Published:Updated:

படிப்பறை

அத்தியூர் விஜயா
பிரீமியம் ஸ்டோரி
News
அத்தியூர் விஜயா

இன்று இருளர்களுக்கு அரணாக நிற்கும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு உருவாகக் காரணமே அத்தியூர் விஜயாதான்.

காவல் வன்முறைக்கு எதிரான போராட்டங்கள் காலங்காலமாக நடந்துகொண்டேதான் இருக்கின்றன. 1990-களில் சிதம்பரம் பத்மினி, அத்தியூர் விஜயா, கம்மாபுரம் பார்வதி ஆகியோர் அரசு நிர்வாகத்துக்கு எதிராக நடத்திய சட்டப்போராட்டங்கள் மனித உரிமை வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றவை.

இவற்றில் அத்தியூர் விஜயாவின் வழக்கு வேறுபட்டது. அவரிடம் அத்துமீறியவர்கள், புதுச்சேரியைச் சேர்ந்த காவலர்கள். அவர்களோடு தமிழகக் காவலர்களும் இணைந்து அச்சுறுத்த, அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டு குற்றமிழைத்தவர்களை நீதியின் முன் நிறுத்தினார் விஜயா. வெளியில் நடமாடவே அஞ்சிய பழங்குடிப் பெண்ணான விஜயா, ஒரு கட்டத்தில் போராளியாக மாறி, தன்னைப் போல் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் களத்தில் இறங்கிப் போராடியது உத்வேகமளிக்கும் வரலாறு.

இன்று இருளர்களுக்கு அரணாக நிற்கும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு உருவாகக் காரணமே அத்தியூர் விஜயாதான். அவருக்கு நேர்ந்த கொடுமையையும் அவர் நடத்திய போராட்டத்தையும் முழுமையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

படிப்பறை

பாலியல் துன்புறுத்தலுக்குப் பிறகு காவல் வாகனத்தின் பின்னிருக்கையில் விஜயா துவண்டு கிடக்க, தன் மகளின் நிலையறியாமல் விஜயாவின் பெற்றோர் முன்னிருக்கையில் அமர்ந்து விசாரணைக்குச் சென்றதைப் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது. தொண்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் மூலம் விஜயாவுக்கு நேர்ந்த கொடுமை மனித உரிமைச் செயற்பாட்டாளர் பிரபா கல்விமணியின் கவனத்துக்குச் செல்ல, அவர் சட்டப்போராட்டத்தைத் தொடங்கினார். உள்ளூர் நெருக்கடிகள் ஒருபுறம், காவல்துறையின் மிரட்டல்கள் ஒருபுறமென விஜயா நிலைகுலைந்தார். இன்னொரு பக்கம் பணம் தருவதாகப் பேரமும் நடந்தது. எந்த சமரசத்துக்கும் உடன்படாமல் உறுதியாக இருந்தார். நீதிமன்றம் 6 காவலர்களுக்கும் ஆயுள்தண்டனை வழங்கியது. ஆனால் இரண்டே ஆண்டுகளில் உயர்நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என்று அவர்களை விடுவித்தது.

சித்தி வீட்டுக்கு விருந்தாளியாக வந்திருந்த விஜயாவை விசாரணைக்கெனக் காவலர்கள் அழைத்துச் செல்வதில் தொடங்கும் நூல், திருக்கோவிலூர் அருகே காவலர்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்காக விஜயா போராடுவதோடு முடிகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை அவள் - இவள் என்று சித்திரிப்பதும், பாலியல் வன்முறையை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துவதும் வாசிப்பில் சிறு சங்கடத்தை உருவாக்குவது நூலின் குறிப்பிடத்தகுந்த குறை!

அத்தியூர் விஜயா - பா.ஜோதி நரசிம்மன்

வெளியீடு:

தமிழ் எழிலன் வெளியீட்டகம், விழுப்புரம்.

தொடர்பு எண்: 9894561154

பக்கங்கள்-152,

விலை-ரூ.150