சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

குற்றமும் கருணையும்
பிரீமியம் ஸ்டோரி
News
குற்றமும் கருணையும்

மனைவியை வன்புணர்வு செய்ய முயலும் ஒரு பெருந்தனக்காரனின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு அனூப்பின் வீட்டுக்கு வருகிறார் ஒரு பெரியவர்.

உத்தரப்பிரதேசத்தில் பிறந்து, ஐ.பி.எஸ் அதிகாரியாகத் தமிழகத்துக்கு வந்தவர் அனூப் ஜெய்ஸ்வால். 1980-ல் தொடங்கி 35 ஆண்டுகள் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து ஓய்வுபெற்ற அவர், தென்மாவட்டங்களில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய காலங்களில் சந்தித்த வழக்குகளை சிறுகதைக்குரிய சுவாரஸ்யத்தோடு எழுதியிருக்கிறார், பத்திரிகையாளரும் எழுத்தாளருமான வி.சுதர்ஷன். ஆங்கிலத்தில் வெளிவந்த நூலைத் தொனி மாறாமல் தமிழ்ப்படுத்தியிருக்கிறார், அனூப் ஐ.ஜி-யாகப் பணியாற்றிய காலங்களில் அவரது நேர்முக உதவியாளராக இருந்த மு.குமரேசன்.

தென்மாவட்டங்களில் பணியாற்றிய அனூப்புக்குத் தொடக்கக்காலம் மிகவும் சவாலாகவே இருந்திருக்கிறது. அம்பாசமுத்திரத்தில் பணியாற்றிய காலத்தில் சிவலார்குளத்தில் மூன்று பேர் வெட்டிக்கொல்லப்பட்டார்கள். தேயிலைத் தோட்டத்தில் மனைவி, குழந்தையோடு வார விடுமுறையைக் கழிக்கச் சென்றுகொண்டிருந்த அனூப்புக்கு அந்தச் செய்தி சொல்லப்படுகிறது. அனூப் அந்தக் கொலைக்களத்துக்குச் செல்வது தொடங்கி அந்தக் கொலைகளின் பின்னணி, கொலையாளிகளுக்குத் தண்டனை பெற்றுத்தர நடத்திய போராட்டம் என அந்தக் கதை பரபரப்பும் பதைபதைப்புமாக விரிகிறது. நிலத்தகராறில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆறுமுகத்தின் கண்முன்னால் மூன்று மகன்களையும் வெட்டிச்சாய்த்த கொலையாளிகள் ஆறுமுகத்தையும் குதறியெறிந்தார்கள். அவர் படுகாயத்தோடு உயிர் தப்புகிறார். அச்சத்தாலும் தன் பிள்ளைகளைப் பறிகொடுத்த துயரத்தாலும் அவர் தற்கொலைக்கு முயல, அவரைக் காப்பாற்றி ஊரை விட்டு வெளியேற்றி, தன் நண்பரின் பாதுகாப்பில் வைத்திருந்து, நீதிமன்றத்துக்கு அழைத்து வந்து குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தருகிறார் அனூப்.

படிப்பறை

மனைவியை வன்புணர்வு செய்ய முயலும் ஒரு பெருந்தனக்காரனின் தலையை வெட்டி எடுத்துக்கொண்டு அனூப்பின் வீட்டுக்கு வருகிறார் ஒரு பெரியவர். முன்பகையோ திட்டமிடலோ இன்றி, தற்காத்துக்கொள்வதற்காகக் கொலை செய்த அந்தப் பெரியவரை மிகக்குறைந்த தண்டனையோடு மீட்டு, மீண்டும் மனைவியோடு வாழ வழிசெய்திருக்கிறார் அனூப்.

அந்தோணி மூக்கன் என்ற ரவுடி திருந்தி மனிதனாவதும் பிறகு மீண்டும் தன் பழைய பாதைக்குத் திரும்புவதும் உலுக்கும் கதை. அனூப்பால் மரண விளிம்பிலிருந்து காப்பாற்றப்பட்ட அந்தோணி மூக்கனின் மனைவி, ஒரு கண்டிப்பான தாயைப் போல அனூப்பைச் சந்திக்கும்போதெல்லாம் மீன்குழம்பு சாப்பாடு செய்து பரிமாறுகிறாள். மிகவும் உணர்வுபூர்வமான கதை இது.

காவல்துறைமீது வெறுப்பும் அச்சமும் நிலவும் இக்காலகட்டத்தில் அனூப் போன்ற அதிகாரிகளின் கதைகளை ஆவணப்படுத்துவது அவசியம்.

குற்றமும் கருணையும் - வி.சுதர்ஷன்

(தமிழில் மு.குமரேசன்)

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,

669, கே.பி.சாலை, நாகர்கோவில்- 629001

தொடர்புக்கு: 04652-278525

பக்கங்கள்: 223

விலை: ரூ. 275