பிரீமியம் ஸ்டோரி

‘நீ என்னவாகப் போறே’ என்று கேட்டால் ‘சயின்டிஸ்ட்’ என்று ஒற்றை வரியில் மாணவர்கள் பதில் சொல்வதை சமீபத்தில் நிறைய கேட்கமுடிகிறது. எந்தப் பின்புலமுமில்லாத எளிய குடும்பத்தில் பிறந்து உச்சம் தொட்டு முன்மாதிரிகளான அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாதுரை, சிவன் போன்றோர் ஏற்படுத்திய விளைவு இது.

மாணவர்களின் இந்த அறிவியல் ஆர்வத்தை நெறிப்படுத்தி வழிகாட்டும்வகையில், தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதிவரும் விஞ்ஞானி டில்லிபாபுவின் மற்றுமொரு உற்சாகமூட்டும் நூல் இது. அறிவியல் துறையில் விரிந்து கிடக்கும் வாய்ப்புகளையும், அவற்றை எட்டிப்பிடிக்க மாணவர்கள் எப்படித் தயாராக வேண்டும் என்பதையும் விரிவாகப் பேசும் டில்லிபாபு, அது தொடர்பான படிப்புகள், அந்தப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களையும் அடையாளப்படுத்துகிறார்.

படிப்பறை

‘193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஐ.நா.சபையில் வெறும் 7 நாடுகளிடம்தான் நவீனப் போர்விமானத் தொழில்நுட்பம் உள்ளது. அவற்றில் இந்தியாவும் ஒன்று. நிலவுக்கு விண்கலம் அனுப்பிய 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் தொழில்நுட்பம் இந்தியாவையும் சேர்த்து உலகில் 6 நாடுகளிடம் மட்டுமே உள்ளன. செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்திய நான்காவது நாடு இந்தியா’ என இந்தியாவின் தனித்தன்மைகளைப் பட்டியலிடும் டில்லிபாபு, எதிர்காலத்தில் அவற்றிலிருக்கும் சாத்தியங்களைச் சொல்லி மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டுகிறார். தேசிய ஆய்வு நிறுவனங்களுக்கெனத் தனியே நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அவற்றில் சிறப்புப்பாடங்கள் போதிக்கப்படுகின்றன. அங்கு படித்தவர்கள் அந்த நிறுவனங்களிலேயே விஞ்ஞானியாகப் பணியில் இணைய முடியும். ஆனால் இதுகுறித்த விழிப்புணர்வு இங்கு மிகவும் குறைவாகவே இருக்கிறது. இந்த நூல் மிக விரிவாக அதுகுறித்துப் பேசுகிறது.

மாணவர்களுக்குப் பரிசளிக்க உகந்த நூல் இது!

அடுத்த கலாம் -

விஞ்ஞானி வி.டில்லிபாபு

வெளியீடு :

முரண்களரி படைப்பகம், 34/25, வேதாசலம் தெரு, காந்தி நகர், சின்ன சேக்காடு, மணலி, சென்னை-600068 அலைபேசி: 98413 74809, 90925 45686

பக்கங்கள்: 120

விலை: ரூ.150

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு