Published:Updated:

படிப்பறை

நூறு ரூபிள்கள்
பிரீமியம் ஸ்டோரி
நூறு ரூபிள்கள்

நூறு ரூபிள்கள்

படிப்பறை

நூறு ரூபிள்கள்

Published:Updated:
நூறு ரூபிள்கள்
பிரீமியம் ஸ்டோரி
நூறு ரூபிள்கள்

ஒரு சிறுகதைக்கான இலக்கணம் என ஒன்றை வரையறை செய்யமுடியுமாயின், அந்தச் சட்டகத்தினுள் கச்சிதமாகப் பொருந்துகின்றன, ‘நூறு ரூபிள்கள்’ தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் சிறுகதைகள்.

மயிலன் மூளை தண்டுவட அறுவை சிகிச்சை மருத்துவர். கடந்த சில ஆண்டுகளில் அச்சு இதழ்களிலும், இணையத்திலும் வெளியான அவரின் சில சிறுகதைகள் ‘நூறு ரூபிள்கள்’ தொகுப்பாக வந்திருக்கின்றன. மயிலனின் கதைகளில் அவரின் துறை சார்ந்த கதைகளை சுலபமாக அடையாளம் கண்டுவிட முடியும். இதற்கு முன்பு எப்போதுமில்லாத அளவுக்கு நுட்பமான விவரணைகள் அவற்றில் இருக்கும். ஆனால் அவற்றில் சுகம் கண்டு தேங்கிவிடாமல், அவற்றை விட்டு விலகி, காதல், மணவாழ்க்கை, கிராமத்துக் கதைகள் எனத் தன் களம் பெரிது என்பதை நிரூபித்திருக்கிறார்.

இயற்கை வர்ணனைகளும் உவமைகளும் காட்சிச் சித்திரங்களும் இக்கதைகளில் பெரிதாய்த் தென்படவில்லை. அவற்றின் தேவை இல்லாமலே கதை அது சொல்லத்தேவையானதை உரையாடலின் வழி சொல்லிவிடுகிறது. முடிவுகளை முன்னரே அறிவித்துவிட்ட பின்னும் சுவாரஸ்யம் குன்றாமல் செல்லும் எழுத்துநடைக்கு ‘வீச்சம்’ கதை மிகச்சிறந்த உதாரணம். துரோகங்களைச் சுமந்தபடி நிற்கின்றன ‘நூறு ரூபிள்கள்’ மற்றும் ‘ஜோக்கர்’ கதைகள். டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’ நாவலை அடிப்படையாகக்கொண்டு மயிலன் படைத்திருக்கும் ‘நூறு ரூபிள்கள்’ கதை, ஒரு பெருமரத்தின் புதிய கிளை. நான்கே பக்கங்களில் ஒரு குறும்படத்தின் திடுக்கிடலைத் தந்துவிட்டு அகல மறுக்கிறது ‘சங்கல்பம்.’ பதின்ம வயதினரின் காதல்களையும் குறும்புகளையும் சொல்லிச் செல்கிறது ‘எவா’வும், ‘மகுடி’யும். “திரும்ப ஜெயிச்சதுல இருந்து கெப்புரு மசுரு ஏறிப்போச்சுரா ஒங்களுக்கு...” என ஒரண்டையிழுக்கும் கிராமத்து மனிதர்களின் பேச்சு மயிலனின் படைப்புகளை மேலும் அழகாக்குகின்றன.

படிப்பறை

சிறுகதைகளுக்கான களமும், அதற்கேற்ற மொழிநடையும் இவருக்கு இயல்பாகவே கூடிவருகின்றன. அதிர்ச்சி மதிப்பீட்டிலான கதைகள், ஆத்மார்த்தமான கதைகள், பழைய நினைவுகளைக் கிளறும் கதைகள் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் அமைந்திருக்கின்றன. இந்த தசாப்தத்தின் சிறந்த சிறுகதைகளைத் தொகுப்பவர்களால் புறக்கணிக்க முடியாத பெயர் மயிலன் ஜி சின்னப்பன்.

நூறு ரூபிள்கள்

- சிறுகதைகள்

மயிலன் ஜி சின்னப்பன்

வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

044-48586727
பக்கங்கள்: 136

விலை: ரூ.160