தொடர்கள்
சினிமா
Published:Updated:

படிப்பறை - வேலியற்ற வேதம்

வேலியற்ற வேதம்
பிரீமியம் ஸ்டோரி
News
வேலியற்ற வேதம்

ஒன்றை உயர்த்தும்போது மற்றொன்றைத் தாழ்த்த வேண்டிய கட்டாயம் பல வேளைகளில் நிகழ்ந்துவிடும்.

பழந்தமிழ் இலக்கியங்களில் நீதி நூல்களின் பங்கு மிகவும் இன்றியமையாதது. சங்கம் மருவிய காலத்தில் நீதி நூல்கள் எழுதப்பட்டன. வேட்டைச் சமூகம் வேளாண் சமூகமாக மாற்றம் கொண்ட காலத்தில் சமூகத்தின் நியதிகளைக் கட்டி எழுப்பும் பொருட்டு உருவாக்கப்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் பெரும்பான்மையும் நீதி நூல்களே.

இந்த நீதி நூல்களில் முதன்மையானது திருக்குறள். உலகப் பொதுமறை என்று போற்றப்படும் திருக்குறள் பேசும் கருத்துகள் மனித குலம் முழுமைக்குமானது. திருக்குறள் எழுதப்பட்ட காலத்துக்குச் சற்று முன்பின்னாக உருவான பிற நீதி நூல்களைச் சேர்ந்து கற்று ஒப்புநோக்க வேண்டிய ஒரு தேவையும் இருக்கிறது. அப்படி ஒரு முயற்சிதான் வரலட்சுமி மோகனின் ‘வேலியற்ற வேதம்’ நூல். திருக்குறளே இந்தப் பிரபஞ்சத்தின் வேலியற்ற வேதம் என்பதுதான் நூலாசிரியரின் கருத்து. இதைச் சொல்ல அவர் தேர்ந்திருக்கும் சிறந்த வழியே இந்த நூல்.

நாலடியார், நான்மணிக்கடிகை, பழமொழி, திரிகடுகம், ஆசாரக்கோவை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, ஏலாதி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி போன்ற நீதிநூல்களோடு திருக்குறளை ஒப்புநோக்கி தமிழர் அறக் கோட்பாடுகள் குறித்த ஒரு மீள் பார்வையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர். இறைவன் அடி போற்றுதல், மழையின் மாட்சிமை, துறவிகளின் சிறப்பு என்று 33 தலைப்புகளில் திருக்குறளிலும் பிற நீதி நூல்களிலும் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளைத் தொகுத்து வழங்குகிறார்.

படிப்பறை - வேலியற்ற வேதம்

ஒன்றை உயர்த்தும்போது மற்றொன்றைத் தாழ்த்த வேண்டிய கட்டாயம் பல வேளைகளில் நிகழ்ந்துவிடும். ஆனால் நூலாசிரியர் நீதி நூல்கள் ஒன்றின் மாண்பினையும் சிறு துளியும் குறைக்காது, அதேவேளை திருக்குறளின் மாண்பை உயர்த்திப் பேசும் பாங்கு போற்றத்தக்கது. உதாரணமாக, ‘வேங்கை வரிப்புலியின் நோய் தீர்த்தவன் அந்த வேங்கைக்கே பலியாகுதல் போல தீயவர்க்குச் செய்த உதவி நம்மையே திருப்பித் தாக்கும்’ என்கிறது ‘வேங்கை வரிப்புலிநோய்’ என்று தொடங்கும் மூதுரை. ‘அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல்’ என்ற திருக்குறள், ‘தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச் செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு’ என்கிறது.

நூலில் இது கருத்தியல் ஒப்பீடாகச் சொல்லப்படவில்லை என்றாலும், திருக்குறளின் மேன்மையை எடுத்துரைப்பதாகவே விளங்குகிறது. இதுபோன்று பல்வேறு தலைப்புகளில் ஒப்பீட்டுச் சிந்தனைகளைத் தொடங்கிவைக்கிறது இந்நூல். அந்தவகையில் ஒரு பெருநூல் ஆக்கத்தின் முதற்பாகம் என்றே இதை எண்ணத் தோன்றுகிறது.

வேலியற்ற வேதம் வரலட்சுமி மோகன்

வெளியீடு: எம்.வீ.ஆர் பதிப்பகம்

தொடர்புக்கு: 98402 76403

பக்கங்கள்: 232

விலை: ரூ. 175