சினிமா
Published:Updated:

படிப்பறை

ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...
பிரீமியம் ஸ்டோரி
News
ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...

ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்...

காலந்தோறும் கவிதைக்கான களங்கள் மாறிவந்திருக்கின்றன. எதார்த்தத்தையும் அரசியலையும் எழுதுவது இலக்கியமாகாது, அகவுணர்வு சார்ந்த கவிதைகளே புனிதமானவை என்ற மாயை சில பத்தாண்டுகளாக உடைந்து நொறுங்கிவருகிறது. அந்தவகையில் ஒரு சலூன் கடைக்காரரின் குரலாக, அதேநேரத்தில் சாதியச் சமூகத்துக்கான எதிர்க்குரலாகவும் ஒலிக்கும் கவிதைத்தொகுப்பு, ப.நடராஜன் பாரதிதாஸின் ‘ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்.’

ஒடுக்கப்பட்டவர்களிலும் சிறுபான்மைச்சாதியினராக, அமைப்பு பலமற்றதாலேயே கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாதவர்களாக இருப்பவர்கள் சேவைச்சாதியினர். அவர்களுக்கான இலக்கியம் என்பது தமிழில் மிகக்குறைவு. அந்தவகையில் தனித்த குரலாக ஒலிக்கும் இந்தக் கவிதைகள், மொழியாளுமையிலும் தனித்துவம் பெற்றிருக்கிறது.

நாவிதர்கள் என்றழைக்கப்படும் மருத்துவர்கள் சிகை அலங்காரத்தைத் தாண்டி பிரசவம் முதல் இறப்புச்சடங்குகள் வரை நம் பண்பாட்டுடன் தொடர்ந்துவரும் மனிதர்களாக இருக்கிறார்கள் என்றாலும், அவர்களை இழிவான நோக்கத்துடனேயே பார்க்கும் பொதுப்புத்தியின்மீது கல்லெறிபவை இக்கவிதைகள். ஒவ்வொரு சாதியின் சடங்குகளையும் அறிந்து நேர்த்தியாகச் செய்துமுடித்த பழனி பண்டிதர் இறந்தபோது அவருக்கான சடங்குகளை முறையாகச் செய்து வழியனுப்புதல் நடைபெறாததைப் பதிவுசெய்கிறது ஒரு கவிதை. இறுதிச்சடங்கு செய்யும் அய்யருக்கு இருக்கும் மரியாதை நாவிதருக்கு இல்லாமற்போகும் பேதம், ஆண்ட பரம்பரைப் பெருமிதம் கொண்டவர்களுடன் எம்.பி.சி பட்டியலில் இருக்கும் வினோதம், தேர்தல் அரசியலாலும் புறக்கணிக்கப்பட்ட அநீதி, நகரத்தில் சாதி அடையாளம் நீக்கம் செய்யப்பட்டு நாகரிகமாக மாறிப்போன ‘அழகுநிலையங்கள்’ என்று நாம் இதுவரை கவனம் கொடுக்காத பல்வேறு விஷயங்களைப் பேசும் கவிதைகளின் தொகுப்பு இது.

படிப்பறை

‘`பிரசவம் பார்த்துவிட்டு வரும்/அம்மாவும்/சவத்துக்கு ஈமச்சடங்கு முடித்துவரும்/தகப்பனும்/ புணர்கையில்/ எந்தவாடை தூக்கலாயிருக்கும்/ பிரசவ வாடையா/ பொணவாடையா’’

என்ற கேள்விக்கு நாம் என்ன பதிலைச் சொல்லிவிட முடியும்?

‘உலகத்தையே சுற்றிவருவதும்/ சலூன் சேரை சுற்றியிறங்குவதும்/ஒன்றுதான்/வாங்களேன் சூப்பரா/ஒரு கட்டிங்/ஒரு சேவிங் செய்துகொண்டே/உலகைச் சுற்றிப்பார்க்கலாம்’
என்று அழைப்பு விடுக்கும் நடராஜன் பாரதிதாஸின் இந்தக் கவிதைத்தொகுதியின் வலிமையான குரலுக்கு ஒரே ஒரு கவிதையை உதாரணம் காட்டலாம்.

‘ஊரெல்லாம்/என்னை/சாதியைச் சொல்லியும்/தொழிலைச் சொல்லியும்/திட்டிக்கொண்டேயிருக்கிறார்கள்/ஓர் அரசனைப்போல/நான் கையில் ஆயுதங்களுடன்/மன்னித்துக்கொண்டேயிருக்கிறேன்/ஒரு கடவுளைப்போல.

ஒரு சகலகலா சவரக்காரன் பராக் பராக்... - ப.நடராஜன் பாரதிதாஸ்

வெளியீடு:

ஆதி பதிப்பகம், 15,

மாரியம்மன் கோயில் தெரு,

பவித்திரம், திருவண்ணாமலை - 606806

பக்கங்கள்: 94

விலை: ரூபாய் 100