Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

- சிவன்குமரன்

படிப்பறை

- சிவன்குமரன்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

புதுக்கவிதைக்கும் நவீனக்கவிதைக்கும் இடைப்பட்ட ஒரு கவிதைமொழி கவிஞர் ஆசுவினுடையது. ஆசு தமிழிலக்கிய ஆளுமைகளில் முக்கியமானவர். சிறுகதை, கவிதை, கட்டுரை எனப் பல்வேறு வகைமைகளில் தன் பங்களிப்பைக் கடந்த 30 ஆண்டுகளாக வழங்கிவருபவர். இவரது படைப்புகள் சமகால வாழ்வின் தடுமாற்றங்களையும் சமூக மாற்றங்களையும் ஒருங்கே பதிவு செய்பவை. கவிதையின் புனைவாக்கத்துக்கான பாவனைகளன்றி, பாசாங்கற்றவை. கடைசல் இயந்திரப் பணியாளரான இவரைப்போலவே எளிமையானவை. ‘ஆசு கவிதைகள்’ என்னும் தலைப்பில் இவரின் மொத்தக் கவிதைகளையும் தொகுப்பாக வெளியிட்டிருக்கிறது கல் விளக்கு பதிப்பகம். ஒரு கவிஞர் சில பத்தாண்டுகளில் பல்வேறு மனநிலைகளில் இருந்து எழுதிய கவிதைகளைத் தொகுத்துப் பார்க்கும்போது கிடைக்கும் பிரமிப்பும், மையமான அவரின் சிந்தனை ஓட்டத்தின் வரைபடமும் வாசகனை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.

`நடந்துவந்த பாதையைப் பார்க்கையில், எரியும் தீயாக அரசியலின் நேர்மையற்ற பரிவர்த்தனைகள் நம் அன்பைச் சாம்பலாக்கி, உரிமையும் உரிமைக்கான போரும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வழியில் ஒரு கனவு நம்பிக்கையாக மலரும்போது, மற்றுமொரு கனவு இருளாகச் சிதைந்து இழப்பதை என் காலத்துப் பரிகாசமாக உணர்கிறேன்.’ தன் கவிதைகளுக்குக் கருப்பொருளாகும் வாழ்வுகுறித்த கவிஞர் ஆசுவின் கூற்று இது.

படிப்பறை

`ஜன்னலின் வழியே/உறுத்துகிற வானம்/ஒருநாள் காணாமல் போயிருந்தது’ எனும் சொற்களில், நம் அன்றாடத்தின் ஓட்டத்தில் நம்மையே நாம் மறந்துபோனதை நினைவுபடுத்தித் துணுக்குற வைக்கிறார் கவிஞர். மானுட வாழ்க்கை எந்திரமயமாகிவிட்டது. எந்திரத்தைப் போலச் சுழன்று கொண்டிருக்கிறான் மானுடன். ஆனால் அவனுள் கிளைக்கும் சிறு சோகம் அவன் எந்திரம் இல்லை என்பதை அவனுக்கு உணர்த்தும் அல்லவா... இதை ஆசு மிக அழகாகத் தன் கவிதையில், ‘நானே எந்திரமாய்/உருமாறிய போதில்/அதனுள்ளும் கிளைத்தது/ஒரு சோகம்’ என்று தத்துவார்த்த மீட்சியைப் பதிவு செய்து வாழ்வின் இயங்கியலைக் கேள்விக்குட்படுத்துகிறார்.

ஆசுவின் படைப்புகளில் சாதிய சமூகத்துக்கு எதிரான குரல்கள் தவறாமல் ஒலிக்கும். ‘செத்தும்/புழுதிபடாமல் போக/சம்சாரிகளுக்கு/உண்டு கொடுப்பினை/நடைச்சேலை விரிக்கும் வண்ணாத்திக்கு/வாழ்வெல்லாம் புழுதியாகும்’ என சாதியத்தின் அவலத்தை நுட்பமாகப் பதிவு செய்கின்றன ஆசுவின் கவிதைகள்.

ஆசுவின் கவிதைகளில் கிராமத்து, நகரத்து, புறநகரத்து வாழ்க்கை அதன் அழகுகளோடும் அவதிகளோடும் பயணிக்கிறது. அந்த வாழ்க்கை வேறு யாருடையதோ அல்ல, நம்முடையதேதான் என உணர்த்துகின்றன அவை.

ஆசு கவிதைகள் - ஆசு

வெளியீடு :
கல் விளக்கு பதிப்பகம், 1979 மல்லிகாபுரம், படைவீடு - 606905,
திருவண்ணாமலை மாவட்டம்

கைப்பேசி: 9786320491

பக்கங்கள் : 688

விலை : ரூ. 700