Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மூமின் - ஷோபாசக்தி

படிப்பறை

மூமின் - ஷோபாசக்தி

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளரான ஷோபாசக்தியின் சிறுகதைத் தொகுப்பு ‘மூமின்.’ வெவ்வேறுவிதமான மனிதர்களின் வாழ்க்கையைத் தனக்கேயுரிய எழுத்துச்செழுமையுடன் கதைகளாக விரிப்பது ஷோபாசக்தியின் பாணி. பகடி, ஆழ்மன உணர்வுகள், மனித வாழ்க்கையின் விசித்திரங்கள் ஆகியவற்றை முன்வைத்துப் பேசுபவை ‘மூமின்’ கதைகள்.

‘இலங்கையில் நடந்த இன அழிப்புப் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவையில்லை. நாங்களே விசாரணை நடத்திக்கொள்கிறோம்’ என்ற இலங்கை அரசின் நிலைப்பாட்டை வலியும் பகடியும் நிறைந்த ‘மிக உள்ளக விசாரணை’ கதை மூலம் விமர்சனத்துக்குள்ளாக்கியிருக்கிறார் ஷோபா. போர்க்காலத்தில் கிணற்றில் தூக்கிப்போடப்பட்ட மனிதர், போர் முடிந்தபின்பு கண்டுபிடிக்கப்படுகிறார். அவர் தன்னுடைய கதையையும் பாதிப்பையும் முன்வைக்கிறார். ஆனால் ‘இப்போது இந்த விசாரணை நடைபெற்றால் அது இலங்கையின் சமாதானத்தை பாதிக்கும்’ என்ற முடிவுக்கு வருகிறது ‘உள்ளக விசாரணைக்குழு.’ இப்படி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பரவியிருக்கும் ஈழத்தமிழர்களின் வாழ்க்கையின் வெவ்வேறு கூறுகளை முன்வைக்கின்றன எல்லாக்கதைகளும்.

படிப்பறை

இந்தத் தொகுப்பின் இரு சிறந்த சிறுகதைகள் என்று ‘காயா’வையும் ‘அம்மணப்பூங்கா’வையும் சொல்லலாம். ‘காயா’ தனிநபர் ஒருவரின் பாலியல் விழைவை மிக நுட்பமான தளத்தில் வைத்துப்பேசுகிறது. ‘அம்மணப்பூங்கா’ ஈழத்தமிழர்களின் போராட்டங்கள், மனநிலை, புலம்பெயர்ந்த சூழலில் அவர்களின் மன அமைப்பு ஆகியவற்றை இலக்கியமாக மாற்றுகிறது. ‘யானைக்கதை’ ஈழப்போராட்ட இயக்கங்கள் குறித்துப் பகடியும் துயரமும் நிறைந்த, ஷோபாசக்திக்கே உரித்தான தனித்துவக்கதை. ஒரு அற்புதமான உருவகக் கவிதையாக மாறவேண்டிய ‘அந்திக்கிறிஸ்து’ நீளமான கதையாக விரிந்திருக்கிறது. முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த சர்ச்சை எழுந்த நேரத்தில் எழுதப்பட்ட ‘யாப்பாணச்சாமி’ சிறுகதை பகடியுடன் நுட்பமான விமர்சனத்தை எழுப்புகிறது.

போர்க்காலம், போர் முடிந்ததற்குப் பிறகான காலம், புலம்பெயர் வாழ்வுக்காலம், போருக்கு அப்பாலான காலம் என்று வெவ்வேறு காலகட்டங்களை முன்வைக்கும் இந்தக் கதைகள் தொடர்ச்சியாக மனிதவாழ்க்கையின் பரிமாணங்களையே முன்வைக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்தத் தொகுப்பைப் படித்து முடிக்கும்போது, ‘இன்னும் எழுதுவதற்கு ஷோபாசக்திக்குத்தான் எத்தனை கதைகள் இருக்கின்றனவோ?’ என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

மூமின் - ஷோபாசக்தி

வெளியீடு : கருப்புப் பிரதிகள், பி 55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 600 005

பக்கங்கள் : 264

விலை : 250 ரூபாய்