும். இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலையை அறிய, ஒவ்வொரு வாக்காளரும் படிக்க வேண்டிய புத்தகம்.

இந்தியத் தேர்தல்களை வெல்வது எப்படி?

- சிவம் சங்கர் சிங்

தமிழில் : இ.பா.சிந்தன்

வெளியீடு :

எதிர் வெளியீடு, 96, நியூ ஸ்கீம் ரோடு, பொள்ளாச்சி - 642 002

தொலைபேசி - 9942511302

பக்கங்கள் : 296

விலை : ரூ. 320

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism