சினிமா
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

இந்த நூல்களின் மிகப்பெரிய பலம், மக்களின் பண்பாட்டை விரிவாகப் பதிவு செய்திருப்பது.

`பிரெஞ்சுக் கலாசாரத்தின் ஜன்னல்' என்று போற்றப்படுவது புதுச்சேரி. அப்படிப்பட்ட புதுச்சேரியின் வரலாற்றைப் பேசும் பல நூல்கள் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளன. அவற்றுள் தமிழில் எழுதப்பட்ட ஆனந்தரங்கம் பிள்ளை டைரிக்குறிப்புகள் முக்கியமானது. அதேபோன்று கி.இளங்கோவன் மொழிபெயர்த்த எஸ். ஜெயசீல ஸ்டீபனின் ஆங்கில நூலான ‘பிரெஞ்சியர் ஆட்சியில் புதுச்சேரி மக்களின் சமூக வாழ்க்கை'யும், நா. இராசசெல்வம் எழுதிய, ‘பிரஞ்சியர் காலப் புதுச்சேரி' நூலும் முக்கியமானவை. இந்த வரிசையில் முக்கியமான இரு நூல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஒன்று ‘ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி - மண்ணும் மக்களும்’, மற்றொன்று ‘ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி - நாடும் பண்பாடும்.' இவற்றின் ஆசிரியர் எம்.பி.இராமன்.

1674-ம் ஆண்டு தொடங்கி 1945 வரையிலான வரலாற்றை இந்த நூல்கள் மிக நுட்பமாகப் பதிவு செய்கின்றன. புதுச்சேரி வரலாற்றை மட்டும் பதிவு செய்யாமல், தமிழகத்தின் இணை வரலாற்றையும் பேசுகிறது. செஞ்சிப் போர் பற்றிக் குறிப்பிடும்போது அது ரங்கம்வரை எவ்வாறு நீள்கிறது என்பதையும் பதிவு செய்கிறது. செஞ்சிக்கோட்டை வெற்றியைக் கொண்டாட செஞ்சிக்கு அருகே ஒரு குடியிருப்பை உருவாக்கி அங்கே வெற்றித் தூண் ஒன்றையும் நிறுவுகிறார்கள். பிற்காலத்தில் இராபர்ட் கிளைவ் அதை அகற்ற உத்தரவிடுகிறான் என்ற செய்தியையும் சொல்கிறார். இவ்வாறு முன்னும்பின்னுமாக வரலாற்றுச் செய்திகளைப் பதிவு செய்திருப்பதால். ஒரு நிகழ்வு குறித்த முழுமையான சித்திரம் கிடைக்கிறது.

படிப்பறை

இந்த நூல்களின் மிகப்பெரிய பலம், மக்களின் பண்பாட்டை விரிவாகப் பதிவு செய்திருப்பது. 17-ம் நூற்றாண்டிலும் புதுச்சேரிப் பகுதிகளில் உடன்கட்டை ஏறுதல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்திருக்கிறது என்னும் செய்தியைப் படிக்கும்போது ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஒருங்கே ஏற்படுகிறது. அவற்றைத் தடுக்க முயன்ற அதிகாரிகளுக்கு இந்த வழக்கம் பெரும் பண்பாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடன்கட்டை ஏறிய நிகழ்வு ஒன்றைப் பார்த்த பிரெஞ்ச் அதிகாரி, ‘தீப்பிழம்புகள் சுட்டெரித்தபோதும் உடன்கட்டை ஏறிய பெண்ணிடமிருந்து அசைவோ, அலறலோ கேட்கவேயில்லை. அது வியப்பும் திகிலும் திகைப்பும் நிறைந்த அனுபவமாக இருந்தது’ என்று எழுதியிருப்பதைப் பதிவு செய்கிறார். வரலாற்றைப் புனைவுகளை உருவாக்கும் படைப்பாளர்களுக்கான தகவல் புதையல் இந்த நூல் என்பதற்கு இதை உதாரணமாகச் சொல்லலாம்.

வரலாற்று நூல்களை வாசிக்கும்போது உண்டாகும் சோர்வும் சலிப்பும் ஏற்படுவதில்லை. மாறாக, விழியுயர்த்தலும் மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்தையுமே ஏற்படுத்துகின்றன இந்த நூல்கள்.

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி - மண்ணும் மக்களும்;

ஃபிரஞ்சியர் காலப் புதுச்சேரி - நாடும் பண்பாடும்

- எம்.பி. இராமன்

வெளியீடு :
காலச்சுவடு பதிப்பகம்,
கே.பி. சாலை, நாகர்கோவில்-629001

தொலைபேசி: 04652 -278525

முதல் நூல்: பக்கம்: 408 - விலை: ரூ. 390

இரண்டாம் நூல்: பக்கம்: 408 - விலை: ரூ. 390