Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

தான் பங்கேற்ற கூத்துகள், கூத்து பற்றிய நம்பிக்கைகள், கூத்துக் கலைஞர்கள், கூத்துக்கான திட்டமிடல்கள், பயிற்சிகள் என தன் நினைவுகள் அனைத்தையும் எழுத்தாக்கியிருக்கிறார் ஏகாம்பரம்.

படிப்பறை

தான் பங்கேற்ற கூத்துகள், கூத்து பற்றிய நம்பிக்கைகள், கூத்துக் கலைஞர்கள், கூத்துக்கான திட்டமிடல்கள், பயிற்சிகள் என தன் நினைவுகள் அனைத்தையும் எழுத்தாக்கியிருக்கிறார் ஏகாம்பரம்.

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

கூத்தை உயிராகச் சுமந்து வாழ்ந்த ஒரு கலைஞன் தன் அனுபவத்தின் வாயிலாக அக்கலையின் வரலாற்றைப் பதிவு செய்திருக்கிறார். நிகழ்த்துகலை வடிவங்கள் அனைத்துக்கும் ஆதியாக இருந்த கூத்து, இன்று நம் வாழ்வை விட்டு விலகிவிட்டது. நம் முந்தைய தலைமுறைக்குப் போதனையாக, பொழுதுபோக்காக, வாழ்வின் அங்கமாக இருந்தது கூத்து. அதை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்த கலைஞர்கள் இன்று கூலித்தொழிலாளர்களாக மாறிப்போனார்கள். பல அற்புதமான கலைஞர்கள் சிறுபதிவுகள்கூட இல்லாமல் விலகிப்போய்விட்டார்கள். ஏகாம்பரம், காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். கலைமகள் நாடக மன்றம் என்ற பெயரில் ஒரு நாடகக்குழுவை உருவாக்கி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களையும் கூத்துகளையும் நிகழ்த்தியவர். பெரும்பாலும் இவர் ஏற்றவை பெண் வேடங்கள். அரிச்சந்திராவில் சந்திரமதியாக, சிறுத்தொண்டர் புராணத்தில் வெங்காட்டு நங்கையாக, பத்மாவதி கல்யாணத்தில் பத்மாவதியாக, கண்ணன் காண்டீபனில் சுபத்ரையாக இவர் ஏற்ற பாத்திரங்கள் எல்லாம் அக்காலத்தில் மக்கள் மனதில் நின்றவை. கூத்தின் உக்கிர வடிவான கட்டைக்கூத்திலும் துரியோதனன், அர்ஜுனன் எனப் பல பிரதான வேடங்களில் கலையாடியவர்.

படிப்பறை

அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கூத்துக்கலையோடு தன்னைப் பிணைத்துக்கொண்டிருந்த ஏகாம்பரம், இந்த நூலில் எளிய மொழியில் தன் அனுபவங்களைப் பேசுகிறார். கூத்துக்கலைஞன் என்ற அடையாளத்தைத் தெரிவிக்காமல் திருமணம் செய்துகொண்டு மூன்றாம் மாதமே பக்தபிரகலாதம் கூத்தாட, திகைத்துப்போகிறது குடும்பம். கலைஞனுக்குக் கலை மட்டுமே பிரதானம். குடும்பம் உட்பட எல்லாமே இரண்டாம்பட்சம்தான். ஏகாம்பரம் வாழ்க்கையும் அப்படித்தான் இருந்திருக்கிறது.

தான் பங்கேற்ற கூத்துகள், கூத்து பற்றிய நம்பிக்கைகள், கூத்துக் கலைஞர்கள், கூத்துக்கான திட்டமிடல்கள், பயிற்சிகள் என தன் நினைவுகள் அனைத்தையும் எழுத்தாக்கியிருக்கிறார் ஏகாம்பரம். இயல்பான மொழியில் காட்சிகள் ததும்புகின்றன. ஊர்க்காடுகளின் விருப்பத்துக்குரிய பொழுதுபோக்காக இருந்த கூத்து படிப்படியாக உருமாறி, `நாரதரே... நாலு சினிமாப்பாட்டை எடுத்துவிடு' என்று பெரியவர்களே கேட்கும்நிலை வந்த சூழலையும் பதிவு செய்கிறார் ஏகாம்பரம்.

இந்த நூல் ஏகாம்பரத்தின் அனுபவத்தை முன்வைத்து மரபுவழிக் கூத்துக்கலையின் இறுதிக்கால வரலாற்றைப் பதிவு செய்கிறது. அந்த வகையில் இது முக்கியமான ஆவணம்!

கூத்துக்கலை - அரிதாரத்தின் நினைவுக்குறிப்புகள்

- நீ.ஏகாம்பரம்

வெளியீடு: கெவின்கார்க்கி பதிப்பகம்,
#142, ஜி.எஸ்.டி சாலை, குரோம்பேட்டை,
சென்னை-600044
தொடர்பு எண்: 98406 06462
பக்கங்கள்: 136
விலை: ரூ. 125