சினிமா
தொடர்கள்
Published:Updated:

படிப்பறை

அரபு இலக்கியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அரபு இலக்கியம்

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சூழல் உலகமெங்கும் இலக்கியத்தின் முகத்தை மாற்றியது.

அரேபிய இரவுகள், அலிபாபாவும் 40 திருடர்களும் என்று புத்தகங்களைத் தாண்டித் திரைப்படங்களாகவும் அரேபிய இலக்கியங்கள் நமக்குப் பரிச்சயமானவைதான். என்றாலும், மேற்கத்திய இலக்கியங்கள், லத்தீன் - அமெரிக்க இலக்கியங்களைப் போல் அரபு இலக்கியங்கள் குறித்த விரிவான நூல் தமிழில் கிடையாது என்ற குறையைப் போக்கியிருக்கிறது எச்.முஜீப் ரஹ்மான் எழுதியுள்ள ‘அரபு இலக்கியம்' நூல்.

பொதுவாகத் தமிழ் மரபுக்கவிதைகள் எத்தனை அடி இருக்கவேண்டும் என்னும் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்டது என்றால், அரபுக் கவிதைகளோ எழுத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டவை என்ற தகவல் வியப்பூட்டுகிறது. தன்னளவில் தொடர்புகளற்று இறுகிய நிலையில் இருந்த அரபு இலக்கியம், நெப்போலியன் போனபர்ட்டின் படையெடுப்புகள் போன்றவற்றால் பல்வேறு பண்பாட்டுக்கூறுகளை உள்வாங்கிய நவீன இலக்கியமாக உருவானதையும் ஆசிரியர் விரிவாக விளக்குகிறார்.

படிப்பறை
Picasa

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய சூழல் உலகமெங்கும் இலக்கியத்தின் முகத்தை மாற்றியது. தேசியம், மார்க்சியம், இருத்தலியல் போன்ற நவீனத்துவக்கூறுகளின் அடிப்படையில் உலகமெங்கும் புதுக்கவிதை இயக்கம் தோன்றியதைப் போலவே அரபு இலக்கணத்தை மீறிய, வசனத்தையும் உரைநடையையும் அடிப்படையாகக் கொண்ட ‘சுதந் வசன இயக்கம்' தோன்றியதையும் முஜீப் சுட்டிக்காட்டுகிறார்.

அல்ஜீரியா, மொராக்கோ, துனீசியா, லிபியா, எகிப்து, பஹ்ரைன், சவுதி அரேபியா, சூடான், லெபனான் போன்ற நாடுகளின் அரபு இலக்கியங்கள் தமக்குள் பல ஒற்றுமைகளைக் கொண்டும் விலகி மிதக்கும் கூறுகளைக் கொண்டும் உள்ளதையும் அடையாளப்படுத்துகிறார். குறிப்பாக இஸ்லாம் என்னும் மதம், அதன் அரசியல், கலாசாரம், அதற்கு எதிரான நவீனத்துவக் கூறுகள் ஆகியவற்றுக்கு இடையிலான உறவும் முரணும் நவீனகால அரபு இலக்கியங்களில் பிரதிபலிப்பதை இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டுகிறது.

அல்ஜீரிய வர்த்தக அமைச்சின் இயக்குநராக இருந்து இஸ்லாமியக்குழுக்களின் அச்சுறுத்தலால் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அல்ஜீரிய எழுத்தாளர் பவுலேம் சன்சால், தன்பால் சேர்க்கையாளர் என்று தன்னை வெளிப்படையாக அறிவித்த மொராக்கோ எழுத்தாளர் அப்தெல்லா டானா, துனீசிய பெண் எழுத்தாளர்களான ஹீயெம் பெர்சிச்சி, ஃபாத்மா பென் மஹ்மூத், பெஸ்மா மாரூனி, 82 வயதில் மதவாதியால் தாக்குதலுக்குள்ளான எகிப்து எழுத்தாளர் நகிப் மஹ்ஃபூஸ் என ஏராளமான எழுத்தாளர்கள் நாமறியாதவர்கள்.

உலகளவில் பல்வேறு நாடுகளின் இலக்கியங்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துவரும் சூழலில், அரபுநாட்டு இலக்கியம் குறித்த இந்த விரிவான தொகுப்பு, நம் புரிதல்களை மேலும் அகலப்படுத்தும்.

அரபு இலக்கியம் - எச்.முஜீப் ரஹ்மான்

வெளியீடு : நன்னூல் பதிப்பகம், மணலி, திருத்துறைப்பூண்டி - 610 203,

தொலைபேசி : 99436 24956

பக்கங்கள் : 468

விலை : ரூபாய் 500