சினிமா
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

வ.உ.சி-க்கு ஆயுள் தண்டனையளித்த நீதிபதி, பிரிட்டிஷ் அதிகாரிகள் மத்தியிலேயே பெரும் எதிர்ப்புக்குள்ளானதும் வியப்புக்குரிய வரலாறு.

வ.உ.சி என நம் நெஞ்சத்தில் நிறைந்திருக்கிற வ.உ.சிதம்பரனார் பிறந்த 150வது ஆண்டு இது. சுதந்திரப்போரில் எவரும் யோசித்திராத போராட்ட வடிவங்களைக் கையில் எடுத்துக் களமாடிய வ.உ.சி, தேர்ந்த இலக்கியவாதியாகவும் தமிழ்ப் புலமையாளராகவும் இருந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கப்பல் நிறுவனம் நடத்தியதையும் சிறையில் செக்கிழுத்ததையும் தவிர்த்து அவருடைய அரிய பங்களிப்புகளை இளம் தலைமுறை முழுமையாக உணரவில்லை. இந்த நூல், அவரின் பன்முகங்களை அறிந்துகொள்ள உதவும்.

சோமசுந்தர பாரதியார் தொடங்கி பரலி சு.நெல்லையப்பர் வரை வ.உ.சியோடு களமாடிய, கண்டு பேசிய 26 பேர் எழுதிய கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. சமரசமற்ற போராட்ட குணம், நேர்மை, நிபுணத்துவம், ஆளுமை, மொழித்திறன் என வ.உ.சி முழுமைபெற்ற மனிதராக வாழ்ந்திருக்கிறார். எல்லோரும் ஆங்கிலேய அரசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்தபோது, அவர்களுக்குப் போட்டியாக அவர்கள் வழியிலேயே வணிகத்தில் இறங்கி சவாலாய் நின்றார். அதனால்தான் மற்ற தலைவர்களையெல்லாம் மென்மையாகக் கையாண்ட ஆங்கிலேயே அரசு, வ.உ.சி-யை அச்சுறுத்தலாகக் கருதி ஆயுள் தண்டனை கொடுத்துச் சிறையிலடைத்தது.

வ.உ.சி-க்கு ஆயுள் தண்டனையளித்த நீதிபதி, பிரிட்டிஷ் அதிகாரிகள் மத்தியிலேயே பெரும் எதிர்ப்புக்குள்ளானதும் வியப்புக்குரிய வரலாறு. அந்த நீதிபதியின் பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது. இதுபற்றி சோமசுந்தர பாரதியார் விரிவாக எழுதியிருக்கிறார். வ.உ.சி இறந்தபோது பெரியார் எழுதிய ‘குடியரசு’ இதழின் துணைத் தலையங்கம் அக்காலத்திய சமூகச்சூழலையும் நெருக்கடிகளையும் காட்சிப்படுத்துகிறது. காங்கிரஸில் இருந்து வ.உ.சி விலக நேர்ந்த சூழல் பற்றி 1949-ல் சென்னை தமிழரசுக் கழக மாநாட்டில் திரு.வி.க ஆற்றிய உரையும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. பி., பொ.திரிகூட சுந்தரம், எஸ்.வையாபுரிப்பிள்ளை போன்றோரின் கட்டுரைகளும் வ.உ.சி-யைப் புரிந்துகொள்ளப் பெரிதும் உதவும்.

இந்தியச் சுதந்திரப்போரில் வ.உ.சி போன்ற தலைவர்களின் பங்களிப்புகள் முழுமையாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியது அவசியம். அந்த வகையில் இந்த நூல் முக்கியமானது.

படிப்பறை

தமிழ்ப் பெரியார் வ.உ.சி.

தொகுப்பு: ஆ.அறிவழகன்

வெளியீடு : பரிசல் புத்தக நிலையம், பி பிளாக் 235, எம்ஜிஆர்
முதல் தெரு, எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை-600106

தொடர்பு எண்: 93828 53646, 8825767500

பக்கங்கள்: 148 விலை: ரூ.150