Published:Updated:

படிப்பறை

நானும் நீதிபதி ஆனேன்

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறை பற்றி இதுவரை யாரும் வெளிப்படையாக எழுதியது இல்லை. சந்துரு துணிச்சலாக அதைச் செய்திருக்கிறார்.

படிப்பறை

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறை பற்றி இதுவரை யாரும் வெளிப்படையாக எழுதியது இல்லை. சந்துரு துணிச்சலாக அதைச் செய்திருக்கிறார்.

Published:Updated:
நானும் நீதிபதி ஆனேன்

‘கடையரிலும் கடையருக்காகச் சிந்தியுங்கள், செயல்படுங்கள்’ என்பதே நீதிக்கான வழிகாட்டலாக மகாத்மா காந்தி அளித்த மந்திரக்காப்பு. அதைத் தனது ஆதர்ச வாழ்க்கை வாக்கியமாக எடுத்துக்கொண்டவர் நீதிநாயகம் சந்துரு. மனித உரிமைகளுக்காகவும் சமூகநீதிக்காகவும் தொழிலாளர்கள் உரிமைக்காகவும் ஏராளமான வழக்குகளை ஏற்று நடத்திய வழக்கறிஞராக இருந்தவர்; பின்னாள்களில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆன பின்பும் தன் தீர்ப்புகளில் அவற்றை உறுதி செய்தவர். இந்தியாவின் மிக முக்கியமான சட்ட நிபுணர்களில் ஒருவரான அவர் எழுதியிருக்கும் சுயசரிதை இது. வரிசைக்கிரமமான வாழ்க்கை வரலாறாக இல்லாமல், சம்பவங்களைக் கோத்து முன்னும் பின்னுமாகச் சென்று எழுதியிருப்பதே இதை சுவாரசியமான நூலாக மாற்றியிருக்கிறது. சந்துரு என்ற மனிதரின் வரலாறாக மட்டும் இல்லாமல், கடந்த ஐம்பது ஆண்டுக் கால தமிழக அரசியல், சமூக மற்றும் நீதிமரபின் வரலாறாகவும் இருப்பதுதான் இந்த நூலின் தனிச்சிறப்பு. சந்துருவே முன்னுரையில் குறிப்பிட்டிருப்பதுபோல, இந்த நூலைப் படித்தால் சட்டத்தை நீதிமன்றம் எப்படிப் பார்க்கிறது, தீர்ப்புகள் எவ்வாறு உருவாகின்றன, அதில் நீதிபதியின் பங்கு என்ன என்பதையெல்லாம் அறிந்துகொள்ள முடியும்.

ஸ்ரீரங்கத்தில் பிறந்து, சிறுவனாக இருந்தபோதே தாயை இழந்து, கதாகாலட்சேபங்கள், உபன்யாசங்கள், பஜனைகள் ஆகியவற்றையே பொழுதுபோக்காக உணர்ந்து, லட்சம் முறை ‘ஸ்ரீராமஜெயம்’ எழுதி சங்கர மடத்தில் கொடுத்து வெள்ளிக்காசு வாங்கி வளர்ந்த ஒருவருக்கு மார்க்சிய சித்தாந்தங்கள் மீது ஈர்ப்பு வந்ததும், பிறகு தான் நேசித்த கட்சியிடமே முரண்பட்டு வெளியேறியதுமே சந்துருவின் இளமைக்காலம். தன் மனத்துக்கு சரி என்று பட்டதைத் தயக்கமின்றி வெளிப்படுத்துபவராக அவர் எப்போதும் இருந்துவருகிறார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1971-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இதை எதிர்த்து மாணவர்கள் போராடியபோது, காவல்துறை கடுமையாகத் தாக்குதல் நடத்தியது. இதில் உதயகுமார் என்ற மாணவர் இறந்தார். காவல்துறை அந்த மாணவரின் தந்தைக்கு நெருக்கடி கொடுத்து, ‘இது என் மகன் சடலம் இல்லை’ என்று சொல்ல வைத்தது. அரசியல் அழுத்தங்களால், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைத்தது தமிழக அரசு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.எஸ்.ராமசுவாமியை அதற்கு நியமித்தது.

