Published:Updated:

படிப்பறை

புதுமைப்பித்தன் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
புதுமைப்பித்தன் கதைகள்

அயல்நாட்டுப் படைப்புகள் தந்த ஊக்கத்தில் புதுமைப்பித்தன் எழுதியுள்ள கதைகள் தழுவல் கதைகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

படிப்பறை

அயல்நாட்டுப் படைப்புகள் தந்த ஊக்கத்தில் புதுமைப்பித்தன் எழுதியுள்ள கதைகள் தழுவல் கதைகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

Published:Updated:
புதுமைப்பித்தன் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
புதுமைப்பித்தன் கதைகள்

நவீனத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடி புதுமைப்பித்தன். சிறுகதைகளில் பல புதிய மாற்றங்களைக் கொண்டுவந்த அவரின் எழுத்துநடை, இன்றளவும் எழுதவரும் யாருக்கும் மாபெரும் ஆதர்சமாகவும் முன்னோடியாகவும் விளங்குவது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட பிறகு புதுமைப்பித்தனின் கதைகள் பல பதிப்புகளைக் கண்டுள்ளன என்றபோதும் மலிவுவிலை மக்கள் பதிப்பாக நூறு ரூபாய் விலையில் வெளியாகியிருக்கும் ‘புதுமைப்பித்தன் கதைகள்’ - சீர் வாசகர் வட்டம் வெளியீடு வரவேற்கத்தக்க நூல்.

தமிழ் இலக்கியம், சமூகம் குறித்துப் பல காத்திரமான ஆய்வுகளை முன்வைத்துள்ள, சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் வீ.அரசு பதிப்பாசிரியராக இருந்து தன் பங்களிப்பைச் செம்மையாகச் செய்திருக்கிறார். புதுமைப்பித்தன் கதைகளைப் பல பரிமாணக்கதைகள், எளிய கதைகள், தழுவல் கதைகள் என மூன்றாக வகைப்படுத்தியிருக்கிறார் வீ.அரசு. எதார்த்தவாத எழுத்து முதல் பல்வேறு வகையான எழுத்துமுறைகளைப் பரிசோதித்த புதுமைப்பித்தன் கதைகளில் நவீனத்தன்மை மிகுந்திருக்கும் கதைகள் முதல் வகைப்பாட்டில் இடம்பெற்றிருக்கின்றன. அயல்நாட்டுப் படைப்புகள் தந்த ஊக்கத்தில் புதுமைப்பித்தன் எழுதியுள்ள கதைகள் தழுவல் கதைகளாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

புதுமைப்பித்தன் படைப்புகளின் பலம் சமூகச்சூழல்களையும் அவலங்களையும் கதைகளாக மாற்றும் தன்மை எல்லாப் படைப்புகளிலும் அடிநீரோட்டமாக ஓடிக்கொண்டிருக்கும், அவருக்கே உரிய பகிடியும். புதுமைப்பித்தனின் எல்லாக்கதைகளிலும் இந்த இரு தன்மைகளையும் பார்க்கலாம். முதல் சிறுகதையான ‘ஆற்றங்கரைப் பிள்ளையார்’ - பிள்ளையாரைக் குறியீடாக வைத்துப் பல்வேறு சமூக இயக்கப்போக்கைப் படைப்பாக மாற்றுகிறது. ‘புதிய நந்தன்’ கதை காந்தியம், சுயமரியாதை இயக்கப் பெரியாரியம், சனாதனம் என்னும் பல்வேறு போக்குகளின் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை விவரிக்கிறது.

படிப்பறை

துன்பக்கேணி, சங்குத்தேவனின் தர்மம், பொன்னகரம், சிற்பியின் நரகம், பிரம்ம ராட்சஸ், காஞ்சனை, செல்லம்மாள், கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சித்தி என்று புகழ்பெற்ற புதுமைப்பித்தனின் சிறுகதைகள் மறுவாசிப்பைக் கோருபவை. புதுமைப்பித்தனின் கதைகள் நவீனத் தமிழிலக்கியத்தின் முன்னோடி முயற்சிகளைப் புரிந்துகொள்ள மட்டுமல்ல, படைப்பாளியின் அரசியல் மனத்தை விமர்சனபூர்வமாக உணரவும் உதவும். அந்தவகையில் வாசிப்பைப் பரவலாக்கும் இந்த மலிவுவிலை மக்கள் பதிப்பை முன்னெடுத்துள்ள சீர் வாசகர் வட்டத்தின் முயற்சி வரவேற்கத்தக்கது.

புதுமைப்பித்தன் கதைகள்

பதிப்பு : வீ.அரசு,

வெளியீடு :

சீர் வாசகர் வட்டம், எண் 23, பி1,

துர்கா ஹோம்ஸ், சுரேந்திர நகர் ஆறாம் தெரு, ஆதம்பாக்கம்,

சென்னை - 600088. கைப்பேசி : 9600652285, 9566331195.

பக்கங்கள் : 626

விலை : ரூபாய் 100

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism