Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மிகுந்த வளம்கொண்ட காவிரிப்படுகையின் மையத்திலிருக்கிற கண்டியூர்தான் கதையின் களம்.

படிப்பறை

மிகுந்த வளம்கொண்ட காவிரிப்படுகையின் மையத்திலிருக்கிற கண்டியூர்தான் கதையின் களம்.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

அன்றாட வாழ்க்கைப்பாட்டுக்கே அல்லல்படுகிற எளிய மக்களுக்கு இல்லறம்தான் வாழ்தலுக்கான அவசியத்தை உருவாக்குகிறது. அந்தத் துளி நிமிடம்தான் எல்லா வலிகளுக்கும் ஒத்தடமாக இருக்கிறது.

ஊர் ஊராகப் போய் பழந்துணிகளைப் பெற்றுத் தைத்துக் கொடுக்கிற லிங்கமென்ற தையற்கலைஞன் அப்படித்தான் ஏழு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறான். இரண்டு ஆண் பிள்ளைகளில் மூத்தவன் வீட்டுக்கடங்காத ஊதாரியாகிவிட, இரண்டாவது மகன் குடும்பத்தின் நிலையறிந்து தன்னை ஒப்புக்கொடுக்கிறான். அவனது எல்லையும் தந்தையின் தையல் எந்திரத்தைத் தாண்டவில்லை. மூத்தவள் திருமணத்துக்கு நிற்கும்போது சின்னவள் நடக்கப் பழகுகிறாள். அடுத்தடுத்து பிறந்த ஏழு பிள்ளைகளுக்குத் தாய்ப்பால் தந்தே ரத்தம் சுண்டிய வேணியைச் சுற்றியே சுழல்கிறது லிங்கம் நாவல்.

மிகுந்த வளம்கொண்ட காவிரிப்படுகையின் மையத்திலிருக்கிற கண்டியூர்தான் கதையின் களம். வேளாண் மக்களும் வெளிநாடுகளில் பிழைக்கும் இஸ்லாமியத் தாய்மார்களும் தருகிற பிய்ந்த துணிகள்தான் லிங்கம் குடும்பத்தின் வாழ்வாதாரம். பெண்களில் மூத்தவளான கலை, அம்மாவின் துயரத்தில் பாதியைச் சுமக்கிறாள். தாயும் தந்தையும் உருகி உருகிச் சேர்த்து அவளுக்கு மணம் முடித்து வைக்கிறார்கள். வாய்த்த கணவன் ஆண்மையற்றவன். கணவனின் தம்பி வேட்கையோடு சுற்றுகிறான்.

படிப்பறை

எந்த பூடகமும் இல்லாமல், காவிரிப்படுகை கிராமத்துக் குடும்பம் ஒன்றின் கதையை நடுத்தஞ்சைக்கேயுரிய மென்மொழியில் சொல்லிச்செல்கிறார் ஜெயந்தி கார்த்திக். முதல் நாவல் எனினும், ஜெயந்திக்குக் கதைசொல்லல் கைவந்திருக்கிறது. கண்டியூர்த் தெருக்கள், தண்ணீர்க் குழாய்கள், சாணத்தைத் தெறிக்கவிட்டுச் செல்லும் மாடுகள், வேப்பங்கொட்டை சேகரிக்கும் சிறுவர்களென நடுத்தஞ்சை கிராமத்தை நாவலின் போக்கில் காட்சிப்படுத்துகிறார் ஜெயந்தி.

பெண்கள்தான் குடும்பத்தின் பெருந்துயரங்களைச் சுமக்கிறார்கள். கணவனுக்காக, பிள்ளைகளுக்காக, உறவுகளுக்காகவென தியாகங்களுக்கும் அவர்களே இலக்காகிறார்கள். அவர்களுக்கான வாழ்க்கையை எப்போதும் அவர்கள் வாழ்வதேயில்லை. அனுபவங்களும் அல்லல்பாடும் மாறலாமே ஒழிய, இந்த நியதி மாறுவதில்லை. நாவலை வாசித்து முடித்ததும் லிங்கத்தைவிட வேணியும் கலையுமே மனதில் நிறைந்து நிற்கிறார்கள்.

பல அத்தியாயங்கள் 200 வார்த்தைகளுக்குள் முடிந்துவிடுகின்றன. அடுத்தடுத்து என்று நகர்கிற அந்த வேகம் சற்று ஆயாசமாக இருக்கிறது. மற்றபடி லிங்கம், கவனிக்கப்பட வேண்டிய நாவல்.

லிங்கம்
- ஜெயந்தி கார்த்திக்

வெளியீடு :

உயிர் எழுத்து பதிப்பகம், 9, முதல் தளம், தீபம் வணிக வளாகம், கருமண்டபம், திருச்சி-1

தொடர்பு எண்: 99427 64229, 0431-2483229

பக்கங்கள்: 200.

விலை: ரூ.200

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism