Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

கீழத்தஞ்சையின் கதையை அதன் அரசியல் வரலாறு சேர்த்துப் புனைவு கூட்டிச் செல்கிறது கதை.

‘விடம்பனம்’ நாவலுக்குப் பிறகு சீனிவாசன் நடராஜன் எழுதியிருக்கும் நாவல் ‘1967 தாளடி.’

கீழத்தஞ்சையின் கதையை அதன் அரசியல் வரலாறு சேர்த்துப் புனைவு கூட்டிச் செல்கிறது கதை. ஆகப் புதியதில் ஆகப் பழையதன் சாயல் இருக்கும் எனச் சொல்வார்கள். வளமான கீழத்தஞ்சையின் அத்தனை சித்திரங்களும் இந்தப் புது வாசிப்பில் கிடைப்பது பலம். அரசியல் செல்வாக்கு தொட்டு, தொடரும் அதிகாரம் என அத்தனையையும் பட்டவர்த்தனமாகச் சொல்லியிருக்கிறார். சொல்வதற்கு ஒரு விஷயம் இருக்கிறது... அதை வேறு விதமாகவும் சொல்லிப் பார்க்க முடியும் என வார்த்தைகளில் முயன்று பார்த்திருக்கிறார்.

அன்பழகன், பார்வதி, பர்வதம், தாமரை, சீனிவாசம் பிள்ளை என எல்லோருமே கீழத்தஞ்சையின் அடிப்படையான மனிதர்கள். லா.ச.ரா செதுக்கிச் செதுக்கிச் செய்ததை, தி.ஜா அந்தரங்கமாக ஒரு கடிதம் மாதிரி எழுதியதை, உணர்வு ஒரு சொட்டுக்கூட சேர்க்காமல் வேறு மொழியில் அசோகமித்திரன் ஒட்ட வைத்ததை சீனிவாசன் மற்றுமொரு வசன நடையில் எழுதிப் பார்க்கிறார். ஒரு நல்ல பாதை உருவான பிறகுதான் சீனிவாசன் மாதிரியான தலைமுறையே வருகிறது. நிலம், பெண், அதிகாரம் என அனைத்தையும் பற்றிக்கொண்டு செல்வதால் கூடுதல் பார்வையும் தேவைப்படுகிறது.

தஞ்சையின் நிலவுடைமைக்காரர்களுக்கு எதிர்நின்றும் அஞ்சியும் வெகுண்டும் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை தெரிகிற இடங்கள் அற்புதமானவை. சாதியப் பெருமிதங்கள் கெட்டித்துக் கிடந்ததால் லேசாகக் கீறினாலும் கொந்தளிப்பு நடந்த இடங்கள் வருகிறபோது, இந்த நாவல் அமைப்பில் வேறு இடத்திற்குச் செல்வது உண்மை. ஒரு படைப்பில் நீண்ட நெடிய வரலாற்றைச் சொல்ல முயன்றதற்கான எல்லா அடையாளமும் காணக் கிடைக்கிறது. கம்யூனிசமும் திராவிட இயக்கங்களும் மலர்ந்து ஊடுருவி மமதை அதிகாரத்தைக் கேள்வி கேட்டபோது நிகழ்ந்த போக்குகள், செயல்பாடுகள் எல்லாம் கணிசமாகப் பதிவாகியிருக்கின்றன.

வசன நடையை ஒரு கருவியாகக் கையாளுகிறார் சீனிவாசன். நடையே இலக்கல்ல. அவருக்கு சமயங்களில் நகைச்சுவையும் எள்ளலும் ரசமும் கூடிவருகின்றன. தியாகம், அழித்தொழிப்பு என இயக்கங்கள் பற்றிய கதை என்றாலும் நிலத்தின் மொழி நன்கு கைவரப்பெற்று இருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தோடு வரலாற்றையும் முன்வைத்த வகையில் ‘1967 தாளடி’ நம்பிக்கை தருகிறது.

படிப்பறை

1967 தாளடி

- சீனிவாசன் நடராஜன்

வெளியீடு:
தேநீர் பதிப்பகம், 24/1 மசூதி பின் தெரு,

சந்தைக்கோடியூர், ஜோலார்பேட்டை - 635851

போன்: 90809 09600

பக்கங்கள்: 208

விலை: ரூ. 230