Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

இந்த நாவலின் மிகப்பெரிய பலமே கதை மாந்தர்களிடையே நடைபெறும் உரையாடல்கள்தான்

படிப்பறை

இந்த நாவலின் மிகப்பெரிய பலமே கதை மாந்தர்களிடையே நடைபெறும் உரையாடல்கள்தான்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

புலம்பெயர் இலக்கியத்தின் புதுவருகை ‘அம்பரம்.’ உலக அரசியல் வரலாற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய இரண்டாம் உலகப்போர் என்கிற பெருத்த வெளியை நாவல் தனது மையக்களமாகக் கொண்டு விரிந்து நிலைக்கிறது. ஆவணத்தன்மைக்கு அப்பாற்சென்ற ஒரு சிறந்த புனைவாகவும் எழுத்தாளர் ரமா சுரேஷின் ‘அம்பரம்’ நாவலைச் சுட்ட முடியும்.

மனிதகுல வரலாற்றில் யுத்தமும் வன்முறையும் ஏற்படுத்திய பேரழிவுகள் கணக்கிலடங்காதவை. ஒவ்வொரு தனித்த ஆன்மாவும் போர்களால் படும் அவஸ்தையை எந்தத் துயரத்துடனும் ஒப்பிட முடியாது. இந்த நாவல் மெல்ல மெல்ல போரின் ஆயத்தங்களையும், அதன் பின்னான வலிகளையும் தனது கதாபாத்திரங்களின் மூலமாகப் பதிகிறது. புலம்பெயர்ந்து வாழும் உதிரிகளின் உலகம் பற்றிய குணவியல்புகளையும், அவர்கள் ஒன்றுசேரும் சவால்களையும், நெருக்கடியான காலகட்டத்தோடு முன்வைக்கிறது. அரசியல் ரீதியான புலம்பெயர்வு இலக்கியம் – ஈழத்தமிழர்களால் தமிழின் நவீன இலக்கியத்துக்கு ஒரு கொடையளிப்பாக மாறி நிற்கிறது. ஆனால், அதற்கு முன்பாகவே பிழைப்புக்காகத் தென்கிழக்காசிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கைத் துயர்களைப் பற்றி அங்கிருந்து எழுதப்பட்ட இரண்டு நாவல்கள் எழுத்தாளர் ப.சிங்காரத்தினுடையவை. ‘கடலுக்கு அப்பால்’, ‘புயலிலே ஒரு தோணி’ ஆகிய இவ்விரு நாவல்களின் வரிசையில் அம்பரம் நாவலும் இடம்பிடிக்கிறது.

படிப்பறை

யூசுப் என்ற குத்துச்சண்டைக்காரனின் வாழ்க்கை வழியாக, தனிமனித வாழ்வு குறித்த ஊடாட்டம், பர்மிய கலாசாரம் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள், இஸ்லாமியக் கலாசாரப் பண்பாட்டுக் கூறுகள், சிங்கை மக்களின் நம்பிக்கைகள், அந்தக் காலகட்ட அரசியல் நிகழ்வுகள் எனப் பல விஷயங்களைப் பேசுகிறது நாவல். ஒரு குத்துச்சண்டைக்காரனின் வாழ்க்கையின் வழியே போருக்கு எதிரான வாதங்களைக் கடுமையாகவும் அன்பை போதிக்கும் வாழ்வை மென்மையாகவும் முன்வைக்கிறது.

இந்த நாவலின் மிகப்பெரிய பலமே கதை மாந்தர்களிடையே நடைபெறும் உரையாடல்கள்தான். உலகில் போருக்கெதிராகவும் வன்முறைக்கெதிராகவும் நம்மிடம் இருக்கும் வலுவான ஆயுதம், உரையாடல் மட்டுமே. அன்பாலும், ஆரோக்கியமான உரையாடல்களாலும் தீர்க்க முடியாத சிக்கல்களே இல்லை எனலாம். அந்தவகையில் தான் எடுத்துக்கொண்ட களத்தின் வழியாகப் பல அனுபவபூர்வமான உரையாடல்களை நிகழ்த்தி மிகச்சிறப்பாகக் கதை சொல்லியிருக்கிறார் ரமா. படிக்கும் நமக்கு பலவிதமான உணர்வெழுவதும் நாமே நமக்காகச் சில படிப்பினைகளை எடுத்துக்கொள்வதும் நிகழ்கிறது. புதிய வெளியில் நிகழும் ஒரு சிறந்த முயற்சி, அம்பரம்.

அம்பரம் - ரமா சுரேஷ்

வெளியீடு : மோக்லி பதிப்பகம், 9/6 s2, A பிளாக்,நவரத்னா அப்பார்ட்மென்ட், குரோம்பேட்டை, சென்னை - 600 044

கைப்பேசி : 9176891732

பக்கங்கள் : 400

விலை : ரூ. 350