Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

பிற கதைகள் அனைத்தும் கொஞ்சம் தீவிரத் தன்மை வாய்ந்தவை. வாசிப்பில் கவனம் கோருபவை. மாயமும் யதார்த்தமும் கலந்து புழங்குபவை.

படிப்பறை

பிற கதைகள் அனைத்தும் கொஞ்சம் தீவிரத் தன்மை வாய்ந்தவை. வாசிப்பில் கவனம் கோருபவை. மாயமும் யதார்த்தமும் கலந்து புழங்குபவை.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தமிழ்ச் சிறுகதை உலகம் காலந்தோறும் புதிய படைப்பாளர்களை உருவாக்குவதன் மூலம் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதோடு புதிய வீச்சையும் தன்னுள் கொண்டுவருகிறது. ‘அநீதிக் கதைகள்’ தொகுப்பின் மூலம் சமீபத்தில் அந்தப் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார் அருண்.மோ.

நூலின் தலைப்பிலேயே கதைகளின் தன்மை வெளிப்படுகிறது. இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் எளிய மக்களுக்கு எதிரான அநீதிகளை மையமாகக் கொண்டவை. தனி மனித வெறுப்பில் தொடங்கி சமூக, இன, பாலின அடையாளங்கள்மீதான காழ்ப்புணர்ச்சி செயல்படும் அரசியலை அடையாளம் காட்டுபவை. தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் பத்துக் கதைகளும் வாசிக்க மிகவும் சுவாரசியமானவை. முதல் கதையான ‘தீட்டு’ இன்றைய சமூக இயங்கியலை மையமாகக் கொண்டது. தனி மனிதர் ஒருவரின் அச்சம் எப்படிப் பொது அச்சமாக ஊதிப் பெருக்கப்படுகிறது என்பதை விவரிக்கும் கதை. நையாண்டியும் சமூக விமர்சனமும் தொனிக்கும் எளிமையான மொழியிலான கதை.

பிற கதைகள் அனைத்தும் கொஞ்சம் தீவிரத் தன்மை வாய்ந்தவை. வாசிப்பில் கவனம் கோருபவை. மாயமும் யதார்த்தமும் கலந்து புழங்குபவை. பூச்சி, அசுரர்கள், பசி ஆகிய கதைகள் அதிகாரத்தின் கோர முகத்தை மொழிப்படுத்தியவை. பெரும்பாலான கதைகளில் பூச்சிகள், பறவைகள், பூனைகள் ஆகியன முக்கிய இடம் பிடிக்கின்றன. பூச்சி கதையை வாசிக்கும்போது நம்மீதுகூட அழுக்குப்பூச்சி ஊர்வதுபோன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அசுரர்கள் கொஞ்சம் அதீதமான கற்பனை என்றாலும் அதன் பின்னணியிலான அரசியல் கவனிக்கப்பட வேண்டியது.

இந்தத் தொகுப்பில் இருக்கும் டோல்கேட் கதை மிகவும் முக்கியமானது. அதிகாரக் கட்டமைப்பு எப்படி சாமானியனைச் சுரண்டுகிறது என்பதை மிக எளிமையாக விளக்கும் கதை இது. சொல்லப்போனால் ஒட்டுமொத்தத் தொகுப்பில் பெரும் கவனம் ஈர்க்கும் கதையும் இதுவாகவே இருக்கிறது. அதன் முக்கிய காரணம் அதன் அடிநாதமாகச் செயல்படும் எளிமையான மொழியும் நிகழ்வுகளும்.

படிப்பறை

முற்போக்கு இலக்கியங்கள் என்பன ஏராளமான வாசகர்களைச் சென்று சேர எளிமையான அதேவேளையில் வலிமையான மொழியுடன் அமைய வேண்டியது இன்றைய காலத்தின் தேவை. அருணின் பலமாக இந்த மொழி அமையும் பட்சத்தில் இன்னும் பல காத்திரமான தொகுப்புகளை அவரிடம் எதிர்பார்க்கலாம்.

அநீதிக்கதைகள் - அருண். மோ

வெளியீடு: யாவரும் பப்ளிஷர்ஸ்

#24, கடை எண் பி. முதல் மாடி,
எஸ்.ஜி.பி. நாயுடு காம்ப்ளெக்ஸ்

வேளச்சேரி மெயின் ரோடு, வேளச்சேரி

சென்னை - 600042

தொடர்பு : 9042461472

பக்கங்கள்: 134

விலை: ரூ. 160