Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

கிராமத்து தெருக்களின் வழியே...

கீழிருந்து மேலாகப் பயணிக்கும் வரலாறே நேர்மையான வரலாறு. ஆனால் நாம் வாசிக்கும் வரலாறுகள் அனைத்தும் ஆட்சியாளர்களையும் நிர்வாகிகளையும் முன்வைத்தே எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கைச்சூழல், பண்பாடு, பொருளாதார நிலை, கலை என மக்களின் வரலாற்றை மையப்படுத்தும் வட்டார வரலாறுகள் இப்போதுதான் தமிழில் நிறைய வருகின்றன. அப்படியொரு கவனிக்கத்தக்க வட்டார வரலாற்று நூல்தான், முருகேசபாண்டியனின் 'கிராமத்து தெருக்களின் வழியே...'

வைகை ஆற்றங்கரையில் தென்னந்தோப்புகளும் வெற்றிலைக் கொடிக்கால்களும் நிரம்பிய வளமான கிராமமான சமயநல்லூரில் தோய்ந்த தன் ஐம்பதாண்டு நினைவுகளுக்கு சுவாரசிய எழுத்தால் இலக்கிய வடிவம் தந்துள்ளார் முருகேசபாண்டியன். வெறும் ஞாபகப் பதிவாக இல்லாமல் நாட்டார் தெய்வ வழிபாட்டு நெறிகள், கிராமங்களில் படிந்திருக்கும் சாதிய மனோபாவங்கள், வர்க்கப் படிநிலைகளையும் பதிவு செய்கிறார். உட்புற விதானத்தில் வெல்வெட் துணிப் பூ வேலைப்பாடுகள் ஜொலிக்கும் கூட்டுவண்டியில் அமர்ந்தபடி செல்லும் மைனர்கள், குதிரைகள் பூட்டிய தட்டுவண்டியில் கையில் சவுக்குடன் பவுசுகாட்டும் சோக்காளிகள், துடைத்துத் துடைத்துப் பளபளப்பாக்கிய சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு நடந்துசெல்லும் கனவான்கள் என கிராமத்தின் குணச்சித்தர்கள் பலரும் இந்த நூலில் உலவுகிறார்கள்.

படிப்பறை

மீன் பிடிப்பதென்பது கிராமத்தின் வீர விளையாட்டுகளில் ஒன்று. ஊருணிகளிலும் கிணற்றிலும் நீரோடைகளிலும் விளைநிலங்களிலும் இழைந்து திரியும் விதவிதமான மீன்கள் பற்றியும், ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஜிலேபி கெண்டைகள் இந்தப் பாரம்பர்ய மீன்களை அழித்த கதையையும் விரிவாக எழுதுகிறார்.

இந்த நூல் நம் ஞாபகத்தில் படிந்திருக்கும் பல மனிதர்களை நினைவுபடுத்துகிறது. குறிப்பாக கோழியிறகும் கையுமாகத் திரியும் மனிதர்கள். காது குடைவதால் ஏற்படும் சுகத்துக்கு அடிமையானவர்கள். இறகு பறிப்பதற்காகவே இவர்கள் கோழிகளைத் துரத்துவார்கள். இறகின் நுனியை மட்டும் வைத்துக்கொண்டு பி்ற முடிகளைப் பிடுங்கி எறிந்துவிடுவார்கள். என்ன வேலையிருந்தாலும் இடையிடையே அந்த இறகால் காதுகுடைந்து கண்களை மூடி அந்த இன்பத்தை அனுபவிப்பார்கள். இப்படி, நிறைய சித்திரங்கள் இந்த நூலில் உள்ளன.

தான் பிறந்த கிராமத்தின் ஐம்பதாண்டுக்கால சமூகப் பண்பாட்டுச்சூழல்களையும் அதன் காரணிகளையும் படிப்படியாக கிராமம் எதிர்கொண்ட மாற்றத்தையும் கண்கண்ட சாட்சியாகப் பதிவு செய்கிறார் முருகேசபாண்டியன்.

கிராமத்து தெருக்களின் வழியே...

- ந.முருகேசபாண்டியன்

வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்,
சென்னை-600078

தொடர்பு எண்: 8754507070
பக்கங்கள்: 384
விலை: ரூ.350