Published:Updated:

படிப்பறை

ஜாம்பஜார் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஜாம்பஜார் கதைகள்

ஜாம்பஜார் கதைகளில், கதாபாத்திரங்களின் உரையாடல்களில் சென்னை மொழி அதன் அழகு குலையாமல் அற்புதமாக வந்து விழுகிறது.

படிப்பறை

ஜாம்பஜார் கதைகளில், கதாபாத்திரங்களின் உரையாடல்களில் சென்னை மொழி அதன் அழகு குலையாமல் அற்புதமாக வந்து விழுகிறது.

Published:Updated:
ஜாம்பஜார் கதைகள்
பிரீமியம் ஸ்டோரி
ஜாம்பஜார் கதைகள்

சென்னை வாழ்க்கையைப் பல எழுத்தாளர்கள் புனைவில் பதிவு செய்திருந்தாலும், சென்னையிலேயே பிறந்து, விளிம்புநிலை மக்களோடு வாழ்ந்து அதை எழுத்தில் கொண்டு வந்தவர்கள் மிகக்குறைவு. `ஜாம்பஜார் கதைகள்’ சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் பெரு.முருகனுக்கு சென்னைதான் பூர்வீகம். 150 ஆண்டு பாரம்பர்யமிக்க சென்னைத் திருவல்லிக்கேணியிலுள்ள ஜாம்பஜார் மார்க்கெட்டில் வாழ்ந்தவர். அந்தப் பகுதியிலேயே மீன் வியாபாரம் செய்துவருபவர். நீதி சொல்லல், கிளர்ச்சியடையச் செய்தல், துயரங்களைப் பிழிந்து கொடுத்தல் என எந்த உணர்வையும் வலிந்து திணிக்காமல், சென்னையின் ஒரு பகுதி மனிதர்களின் வாழ்க்கையை அத்தனை கதைகளிலும் இயல்பு மாறாமல் காட்சிப்படுத்துகிறார்.

ஜாம்பஜார் கதைகளில், கதாபாத்திரங்களின் உரையாடல்களில் சென்னை மொழி அதன் அழகு குலையாமல் அற்புதமாக வந்து விழுகிறது. `சரக்கு அட்ச்சி அட்ச்சி பெலாசி மீனு மாரி ஆயிப்போச்சி. பெலாசி மீனு பாத்திருக்க வாத்தியார்... அதுக்கு ஒடம்பு மூஞ்சில்லாம் இல்ல... ஒரு உருண்டை. அதுல கண்ணு, மூக்கு, வாலு. அவ்ளோதான்’ போன்ற சென்னைக்கேயுரிய வர்ணிப்புகள் அத்தனை கதைகளிலும் தெறித்து விழுகின்றன. கருவும் மெனக்கெட்டு எடுத்தாளப்படாமல், யதார்த்தமான கதை சொல்லலுக்குள் அமைவதாக இருக்கிறது.

படிப்பறை

உறவினரின் மரண நிகழ்வுக்குப் போய் வருபவன், இளம்பெண்ணின் பின்னால் காதல் பித்துப் பிடித்துத் திரிபவன், சுட்டுக் கொல்லப்படும் தாதா என, சாதாரணமாகத் தெரிந்தாலும் கதை சொல்லல் முறை நம்மை அப்படியே அவற்றுக்குள் லயித்துபோகச் செய்துவிடுகிறது. சென்னையின் அடித்தட்டு மக்களின் வாழ்வியலை முன்வைக்கும் `வெங்காய சமாசாரம்’ சிறுகதை கொஞ்சம் துணுக்குறவைக்கிறது. பாலியல் தொழிலாளிகள் காலம் காலமாக வஞ்சிக்கப்படுவது, அவர்களின் உடல்மேல் ஏவப்படும் வன்முறை இதுதான் மையப்புள்ளி. இதை எடுத்துக்கொண்டு பின்னப்பட்டிருக்கும் சம்பவங்கள் திடுக்கிட வைக்கின்றன.

உருது மொழியில் `ஜாம்’ என்றால் `கொய்யா’ என்று அர்த்தமாம். ஒரு கொய்யாத் தோப்பு இருந்த இடம்தான் பின்னால் ஜாம்பஜார் மார்க்கெட்டாக உருவானதாம். எதிர்காலம் என்ற ஒன்று இல்லை என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்திருந்துவைத்திருக்கும் எளிய சென்னையின் பூர்வகுடிகள், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் அன்றாட வாழ்க்கையை எதிர்கொள்கிற யதார்த்தத்தை, சென்னையின் மண்மணம் கமழ அறிந்துகொள்ள `ஜாம்பஜார் கதைகள்’ தொகுப்பை வாசிக்கலாம்!

ஜாம்பஜார் கதைகள்

பெரு.முருகன்

வெளியீடு: வானவில் புத்தகாலயம்

10/2 (8/2), போலீஸ்
குவார்ட்டர்ஸ் சாலை (முதல் தளம்),
தியாகராயநகர், சென்னை - 600 017.

கைப்பேசி: 72000 50073

பக்கங்கள்: 80

விலை: ரூ. 99