அப்போது சந்துரு மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் சங்கத்தில் இருக்கிறார். நீதிபதியிடம் போய், ‘உங்களை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு கொடுத்திருக்கிறோம். இந்நிலையில் நீங்கள் விசாரணை நடத்தக்கூடாது’ என்று மனு கொடுக்கிறார். ‘எந்தச் சட்டப்பிரிவின் கீழ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறீர்கள்?’ என்று நீதிபதி ராமசுவாமி கேட்டபோது, ‘நான் சட்டம் படித்ததில்லை. ஆனால், உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால், இந்த விசாரணையை நடத்தக்கூடாது’ என்று சொல்லி, நீதிபதியின் கோபத்துக்கு ஆளானார் சந்துரு. அப்போது இளம் வழக்கறிஞராக இருந்த ப.சிதம்பரத்தை அழைத்துச் சென்று இந்த வழக்கில் சந்துரு காட்டிய அக்கறையைப் பார்த்துவிட்டு, பின்னாளில் அதே நீதிபதி ராமசுவாமி, சந்துருவை சட்டம் படிக்கச் சொல்லி அறிவுறுத்தினார். அப்படித்தான் சந்துரு வழக்கறிஞர் ஆனார். பின்னாளில் சந்துருவின் பெயர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்காகப் பரிந்துரைக்கப்பட்டபோது தமிழக முதல்வராக இருந்தவர் கருணாநிதி. அரசின் கருத்துரை கேட்கப்பட்டபோது கருணாநிதி உடனடியாக இசைவு அளித்திருக்கிறார்.

நெருக்கடி நிலை காலத்தில் தமிழகச் சிறைகளில் அடைபட்டிருந்தவர்களுக்கு சட்டப்படியான உரிமைகள் கிடைக்கப் போராடியது, அப்போது நடந்த கொடுமைகள் தொடர்பான இஸ்மாயில் ஆணைய விசாரணையில் முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தை ஓர் இளம் வழக்கறிஞராகக் குறுக்கு விசாரணை செய்தது, ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் சார்பில் வாதாடிய பாண்டியம்மாள் வழக்கு, ‘ஜெய்பீம்’ திரைப்படம் வழியே தமிழகம் அறிந்த கம்மாபுரம் ராசாக்கண்ணு உள்ளிட்ட எத்தனையோ லாக்கப் மரணங்களுக்கு நீதி பெற்றுத் தந்தது என்று தமிழகத்தின் பரபரப்பான பல வழக்குகளை இந்த நூலின் வழியே அறிய முடிகிறது.

படிப்பறை

நீதிபதியாக தான் வழங்கிய முக்கியத் தீர்ப்புகளையும் சந்துரு விவரித்திருக்கிறார். மதுரை மாவட்டம் நல்லுதேவன்பட்டி துர்க்கை அம்மன் கோயிலில் பின்னையக்காள் என்பவர் பெண் பூசாரியாகச் செயல்பட முடியும் என்ற தீர்ப்பு, குழந்தைகளைத் தத்தெடுப்பது தொடர்பான விதிகளைத் திருத்தி அமைத்த தீர்ப்பு என்று எல்லாவற்றின் பின்னணியில் இருக்கும் சட்ட நியாயங்களைத் தெளிவாக அலசியிருக்கிறார் சந்துரு.

நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் முறை பற்றி இதுவரை யாரும் வெளிப்படையாக எழுதியது இல்லை. சந்துரு துணிச்சலாக அதைச் செய்திருக்கிறார். சந்துருவை நீதிபதியாக நியமனம் செய்யும் நடைமுறை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தள்ளிப்போனது. அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்து, நீதித்துறையினரைத் தாண்டி எல்லோரும் அறிந்துகொள்ள இந்த நூல் உதவும்.

கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குடன் பிள்ளைகளை வளர்த்ததால் சந்துருவின் அம்மாவுக்கு ‘சட்டம்’ என்று பட்டப்பெயர் உண்டாம். நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சொந்த ஊர் போன சந்துருவை அங்கிருந்த பாட்டி ஒருவர், ‘‘யாரு... சட்டத்தின் மவனா?’’ என்று கேட்டிருக்கிறார். எத்தனை சத்தியமான வார்த்தைகள் அவை!

நானும் நீதிபதி ஆனேன்

கே.சந்துரு

வெளியீடு: அருஞ்சொல்

120/70, டி1, கொத்தவால்சாவடித் தெரு, சைதாப்பேட்டை,

சென்னை-600015.

செல்பேசி: 63801 53325

பக்கங்கள்: 480

விலை: ரூ. 500

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism