சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

படிப்பறை
பிரீமியம் ஸ்டோரி
News
படிப்பறை

‘விழவுமலி மூதூர்', ‘பொய்யா விழவின் கூடல்', ‘கலிகெழுகடல்' என்றெல்லாம் விழாக்களின் தலைநகரமாக இருக்கும் மதுரையைப் போற்றுகின்றன இலக்கியங்கள்.

திருவிழாக்களை சமூக இளைப்பாறுதல் என்கிறார் தொ.பரமசிவன். எல்லாச் சுமைகளையும் இறக்கிவைத்துவிட்டு, வீட்டையும் ஊரையும் தூய்மை செய்து உறவுகளோடு கூடிக்களித்து நல்லுணவு உண்டு, நல்லுடை அணிந்து உற்சாகத்தில் மனம் புரள வைக்கும் திருவிழாக்கள். ஆண்டு முழுவதும் விழாக்களால் களைகட்டும் மதுரையின் இயல்பை சமூகப் பண்பாட்டு நோக்கில் எழிலுற இந்நூலில் காட்சிப்படுத்துகிறார் சித்திரவீதிக்காரன்.

திருவிழாக்கள் மனத்தில் ஈரத்தையும் கருணையையும் சுரக்கச் செய்பவை. மனிதர்களை ஆற்றுப்படுத்துபவை. தாகத்தாலும் பசியாலும் எவரும் தவித்துவிடக்கூடாது. உணவும் நீரும் பானங்களுமாக தெருக்கள் நிறைந்திருக்கும். அருளாடிகள் கடக்கும் சாலையை நீரூற்றி நனைத்து வைத்திருப்பார்கள். பிள்ளைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், பேனாக்கள் தருவார்கள். திருவிழாக்கள் நாகரிக சமூகத்தின் ஆரோக்கிய மனநிலையின் சான்று. மதுரை மக்கள் ஈர மனதுக்காரர்களாக இருப்பதற்குத் திருவிழாக்களும் ஒரு காரணம்.

‘விழவுமலி மூதூர்', ‘பொய்யா விழவின் கூடல்', ‘கலிகெழுகடல்' என்றெல்லாம் விழாக்களின் தலைநகரமாக இருக்கும் மதுரையைப் போற்றுகின்றன இலக்கியங்கள். புனல் விளையாட்டு, அந்தி விழா, மீன்பிடித் திருவிழா என விதவித வடிவங்களில் எப்போதும் கொண்டாட்ட மனநிலையிலேயே இருக்கிறது மதுரை. சித்திரைத் திருவிழா, ‘திருவிழாக்களின் திருவிழா'வாக இருக்கிறது. இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா முடிந்தால் அடுத்த ஆண்டு திருவிழாவுக்கான பணிகள் அதே நாளில் அதே வேகத்தோடு தொடங்கிவிடும்.

படிப்பறை

நடைமுறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், தொன்மங்கள், மக்களுக்கும் அந்த விழாவுக்குமான பந்தம் எனத் திருவிழாக்களை முழுமையான கோணங்களில் காட்சிப்படுத்தியிருக்கிறார் சித்திரவீதிக்காரன். நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள், எழுத்தை மனதுக்கு நெருக்கமாக்குகின்றன. அழகர்கோயில் ஆடித்திருவிழா, திருப்பரங்குன்றம் பங்குனித் தேரோட்டம், கீழவாசல் மரியன்னை தேர்ப்பவனி, கோரிப்பாளையம் தர்ஹா சந்தனக்கூடு, கஜேந்திர மோட்சம், கதிரறுப்புத்திருவிழா என எந்த அடையாளங்களுக்குள்ளும் சுருக்காமல் நேர்பட எழுதியிருக்கிறார். கூடவே வலையங்குளம் இசை நாடகத் திருவிழா, மதுரைப் புத்தகத் திருவிழாவையும் இணைத்திருப்பது சுவாரஸ்யம். நூலின் உருவாக்கமும் ரசனையாக இருக்கிறது!

வாசிக்கவும் பாதுகாக்கவும் தகுதியான நூல்!

திருவிழாக்களின் தலைநகரம் மதுரை - சித்திரவீதிக்காரன்

வெளியீடு:
பசுமை நடை, 15/7, மேலப்பட்டாம்மார் தெரு, வடக்கு ஆவணி மூலவீதி, மதுரை-625001

தொடர்பு எண்- 9789730105

பக்கங்கள்: 200

விலை: ரூ. 200