சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

ஒக்கி புயல் வரையிலான ஏராளமான இயற்கைப்பேரிடர்கள் வரை மீனவர்கள் பாதிக்கப்பட்டாலும் அது ஏன் பெரிய அளவில் அரசியல் விவாதமாக மாறுவதில்லை என்கிற கேள்வி நம் மனச்சாட்சிக்கானது.

வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கான உரிமை அரசியலைப் பேசுவதும் பிரதிநிதித்துவம் கோருவதுமான அடையாள அரசியல் காலகட்டமிது. பொதுச்சமூகத்தால் அதிகமும் கவனத்துக்குள்ளாகாத மீனவ மக்களின் பிரச்னைகளையும் அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தின் தேவையையும் முன்வைக்கும் நூல் ‘மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும்.’ பல ஆண்டுகளாக மீனவர்களின் பிரச்னைகள் குறித்து எழுதிவரும், வழக்கறிஞராக சட்டப்பணிகளை மேற்கொண்டுவரும் லிங்கன் இந்நூலை எழுதியுள்ளார்.

‘இதுவரை நடைபெற்ற 13 நாடாளுமன்றத் தேர்தல்களில் மீனவ சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் (ஜெயவர்தன்) மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்’ என்பதைச் சுட்டிக்காட்டும் லிங்கன், தமிழகம் முழுவதும் மீனவர்கள் சிதறிக்கிடக்கும் அவலத்தையும் குறிப்பிடுகிறார். மீனவ நகரம், முத்துக்குளிக்கும் நகரம் என்றெல்லாம் புகழ்பெற்ற தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், சுதந்திரத்துக்குப் பிறகான முதல் தேர்தல் நடந்த 1952-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஒரு மீனவ எம்.எல்.ஏ கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தாண்டியும் மீனவர்களுக்கான ஏராளமான பிரச்னைகளை இந்நூல் பட்டியலிடுகிறது. ராயபுரத்திலிருந்து பாண்டிச்சேரி வரையுள்ள மீனவக்குப்பங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களே கிடையாது என்ற தகவலைக் கவலையுடன் முன்வைக்கிறது.

ஒக்கி புயல் வரையிலான ஏராளமான இயற்கைப்பேரிடர்கள் வரை மீனவர்கள் பாதிக்கப்பட்டாலும் அது ஏன் பெரிய அளவில் அரசியல் விவாதமாக மாறுவதில்லை என்கிற கேள்வி நம் மனச்சாட்சிக்கானது. ஒரு மீனவர் கடலில் காணாமல்போய் ஏழாண்டுகள் ஆனால்தான் அவர் மரணமடைந்துவிட்டார் என்று அரசு அறிவிக்கும் என்ற நடைமுறைக்குப் பின்னால் உள்ள சிக்கல்களைச் சுட்டிக்காட்டுகிறார்.

படிப்பறை

மண்டல் கமிஷன் ‘மீனவர்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவேண்டும்’ என்று பரிந்துரைத்துப் பல ஆண்டுகள் ஆகியும் எந்தக் கட்சியும் அதுகுறித்துப் பேசுவதில்லை என்பதை இந்நூல் ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டுகிறது. மீனவர்கள் ஏன் பழங்குடியினர் என்பதற்குப் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து பண்பாட்டு நடைமுறைகள் வரை ஏராளமான தரவுகளை அடுக்குகிறார் லிங்கன். கச்சத்தீவு சிக்கல் குறித்து நுட்பமான கட்டுரையும் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களும் முக்கியமானவை.

அரசியல் திரட்சியும் அமைப்பு பலமும் அற்ற, பொதுச்சமூகத்தின் அக்கறைகளுக்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்ட மீனவர்களின் பண்பாடுகளையும் பிரச்னைகளையும் அரசியல் கோரிக்கைகளையும் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான நூலிது.

மீனவர்களும் அரசியல் பிரதிநிதித்துவமும் - லிங்கன்

வெளியீடு: துறை, 97, காமராஜர் சாலை, நொச்சிக்குப்பம், மயிலாப்பூர், சென்னை -4.

தொலைபேசி : 9176848877

பக்கங்கள் : 64

விலை : 60 ரூபாய்