Published:Updated:

படிப்பறை

தமிழகம் தந்த மகாகவி
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழகம் தந்த மகாகவி

கவிமணி தேசிக விநாயகம், நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் பாரதி மீது எழுதிய பாடல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன

மகாகவி பாரதியின் பல்வேறு பரிமாணங்கள் பற்றி இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெரியோர்கள் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே ‘தமிழகம் தந்த மகாகவி.’

மூத்த பாரதி ஆய்வாளரான சீனி.விசுவநாதனின் தொடக்கக் காலப் பணிகளில் ஒன்றான இத்தொகுப்பு, 1978-ல் முதன்முதலில் வெளியானது. பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு ஆண்டில், பாரதியியல் சார்ந்த முன்னெடுப்புகள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கும் சூழலில், விரிவுபடுத்தப்பட்ட புதிய பதிப்பாக இத்தொகுப்பு இப்போது வெளியாகியிருக்கிறது.

பாரதியின் மனைவி செல்லம்மாள், மகள் தங்கம்மாள்; மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியார், குவளையூர் கிருஷ்ணமாச்சாரியார், பரலி சு.நெல்லையப்பர் உள்ளிட்ட பாரதியின் சமகாலத்தவர்கள்; வ.உ.சி., ராஜாஜி, காமராசர், ப.ஜீவானந்தம் போன்ற அரசியல் தலைவர்கள்; உ.வே.சா., திரு.வி.க., ம.பொ.சி உள்ளிட்ட தமிழறிஞர்கள் மற்றும் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், நாடகக் கலைஞர்கள் எனப் பல்துறை அறிஞர்களின் பாரதி பற்றிய மதிப்பீடுகள் இன்றைய வாசிப்பில் புதிய திறப்புகளை வழங்குகின்றன.

படிப்பறை

பாரதியுடனான சந்திப்பு குறித்து, “[இந்த] முதல் சந்திப்பும் பேச்சுமே என்னைச் சோழனாகவும் அவரைக் கம்பனாகவும் நான் நினைக்கும்படி செய்தது” என்று வ.உ.சி-யும், “1919-ம் வருஷம் ஆரம்பத்தில்தான் முதல்முதலில் நான் பாரதியாரைப் பார்த்தேன். பாரதியாரின் பெருமையைப் பற்றிப் பூரணமாய் அறியக்கூடிய வயது எனக்கு அச்சமயம் இல்லை. ஆனால், அவர் ஒரு பெரிய தேசபக்தர், புரட்சி வீரர் என்ற முறையிலேயே அச்சமயம் அவரைக் கருதினேன்” என்று பத்திரிகையாளர் டி.எஸ்.சொக்கலிங்கமும் எழுதுகின்றனர்.

கவிமணி தேசிக விநாயகம், நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம், கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் பாரதி மீது எழுதிய பாடல்களும் இத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. “பாரதியின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு விளக்கம் கூற முனைவது தவறானதாகவே முடியும்” என்று ‘பாரதியும் வசனமும்’ கட்டுரையில் அறிஞர் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

பாரதி நினைவு நூற்றாண்டு நிறைவு ஆண்டில் மறுவெளியீடு கண்டிருக்கும், பாரதியியலின் முன்னோடி நூல்களில் ஒன்று, பாரதியியலின் எதிர்காலத்துக்கு மேலும் ஒளிகூட்டுவதாக அமைந்திருக்கிறது.

தமிழகம் தந்த மகாகவி

தொகுப்பாசிரியர்: சீனி. விசுவநாதன்

வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், பி பிளாக் 235,
எம்.ஜி.ஆர் முதல் தெரு,
எம்.எம்.டி.ஏ. காலனி, அரும்பாக்கம், சென்னை-600106

தொடர்பு எண்: 93828 53646, 8825767500

பக்கங்கள்: 284

விலை: ரூ.280