Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

காட்டுவழியில் நடந்துசென்றபோது விஷ உயிரிகள் தீண்டியும் நோய்வாய்ப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்தார்கள்.

படிப்பறை

காட்டுவழியில் நடந்துசென்றபோது விஷ உயிரிகள் தீண்டியும் நோய்வாய்ப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்தார்கள்.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

ஈழத்தின் துயரங்களை அறிந்த அளவுக்கு மலையகத்தின் துயரங்களைத் தமிழகத்தில் இருப்பவர்கள் அறிந்திருக்கவில்லை. 1840களில் அறந்தாங்கி, மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் பகுதிகளிலிருந்து ஆசைவார்த்தைகள் சொல்லி அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்கள் பெரும் வன்கொடுமைக்கு உள்ளானார்கள்.

சயாம் மரண ரயிலுக்கான பாதைப்பணியில் கொத்துக் கொத்தாக செத்ததைப் போல, தலைமன்னாரில் இறங்கி காட்டுவழியில் நடந்துசென்றபோது விஷ உயிரிகள் தீண்டியும் நோய்வாய்ப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் இறந்தார்கள். 1841-49 காலகட்டத்தில் மட்டும் இப்படி 70,000 பேர் இறந்துபோனார்கள் என்று இலங்கையிலிருந்து வெளிவரும் ‘அப்சர்வர்’ இதழ் எழுதியது. கண்டியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் உலகுக்கே அரிசி ஏற்றுமதி செய்துகொண்டிருந்த இலங்கை நிலங்களைப் பாழ்படுத்தி காப்பித் தோட்டங்களை உருவாக்கினார்கள். அந்தத் தோட்டங்களில் ரத்தத்தையும் வியர்வையையும் சிந்தி உழைத்தார்கள் தமிழர்கள். ஒரு பக்கம் நோய்கள், இன்னொரு பக்கம் கங்காணிகளின் அடக்குமுறைகள், இன்னொரு பக்கம் இன ஒதுக்கல் எனத் தவித்த தமிழர்களுக்கு ஏந்தலாக தஞ்சாவூரிலிருந்து போய்ச் சேர்ந்தார் கோ.நடேசய்யர். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமாகி தொழிலாளர்களின் பிரச்னைகளை உலகறியச் செய்தார். தொழிற்சங்க அமைப்புப் போராட்டங்கள் வீறுகொண்டெழுந்தன. செங்கொடி சங்கம் நடத்திய போராட்டத்தில் அழகர்சாமியும் ராமையாவும் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அரசு தொழிலாளர்களின் வலிமையை உணரத் தொடங்கியது.

இன்று இலங்கையின் அரசியலையும் பொருளாதாரத்தையும் தீர்மானிக்கும் மலையகத்தின் வரலாற்றையும் தமிழர்களின் பங்களிப்பையும் அவர்கள் எதிர்கொண்ட சமூக அரசியல் பிரச்னைகளையும் தெளிவாகப் பதிவு செய்கிறது இந்த நூல்.

தோட்டத் தொழிலாளர்களின் தீரமிக்க போராட்டங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் இலங்கையில் உருக்கொண்ட வரலாறு முழுமையாக இந்த நூலில் பதிவாகியிருக்கிறது. போராட்டத்தில் கைது செய்யப்பட்ட டிராட்ஸ்கியவாதி என்.என்.பெரேரா சிறையிலிருந்து தப்பி மதுரைக்கு வந்து கோவிந்தன் என்ற பெயரில் தலைமறைவாக வாழ்ந்த வரலாற்றையும் இந்த நூல் பதிவு செய்கிறது. சண்முகதாசனின் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் செயல்பட்ட ரோகன விஜய வீர, தலைமையோடு முரண்பட்டு ஜே.வி.பி அமைப்பைத் தொடங்கி ஆயுதப்போராட்டத்துக்கு வித்திட்டதன் மூலம் இலங்கையின் ஜனநாயக இடதுசாரி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலாற்றையும் ஒரு அத்தியாயம் விவரிக்கிறது.

படிப்பறை

மலையகத் தமிழர்கள் பற்றித் தமிழில் மிகவும் குறைவான பதிவுகளே இருக்கின்றன. இந்தச் சிறிய நூல், அடர்த்தியான தரவுகளை முன்வைத்து அவர்களின் வரலாற்றைப் பேசுகிறது.

மறைக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் வீர வரலாறு -

தொகுப்பு: எம்.எஸ்.செல்வராஜ்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்,

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,

சென்னை-600018

பக்கங்கள்: 96,

விலை : ரூ.100

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism