Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்

படிப்பறை

வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்

Published:Updated:
படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
படிப்பறை

வரலாற்றை எப்போதும் முற்றுப்புள்ளிக்குள் அடக்கிவிடமுடியாது. தோண்டத் தோண்ட புதிய புதிய வரலாறுகள் மேலெழுந்து வந்துகொண்டேயிருக்கும். சிந்து சமவெளியில் இருந்து கிளம்பிய மனிதர்கள் கங்கை சமவெளிக்கே சென்றார்கள் என்று வரையறுக்கப்பட்ட வரலாற்றை கீழடியில் தோண்டப்பட்ட தொல்லியல் பள்ளம் மாற்றியது. ஆதிச்சநல்லூரும் கொற்கையும் இன்னும் தமிழக வரலாற்றை ஆதாரங்களின் வழியாக பின்னோக்கித் தள்ளிக்கொண்டே செல்கின்றன.

கீழடி அகழ்வுக்குப் பிறகு தமிழகத்தில் வரலாற்றின் மீதான ஈர்ப்பு அதிகரித்திருக்கிறது. இளைஞர்கள் தங்கள் மண்ணின் வரலாற்றைத் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். அறம்கிருஷ்ணன் அப்படித் தேடித்தொகுத்த கனத்த நூல் இது. உலகம் முழுமையும் வட்டார வரலாறுகளே ஆய்வுகளில் பிரதானப்படுத்தப்படுகின்றன. தமிழில் அவ்விதமான வரலாறுகள் இப்போதுதான் வரத்தொடங்கியிருக்கின்றன. ‘வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்' அப்படியான ஒரு நல்வரவு.

கோயில்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோட்டைகள், கற்திட்டைகள், கல்வட்டங்கள், பாறை ஓவியங்கள், அகழாய்வுச் சான்றுகள் என அத்தனை தடங்களிலும் பயணித்து இந்த ஆவணத்தை உருவாக்கியிருக்கிறார் கிருஷ்ணன். ஓசூர்-தளி சாலையில் ‘செகன்ட் மெட்ராஸ்' என்ற பெயர்கொண்ட ஜுகூர் என்ற கிராமம் பற்றிய செய்தி வியப்பூட்டுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரத்தினகிரி கோட்டை, ராயக்கோட்டை, கிருஷ்ணகிரி மலைக்கோட்டை, ஓசூரில் உள்ள காதல்கோட்டை என கோட்டைகள் குறித்த விரிவான பதிவுகளோடு ஏராளமான புகைப்படங்களும் இந்த நூலில் உள்ளன.

படிப்பறை

வரலாற்றுச் சின்னங்களின் இன்றைய நிலை மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. அவற்றையும் பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணன். ஓசூரில் பிரிட்டிஷ் கேப்டன் எச்.ஏ.பிரெட் தன் மனைவிக்காகக் கட்டிய காதல்கோட்டை இன்று பொலிவிழந்து கிடக்கிறது. இராயக்கோட்டைக்கு அருகே கெட்டூரில் உள்ள 2,500 ஆண்டுக்காலப் பழைமை வாய்ந்த பாறை ஓவியங்கள் அழியும் நிலையில் உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குவிந்துகிடக்கிற வரலாற்று மிச்சங்கள் தமிழக வரலாற்றின் மீது பெரும் ஒளி பாய்ச்சுபவை. அவற்றைத் தொகுத்தளிக்கும் இந்த நூல், இன்னும் மிக விரிவான ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய தேவையையும் முன்வைக்கிறது.

வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் - அறம்கிருஷ்ணன்

வெளியீடு : அறம் பதிப்பகம், 3/336-W, ஸ்ரீசாய் நகர், அரசனட்டி, மூக்கண்டப்பள்ளி, ஓசூர்-635126, கிருஷ்ணகிரி மாவட்டம் தொடர்பு எண்: 7904509437, 9578468122

பக்கங்கள்: 424

விலை: ரூ. 500