Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

மாட்டிறைச்சி உண்பவர்கள் புறக்கணிப்புக்கும் வன்முறைத் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் சூழலில் அவசியமான கட்டுரை ‘தமிழர் பண்பாட்டில் மாட்டிறைச்சி.'

படிப்பறை

மாட்டிறைச்சி உண்பவர்கள் புறக்கணிப்புக்கும் வன்முறைத் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் சூழலில் அவசியமான கட்டுரை ‘தமிழர் பண்பாட்டில் மாட்டிறைச்சி.'

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

ஆஷ் கொலை, தமிழகத்தில் அடிமைமுறை போன்ற பல தளங்கள் குறித்து விரிவான ஆய்வுகளைப் பதிவு செய்து அறிவு வெளியில் வெளிச்சம் பாய்ச்சிய ஆ.சிவசுப்பிரமணியன், தமிழ்ப்பண்பாட்டில் சாதியும் மதமும் வகிக்கும் பங்கு குறித்து எழுதியுள்ள முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பே ‘சமயமும் சாதியும்.'

பெரியாரைப் பற்றிய மூன்று கட்டுரைகளில் முதலிரண்டு கட்டுரைகள் அவரது கருத்தியல் அடிமானம் குறித்த தெளிவை ஏற்படுத்துகின்றன. சாதியொழிப்பை முன்வைத்த பெரியார் ஏன் சாதிச்சங்க மாநாடுகளில் கலந்துகொண்டார், கோயில்களைப் புறக்கணிக்கச் சொன்ன பெரியாரின் இயக்கம் கோயில் பண்பாட்டில் என்ன மாற்றங்களை ஏற்படுத்தின என்பது குறித்து ஆராய்கின்றன ‘பெரியாரும் சாதி மாநாடுகளும்', ‘கோவில் பண்பாடும் பெரியாரும்' கட்டுரைகள். காலனிய ஆட்சிமுறையில் சாதிச்சங்கங்கள் தோன்றியதன் காரணம், அவை நடத்திய மாநாடுகளில் முன்வைக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விளக்கும் ஆ.சி, சாதிச்சங்க மாநாடுகளில் கலந்துகொண்ட பெரியார் தொடர்ச்சியாக தீண்டாமை, மதமாற்றம், சாதிப்பெயர் மாற்றம், சுயமரியாதை, பார்ப்பனர் அல்லாதார் இயக்கம் குறித்தே பேசியதைக் கவனப்படுத்துகிறார். சாதிப்பெருமையையும் புனிதநிலைப்படுத்துதலையும் விமர்சித்த பெரியாரின் சாதிச்சங்க மாநாட்டு உரைகள் சாதிய இறுக்கத்துக்கு வழிகோலாமல் சமூகநீதியையும் சாதியத்தகர்ப்பையும் அடிப்படையாகக் கொண்டவை என்கிறார். ‘மறைமலையடிகளும் பெரியாரும்' கட்டுரை, தமிழறிஞர்கள், சைவம் ஆகியவற்றுக்கும் சமூகச் சீர்திருத்தத்துக்கும் இருந்த உறவையும் முரணையும் தெளிவாக விளக்குகிறது.

மாட்டிறைச்சி உண்பவர்கள் புறக்கணிப்புக்கும் வன்முறைத் தாக்குதல்களுக்கும் உள்ளாகும் சூழலில் அவசியமான கட்டுரை ‘தமிழர் பண்பாட்டில் மாட்டிறைச்சி.' சங்க காலத்திலிருந்து மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் தமிழர்களிடம் இருந்ததைச் சுட்டிக்காட்டும் ஆ.சிவசுப்பிரமணியன், மாட்டிறைச்சி என்பது யாருடைய உணவாக இருந்து பின் தீண்டாததாக மாறியது என்பதை சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரல்' நூலைச் சான்றாக வைத்தே விளக்குகிறார். கிறித்துவப் பண்பாட்டில் தமிழ்ச்சடங்குகள், ஈழத்து சைவத்தமிழறிஞரான ஆறுமுக நாவலர் வர்ணாசிரமத்தை ஏற்றுக்கொண்ட வரலாறு, மீனவர்களாகிய முக்குவர் வாழ்வியல் எனப் பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

தொடக்கநிலை வாசகர்களும் படிக்கும்வகையிலான எளிய நடையில் அமைந்த இந்தக் கட்டுரைகள் இவற்றின் பேசுபொருள்கள் குறித்து மேலும் தேடிப்படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் அறிவின் வாசல் என்று சொல்லலாம்.

சமயமும் சாதியும் - ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு : பரிசல் புத்தக நிலையம்

235, P பிளாக்

MMDA காலனி

அரும்பாக்கம், சென்னை - 600106

தொலைபேசி : 9382853646

பக்கங்கள் : 74

விலை : ரூபாய் 80