Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

நீதி - ஒரு மேயாத மான் - கே.சந்துரு

படிப்பறை

நீதி - ஒரு மேயாத மான் - கே.சந்துரு

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்துத் தனித்துவமான கருத்துகளை முன்வைக்கும் முன்னாள் நீதிபதி கே.சந்துரு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘நீதி - ஒரு மேயாத மான்.’ அரசியல் சட்டம் நமக்கு அளித்துள்ள உரிமைகள், நீதிமன்றம் மற்றும் அரசின் செயற்பாடுகளில் பிரதிபலிக்கும் சார்புத்தன்மை, காலத்துக்கு ஏற்ப மாறவேண்டிய சட்ட நடைமுறைகள் ஆகியவை குறித்துத் தீர்க்கமான பார்வைகளை முன்வைப்பது இந்நூலின் பலம்.

‘முகநூல் பதிவுகளுக்கு முகம் சுளிக்கலாமா’ என்னும் கட்டுரையில், தொட்டதற்கெல்லாம் நீதிமன்ற அவமதிப்பு என்று கருதும் நீதிபதிகளின் மனநிலையை விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கிறார் சந்துரு. கருத்துகளையே முடக்கும்வகையில் நீதிமன்ற அவமதிப்பு என்னும் கத்தி தலைக்குமேல் தொங்கிக்கொண்டிருப்பதும் அரசுகள் மாற்றுக்கருத்தாளர்களின்மீது தொடுக்கும் வழக்குகளும் ஜனநாயகத்தின் அடிப்படைகளைக் காலிசெய்யும் அபாயத்தைச் சுட்டிக்காட்டுகிறார் சந்துரு.

சீனப் பிரதமர் ஷி ஜின் பிங்கும் மோடியும் மகாபலிபுரத்தில் சந்தித்ததையொட்டி எழுதப்பட்டுள்ள ‘சூ என் லாய் முதல் ஷி ஜின் பிங் வரை’ கட்டுரை சுவாரஸ்யமானது. நேரு காலகட்டத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டுத்தலைவர்கள், அப்போது செய்யப்பட்ட ஏற்பாடுகள், அதன் பின்னணி ஆகியவற்றை விளக்குகிறார். 1961-ல் எலிசபெத் மகாராணி சென்னைக்கு வந்தபோது உஸ்மான் ரோடு முதல் தேனாம்பேட்டை வரையுள்ள குடிசைப்பகுதிகளை மறைக்கும்வகையில் மூங்கில்தட்டிகள் அமைக்கப்பட்டதைப் பற்றி சந்துரு குறிப்பிட்டதைப் படிக்கும்போது 2020-ல் ட்ரம்ப் இந்தியா வந்தபோது குடிசைப்பகுதிகளை மறைக்கச் சுவர் எழுப்பப்பட்டது நினைவுக்கு வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு குறித்த தீர்ப்பை விமர்சிக்கும் ‘நீதித்துறைக்கும் மதச்சார்பற்ற தன்மை தேவை’ கட்டுரை முக்கியமானது. என்கவுண்டர் என்னும் மனித உரிமை மீறல் கொண்டாடப்படும் அவலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது ‘என்கவுண்டர் என்னும் திடீர் பாயசம்’ கட்டுரை. அரசு ஊழியர்களுக்கு அரசியல் உணர்வே இருக்கக்கூடாதா என்னும் பிரச்னை, நித்யானந்தாவின் கைலாசா தீவு, ஓய்வுக்குப் பின் நீதிபதிகள் பதவி வகிப்பது என்னும் பல்வேறு பிரச்னைகளை அலசியிருக்கிறார் நீதிபதி சந்துரு.

படிப்பறை

சட்டத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளவும் சமூக அரசியலைப் புரிந்துகொள்ளவும் உதவும் முக்கியமான நூல் இது.

நீதி - ஒரு மேயாத மான் - கே.சந்துரு

வெளியீடு : போதிவனம்,
அகமது வணிக வளாகம், 12/293, ராயப்பேட்டை நெடுஞ்சாலை,
ராயப்பேட்டை,
சென்னை - 600 014. தொலைபேசி : 9841450437

பக்கங்கள் : 208

விலை : ரூ. 200