Published:Updated:

படிப்பறை

மாபெரும் தாய்
பிரீமியம் ஸ்டோரி
மாபெரும் தாய்

மாபெரும் தாய்

படிப்பறை

மாபெரும் தாய்

Published:Updated:
மாபெரும் தாய்
பிரீமியம் ஸ்டோரி
மாபெரும் தாய்

இலங்கைப் போர்ச்சூழலில் வாழ்ந்து, புலம்பெயர்ந்து வந்திருக்கும் அகரமுதல்வனின் சிறுகதைத் தொகுப்பு. தன் மண்ணின் நினைவுகளைக் கதைகளின் வழியே மீட்டெடுத்திருக்கிறார். எதிரிப்படை, யுத்த பூமி, செத்துவிழும் மனிதர்கள் இவற்றுக்கு ஊடாக மானுடகுலத்தின் இயல்பான காதலும் அன்பும் இழையோடுவதுதான் இந்தத் தொகுப்பிலிருக்கும் கதைகளின் பலம்.

வெறும் யதார்த்தச் சம்பவங்களோடு நகராமல், அமானுஷ்யம் கலந்த மந்திர உலகில் நிகழ்வதுபோல் கதைகள் விரிவது புது வாசிப்பனுபவத்தைத் தருகிறது. பி.பி.சி என்கிற ஒருவனுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்பதையும், அவன் வாழ்வையும் விவரிக்கிறது `என்னை மன்னித்துக்கொள் தாவீது’ என்கிற கதை. அவன் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணத்தை அறியும்போது நிலைகுலைந்துபோகிறோம். போராளியாக வாழ்ந்திருந்தாலும், ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடப்போனால் அங்கேயும் குறுக்கே வந்து தொலைக்கிறது சாதி என்கிற உண்மையை முன்வைக்கிறது `அவளைக் கொன்றவர்கள்’ கதை.

படிப்பறை

இந்தச் சிறுகதைகளின் பல கதை மாந்தர்கள் ஈழ வரலாற்றோடு சம்பந்தப்பட்டவர்கள். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருப்பதுபோல் தெரிந்தாலும், அத்தனை கதைகளுக்கும் மைய இழையாக ஈழ மக்களின் வாழ்வியல் இருக்கிறது. துயரம், வலி, பதற்றம், வெறுமை இவைதான் கதைகளின் அடிநாதமாக இருக்கின்றன.

ஒரு பிரத்யேகமான மொழிநடையில் விரியும் இந்தச் சிறுகதைகள் மெல்ல மெல்ல நம்மைக் கதை நிகழும் களத்துக்குள் இழுத்துவிடுகின்றன. அடர் வனம், பதுங்குகுழி, துப்பாக்கிகளின் முழக்கம், ஒரு தாயின் ஜெபம், பறவைகளைக் கவண்கொண்டு வேட்டையாடும் சிறுவன், அம்மாளாச்சி என்கிற கிழவியின் வேப்பிலை அடி, வான்மலர் என்கிற பெண்ணுடனான காதல்... அத்தனைக்குள்ளும் நம்மையும் நுழைத்துவிடும் ஜாலம் நிறைந்த மொழிநடை. மொத்தக் கதைகளையும் படித்து முடித்ததும் வேறோர் உலகத்துக்குள் புகுந்து வெளி வந்த உணர்வு ஏற்படுகிறது.

புலம்பெயர்ந்து வாழும் மனிதர்களின் வலியை உணர்ந்துகொள்ள இந்த நூல் உதவும். ஒரு மண்ணின் தனித்த அடையாளத்தை, நாம் இதுவரை எதிர்கொண்டிராத மனிதர்களை, அவர்களின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள விரும்பும் அனைவரும் இந்த நூலை வாசிக்கலாம்.

மாபெரும் தாய்
அகரமுதல்வன்

வெளியீடு: ஜீவா படைப்பகம்,
#351 MIG, NH-1, நக்கீரர் தெரு,
மறைமலைநகர், காஞ்சிபுரம் - 603 209

தொடர்புக்கு: 98413 00250

மின்னஞ்சல்: jeevapataippagam@gmail.com

பக்கங்கள்: 176
விலை: ரூ.240

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism